ஹோம் சைனா’ (சீனா வீட்டுக்குப் போ) என்ற போராட்டத்தை, தான் தலைமையேற்று நடத்தவேண்டி வரும் எனத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான சாணக்கிய ராகுல், பாராளுமன்றத்தில் சூளுரைத்திருக்கிறார்.
தமிழ்த் தேசிய அரசியலின் முன்னிலைக் கட்சிகளில் ஒன்றான தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, இன்று ‘மாலுமி இல்லாத கப்பலாக’, கடலில் அலையின் போக்குக்கு ஏற்ப, தன்பாட்டுக்கு மிதந்துகொண்டு நிற்கிறது. ஆளாளுக்கு தனக்குப் பிடித்த திசையில் கப்பலைச் செலுத்த, துடுப்புப் போடும் நிலையில், திக்குத் தெரியாது, கரை தெரியாது, நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டிருக்கிறது கட்சியும் தமிழ்த் தேசியமும்!
கிட்டத்தட்ட 20 டிரில்லியன் டொலர் பொருளாதாரம் கொண்ட சீனாவுக்கு, இலங்கை 7.4 பில்லியன் டொலர் கடனை செலுத்த வேண்டியுள்ளது என்றும், இலங்கையின் உண்மையான நண்பனாக சீனா இருந்தால், இலங்கையின் கடனை தள்ளுபடி செய்ய அல்லது குறைந்தபட்சம் மறுகட்டமைப்பு செய்ய ஒப்புக்கொள்ளும் என்றும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பி சாணக்கிய ராகுல், வெள்ளிக்கிழமை (02) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
மேலும், கிட்டத்தட்ட 20,000 பில்லியன் டொலரை வைத்திருக்கும் சீனா, உண்மையிலேயே இலங்கையின் நண்பன் என்றால்..., 9 மில்லியன் லீற்றர் டீசல் அல்லது அரை மில்லியன் கிலோ கிராம் அரிசி வழங்குவது, உண்மையான உதவியல்ல என்றும் சிங்களத்தில் பேசிய சாணக்கிய ராகுல் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், “சீனர்கள் இந்த நாட்டில் என்ன செய்தார்கள்? ஹம்பாந்தோட்டை துறைமுகத்தைப் பார்த்தால், சீனா அதைக் கைப்பற்றியுள்ளது. இலங்கை மக்களுக்கு வேலை கொடுக்கப்பதற்காக இந்த நாட்டில், சீனர்கள் செய்த முதலீடு ஒன்றைச் சொல்லுங்கள். ஒரு தொழில் கூட இல்லை” என்றும் சாணக்கிய ராகுல் கூறினார்.
மேலும், “ராஜபக்ஷ குடும்பத்துக்கு நன்றி செலுத்துவதற்காக, அவர்கள் இந்த நாட்டில் முதலீடுகளை கட்டாயப்படுத்தியுள்ளனர். அவை பயனற்ற முதலீடுகள்” என்றும் குறிப்பிட்டார்.
இந்தப் பேச்சு, இலங்கை என்ற நாட்டுக்கோ, அல்லது தமிழ்த் தேசிய அரசியலுக்கோ பிரயோசனமில்லாத பேச்சு. சீனா, இலங்கைக்கு என்ன செய்தது என்ற கேள்வியை சாணக்கிய ராகுல் கேட்க முதல், அவர் கொஞ்சம் வரலாற்றைப் படிக்க வேண்டும்.
மஹிந்த ராஜபக்ஷ காலம் வரை, சீன-இலங்கை உறவு எப்படி இருந்தது என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும். பிரபல்யம் தேடுவதற்காக, சமூக ஊடகங்களின் பரவல் மூலம், பிரபல்யம் கிடைக்கும் என்பதற்காக, எதையும் பேசலாம் என்பதற்குப் பெயர் ‘அரசியல்’ அல்ல. அத்தகைய அரசியலை முன்னெடுப்பது, ஒரு சமூகத்துக்கு மிகமிக ஆபத்தானது.
1950களில், இலங்கை அந்நிய செலாவணி பற்றாக்குறையின் விளைவாக, பொருளாதார நெருக்கடி நிலையை சந்தித்திருந்தது. அதன் விளைவாக, அரிசி இறக்குமதி குறைந்ததில் நாட்டில் அரசிக்கான பற்றாக்குறை நிலவியது.
கொரியப் போர் முடிவுக்கு வந்ததன் விளைவாகவும், செயற்கை இறப்பரின் அறிமுகத்தாலும் உலக சந்தையில் இறப்பருக்கான தேவை கணிசமாகக் குறைந்தது.
உலகளாவிய நெருக்கடிகள் காரணமாக, தேயிலை மற்றும் தேங்காய் எண்ணெய் போன்ற இலங்கை ஏற்றுமதி செய்த பொருட்களுக்கான தேவையும் குறைந்தது. ஆகவே, எமது அந்நியச் செலாவணி வரவு குறைந்தது. ஆனால், அரிசிக்கு இறக்குமதியில்தான் நாம் தங்கியிருந்தோம். ஆகவே, நமது அந்நியச் செலாவணி கையிருப்பு குறைந்து கொண்டே வந்தது. எனவே, 1952 ஒரு மிகச் சவாலான காலமாக இருந்தது.
இந்த நிலையில்தான், சீனாவுக்கு இறப்பரின் தேவை அதிகமாக இருந்தது. தடைகள் மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக, சீனாவால் இலகுவாக இறப்பரை பெற்றுக்கொள்ள முடியாத சூழல் இருந்தது. இலங்கைக்கு அரிசி தேவையானதாக இருந்தது. இந்த நிலையில்தான், அன்றைய வர்த்த அமைச்சர் றிச்சட் கோட்டாபய சேனநாயக்கவின் முயற்சியால், 1952இல், ‘சீனா-சிலோன் அரிசி - இறப்பர் ஒப்பந்தம்’ கைச்சாத்தானது.
இந்த ஒப்பந்தத்தின்படி, சீனாவுக்கு இறப்பரை ஏற்றுமதி செய்தோம்; அதற்குப் பதில், சீனா எங்களுக்கு அரிசியைக் கொடுத்தது. அதுவும் சும்மா அல்ல; சீனா மிகவும் தாராளமாக இலங்கை இறப்பருக்கான சந்தை விலையை விட 40% அதிகமாகவும், அரிசிக்கான சந்தை விலையில் 1/3 பங்கையும் இலங்கைக்கு வழங்கியது. இலங்கைக்கு மிகப்பெரிய அனுகூலமான ஒப்பந்தம் இது!
இதனால் ஏனைய சில நாடுகள், இலங்கைக்கான உதவிகளை நிறுத்தியிருந்தாலும், இதனால் இலங்கைக்கு கிடைத்த அனுகூலம் பெரியதுதான். இந்த ஒப்பந்த, இலங்கையும் சீனாவும் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திக்கொண்ட 1957இற்கு ஐந்து வருடங்களுக்கு முன்பதாகவே கைச்சாத்திடப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
1976இல் சீனா, இலங்கைக்கு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தைப் பரிசளித்திருந்தது. அன்றைய காலத்தில், தென் மற்றும் தென் கிழக்காசியாவிலேயே மிகப்பெரிய மாநாட்டு மண்டபமாக இது இருந்தது. இந்த மண்டபத்தில்தான் 1976இல் இலங்கை அணிசேரா நாடுகளின் உச்சி மாநாட்டை நடத்தியிருந்தது! இதைவிட சிறுநீரக வைத்தியசாலை, தேசிய வைத்தியசாலை வௌிநோயாளர் பிரிவு என சீனா செய்யும் உதவிகள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆகவே, இலங்கைக்கான எதிரி நாடல்ல சீனா என்பதைப் புரிந்துகொள்ளுதல்தான் அரசியல் பக்குவம்.
இலங்கையின் நெருங்கிய நண்பன் இந்தியா என்பதில், மாற்றுக்கருத்து இருக்க முடியாது. இலங்கை தனது வரலாற்றில் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை சந்தித்தபோது, இலங்கைக்கு ஏறத்தாழ நான்கு பில்லியன் டொலர் வரை கடனுதவி செய்தது இந்தியா.
இதற்காக சீனாவை மோசமான எதிரியாகச் சித்திரிக்கத் தேவையில்லை. இந்தியா, ஜப்பான், சீனா ஆகிய நாடுகள் இலங்கைக்கு செய்த, செய்கின்ற உதவிகளுக்கு நிகராக, ஏனைய பல செல்வந்த நாடுகள் உதவவில்லை. அதற்காக, அவர்களை வைது கொண்டிருக்க முடியுமா என்ன?
மறுபுறத்தில், இந்தக் கருத்தைச் சொன்னவர் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் என்பதால், இலங்கை அரசியல் என்பதற்கப்பால், தமிழ்த் தேசிய அரசியலுக்கு, சீன எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய தேவை என்ன என்ற கேள்வியும் இங்கு முக்கியமானது.
சீனா, வௌிநாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடுவதில்லை என்பதை, தனது வௌிநாட்டுக் கொள்கையாகக் கொண்டிருக்கிறது. அதன்படி, இலங்கையின் இனப்பிரச்சினை பற்றி அது பேசுவதில்லை. ஆனால், யுத்தகாலத்தில் இலங்கைக்கு அது நிறைய ஆயுத, மற்றும் பாதுகாப்பு உதவிகளை வழங்கியிருக்கிறது. ஆனால், சீனா மட்டும்தான் ஆயுத, மற்றும் இராணுவ உதவிகளை வழங்கியதா என்பதையும் நாம் கருத்திற்கொள்ள வேண்டும்.
இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, இஸ்ரேல், ரஷ்யா என 30 வருடகால உள்நாட்டு யுத்தத்தில், இலங்கைக்கு பல நாடுகளும் இராணுவ உதவிகளைச் செய்துள்ளன.
சீன எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய எந்தத் தேவையும், தமிழ்த் தேசிய அரசியலுக்குக் கிடையாது. இவ்வளவும் ஏன், இலங்கை அரசியலுக்கே, சீன எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய தேவை கிடையாது. சமகாலப் பேச்சு வழக்கில் சொல்வதானால், இது ‘தேவையே இல்லாத ஆணி’.
குறித்த பாராளுமன்ற உறுப்பினரின் சீனா பற்றிய கருத்து, அறவே தேவையற்றதொரு கருத்து! சிறுபிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது என்பதுபோலத்தான், தமிழ்த் தேசிய அரசியலின் நிலை இன்று மாறிக்கொண்டிருக்கிறதோ என்ற அச்சம் ஏற்படுகிறது.
‘இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்’ என்றார் வள்ளுவர். ஆனால், தமிழ்த் தேசியமானது, பார்வையாளர்களைக் கண்டதும் கிளர்ச்சியுறும் குரங்கின் கையில் பூமாலையாக, சிக்கிச் சீரழிந்து வருகிறது என்றால் அது மிகையல்ல.
தமிழ் மக்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும்! ஒருவன் எந்த மொழியில் பேசுகிறான் என்பதைவிட, என்னத்தைப் பேசுகிறான் என்பதில்தான் விடயம் இருக்கிறது.
அடிமுட்டாள்தனமான கருத்தை ஆங்கிலத்திலோ, ஃபிரஞ்சிலோ, லத்தீனிலோ, ஹிந்தியிலோ, சிங்களத்திலோ பேசினாலும், அது அடிமுட்டாள்தனமான கருத்துதான்! இந்தத் தேவையில்லாத ஆணிகளைப் பிடுங்குவதை, தமிழ்த் தேசிய அரசியல் நிறுத்திக்கொள்வது அதன் ஆரோக்கியத்துக்குச் சாலச்சிறந்தது.
என்.கே.அஷோக்பரன்
நன்றி தமிழ் மிரர்
0 commentaires :
Post a Comment