12/08/2022

பசிலின் வருகை

எம்.எஸ்.எம் ஐயூப்
 
 
 
 


அமெரிக்காவுக்குச் சென்றிருந்த முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்‌ஷஇ ஞாயிற்றுக்கிழமை (20) நாடு திரும்பிய போது அவரை வரவேற்க கட்டுநாயக்க விமான நிலையத்துக்குச் சென்றிருந்த கூட்டத்தைப் பார்க்கும் போது 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் பின்னர்இ மஹிந்த ராஜபக்‌ஷவைப் பார்க்க மக்கள் சாரிசாரியாக திஸ்ஸமகாராமையிலுள்ள ‘கால்டன்’ என்று பெயரிடப்பட்டுள்ள அவரது இல்லத்துக்குச் சென்றமை நினைவுக்கு வருகிறது.

இரண்டும் மீண்டும் தலைதூக்கும் நோக்கத்தில் அவர்களே ஒழுங்கு செய்த கூட்டங்களாகும். மக்கள் தாமாக அன்று மஹிந்தவைப் பார்க்கச் சென்றிருந்தார்  ஹம்பாந்தோட்டையிலுள்ள அவரது வீட்டில் அவர் இருக்கும் போதுஅங்கு சென்றிருக்க வேண்டும்.

அதேவேளை தேர்தல் தோல்வியை அடுத்து சில நாள்களுக்குப் பின்னர்தான்  நாட்டில் நாலாபக்கத்தில் இருந்தும் திடீரென மக்கள் அவரைப் பார்க்கச் சென்றனர். அதேபோல் சில நாள்களுக்குப் பின்னர் அவர்கள் அங்கு செல்வதைத் திடீரென நிறுத்திக் கொண்டனர்.
பசில் தனக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டு இருக்கும் வழக்கொன்றின் காரணமாக நீதிமன்றத்திடம் அனுமதி பெற்றுஇ செப்டெம்பர் மாதம் அமெரிக்காவில் உள்ள தனது வீட்டுக்குச் சென்றார். அன்று அவர் நாட்டை விட்டு வெளியேறும் போது மக்கள் கூட்டம் விமான நிலையத்துக்குச் செல்லவில்லை. அவர் மீண்டும் நாடு திரும்பும் போது எதையும் சாதித்துவிட்டு வரவும் இல்லை.

பிளவுபட்டு இருக்கும் ஆளும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை மீண்டும் ஐக்கியப்படுத்தும் நோக்கத்துடனேயே அவர் நாடு திரும்பியுள்ளார் என்று பொதுஜன பெரமுனவினர் கூறுகின்றனர். ஜனவரி 15ஆம் திகதிக்கு முன்னர் நாடு திரும்ப வேண்டும் என்ற நீதிமன்றத்தின் நிபந்தனையின் பேரிலேயே அவர் அமெரிக்காவுக்குச் சென்றார். எனவே கட்சி பிளவுபட்டு இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர் நாடு திரும்பியே ஆக வேண்டும்.

அதேவேளை அவர் அமெரிக்காவுக்குச் செல்லு முன்னரே கட்சி பிளவுபட்டுத் தான் இருந்தது. எனவே அவரது வருகையின் நோக்கத்துக்கும் கட்சியின் பிளவுக்கும் எவ்வித் தொடர்பும் இருப்பதாக தெரியவில்லை.
மறுபுறத்தில் கட்சியின் பிளவுக்கு பிரதான காரணமாக இருந்தவரும் அவரே! விமல் வீரவன்சவின் தலைமையிலான குழுவும் டலஸ் அழகப்பெருமவின் தலைமையிலான குழுவும் அவரால் புறக்கணிக்கப்பட்டதன் காரணமாகவே ஆளும் கட்சியிலிருந்து இவர்கள் விலகினர். எனவே அவரால் கட்சியை மீண்டும் ஐக்கியப்படுத்த முடியுமா என்பதும் சந்தேகமே.

அந்தக் குழுக்கள் நேர்மையானவை என்பது இதன் அர்த்தம் அல்ல. கோட்டாவின் அரசாங்கத்தில் விமல் கம்மன்பில் போன்ற இனவாதிகளும் வாசுதேவ போன்றவர்களும் ஒதுக்கப்பட்டு அதிகாரத்தை பாவித்து பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு இல்லாமல் போனமையே அவர்கள் அரசாங்கத்தைவிட்டு வெளியேறக் காரணமாகியது.

2005ஆம் ஆண்டு மற்றும் 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல்களின் போது மஹிந்தவின் பிரசார வேலைகளுக்குப் பெறுப்பாக டலஸே இருந்தார். மஹிந்தவின் காலத்தில் அவருக்கும் அவருடன் இன்று சேர்ந்து இருக்கும் ஜீ.எல்.பீரிஸூக்கும் அரசாங்கத்தில் முக்கிய இடம் இருந்தது. அக்காலத்தில்தான் போர் நடைபெற்றதுஇ பல்லாயிரக் கணக்கானவர்கள் கொல்லப்பட்டார்கள் காணமாமற்போனார்கள். இந்தக் குழுவினரும் அந்த மனித உரிமை மீறல்கள் அத்தனையையும் நியாயப்படுத்தினர்.
போரில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் பிரதிநிதிகள் நியாயம் கேட்டு ஜெனீவா சென்ற போதுஇ அதை நாட்டுக்கு செய்த துரோகமாக சித்திரிப்பதில் இவர்களும் அரசாங்கத்தில் ஏனையோருடன் இணைந்து செயற்பட்டனர். இன்று ஆளும் கட்சியிலிருந்து பிரிந்து செயற்படும் அநுர பிரியதர்ஷன யாப்பா உள்ளிட்ட குழுவினர் தொடர்பாகவும் இந்த விடயங்கள் பொருந்துகின்றன.


அரசியல் ரீதியாக பசில் தோல்வியடையவில்லை என்று நாம் இதே பத்தியில் முன்னர் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்தோம். காரணம் மிகவும் மோசமாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மஹிந்த பிரிவு வீழ்சியடைந்திருந்து தாமும் தேர்தலில் போட்டியிட முடியாதவாறு கடந்த அரசாங்கம் சட்டம் கொண்டு வந்து இருந்த நிலையிலேயே அவர் புதிதாக கட்சியொன்றை ஆரம்பித்து இரண்டு வருடங்களுக்குள் நாடளாவிய தேர்தல் ஒன்றில் பாரியளவில் வெற்றி பெறும் வகையில் அந்தக் கட்சியை கட்டி எழுப்பினார்.

அப்போதைய ‘நல்லாட்சி’ அரசாங்கம் பொருளாதார துறையிலும் ஊழல்களை ஒழிப்பதிலும் தோல்விகண்ட நிலையில் மஹிந்தவுக்கு அது இலேசாகியது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் அவ்வாறு தோல்விகண்டால் பொதுஜன பெரமுன ஆளும் கட்சியாக இருந்த போதிலும்இ எல்லாப் பாவங்களையும் ரணிலின் தலையில் போட்டுஇ மீண்டும் தலைதூக்க பசிலின் தலைமையில் அக்கட்சி முயலலாம்.
இலங்கை மக்களின் அரசியல் அறிவின் தரத்தைப் பார்க்கும் போதுஇ அது வெற்றியளிக்கவும் கூடும்.
சிறுபான்மை மக்களின் கண்ணோட்டத்தில் பிரச்சினையைப் பார்ப்பதில் ராஜபக்‌ஷ குடும்பத்தில் மிகவும் நல்லவர் பசில் ராஜபக்‌ஷவேயாவார். கோட்டாபய மிக மோசமான இனவாதி. மிருசுவிலில் சிறு பிள்ளைகள் உள்ளிட்ட ஒரு குடும்பத்தையே கழுத்தை அறுத்து கொன்றதற்காக நீதிமன்றத்தால் தண்டனை வழங்கப்பட்டு இருந்த சுனில் ரத்னாயக்க என்ற இராணுவ வீரனைஇ ‘சிங்களவர்’ என்ற ஒரே காரணத்துக்காக அவர் விடுதலை செய்தவர்.
மஹிந்த படுசந்தர்ப்பவாதி. ‘தேர்ட்டீன் பிளஸ்’ என்று கூறிக்கொண்டு தமிழ் மக்களை சதா ஏமாற்றிக் கொண்டு இருந்தவர். அவரும் கோட்டாவும் போர் விடயத்தில் முடிவு எடுக்கும் நிலையில் இருந்த போதுதான்இ சரணடைந்த ஆயிரக்கணக்கானவர்கள் காணாமல் போனதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
பசிலுக்கு இனம்இ மதம் போன்ற விடயங்கள் எதுவும் முக்கியமல்ல. இதுவரை வெளியாகியிருக்கும் தகவல்களின்படிஇ அவருக்கு பணம் தான் வேண்டும். அதற்கு அரசியல் பலம் வேண்டும். அவர் இனவாதக் கண்ணோட்டத்தில் எடுத்ததாக கூறக்கூடிய எந்தவொரு முடிவும் இருப்பதாக தெரியவில்லை. அவர் சிறுபான்மை மக்களின் நண்பர் என்பது இதன் அர்த்தம் அல்ல; அந்த வகையில் அவரை ரணிலுடன் ஒப்பிடலாம்.
இப்போது ரணிலால் ஒதுக்கப்பட்டு இருக்கும் பொதுஜன பெரமுனவின் பெரும் ஊழல் பேர்வழிகள் பசிலைக் கொண்டு மீண்டும் தமது விளையாட்டுகளை ஆரம்பிக்கலாம். அவரை வரவேற்கச் சென்றவர்களில் முன்வரிசையில் ஜொன்ஸ்டனும் ரோஹித்த அபேகுணவர்தனவும் இருந்தமை காணக்கூடியதாக இருந்தது.
இவர்கள் அதிகார மட்டத்தில் இருந்தால்தான் பசிலுக்கு தேவையானவை நடைபெறும். எனவே சிலவேளை இப்போது ரணிலுக்கு எதிராக அரசாங்கத்துக்குள் சதிகள் இடம்பெறலாம்.
அடுத்த மார்ச் மாதத்துக்குப் பின்னர் ஜனாதிபதிக்கு பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் அரசியலமைப்பால் கிடைக்கிறது.
அவ்வாறு ரணில் பாராளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலை நடத்தினால் தற்போதைய பொருளாதார நிலை காரணமாக பொதுஜன பெரமுன தோல்வியடையலாம். அது ஒன்று மட்டுமே ரணிலுக்கு எதிரான ஆளும்கட்சியின் சதிகாரர்களை மிரட்டிக் கொண்டு இருக்கிறது.
ஆனால் அவ்வாறு பாராளுமன்றத்தை கலைத்தாலும் ரணிலின் தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சிக்கு பெரிதாக எதையும் சாதிக்க முடியுமா என்பது சந்தேகமே. எனவே ரணிலும் தமக்கு அந்த அதிகாரம் கிடைத்த உடன் பாராளுமன்றத்தை கலைப்பாரா என்பதும் சந்தேகமே!
இந்தச் சண்டையின் போது ரணிலின் கை ஓங்கி இருப்பதே சிறுபான்மையினருக்கு நல்லது. ஏனெனில் தற்போதைய பிரதான கட்சிகளில் சிறுபான்மையினர் விடயத்தில் ஏதாவது செய்ய வேண்டும் என்று ஓரளவுக்காவது ரணிலுக்கு மட்டுமே தேவை இருப்பதாக தெரிகிறது.
கடந்த அரசாங்கத்தின் காலத்தில்இ அவர் புதிய அரசியலமைப்பொன்றை வரைய நடவடிக்கை எடுத்தார். அது தொடர்பாக அவர் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில்இ அதிகார பரவலாக்கல் தொடர்பில் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏற்றுக் கொண்டது. ஏனைய தமிழ்க் கட்சிகள் ‘சமஷ்டி’ என்ற சொல் அதில் இல்லை என்று அதை ஏற்க மறுத்தன.
அந்தச் சொல் இல்லாவிட்டாலும் முன்வைக்கப்பட்ட ஆலோசனை சமஷ்டியைத் தான் குறிக்கிறது என்பதே தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடாக இருந்தது. இதனால் கூட்டமைப்பு எம்.பி எம்.ஏ சுமந்திரன் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.
தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதிலும் அந்த அரசாங்கம் சற்று ஆர்வம் காட்டியது. மொத்தமாக சகலரையும் விடுதலை செய்வதை தென்பகுதியில் அரசியல்வாதிகள் எதிர்ப்பதால்இ ஒவ்வொருவராக தனித் தனி நீதிமன்ற நடவடிக்கை மூலம் விடுவிக்க தமது அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பின்னர் அதைப் பற்றிக் குறிப்பிடும் போது கூறியிருந்தார்.
அண்மையிலும் ரணில் எட்டு கைதிகளை ஜனாதிபதி மன்னிப்பின் பேரில் விடுதலை செய்தார். இப்போதைக்கு பொதுஜன பெரமுனவினர் ரணிலின் நடவடிக்கைகளை கடுமையாக எதிர்ப்பதில்லை.
ஆனால் பசில்-ரணில் மோதல் வளர்ந்தால் இது போன்ற நடவடிக்கைகளை எடுப்பதை பசிலின் குழுவினர் அரசியல் இலாபம் கருதித் தடுக்கலாம். 


தமிழ்  மிரர் 

0 commentaires :

Post a Comment