பாடசாலை மாணவர்களுக்கான போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வூட்டல் நிகழ்சி திட்டம் ஒன்றினை ஐக்கிய நாடுகளின் மனித உரிமை அமைப்பும் மட்டக்களப்பு சர்வமத ஒன்றியமும் இணைந்து நடாத்தினர்.
முதல் கட்டமாக 2022.12.03 அன்று மட்டக்களப்பு இந்துக்கல்லூரியில் இந்நிகழ்சித் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் மட்டக்களப்பு வலயக் கல்வி திணைக்கள உதவி கல்வி பணிப்பாளர்,மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர், இலங்கை செஞ்சிலுவை சங்க பிரதிநிதிகள்,மனித உரிமை அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் சர்வமத தலைவர்களும் பங்கு பற்றியிருந்தனர்.
இந் நிகழ்ச்சி திட்டத்தில் சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்தின் வழிநடத்தலில் மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் திரு ந.பிரபாகரன் பிரதான வளவாளராக கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.
போதைப்பொருள் தடுப்பு சட்டம், சிறைச்சாலைகளுக்குள் இளம் சமுதாயம் உள்வாங்கப்படுவதனால் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் மற்றும் அவர்களுக்கு ஏற்படும் எதிர்கால பிரச்சனைகள் போன்றன குறித்ததாக பாடசாலை மாணவர்களுக்கான இவ்விழிப்புணர்வூட்டல் உரை அமைந்திருந்தது.
இக்கருத்தரங்கில் கூடியளவு மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் பங்கு பற்றி தங்கள் வரவேற்பை தெரிவித்திருந்தனர்.
மேலும் இது போன்ற நிகழ்வுகளை தங்கள் பாடசாலைகளிலும் நடத்துமாறும் விரிவுரைகளை வழங்குமாறும் இக் கருத்தரங்குக்கு வருகை தந்த ஏனைய அதிபர்கள் குறித்த அமைப்பிடமும் பிரதான வளவாளரான சிறைச்சாலை அத்தியட்சகர் திரு ந.பிரபாகரன் அவர்களிடமும் கோரியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதே போன்று கடந்த 2022.01.26 தொடக்கம் 2022.01.31 வரை யாழ்ப்பாணம்,கிளிநொச்சி,முல்லைத்தீவு,மன்னார் மற்றும் வவுனியா ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் கிராமத்துக்கு கிராமம் வீட்டுக்கு வீடு எனும் தலைப்பில் நீதியமைச்சின் ஏற்பாட்டில் நடைபெற்ற நடமாடும் சேவையின் ஒரு பகுதியாக மேற்குறித்த மாவட்ட பாடசாலைகளிலும் குறித்த அத்தியட்சகர் திரு ந.பிரபாகரன் அவர்களால் விரிவுரைகள் நடாத்தப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
தமிழன் நவா
0 commentaires :
Post a Comment