தமிழ் தேசியத்தின் அம்மணத்தை மறைக்க கிழக்கிலே துகில் தேடும் நிலாந்தன்
அண்மையில் அரசியல் ஆய்வாளர் என்று சொல்லப்படும் நிலாந்தன் அவர்களின் முகநூலை தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நாளும் பொழுதும் அவர் 'தமிழ்த்தேசமாய் உணருங்கள்' 'தமிழ் தேசமாய் உணருங்கள்' என்று ஓலமிடும் வீடியோக்கள் பல அதிலிருந்தன. இறுதியாக அவரிட்ட ஓலத்தில் ஒளிந்திருந்த சூதினை அம்பலப்படுத்தவே இந்த பதிவை இடுகின்றேன்.
இதுபற்றி மட்டக்களப்பு இளம் தோழமை ஒருவருடன் பேசியபோது இதுவரைநாளும் அவரது பெயரைக்கூட நானறிந்ததில்லையே என்கிறார். அந்த தோழருக்கு அரசியலில் அவ்வளவு தூரம் பரந்த அறிவு கிடையாது. ஒருவகையில் அப்படியொரு குண்டுச்சட்டியாக இருப்பதுவும் நல்லதுக்குத்தான் என்று எண்ணிக்கொண்டேன். ஏனென்றால் இந்த நிலாந்தன் போன்றவர்களை அறியாதிருப்பதென்பதே ஒருவகையான கொடுப்பனவுதான்.
ஆனால் அவரைப்பற்றி நான் சற்று விளக்கமாக சொன்னபோது அந்த வீடியோவை பார்த்துவிட்டு மீண்டும் தொடர் கொண்டு பேசினார். அவர் இப்படிச்சொன்னார். "தமிழ் தேசியம் தேயோ தேயென்று தேய்ந்து போனதற்கு நிலாந்தனைப்போன்ற அரசியல் ஆய்வாளர்களின் கைங்கரியம்தான் காரணம் என்று இப்போதுதான் புரிகின்றது".
இப்போது விடயத்துக்கு வருவோம்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பேச்சுவார்த்தைக்கான அழைப்பை அடிப்படையாகக் கொண்டு அண்மையில் பல வாதப்பிரதிவாதங்கள் எழுந்துள்ள நிலையில் இந்த ஆய்வாளரும் ஒரு வீடியோ விட்டுள்ளார்.
அதில் அவர் கூறுவதாவது தமிழ்த்தேசிய கட்சிகள் எல்லாம் ஒன்றுபட்டு அரசியல் தீர்வை முன்வைத்து பேசட்டுமாம். அது நல்லதுதானே. என்று நீங்கள் யோசிப்பது தெரிகிறது.
அதுவரை பிரச்சனையில்லை. ஆனால் அதைத்தொடர்ந்து அவர் கூறுவதுதான் ஒன்றும் புரியவில்லை. 'வடக்கு கிழக்கு இணைப்புக்கு எதிராக பிள்ளையானை பயன்படுத்தவே அவருக்கு மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது'என்கின்ற குற்றச்சாட்டை முன்வைக்கின்றார் நிலாந்தன்.
ரணில் இந்த 'வடக்கு கட்சி'களை பேச்சுவார்த்தைக்கு ஒருமித்து வாருங்கள் என்று அழைக்கின்றபோதே இவர்களின் ஒற்றுமையின் சீத்துவத்தை புட்டுப்போட்டு விட்டார். பத்து லட்ஷம் பேரைக் கூடத் தாண்டாத வடமாகாணத்துக்கு பத்துக்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளை வைத்துக்கொண்டிருக்கும் இவர்களின் தலைமைப்போட்டிகளும்,
தன்முனைப்பு அரசியலும்,கழுத்தறுப்பும், சிங்கள தலைவர்கள் நன்கே அறிந்துவைத்துள்ளவைதான் .
இந்த தேசியம் பேசும் தலைமைகளால் ஒருபோது தமிழருக்கான தீர்வுக்குறித்து ஒருமித்த நிலைப்பாட்டுக்கு வரமுடியாது,வர மாட்டார்கள் என்பதும் அவர்களுக்கு தெரியும். அதனால்தான் அவர் தைரியமாக இந்த அழைப்பை விட்டுள்ளார். இது எந்தப்பிஞ்சுக்குழந்தைக்கும் புரியக்கூடிய அரசியல்.
இந்த நிலாந்தனின் பேச்சைக்கேட்டால் நம்மெல்லாம் என்ன முட்டாளா? இல்லை இந்தாள்தான் முட்டாளா, என்று தலை வெடிக்கின்றது. சிலவேளை நான் யோசிக்கின்றேன். இரண்டும் இல்லாமல் இந்தாள் முட்டாள் மாதிரி நடிக்கிறானா?
ஆனால் ஒன்று மட்டும் புரிகின்றது. இந்த யாழ்ப்பாண மேட்டுக்குடி சிந்தாந்தவாதிகள் தங்கள் கையாலாகாத அரசியல் அம்மணத்தை மறைக்க யாராவது மட்டக்களப்பானை போடுகாயாக்க பார்க்கின்றனர். இதற்குத்தான் இந்த புண்ணாக்கு ஆய்வாளர்களை வைத்திருக்கின்றார்கள் போலும் .
இன்னுமே போடப்படாத மேசை. தொடங்கப்படாத பேச்சுவார்த்தை, இந்த நிலையில் அதற்கிடையே அவசர அவசரமாக அந்த முயற்சியில் தீர்வு கிடையாமற்போவதற்கு அதற்கு யார் காரணமென பதிலை கையிலே வைத்துக்கொள்ளும் வித்தை காட்டுகிறார் நிலாந்தன். பிள்ளையானுக்கு அபிவிருத்திக்குழு தலைவர் பதவி கொடுத்தது வடக்கு கிழக்கு பிரிப்புக்கு அவரைப் பயன்படுத்தவாம் என்கின்றார் எத்தனையற்புதமான கண்டுபிடிப்பு? இது போன்ற யாழ்ப்பாணத்தாரின் கண்டுபிடிப்புகளுக்காகவே தனியாக ஒரு நோபல் பரிசு உருவாக்கப்படவேண்டும்.
நிலாந்தன் அவர்களே!
நீங்கள் ஒன்றை மட்டும் ஒழுங்காக புரிந்து கொள்ள வேண்டும்.பிள்ளையான் என்னும் மனிதன் கிழக்கிலே யாராலும் நிராகரிக்க முடியாத தலைவன். கடந்த தேர்தலிலே வடக்கு கிழக்கு மாகாணங்களிலே வெற்றியடைந்த தமிழ் பேசும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொகை இருபத்தைந்து. அதிலே கள்ள உறுதிமுடித்த காணியை வைத்து பத்துக் கோடி லோனெடுத்து சாராயத்தை தண்ணிபோல் செலவழித்து வென்றவர்கள் சிலர். பின்கதவால் விருப்புவாக்கு காட்டி ரவிராஜின் மனைவியான கைம்பெண்ணின் சாபத்தோடு பதவிக்கு வந்தவர்கள் சிலர். படிப்பையும் பட்டத்தையும் சமூக அந்தஸ்தினையும் காட்டி பாமரர்களை ஏமாற்றி பிழைத்தவர்கள் வேறுசிலர். பல்கலைக்கழகத்தில் குதிரையோடி பட்டம்பெற்று அதனை 'பொங்குதமிழ்' அரசியலில் முதலீட்டு மடடக்களப்பிலே வந்து வாக்குப்பொறுக்கி தேசிய பட்டியல் எம்பியானவர்கள் சிலர்.
ஆனால் பிள்ளையான் அப்படியல்ல நிலாந்தன் அவர்களே!
இந்த பெருந்தலைகள்,மேதைகள் மேதாவிகள், நீதிமான்கள்,எல்லோரையும் விட பெரும்பான்மை மக்களின் (54198 வாக்குகள்) ஆதரவை பெற்று சிறைக்குள்ளிருந்து வெற்றிவாகை சூடிய மண்ணின் மைந்தன் ஆகும். அவருக்கு கிடைக்கும் அரசியல் பதவிகள் ஒன்றும் நீங்கள் சித்தரிப்பது போல எலும்புத்துண்டுகளுமல்ல. பிள்ளையான் யாருடைய எடுப்பார் கையுமல்ல. கிழக்கு மண்ணையும் அதன் மக்களையும் நேசிக்கும் உன்னதமான தலைவன் என்று எங்கள் மக்கள் அவரை மனதார நம்புகின்றார்கள்.
அவருக்கு வழங்கப்படும் ஒவ்வொரு பதவிகளும் மட்டக்களப்பு மாவட்ட மக்களின் ஆணைக்கு வழங்கப்படும் மரியாதைகளாகும். அதனை நீங்கள் கொச்சைப்படுத்துவது எமது மக்களை அவமதிப்பதாகும். பிள்ளையான் கிழக்கின் தனித்துவத்தை பகிரங்கமாக பேசுபவர். அதை சொல்லியே தனது கட்சியை வளர்த்தெடுத்தவர். 'தமிழ் தேசிய' தலைமைகளைப் போல 'உரிமை' வியாபாரம் செய்துகொண்டு சிங்கள தலைவர்களுடன் தனிப்பட்ட உறவுகொண்டு ஒட்டியுறவாடுபவரல்ல.
ஏதோ ரணில் தங்கத்தட்டிலே வைத்து தமிழீழத்தை தந்துவிட போகிறார் என்பதுபோலவும் அதற்கு பிள்ளையான்தான் தடைசொல்லப்போகின்றார் என்பதுபோலவும் அதற்காகவே அவருக்கு பதவி வழங்கப்படுவதாகவும் மக்களின் மனதிலே நஞ்சை விதைப்பதை தயவு செய்து நிறுத்திக்கொள்ளுங்கள்.
கிழக்கின் சனத்தொகை என்ன? அதிலுள்ள சிங்களமக்கள் வடக்கு கிழக்கு இணைப்பை ஏற்பார்களா? கிழக்கு முஸ்லிம்களின் சனத்தொகை என்ன? அவர்கள் வடக்கு கிழக்கு இணைப்பை ஏற்பார்களா? இதைத்தாண்டி எத்தனை கிழக்குத் தமிழர்கள் வடக்கு கிழக்கு இணைப்பை ஏற்க முன்வருவார்கள்? என்கின்ற யதார்த்த சூழல்களையெல்லாம் மறைத்துவிட்டு பிள்ளையானை நோக்கி சுட்டுவிரல் நீட்ட வேண்டாம்.
யாழ்ப்பாணத்து தலைமைகளின் அரசியல் வங்குரோத்துத்தனத்தை மறைக்க,எந்த பேச்சு வார்த்தை மேடைகளிலும் வெற்றிபெற முடியாத யாழ்மேட்டுக்குடிகளின் முட்டாள்த்தன வரலாற்றை மறைக்க, எழுபதுவருட தமிழ்த்தேசிய அரசியலில் தோல்வியை மறைக்க, அதன் தலைவர்களின் பிழைப்புவாத போக்கிரித்தனங்களை மறைக்க கற்பனையில் எதிரியை கட்டமைக்க முனைகின்றீர்கள். அதற்கு கிழக்கு மக்களின் அபிமானத்தை வென்ற ஒரு தலைவனை போடுகாயாக்கப் பார்க்கின்ரீர்கள். கிழக்கிலே துரோகிகளை தேடுவதை முதலில் நிறுத்துங்கள். இது அரசியல் அறமன்று நிலாந்தன் அவர்களே!
'தமிழ் தேசம்' 'தமிழ் தேசம்' என்றும் 'தமிழராய் உணர்வோம்' என்றும் பித்துப்பிடித்தமாதிரி பேசித்திருக்கின்றீர்களே? நீங்கள் கனவுலகில் இனிமைகாணுவது உங்களின் உரிமை. ஆனால் மக்களையெல்லாம் உங்கள் கனவுலகத்துக்கு அழைத்துச்செல்ல விரும்புவது? அது அபத்தம்.
நிஜ உலகுக்கு வாருங்கள்.நாளும்பொழுதும் தலைவிரித்தாடும் சாதி கொடுமைகளின் போஷகர்களான யாழ்ப்பாணத்து சாதிமான்களிடம் போய் அதைச் சொல்லுங்கள் 'முதலில் தமிழரால் உணருங்கள்' என்று பின்னர் கிழக்கைப்பற்றி பேசலாம்.
இல்லாவிட்டால் தமிழராய் உணர்வது ஒருபுறம் வைத்துவிட்டு முதலில் கிழக்குத் தமிழர்களின் மன உணர்வுகளையாவது புரிந்து கொள்ள முயலுங்கள். யுத்தம் தின்ற எச்சங்களை மட்டுமே வைத்துக்கொண்டு தங்கள் இருப்பைக் காப்பாற்றிக்கொள்ள போராடும் கிழக்குத்தமிழ் மக்களின் தேவைகளை புரிந்து கொள்ள முயலுங்கள். உங்கள் கற்பனாவாத தமிழ்த் தேசியமெல்லாம் இந்த மக்களின் வாழ்க்கைப் போராட்டத்தின் முன் செல்லாக்காசாகி நிற்பதால்தான் பிள்ளையான் பின்னால் இவர்கள் ஆயிரமாயிரமாய் அணிதிரளுகின்றார்கள் என்கின்ற சத்தியத்தை தேட முயலுங்கள். அது கசப்பாக இருந்தாலும் போகிறவழிக்கு புண்ணியமாவது கிடைக்கும்.இல்லாவிடின் நீங்களெல்லாம் கற்றதனால் ஆயபயன் ஏதுமில்லை.
எப்படியோ தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் பாராளுமன்ற வரவை, கிழக்கு மக்களின் தனித்துவமான குரலை உங்களைப்போன்ற மேதாவிகளுக்கும் மேட்டுக்குடிகளுக்கும் சகித்துக்கொள்ள முடியவில்லை. பிள்ளையானின் ஒவ்வொரு பாராளுமன்ற உரைகளும் உங்கள் வயிற்றில் புளியை கரைப்பதை உணர முடிகின்றது.
இறுதியாக ஒன்று பிள்ளையானுக்கு பதவி இருப்பதால் மட்டும் கிழக்கின் தனித்துவத்தை அவர் பேசவில்லை. பிள்ளையானுக்கு பதவி இல்லாவிடினும் கிழக்கு கிழக்காகவே இருக்கும். இது உங்களைநோக்கி விடப்படும் சவால் அல்ல. எங்களின் சண்டித்தனமுமல்ல.
உங்களுக்கு அதாவது தமிழ் தேசியம் பேசும் மேட்டுக்குடிகளுக்கு அதற்கான அரசியல் தந்திர வழிமுறைகளும் தெரியாது. அதைநோக்கி நகருவதற்கான யோக்கியதையும் கிடையாது என்பதை அறிந்ததனால் சொல்லுகின்றேன்.
0 commentaires :
Post a Comment