12/10/2022

கிழக்கு கிழக்காக ஒரு வரலாற்றுப் பாடம்-அழகு குணசீலன்(முன்னாள் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர்)


இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்வுக்கான பேச்சுவார்த்தைகள் குறித்து பேசப்படுகின்ற இன்றைய நிலையில் நாடாளுமன்றத்திற்கு உள்ளும், வெளியும் பேசப்பட்ட இருவேறு கருத்துக்கள் பற்றிய மௌன உடைவுகள் இது. 

அண்மையில் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர், பா.உ. சிவநேசதுரை சந்திரகாந்தன் “கிழக்கு கிழக்காக இருக்கின்ற 13 பிளஸ் தீர்வுக்கு” தங்கள் கட்சியின் ஆதரவு உண்டு என்று அறிவித்திருந்தார். 

தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர், பா.உ. இராஜவரோதயம் சம்பந்தன் தீர்வு இல்லையேல் “தமிழ் மக்கள் அடையாளம், சுயமரியாதை, ஏன்?கௌரவத்தை கூட பேண முடியாத நிலை ஏற்படும்” என்ற கவலையை வெளியிட்டிருக்கிறார் . 

தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் செய்யும் இரு கட்சித் தலைமைகளும் தங்கள் கட்சிக் கொள்கை சார்ந்து இரு வேறு கண்ணாடிகளை அணிந்து விவகாரத்தை நோக்குகிறார்கள். 

 ஒன்று : மரபு ரீதியான ஒட்டுமொத்த தமிழ்த்தேசிய பெரும்பாக அணுகுமுறை (MACRO APPROACH). இந்த அணுகுமுறை எண்ணிக்கையில் சிறுபான்மையினரின் அபிலாஷைகளைப் புறக்கணிக்கின்ற பெரும்பான்மை மேலாதிக்க அரசியல் சார்ந்தது. சிங்கள தேசியமும், தமிழ்த் தேசியமும் சிறுபான்மையினரை ஒடுக்குவதில் சமரசம் அடைகின்ற ஒரு புள்ளி – ஒரு பிற்போக்கு மாதிரி. 

 மற்றையது : ஒட்டுமொத்த பார்வைக்கு எதிரான பிரித்து நோக்கும் நுண்பாக அணுகுமுறை (MICRO APPROACH). இது பிரதேச, சமூக, பொருளாதார, அரசியல் பன்மைத் தன்மையையும், பண்பாட்டு கலாச்சாரக் கட்டமைப்பு வேற்றுமைகளையும், தனித்துவங்களையும் அங்கீகரிக்கின்ற பின்நவீனத்துவ மாதிரி.  

 கிழக்கு மாகாண மக்களின் “கிழக்கு கிழக்காக…” என்ற இந்த சிந்தனையை வெறுமனே விடுதலைப்புலிகளில் இருந்து கருணா அம்மான் பிரிந்ததில் இருந்து அல்லது தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தோற்றத்தில் இருந்து பார்ப்பவர்கள் கிழக்கின் அரசியல் வரலாற்றை அறியாதவர்கள் அல்லது அதை அறிந்திருந்தும் “பூனை பால் குடிக்கும்” அரசியல் செய்பவர்கள். அரைவேக்காட்டு அரசியல் பேசுபவர்கள். ஆனால் கருணாவின் பிரிவைத் தொடர்ந்த அரசியல் சூழல் கிழக்கில் ஒரு அரசியல் தலைமைத்துவத்தின் தேவையை வலியுறுத்தியது. அது உருவாகியும் உள்ளது. 

கிழக்கு மாகாணத்தில் யாழ். மேட்டுக்குடி அரசியலுக்கு எதிரானதும், அதற்குப் பின்னால் போகக் கூடாது என்பதும் இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து   கிழக்கு சமூகத்தலைமைகளாலும், மக்கள் மத்தியிலும் பேசப்பட்டு வருகின்ற ஒரு கருத்து. இதற்கு பிரித்தானிய காலனித்துவ ஆட்சிக்காலத்தில் அன்றைய யாழ், வேளாள, இந்து மேட்டுக்குடி “தடிப்பு” அரசியலில் பெற்றுக் கொண்ட அனுபவங்களும், கண்டிய சிங்கள நாயக்க வம்சத்துடன், யாழ். தமிழ் பொன்னம்பலம் வம்சமும் இணைந்து நாடாத்திய “சமூக அநீதி” அரசியலும் ஒரு காரணம். ஆறுமுகநாவலரின் ஆசியுடன் இடம்பெற்ற இந்த சமூக,பொருளாதார, அரசியல் அநீதிக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் கூட மேட்டுக்குடி அரசியலுக்கு எதிராக விபுலாநந்தரே போராட வேண்டியிருந்தது என்பதை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். 

இதில் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு முக்கிய அம்சம் உள்ளது. அதுதான் கிழக்கின் படுவான்கரை விவசாயக் கிராமங்களும், எழுவான்கரை மீனவக் கிராமங்களும், நகரம்சார் சமூகங்களும், அதேவேளை சகலதரப்பு கல்விச் சமூகமும், யாழ். மேலாதிக்கத்திற்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டிருந்ததாகும். தேர்தல் காலத்தில் மட்டும் இந்த இணக்கமின்மை நிலைப்பாடு பேசப்படவில்லை, காலம் பூராகவும் பேசப்பட்டது. ஆயுதப்போராட்ட காலத்திலும் கிழக்கின் மூத்த பிரஜைகளும், மக்களும் ஆயுத கலாச்சார அச்சத்தில் “மனதிற்குள்” பேசினார்கள். 

கிழக்கில் இருந்து இலங்கை பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள், யாழ். உயர் அதிகாரிகளுக்கு கீழ் வேலை செய்த எழுது வினைஞர் தரத்திலானவர்கள், பலாலி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சிக்காகச் சென்ற ஆசிரியர்கள் எனப் பல மட்டத்தினரும் யாழ். மேலாதிக்க மனநிலை பற்றியும், அதனால் புறக்கணிக்கப்பட்டது பற்றியும் பேசியிருக்கிறார்கள். கிழக்கு மாகாணத்தின் மூத்த பிரஜைகளும், இன்றும் கதைகதையாகச் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.  

அதேவேளை வடக்கில் “மேய்ப்பர்ளுக்கு” கீழ் வேலை செய்ய முடியாத சமூக ரீதியாக ஒதுக்கப்பட்ட தகுதியான, சிறந்த பல அதிகாரிகள், ஆசிரியர்கள் அந்த “சமூகச் சித்திரவதையில்” இருந்து தப்பிக்க, மேட்டுக்குடி “சுட்ட சாதிக் குறியை” மறைக்க தொழில்சார் புகலிடத்தை கிழக்கில் தேடினார்கள். இவர்களின் அர்ப்பணிப்பான பணியை கிழக்கு சமூகம் இன்றும் நினைவுகூருகிறது. இவர்கள் கிழக்கு அவர்களுக்கு வழங்கிய சமூக நீதி அங்கீகாரத்தில் திளைத்துப்போனவர்கள். இவர்களில் பலர் மனிதம் வாழ்கின்ற இந்த கிழக்கு மண்ணில் இன்றும் “பாயோடு” ஒட்டிப்போனவர்கள். 

கிழக்கு கிழக்காக என்றால் “நானே நானாக” வாழ விரும்புகிறேன் என்ற கிழக்கின் தனிமனித அபிலாஷை அறிவிப்பு. குடும்பம், சமூக ரீதியில் “நாங்கள் நாங்களாக” வாழவிரும்புகிறோம் என்ற சுயதீர்மானம் சார்ந்த ஒரு செய்தி. இன்னொரு வகையில் சொல்வதானால் “நாங்கள்”, “நீங்களாக” வாழவேண்டும் என்றும், உங்கள் தலைமைத்துவம், கட்டுப்பாடு, விருப்பு -வெறுப்புக்களுக்கு ஏற்ப செயற்படவேண்டும் என்றும் எங்களை ஏன் கட்டிப்போட நினைக்கிறீர்கள்? என்று கிழக்கு மக்கள் திருப்பிக் கேட்டதைக் குறிக்கிறது. 

 சிங்கள தேசம் இதை உங்களுக்கு செய்தால் அதைவிட வேறு “தவறு” இந்த உலகில் இல்லை என்று சுயநிர்ணய அடிப்படையில் தனிநாடொன்றை அமைக்கும் உரிமை உங்களுக்கு உண்டு என்றால் ….. நீங்கள் கற்பித்த கசப்பான பாடங்களின் வரலாற்று, அனுபவங்களின், ஆதாரங்களின் அடிப்படையில் நாங்கள் “கிழக்கு கிழக்காக” சமூக, பொருளாதார, அரசியல் ரீதியில் தனித்துவமாக வாழ விரும்புவதில் உள்ள தவறு என்ன?  

 இரா.சம்பந்தனின் கருத்து வடக்கு, கிழக்கு சமூக பன்மைத்துவத்தை மறுதலிப்பதாக உள்ளது. வழக்கமாக தமிழ்த்தேசியம்   “சுடுகின்ற” தமிழையும், சைவத்தையும் முதன்மைப்படுத்திய அரசியலைப் பேசுகிறது, அது அடிப்படையில் தவறானது. தமிழ்த்தேசிய அரசியலில் வடக்கை முன்னிறுத்தித்தான் இது எப்போதும் பேசப்பட்டு வந்துள்ளது. இதனால்தான் “வடக்கு பிரச்சினைகளுக்கு” தீர்வு காண ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்தார். கிழக்கு மாகாண மக்களின் பல்கலாச்சார, பண்பாட்டு வாழ்வியல் குண்டுச் சட்டிக்குள் குதிரையோடும் குடாநாட்டு வாழ்வியல் அல்ல. அருகருகே வாழும் சக சமூகங்களின் தனித்துவங்களையும், பன்மைத்துவத்தையும் சமூக விழுமியங்களையும் அங்கிகரித்து வாழ்கின்ற வாழ்வியல். 

 இந்த வாழ்வியலை கிழக்கில் துப்பாக்கியே சுட்டுக் தொலைத்தது. சம்பந்தன் கூறுகின்ற அடையாளம், சுயமரியாதை, கௌரவம் தமிழ் மக்களுக்கு மட்டும் உரியதா? வடக்கிலும், கிழக்கிலும் வாழும் முஸ்லிம், மலையக சிங்கள மக்களுக்கு உரித்தற்றதா?அதைப் பேணுகின்ற உரிமை இலங்கை வாழ் அனைத்துச் சமூகங்களுக்கும் – கிழக்கு வாழ் அனைத்துச் சமூகங்களுக்கும் உரியதில்லையா? 

வரலாற்றைத் திருப்பிப் பார்த்தால்…..! இந்த விடயங்கள் பலமுறை, பல சந்தர்ப்பங்களில் பேசப்பட்டவை. எனினும் கிழக்கு கிழக்காக… என்ற நிலைப்பாட்டை வலியுறுத்தவும், அந்த அவ்வாறான ஒரு முடிவுக்கு கசப்பான அனுபவங்கள் தந்த பாடங்களே கிழக்கை தள்ளிவிட்டுள்ளது என்பதை தெளிவுபடுத்தவும் இவற்றை மீண்டும், மீண்டும் பேசவேண்டியுள்ளது. 

தமிழரசுக்கட்சி, தமிழ்க் காங்கிரஸ், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் இணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணியின் முக்கூட்டு தலைமையை ஏற்றுக்கொண்டன. வட்டுக்கோட்டை தனிநாடு கோரிக்கை பிரகடனம் செய்யப்பட்டபோது இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைமை இதில் இருந்து விலகிக்கொண்டது. மலையக மக்களை பலிகொடுத்து யாழ். மேட்டுக்குடி அரசியலுக்கு முட்டுக்கொடுக்க தொண்டமான் விரும்பவில்லை   என்பதே இதன் அர்த்தம். மறுபக்கத்தில் யாழ்ப்பாணம் தொகுதியில் டிக்கட் கேட்ட குமார் பொன்னம்பலம் அது கிடைக்காததால் வெளியேறினார். முக்கூட்டு தலைமை குடைசாய்ந்தது.  

ஐக்கிய தேசியக்கட்சியில் கல்குடாத்தேர்தல் தொகுதியின் பிரதிநிதியாக இருந்த கே.டபிள்யு. தேவநாயகம் கட்சி வேலிக்கு அப்பால் கூட்டணியில் இணைந்து செயற்பட தயாராக இருந்தார். பேச்சுவார்த்தையும் இடம்பெற்றது. தனிநாடு கோரிய போது இது சாத்தியமற்றது என்று அவர் ஒதுங்கிக் கொண்டார். தொண்டமானை துரோகி என்று அழைக்காத தமிழ்த்தேசியம் தேவநாயகத்தை துரோகி என்றது. குமார் பொன்னம்பலமும் துரோகி பட்டியலில் இடம்பெறவில்லை. 

1977 நாடாளுமன்ற தேர்தலில் புத்தளம், கல்முனை, சம்மாந்துறை, மூதூர் தொகுதிகளில் முஸ்லீம் வேட்பாளர்கள் தனிநாடு கோரிக்கையை ஏற்று போட்டியிட்டார்கள். இவர்கள் அனைவரும் கூண்டோடு மக்களால் நிராகரிக்கப்பட்டார்கள். காரணம் யாழ். மேலாதிக்கத்தின் வெறும் அடையாள, போடுகாய் அரசியல். தமிழ்த்தரப்பின் இந்த அரசியல் முஸ்லீம்களை காலப்போக்கில் கிழக்கு மாகாண முஸ்லீம் சமூகத்தை முன்நிறுத்திய ஒரு கட்சியின் அவசியத்தை வலியுறுத்தியது. மஹ்ரும் எம்.எச்.எம்.அஷ்ரப் முஸ்லீம் காங்கிரஸை உருவாக்கினார். 

அ.தங்கத்துரையின் மூதூர்த்தொகுதி கூட்டணியின் அங்கீகாரத்துடன் பறிக்கப்பட்டது. செ.இராசதுரைக்கு எதிராக காசி ஆனந்தன் களத்தில் இறக்கப்பட்டார். மட்டக்களப்பு மக்கள் நாங்கள் “எடுப்பார் கைபிள்ளை” அல்ல என்ற செய்தியை காசி ஆனந்தனை தேர்தலில் தோல்வியுறச் செய்து, அ.அமிர்தலிங்கத்திற்கு சொன்னார்கள். 

புதிதாக உருவாக்கப்பட்ட பொத்துவில் தேர்தல் தொகுதியில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளரும் முதலாளியுமான கனகரெட்ணத்திற்கு உள்ளூர் மக்களின் ஆலோசனைகளைப் புறக்கணித்து அமிர்தலிங்கம் டிக்கட் வழங்கினார். கனகரெட்ணம் வெற்றி பெற்றபின் வளர்ப்பு வீட்டில் இருந்து வெளியேறி பிறந்த வீட்டில் குடியேறி மாவட்ட அமைச்சராக மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் பெரும் சேவையாற்றினார். துரோகியானார்.  

 இதற்கிடையில் பொத்துவில்லில் காசி ஆனந்தனை நிறுத்த மறுத்த அமிர்தலிங்கம் யாழ்ப்பாணத்தில் இருந்து மாவை.சேனாதிராஜாவை இறக்குமதி செய்ய முனைந்தார். கிழக்கின் பிரதிநிதித்துவம் ஒன்றை யாழ்ப்பாணத்திற்கு சுருட்டிக்கொள்ளும் நோக்கம். ஆனால் அது சாத்தியப்படவில்லை. இராசதுரையுடன் காசி ஆனந்தனை மோதவிடுவதைத் தவிர்த்து, ஏன்? வடக்கில் ஒரு தொகுதியை காசி ஆனந்தனுக்கு விட்டுக்கொடுக்க தமிழர் விடுதலைக்கூட்டணியால் முடியவில்லை. தொகுதியை பறிக்க உடந்தையாய் இருந்த உங்களுக்கு ஏன்? தங்கத்துரைக்கு ஒரு தொகுதியை வடக்கில் கொடுக்க முடியவில்லை. 

செல்லையா இராசதுரையே தமிழரசுக்கட்சியின் தலைவராக வரவேண்டியிருந்த நிலையில் திட்டமிட்டு எஸ்.எம்.இராசமாணிக்கத்திற்கு அப்பதவி வழங்கப்பட்டது. அடுத்து நடந்த தேர்தலில் இந்த “யாழ் ஆதிக்கத்திற்கு” எதிராக இராசமாணிக்கத்தை பட்டிருப்பு மக்கள் வீட்டுக்கு அனுப்பினார்கள். ஐக்கிய தேசியக் கட்சியை தேர்வு செய்தார்கள். 

1989 தேர்தலில் இந்திய இராணுவம் இருந்த காலத்தில் வடக்கில் எந்த ஒரு தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றிபெற முடியாத அமிர்தலிங்கம் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டார். கிழக்கு பிரதிநிதித்துவம் ஒன்றை அபகரிக்கும் மற்றொரு முயற்சி. அண்ணருக்கு ஆசி வழங்கி அழைத்து வந்தவர் ஜோசப் பரராஜசிங்கம். “எல்லாவற்றையும்” சேர்த்து வைத்து இருவருக்கும் சேர்த்து வட்டியும், முதலுமாக கணக்கைத் தீர்த்துக் கொண்டார்கள் மட்டக்களப்பு மக்கள். 

கடந்த தேர்தலில் தேசியப்பட்டியல் பிரதிநிதித்துவத்தை நியமிப்பதில் செயலாளர் துரைராசசிங்கம் துரிதமாகச் செயற்படாது, மெத்தனமாக செயற்பட்டிருந்தால் கலையரசனின் பெயர் மாவை.சேனாதிராஜாவாக இருந்திருக்கும். அம்பாறையில் ஒரு தமிழ் பிரதிநிதித்துவத்தை இழக்கக் காரணமாக இருந்தது மட்டுமன்றி, தேசிய பட்டியலில் கிடைத்தையும் சுருட்டியிருப்பார்கள். ஆக, கிழக்கில் ஒன்றைக்குறைத்தல், வடக்கில் ஒன்றைக்கூட்டல். யாழ்.மேட்டுக்குடி கணக்கு எப்போதும் வடக்கில் கூட்டலும், கிழக்கில் கழித்தலும்தான். 

 1989 இல் அம்பாறையில் ஒரு தமிழ்ப் பிரதிநிதித்துவத்தின் அவசியம் உணர்ந்து ஈரோஸ் அங்கு போட்டித்தவிர்ப்பை செய்தது. திவ்வியநாதன் தெரிவு செய்யப்பட்டார். அதுமட்டுமின்றி வடக்கில் தெரிவு செய்யப்பட்ட நான்கு உறுப்பினர்களை திருகோணமலை, மட்டக்களப்பு, மலையகத்திற்கு “பிரதிநிதித்துவ மறுபங்கீடு” செய்தது ஈரோஸ். இதில் இருவர் தமிழர், இருவர் முஸ்லீம். இதே நோக்கில் கடந்த 2020 இல் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அம்பாறையில் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தைக் காப்பாற்ற போட்டித் தவிர்ப்பைச் செய்தார்கள்.   

1977 இல் இலகுவாக மன்னார் தொகுதியில் ஒரு முஸ்லீம் பிரதிநிதியை தமிழர் விடுதலைக் கூட்டணி வெற்றி பெறச் செய்திருக்க முடியும், அதை அவர்கள் செய்யவில்லை. சாம்பியாவில் கணக்காளராக இருந்த சூசைதாசனை அமிர்தலிங்கம் இறக்குமதி செய்தார். இன்றைக்கும் வன்னிவாழ் மலையக மக்களுக்கு ஒரு பிரதிநிதித்துவம் இல்லை. இந்த நிலை நீடித்தால் எதிர்காலத்தில் வன்னியும் தனிவழியில் செல்வதை தமிழ்த்தேசியத்தினால் தடுக்கமுடியாது. 

இயக்கங்கள் கிழக்கிற்கு வந்தபோது மக்கள் மத்தியில் பெரும் சந்தேகம் நிலவியது. எனினும் அன்றைய அரசியல் சூழல் விரும்பியோ விரும்பாமலோ கிழக்கு இளைஞர்களை இயக்கங்களில் இணையத்தூண்டியது. இது கருணா, பிள்ளையான், ஜனா போன்று இன்றைய இயக்கவழி அரசியல் தலைமைகள் அனத்துக்கும் பொருந்தும். இயக்கங்கங்களின் போட்டி, பொறாமை, சகோதரப் படுகொலைகள் கிழக்கு மக்களால் விரும்பப்படவில்லை. காரணம் வடக்குக்கும், கிழக்குக்கும் இடையே நிலவும் அடிப்படை மனோவியல் வேறுபாடு. இது அதிகாரத்தில் -ஆயுதத்தில் இருந்து கட்டி எழுப்பப்படுகிறது. யாழ்.மேலாதிக்க  -மனோவியல் அரசியலில் இது சாதாரணமானதும், தவிர்க்க முடியாததுமாக இரத்தத்தில் ஊறியும் விட்டது. சந்ததி சந்ததியாகத் தொடரும் மரபணு நோய். 

இயக்க மோதல்கள் சமூகங்களுக்கு இடையிலான மோதல்களாக மாறியபோது தங்கள் சமூக உறவும், வாழ்வியலும் ஆபத்துக்கு உள்ளாவதை மக்கள் உணர்ந்தார்கள். மறுபக்கத்தில் இயக்க உறுப்பினர்கள் “ஊருக்கு திரும்பி” புறக்கணிப்பு பற்றியும், மற்றும் கிழக்குக்கு ஆயுதங்கள் வழங்கப்படாதது பற்றியும் பேசினார்கள். மக்கள் மீதான ஆயுத வன்முறை அதிகரித்தது. 

இதுவரை சிங்கள தேசிய அரசியல் கட்சிகளை ஆதரித்த கிழக்கின் சமூக முக்கியஸ்தர்களான போடியார்கள், விதானையார்கள், உடையார்கள், வட்டவிதானையார்கள், கோயில் தலைவர்கள், வர்த்தகர்கள், முதலாளிகள் தங்கள் முதலீட்டை பாதுகாக்க, இயக்க “அந்தஸ்த்தை” பெறவும், வரிவிதிப்பில் இருந்து தப்பவும் இயக்க ஆதரவாளர்களாக மாறினார்கள். இவர்கள் தங்கள் மாடி வீடுகளை இயக்கங்களுக்கு வழங்கினார்கள். இவர்கள் சொல்வதையே இயக்கங்கள் கேட்டன. இயக்கங்கள் இவர்களைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு சாதாரண மக்களை வாட்டி எடுத்தன. இந்த வகையில் இயக்கத்தை ஆதரித்து பின்னர் தமிழ்த்தேசிய பாராளுமன்ற அரசியலில் புகுந்த ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் கிழக்கில் இன்னும் வாழ்கிறார்கள். இன்று தமிழ்த்தேசியம் பற்றி அதிகம் பேசும் தமிழ்த்தேசிய வியாபாரிகள் இவர்கள்தான்.  

இந்த நிலையில் தான் கருணாவின் பிரிவும், அதற்கு எதிராக விடுதலைப்புலிகள் மேற்கொண்ட தாக்குதல்களும் கிழக்கு மக்களுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. மரபுரீதியான அரசியல் தலைமைகள் மட்டும் அல்ல ஆயுதப்போராட்ட தலைமைகளும் அவர்கள் மேட்டுக்குடி யைச் சேராதவர்களாக இருந்தபோதும் ஆயுதமும்,அதிகாரமும் “யாழ். மேலாதிக்க மனநிலையை – உளவியலை”யும்  விட்டு விலகி அரசியல் செய்யத்தகுதி அற்றவர்கள் என்பதை கிழக்கு புரிந்துகொண்டது. கருணாவின் பிரிவு இதனை மேலும் உறுதிப்படுத்தியது. 

கிழக்கு மாகாணம் தனியான அதிகாரப்பகிர்வு நிர்வாக அலகாக செயற்பட்டு மேலதிக அதிகாரங்களையும், வளங்களையும், ஆளணிகளையும் கொண்டு தனித்துவத்தையும், சமூக, பொருளாதார, அரசியல் அடையாளங்களையும் பேணி, சுயமாகச் செயற்படுகின்ற அரசியல் நிர்வாகக் கட்டமைப்பே கிழக்கு… கிழக்காக .. என்ற மகுடத்தின் பின்னணி. இது கிழக்கு மக்களின் அரசியல் அபிலாஷை. அதை யாழ்.மேலாதிக்க கட்சிகளும், சக்திகளும் கோரிக்கைகளை முன்வைத்து தீர்மானிக்க முடியாது. 

பிள்ளையான், வியாழேந்திரன், கருணாவுக்கு கடந்த தேர்தலில் மக்கள் அளித்த வாக்குகள் “கிழக்கு கிழக்காக….” என்பதற்கு மக்கள் வழங்கிய அங்கீகாரம். கிழக்கு கிழக்காக இருப்பதே கிழக்கிற்கான தனித்துவ அரசியல் தலைமைத்துவத்தையும், ஆட்சி அதிகாரத்தையும், சமூக, பொருளாதார, அரசியல், கலைகலாச்சார, பண்பாட்டு விழுமியங்களையும், வாழ்வியலையும் வடக்கு வெள்ளம் அள்ளிச் செல்லாமல் அணைபோடுவதற்கான ஒரேவழி. 

அண்மைக் காலமாக சில தமிழ்ப் பதிவுகளிலும், ஊடகங்களிலும் வடக்கு, கிழக்கு என்பதற்கு பதிலாக வடகிழக்கு என்ற வார்த்தைப் பிரயோகம் பயன்படுத்தப்படுகிறது. இது திட்டமிட்ட “கிழக்கு” அழிப்பா? அல்லது அரசியல் வெறுமையா? அல்லது மொழிவளப் பற்றாக்குறையா? கிழக்கு நான்கு திசைகளில் ஒரு பூரணமான திசை, நாலில் ஒன்று. வடகிழக்கு வெறும் எட்டில் ஒன்று. இது வெறும் இடைச்செருகல் திசை. வேண்டுமானால் முல்லைத்தீவுக்கு இதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள், ஆட்சேபனை இல்லை. கிழக்கு மாகாணத்தைக் குறிக்க இதை பயன்படுத்த முடியாது. இதுவும் ஒருவகையில் மேலாண்மை இருட்டடிப்புத்தான். உள்வாங்குவது போன்று இறுதியில் முழுமையாக விழுங்கிவிடுதல். இணைத்து அழித்தல். 

“கிழக்கு கிழக்காக” என்பது வடக்கின் கிழக்கும் அல்ல, வடகிழக்கும் அல்ல.  


நன்றி *அரங்கம் நியூஸ்.கொம்

 அதுதான் கிழக்கு … கிழக்காக…! கிழக்கு…. கிழக்காக….!! 

0 commentaires :

Post a Comment