சீனா இலங்கையின் நண்பனா?
இரண்டாம் உலகமகா யுத்தம் முடிவடைந்த காலத்தில் இலங்கையும் சுதந்திரம் அடைந்தது. உலகெங்கும் பஞ்சமும் பட்டினியும் தலைவிரித்தாடின. இலங்கையும் அதற்கு விதிவிலக்காக இருக்க முடியவில்லை. இலங்கையிலும் அரிசித்தட்டுப்பாடு தலைக்கு மேலே வெள்ளம் போன நிலையிலிருந்தது. அதுவரைகாலமும் இலங்கையை ஆக்கிரமித்து பல நூற்றாண்டுகளாக இலங்கையின் செல்வங்களையெல்லாம் சுரண்டிக்கொழுத்த பிருத்தானியா,ஹாலந்து,போத்துக்கீஸ் போன்ற நாடுகளோ அல்லது அமெரிக்காவோ இலங்கைக்காக இரக்கம் காட்டவில்லை.
மேற்கத்தேய நாடுகளின் ஏவலாளியாக இருந்த ஐக்கிய தேசிய கட்சிக்கு என்னசெய்வதென்றே தெரியவில்லை. இறுதியில் சீனாவிடம் அவர்கள் கையேந்த முடிவெடுத்தனர். அதன்பலனாக அந்த ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது.
இவ்வொப்பந்தப்படி உலகச்சந்தையின் விலையைவிட குறைந்தவிலைக்கு அரிசியை தருவதற்கும் அதற்கு மாற்றீடாக உலகச்சந்தை விலையை விட கூடியவிலைக்கு இறப்பரை வாங்கிக்கொள்ளவும் சீன முன்வந்தது. ஐந்தாண்டுகளுக்கென இந்த ஒப்பந்தம் இணக்கப்பாடு கொண்டிருந்த போதிலும் ஆறு முறை அதனைப் புதுப்பிக்க சீனா இணங்கியது. அதன்படி 1982ஆம் ஆண்டுவரை இலங்கைக்கு பேருதவியாக சீனாவின் அரிசி வழங்கப்பட்டுவந்தது.
இலங்கையின் வரலாற்றில் செய்யப்பட்ட எவ்விதமானதொரு வர்த்தக ஒப்பந்தமும் பெற்றிருக்காத முக்கியத்துவத்தை இந்த ஒப்பந்தம் கொண்டிருந்தது. அதனால்தான் அதுகுறித்து இன்றும் நாம் நினைவுகொள்ள வேண்டிய தேவையெழுகின்றது.
அரிசி-இறப்பர் ஒப்பந்தம் அல்லது சீன-இலங்கை ஒப்பந்தம் என்று வரலாற்றில் அறியப்பட்ட அந்த ஒப்பந்தம் 1952ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18ஆம் திகதி எழுதப்பட்டது. அதன்படி எதிர்வரும் 18 ம் திகதியுடன் அந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சீன-இலங்கை ஒப்பந்தத்தின் வயது எழுபது ஆகின்றது.
0 commentaires :
Post a Comment