12/26/2022

வாழும்போதே வாழ்த்துவோம்" சாமஸ்ரீ சமூக சேவையாளர் விருது விழா!

மட்டக்களப்பில் இடம்பெற்ற "வாழும்போதே வாழ்த்துவோம்" சாமஸ்ரீ சமூக சேவையாளர் விருது விழா!


அகில இன நல்லுறவு ஒன்றியம் நடாத்தும் சாமஸ்ரீ சமூக சேவையாளர் விருது விழா "வாழும்போதே வாழ்த்துவோம்" எனும் தொனிப்பொருளில் 24 திகதி சனிக்கிழமை மட்டக்களப்பு ஊறணி தனியார்  கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

இதன் போது கல்வி, கலை, கலாசார, வர்த்தக, சமூக நலத்துறைகளில் தேசிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட புத்தி ஜீவிகளுக்கும், சாதனையாளர்களுக்குமான சாமஸ்ரீ சமூக சேவையாளர் விருது  வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

அகில இன நல்லுறவு ஒன்றியத்தின் தேசிய அமைப்பாளர்  கலாபூசணம்  யு.எல்.எம். ஹனிபா  தலைமையில்  இடம்பெற்ற நிகழ்விற்கு மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமான கே.கருணாகரன் பிரதம  அதிதியாக கலந்து கொண்டு பல்துறை சாதனையாளர்களுக்கான விருதினை வழங்கி கௌரவித்தார்.

மேலும் இந்நிகழ்விற்கு கெளரவ அதிதிகளாக கலாநிநி   பொன்.நல்லரெத்தினம், மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி  வைத்தியர் இ.உதயகுமார் மற்றும் அக்கரைப்பற்று தொழில்நுட்ப கல்லூரியின் அதிபர் மா.சோமசூரியம் உள்ளிட்டோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மேலும் சிறப்பு அதிதிகளாக காத்தான்குடி தள வைத்தியசாலையின் வைத்தியர் எம்.எஸ்.எம்.ஜாபிர்  மற்றும் அக்கரைப்பற்று  பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர்  கலாநிதி எஸ்.எம்.சதாத், அகில இலங்கை நல்லுறவு ஒன்றியத்தின் மட்டக்களப்பு மாவட்டத்துக்குரிய இணைப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டமை சிறப்பம்சமாகும்.

இதன்போது பல்துறைசார் சாதனையாளர்களுக்கு பொன்னாடை போர்த்தி, மாலை அணிவித்து "சாமஸ்ரீ தேச மானிய" விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், பிரதம அதிதி உள்ளிட்ட அதிதிகளுக்கும் இதன்போது நினைவுச்சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விருது வழங்கும் விழாவில் மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் திரு. நல்லையா பிரபாகரன் அவர்களுக்கும் "சாமஶ்ரீ தேசமானி: எனும் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தமிழன் நவா 
»»  (மேலும்)

12/24/2022

தந்தை பெரியார் வரலாற்று குறிப்புகள்--சிறு அறிமுகம்


தந்தை பெரியார்


1879
ஈ.வே.ராமசாமி (தந்தை பெரியார்) தமிழ் நாட்டிலுள்ள ஈரோடு   மாவட்டத்தில்  1879ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் 17ஆம் திகதி பிறந்தார்                     .

1889
தனது பாடசாலை கல்வியை 1889ஆம் ஆண்டு பத்தாவது வயதில் நிறுத்தினார். அதனால் அவரை பெற்றோர்  வியாபாரத்தில் ஈடுபடுத்தினர்.

1898 
தனது 19ஆவது வயதில் நாகம்மாள் என்பவரை திருமணம் செய்தார். இரு வருடங்களின் பின்  அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.அக்குழந்தை ஐந்தாவது வயதில் இறந்தது.அதன்பின்னர் அவர்களுக்கு குழந்தைகள் கிடையாது.

1904
தனது 25வது வயதில் துறவறம் பூண்டு காசி, கல்கத்தா போன்ற இடங்களுக்கு சென்றார். பின்னர் அவரை அவரது தந்தை அதிலிருந்து மீட்டெடுத்தார்.

1911
பெரியாரின் தந்தை மரணமானார்.

1914
ஈரோடு நகரமன்றத்தின் தவிசாளரானார். அத்தோடு ஈரோடு நகரத்தின் கெளரவ மஜிஸ்ட்டேட் உட்பட்ட 28 கெளரவ பதவிகளை வகித்தார்.

1919
நகர மன்ற தவிசாளர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்திய தேசிய காங்கிரசில் இணைந்தார்.

1920
அனைத்துவித கெளரவ பதவிகளையும் துறந்து இந்திய தேசிய காங்கிரஸ் நடத்திய ஒத்துழையாமை இயக்கத்தில் இணைந்தார்.

1921
தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயலாளரானார்.

1922
மதுவிலக்கு (கள்ளுக்கடை மறியல்)  போராட்டத்தில் ஈடுபட்டதனால் சிறைபிடிக்கப்பட்டார். அவரோடு  மனைவி நாகம்மாள், தங்கை கண்ணம்மாள் ஆகியோரும் சிறைபிடிக்கப்பட்டனர்.

1922
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக தெரிவானார். பெரியாரது ஈரோடு இல்லம் தமிழ்நாடு காங்கிரஸ் அமைப்பின் அலுவலகமாக மாறியது.

1924
இந்தியாவில் முதல் முறையாக சத்தியாக்கிரகம் நடத்தினார். கேரளத்தில் வைக்கம் மகாதேவர் ஆலயம் முன்பாக தீண்டாமை ஒழிப்புக்காக அது நடாத்தப்பட்டது.
அதனால்  இருமுறை சிறை சென்றார்.
அப்போராட்டத்தில் வெற்றி பெற்றதனால் வைக்கம் வீரர் என்னும் சிறப்பு பட்டம் பெற்றார்.


1925
சமுதாயத்திலுள்ள சாதி வேறுபாடுகளை களைய சுயமரியாதை இயக்கத்தை ஆரம்பித்தார்.  அதனை பிரச்சாரம் செய்ய குடியரசு வார இதழை தொடங்கினார். 

1927
சாதி முறைமைகளை ஆராதிக்கும் "வர்ணாச்சிரமம் தர்மத்தை " ஒழித்தால்த்தான் தீண்டாமைக்கொடுமைகள் ஒழியும் என்று  காந்தியோடு கடுமையான வாதம் புரிந்தார்.

1928 
புரட்சி என்னும் அர்த்தம் கொண்ட "ரிவோல்ட்" என்னும் ஆங்கில இதழை தொடங்கினார்.

1929
முதலாவது சுயமரியாதை மாநாட்டை செங்கல்பட்டில் கூட்டினார். இந்த மாநாட்டில் அண்ணாத்துரை ஒரு மாணவனாக கலந்து கொண்டார். 

1929
பெரியார் மலேசியா சென்று சுயமரியாதை பிரச்சாரம் செய்தார். 

1930
ஈரோட்டில் இரண்டாவது சுயமரியாதை மாநாட்டை கூட்டினார்.

1931
விருது நகரில் மூன்றாவது சுயமரியாதை மாநாட்டை கூட்டினார்.

1932 
இலங்கை, எகிப்து,ரஸ்யா,கிரீஸ்,துருக்கி,ஜெர்மனி,ஸ்பெயின், பிரான்ஸ்,போத்துக்கல்,இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு சென்று திரும்பினார். லண்டனில் 50.000 தொழிலாளர்கள் மத்தியில் உரையாற்றினார்.

1933
மனைவி நாகம்மை இறந்தார்.

1934
"பகுத்தறிவு" நாளிதழை தொடங்கினார்.

1935
நீதிக்கட்சிக்கு ஆதரவளிக்க தொடங்கினார்.

1936 
பெரியாரின் தாயார் சின்னத்தாயம்மாள் மறைந்தார்.

1937
"கட்டாய  ஹிந்தி மொழி" எதிர்ப்பு மாநாட்டை காஞ்சிபுரத்தில் நடத்தினார்.

1938
சென்னையில் கூடிய தமிழ் நாடு பெண்கள் மாநாடு  "பெரியார்"  என்னும் சிறப்பு பட்டத்தை வழங்கி கெளரவித்தது.

ஹிந்தி திணிப்பை எதிர்த்து மாபெரும் கிளர்ச்சி செய்தமையால் இரண்டு வருட சிறைவாசம் செல்ல நேர்ந்தது. 
ஆந்திர பிரதேசத்தில் அவர் சிறையிருக்கும் போதே நீதிக்கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

1940
டாக்ட்ர் அம்பேத்காரை பம்பாய் சென்று சந்தித்து உரையாடினார்.

1944
பெரியார் தலைமையிலான நீதி கட்சி "திராவிடர் கழகம்"என்னும் பெயர் மாற்றம் பெற்றது. 

1949
பெரியார் மணியம்மையை மணந்தார்.

அண்ணாத்துரை அவரது ஆதரவாளர்களுடன் இணைந்து பெரியார் தலைமையிலான திராவிடக்கழகத்திலிருந்து விலகி திராவிட முன்னேற்ற கழகம் என்னும் அமைப்பை உருவாக்கினார்.

1950
பெரியார் அவருடைய "பொன்மொழிகள்" நூலுக்காக ஆறு மாதகால சிறைத்தண்டனை பெற்றார்.

1951
பிற்படுத்தப்பட்டடோர் நலனுக்காக கிளர்ச்சி செய்து இந்தியாவின் அரசியல் அமைப்பினை முதல் முறையாக திருத்தச் செய்தார்.

1954
இந்திய தேசிய காங்கிரஸ்  சார்பில்  தமிழ் நாட்டில் காமராஜர் முதல்வராவதை ஆதரித்தார்.

1967
திராவிட முன்னேற்றக்கழகம் சார்பில் அண்ணாத்துரை முதலமைச்சரானதும் பெரியாரிடம் நேரில் சென்று சந்தித்து ஆசிகளும் வாழ்த்துரையும் ஆலோசனைகளும் பெற்றுக்கொண்டார்.

1968
வட  இந்தியாவில் உள்ள லக்னோ மாநகரில் நடைபெற்ற சிறுபான்மையோர் மாநாட்டில் சிறப்புரையாற்றினார்.

1970
சர்வதேச அமைப்பான யுனெஸ்கோ பெரியாருக்கு விருது வழங்கி கெளரவித்தது.
( "பெரியார் நவீன காலத்தின் தீர்க்கதரிசி,தென்கிழக்காசியாவின் சோக்ரடீஸ்,சமூகசீர்திருத்தத்தின் தந்தை,
அறியாமை,மூடநம்பிக்கை,அர்த்தமற்ற சம்பிரதாயம், மானமிழந்த  பழக்கவழக்கங்கள் என்பவற்றில் கடும் எதிரி"-யுனெஸ்கோ)

1973
சென்னையில் தனது இறுதி சொற்பொழிவையாற்றினார்.

மாபெரும் சிந்தனையாளர் பெரியார் டிசம்பர்-24ஆம் நாள் தனது 95 வது வயதில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.

அப்போதைய முதல்வர் கருணாநிதியின் விசேட ஆணைப்படி பெரியாரது பூதவுடல் மக்களின் அஞ்சலிக்காக ராஜாஜி மண்டபத்தில் வைக்கப்பட்டு அரச மரியாதைகள் வழங்கப்பட்டடன.

1974
தமிழ் நாடு அரசால் வாங்கப்பட்ட.கப்பலுக்கு "தமிழ் பெரியார்" என்னும் பெயர் சூட்டப்பட்டு    பெரியார் கெளரவிக்கப்பட்டார்.

1975
ஈரோட்டில் பெரியார் வாழ்ந்த இல்லம் அரசுடமையாக்கப்பட்டு பெரியார்-அண்ணா நினைவாலயமாக்கப்பட்டது.

1978
முதலமைச்சர் எம்ஜிஆர் ஆட்சியில் பெரியார் நூற்றாண்டு விழா தமிழ் நாடு முழுக்க மிகச்  சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இந்திய மத்திய அரசாங்கம் பெரியாரின் நூற்றாண்டு விழாவையொட்டி அவரது  சிறப்பு முத்திரை ஒன்றை வெளியிட்டது.

பெரியாருடைய தமிழ் எழுத்து சீர்திருத்தத்தினை  எம்ஜிஆர் தலைமையிலான  தமிழ் நாடு அரசு அமுலாக்கியது.

1980
தமிழ் நாடு சட்டடசபை மண்டபத்தில் தந்தை பெரியாரின் உருவச்சிலை நிறுவப்பட்டது.

1984
தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவினால் வருடாந்த பெரியார் விருது ஒன்று உருவாக்கப்பட்டு  தமிழக அரசினால் சமூகநீதி போராளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

பிரசுர வெளியீடு *பெரியார் வாசகர் வட்டம் மட்டக்களப்பு


































»»  (மேலும்)

12/22/2022

தமிழ் தேசிய அரசியல்- தேவையில்லாத ஆணிகள்


ஹோம் சைனா’ (சீனா வீட்டுக்குப் போ) என்ற போராட்டத்தை, தான் தலைமையேற்று நடத்தவேண்டி வரும் எனத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான சாணக்கிய ராகுல், பாராளுமன்றத்தில் சூளுரைத்திருக்கிறார். 

தமிழ்த் தேசிய அரசியலின் முன்னிலைக் கட்சிகளில் ஒன்றான தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, இன்று ‘மாலுமி இல்லாத கப்பலாக’, கடலில் அலையின் போக்குக்கு ஏற்ப, தன்பாட்டுக்கு மிதந்துகொண்டு நிற்கிறது. ஆளாளுக்கு தனக்குப் பிடித்த திசையில் கப்பலைச் செலுத்த, துடுப்புப் போடும் நிலையில், திக்குத் தெரியாது, கரை தெரியாது, நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டிருக்கிறது கட்சியும் தமிழ்த் தேசியமும்!

கிட்டத்தட்ட 20 டிரில்லியன் டொலர் பொருளாதாரம் கொண்ட சீனாவுக்கு, இலங்கை 7.4 பில்லியன் டொலர் கடனை செலுத்த வேண்டியுள்ளது என்றும், இலங்கையின் உண்மையான நண்பனாக சீனா இருந்தால், இலங்கையின் கடனை தள்ளுபடி செய்ய அல்லது குறைந்தபட்சம் மறுகட்டமைப்பு செய்ய ஒப்புக்கொள்ளும் என்றும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பி சாணக்கிய ராகுல், வெள்ளிக்கிழமை (02) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 

மேலும், கிட்டத்தட்ட 20,000 பில்லியன் டொலரை வைத்திருக்கும் சீனா, உண்மையிலேயே இலங்கையின் நண்பன் என்றால்..., 9 மில்லியன் லீற்றர் டீசல் அல்லது அரை மில்லியன் கிலோ கிராம் அரிசி வழங்குவது, உண்மையான உதவியல்ல என்றும் சிங்களத்தில் பேசிய சாணக்கிய ராகுல் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், “சீனர்கள் இந்த நாட்டில் என்ன செய்தார்கள்? ஹம்பாந்தோட்டை துறைமுகத்தைப் பார்த்தால், சீனா அதைக் கைப்பற்றியுள்ளது. இலங்கை மக்களுக்கு வேலை கொடுக்கப்பதற்காக இந்த நாட்டில், சீனர்கள் செய்த முதலீடு ஒன்றைச் சொல்லுங்கள். ஒரு தொழில் கூட இல்லை” என்றும் சாணக்கிய ராகுல் கூறினார். 

மேலும், “ராஜபக்‌ஷ குடும்பத்துக்கு நன்றி செலுத்துவதற்காக, அவர்கள் இந்த நாட்டில் முதலீடுகளை கட்டாயப்படுத்தியுள்ளனர். அவை பயனற்ற முதலீடுகள்” என்றும் குறிப்பிட்டார்.

இந்தப் பேச்சு, இலங்கை என்ற நாட்டுக்கோ, அல்லது தமிழ்த் தேசிய அரசியலுக்கோ பிரயோசனமில்லாத பேச்சு. சீனா, இலங்கைக்கு என்ன செய்தது என்ற கேள்வியை சாணக்கிய ராகுல் கேட்க முதல், அவர் கொஞ்சம் வரலாற்றைப் படிக்க வேண்டும். 

மஹிந்த ராஜபக்‌ஷ காலம் வரை, சீன-இலங்கை உறவு எப்படி இருந்தது என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும். பிரபல்யம் தேடுவதற்காக, சமூக ஊடகங்களின் பரவல் மூலம், பிரபல்யம் கிடைக்கும் என்பதற்காக, எதையும் பேசலாம் என்பதற்குப் பெயர் ‘அரசியல்’ அல்ல. அத்தகைய அரசியலை முன்னெடுப்பது, ஒரு சமூகத்துக்கு மிகமிக ஆபத்தானது.

1950களில், இலங்கை அந்நிய செலாவணி பற்றாக்குறையின் விளைவாக, பொருளாதார நெருக்கடி நிலையை சந்தித்திருந்தது. அதன் விளைவாக, அரிசி இறக்குமதி குறைந்ததில் நாட்டில் அரசிக்கான பற்றாக்குறை நிலவியது. 

கொரியப் போர் முடிவுக்கு வந்ததன் விளைவாகவும், செயற்கை இறப்பரின் அறிமுகத்தாலும் உலக சந்தையில் இறப்பருக்கான தேவை கணிசமாகக் குறைந்தது. 

உலகளாவிய நெருக்கடிகள் காரணமாக, தேயிலை மற்றும் தேங்காய் எண்ணெய் போன்ற இலங்கை ஏற்றுமதி செய்த பொருட்களுக்கான தேவையும் குறைந்தது. ஆகவே, எமது அந்நியச் செலாவணி வரவு குறைந்தது. ஆனால், அரிசிக்கு இறக்குமதியில்தான் நாம் தங்கியிருந்தோம். ஆகவே, நமது அந்நியச் செலாவணி கையிருப்பு குறைந்து கொண்டே வந்தது. எனவே, 1952 ஒரு மிகச் சவாலான காலமாக இருந்தது. 

இந்த நிலையில்தான், சீனாவுக்கு இறப்பரின் தேவை அதிகமாக இருந்தது. தடைகள் மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக, சீனாவால் இலகுவாக இறப்பரை பெற்றுக்கொள்ள முடியாத சூழல் இருந்தது. இலங்கைக்கு அரிசி தேவையானதாக இருந்தது. இந்த நிலையில்தான், அன்றைய வர்த்த அமைச்சர் றிச்சட் கோட்டாபய சேனநாயக்கவின் முயற்சியால், 1952இல், ‘சீனா-சிலோன் அரிசி - இறப்பர் ஒப்பந்தம்’ கைச்சாத்தானது. 

இந்த ஒப்பந்தத்தின்படி, சீனாவுக்கு இறப்பரை ஏற்றுமதி செய்தோம்; அதற்குப் பதில், சீனா எங்களுக்கு அரிசியைக் கொடுத்தது. அதுவும் சும்மா அல்ல; சீனா மிகவும் தாராளமாக இலங்கை இறப்பருக்கான சந்தை விலையை விட 40% அதிகமாகவும், அரிசிக்கான சந்தை விலையில் 1/3 பங்கையும் இலங்கைக்கு வழங்கியது. இலங்கைக்கு மிகப்பெரிய அனுகூலமான ஒப்பந்தம் இது! 

இதனால் ஏனைய சில நாடுகள், இலங்கைக்கான உதவிகளை நிறுத்தியிருந்தாலும், இதனால் இலங்கைக்கு கிடைத்த அனுகூலம் பெரியதுதான். இந்த ஒப்பந்த, இலங்கையும் சீனாவும் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திக்கொண்ட 1957இற்கு ஐந்து வருடங்களுக்கு முன்பதாகவே கைச்சாத்திடப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

1976இல் சீனா, இலங்கைக்கு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தைப் பரிசளித்திருந்தது. அன்றைய காலத்தில், தென் மற்றும் தென் கிழக்காசியாவிலேயே மிகப்பெரிய மாநாட்டு மண்டபமாக இது இருந்தது. இந்த மண்டபத்தில்தான் 1976இல் இலங்கை அணிசேரா நாடுகளின் உச்சி மாநாட்டை நடத்தியிருந்தது! இதைவிட சிறுநீரக வைத்தியசாலை, தேசிய வைத்தியசாலை வௌிநோயாளர் பிரிவு என சீனா செய்யும் உதவிகள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆகவே, இலங்கைக்கான எதிரி நாடல்ல சீனா என்பதைப் புரிந்துகொள்ளுதல்தான் அரசியல் பக்குவம். 

இலங்கையின் நெருங்கிய நண்பன் இந்தியா என்பதில், மாற்றுக்கருத்து இருக்க முடியாது. இலங்கை தனது வரலாற்றில் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை சந்தித்தபோது, இலங்கைக்கு ஏறத்தாழ நான்கு பில்லியன் டொலர் வரை கடனுதவி செய்தது இந்தியா. 

இதற்காக சீனாவை மோசமான எதிரியாகச் சித்திரிக்கத் தேவையில்லை. இந்தியா, ஜப்பான், சீனா ஆகிய நாடுகள் இலங்கைக்கு செய்த, செய்கின்ற உதவிகளுக்கு நிகராக, ஏனைய பல செல்வந்த நாடுகள் உதவவில்லை. அதற்காக, அவர்களை வைது கொண்டிருக்க முடியுமா என்ன?

மறுபுறத்தில், இந்தக் கருத்தைச் சொன்னவர் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் என்பதால், இலங்கை அரசியல் என்பதற்கப்பால், தமிழ்த் தேசிய அரசியலுக்கு, சீன எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய தேவை என்ன என்ற கேள்வியும் இங்கு முக்கியமானது. 

சீனா, வௌிநாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடுவதில்லை என்பதை, தனது வௌிநாட்டுக் கொள்கையாகக் கொண்டிருக்கிறது. அதன்படி, இலங்கையின் இனப்பிரச்சினை பற்றி அது பேசுவதில்லை. ஆனால், யுத்தகாலத்தில் இலங்கைக்கு அது நிறைய ஆயுத, மற்றும் பாதுகாப்பு உதவிகளை வழங்கியிருக்கிறது. ஆனால், சீனா மட்டும்தான் ஆயுத, மற்றும் இராணுவ உதவிகளை வழங்கியதா என்பதையும் நாம் கருத்திற்கொள்ள வேண்டும். 

இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, இஸ்‌ரேல், ரஷ்யா என 30 வருடகால உள்நாட்டு யுத்தத்தில், இலங்கைக்கு பல நாடுகளும் இராணுவ உதவிகளைச் செய்துள்ளன. 

சீன எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய எந்தத் தேவையும், தமிழ்த் தேசிய அரசியலுக்குக் கிடையாது. இவ்வளவும் ஏன், இலங்கை அரசியலுக்கே, சீன எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய தேவை கிடையாது. சமகாலப் பேச்சு வழக்கில் சொல்வதானால், இது ‘தேவையே இல்லாத ஆணி’.

குறித்த பாராளுமன்ற உறுப்பினரின் சீனா பற்றிய கருத்து, அறவே தேவையற்றதொரு கருத்து! சிறுபிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது என்பதுபோலத்தான், தமிழ்த் தேசிய அரசியலின் நிலை இன்று மாறிக்கொண்டிருக்கிறதோ என்ற அச்சம் ஏற்படுகிறது. 

‘இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்’ என்றார் வள்ளுவர். ஆனால், தமிழ்த் தேசியமானது, பார்வையாளர்களைக் கண்டதும் கிளர்ச்சியுறும் குரங்கின் கையில் பூமாலையாக, சிக்கிச் சீரழிந்து வருகிறது என்றால் அது மிகையல்ல. 

தமிழ் மக்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும்! ஒருவன் எந்த மொழியில் பேசுகிறான் என்பதைவிட, என்னத்தைப் பேசுகிறான் என்பதில்தான் விடயம் இருக்கிறது.

அடிமுட்டாள்தனமான கருத்தை ஆங்கிலத்திலோ, ஃபிரஞ்சிலோ, லத்தீனிலோ, ஹிந்தியிலோ, சிங்களத்திலோ பேசினாலும், அது அடிமுட்டாள்தனமான கருத்துதான்! இந்தத் தேவையில்லாத ஆணிகளைப் பிடுங்குவதை, தமிழ்த் தேசிய அரசியல் நிறுத்திக்கொள்வது அதன் ஆரோக்கியத்துக்குச் சாலச்சிறந்தது.

என்.கே.அஷோக்பரன்
நன்றி தமிழ் மிரர்

»»  (மேலும்)

வீதி மறியல் போராட்டத்தில் மாணவர்கள்- விரைந்து சென்ற பிள்ளையான்


மட்/கதிரவெளி விக்னேஸ்வரா மகாவித்தியாலயத்தில் காணப்படும் ஆசிரியர் குறைபாடுகளை நீக்கக்கோரி வீதிக்கு இறங்கிய  மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர். 

இப்பாடசாலையில் இருந்து  குறித்த ஒரு  காலப்பகுதிக்குள் எவ்வித பதிலீடுகளும் இல்லாமல் பதினேழு ஆசிரியர்கள் இடமாற்றப்பட்டுள்ளனர். இதுகுறித்து  கல்குடா கல்விவலைய பணிப்பாளரிடம் பலமுறை முறையிட்டும் பலனளிக்காத நிலையில் அப்பாடசாலை   மாணவர்கள் இணைந்து இன்று வீதிமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

இதையறிந்து அவ்விடத்துக்கு உடனடியாக விரைந்த பாராளுமன்ற உறுப்பினர் சி.சந்திரகாந்தன் அவர்கள்  மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுடன் உரையாடி குறைகளை அறிந்து கொண்டார். அவ்விடத்திலிருந்தே மாகாண கல்விப்பணிப்பாளர் மற்றும் கல்வியமைச்சின் செயலாளர் ஆகியோருடன் தொடர்புகொண்டு பேசியதையடுத்து ஒரு வாரகாலத்துக்குள் குறித்த இடமாற்றம் பற்றிய பிரச்னைக்கு முடிவினைப் பெற்றுத்தருவதாகவும் உறுதியளித்தார்.


»»  (மேலும்)

12/20/2022

'விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் உருவாக்க முயற்சி' - 9 பேரை கைது செய்த என்.ஐ.ஏ

போதைப் பொருள் மற்றும் ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டதாகவும் விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் உருவாக்க முயற்சி செய்ததாகவும் திருச்சி சிறப்பு முகாமில் இருந்த 8 இலங்கையர்கள் உட்பட ஒன்பது பேரை இந்தியாவின் தேசியப் புலனாய்வு முகமை கைதுசெய்துள்ளது. ltte

சி. குணசேகரன் என்ற குணாவும், புஷ்பராஜா என்ற பூக்குட்டி கண்ணாவும் சேர்ந்து போதைப் பொருள் கும்பல் ஒன்றை நடத்திவந்ததாக என்.ஐ.ஏ தெரிவிக்கிறது.

இவர்களுக்கான போதைப் பொருளை, பாகிஸ்தானிலிருந்து செயல்படும் ஹாஜி சலீம் என்பவர் அனுப்பிவந்துள்ளார். இந்த போதைப் பொருள் மற்றும் ஆயுதக் கும்பல், இந்தியாவிலும் இலங்கையிலும் செயல்பட்டதாகவும் இரு நாடுகளிலும் புலிகள் இயக்கத்தை மீண்டும் உருவாக்க முயன்றதாகவும் என்.ஐ.ஏ. தெரிவிக்கிறது.

இது தொடர்பான ஒரு வழக்கை கடந்த ஜூலை 8ஆம் தேதியன்று தாமாக முன்வந்து என்.ஐ.ஏ. பதிவுசெய்தது.

இது தொடர்பாக என்ஐஏவின் டி.ஐ.ஜி. காளிராஜ் மகேஷ்குமார் தலைமையிலான அணி ஒன்று  திருச்சி சிறப்பு முகாமில், கடந்த ஜூலை 20ஆம் தேதி சோதனைகளை நடத்தியது.

இந்த சோதனைகளின்போது, மொபைல் போன்கள், சிம் கார்டுகள், ஹார்ட் டிஸ்க்கள், பென் டிரைவ்கள், லேப்டாப் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

இதற்குப் பிறகு நேற்று, திருச்சி சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த சி. குணசேகரன், புஷ்பராஜா, முகமது அஸ்மின், அழகப்பெரும சுனில் காமினி பொன்செக, ஸ்டான்லி கென்னடி ஃபெர்ணான்டோ, லாடியா சந்திரசேன, தனுக்க ரோஷன், வெள்ளசுரங்க்க, திலீபன் ஆகிய ஒன்பது பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் சென்னைக்குக் கொண்டுவரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

»»  (மேலும்)

12/19/2022

தமிழரசுக்கட்சிக்கு ஆண்டுவிழா ஒரு கேடு


வட்டுக்கோட்டை தீர்மானத்தை நிறைவேற்றி, தமிழினத்தை வன்முறைவழிக்கு அழைத்துச்சென்று, ஆயுதப்போராட்டத்துக்கு தலைமைகொடுக்கமுடியாமல்  ஐந்துவருடங்கள் மக்களைக் கைவிட்டு அரச விருந்தினர்களாக தமிழ்நாட்டில் சுகபோகவாழ்க்கை வாழ்ந்துவிட்டு,  லட்ஷக்கணக்கான மக்களின் கொலைகளுக்கும் கோடிக்கணக்கான சொத்துக்களின் அழிவுக்கும்  வித்துட்டது தமிழரசுக்கட்சியே.

யுத்தம் முடிந்தபின்னரும்கூட தமிழ் மக்களுக்கான நவீன உலகு நோக்கிய புதிய பாதைகள் எதனையும் வகுத்து முன்னேறத் தெரியாமலும் அதற்குரிய  இராஜதந்திர தலைமையொன்றை இன்றுவரை வழங்க முடியாமலும் காலாவாதியாகிப்போன  கடந்த நூற்றாண்டு யாழ் மேட்டுக்குடிச் சிந்தனையை தூக்கிக்கொண்டு 'இத்தனை கொடுமைகளுக்கும் வழிவகுத்தவர் நாம்தானே' என்னும்   துக்கமின்றியும்  சுயவிமர்சனமின்றியும் வெட்கமேதுமின்றியும் அலையும் தமிழரசுக்கட்சிக்கு  ஆண்டுவிழா ஒரு கேடு.


»»  (மேலும்)

12/16/2022

நம்பிக்கைதான் வாழ்க்கை- டானியல் ஒடேகா


நம்பிக்கைதான் வாழ்க்கை
நிக்கரகுவா டானியல் ஒடேகா

உலகத்தின் ஒரு மூலையில் நம்பிக்கை தரும் நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது. அதில் பல எமது கண்களுக்குத் தெரிவதில்லை. அது எங்கள் கண்களை, காதுகளை வந்தடையவிடாமல் பெரும் பணம் படைத்த அதிகார வர்க்கம் தனது ஊடகப் பலத்தினால் இருட்டடிப்புச் செய்து கொண்டுதான் இருக்கின்றன.

அப்படியான ஒரு நிகழ்வுதான்.... வரலாறுதான்.... நவம்பர் மாதம் நிக்கரகுவா என்றும் சிறிய நாட்டில் நடைபெற்றிருக்கின்றது. 

அமெரிக்காவிற்கு அருகில் தென் அமெரிக்காவில் ஏன் மத்திய அமெரிக்கா என்று கூடச் சொல்லலாம் லத்தீன் அமெரிக்கா என்று பலராலும் அறியப்பட்ட நாட்டில் நாலாவது தடவையாக அமெரிக்காவின் ஏகாதிபத்திய செயற்பாட்டை முதலாளித்துவத்தை எதிர்த்து சோசலிச பாதையில் தனது பயணத்தை நடாத்தும் அரசு மீண்டும் மக்களால் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படுள்ளது.

சன்ட்டினிஸ்ட்டா என்ற முற்போக்கு புரட்சிகர அமைப்பு தொடர்ந்தும் ஆட்சி அதிகாரத்தில் மக்களால் அமர்த்தப்பட்டு இருக்கின்றது. அதன் தலைவராக இருப்பவர் டானியல் ஒடேகா. ஈழ விடுதலைப் போராட்ட அமைப்புகளின் தலைவர்களின் வயதை ஒத்தவர். ஈழ விடுதலை அமைப்புகளின் ஒரு சில தலைவர்கள் போல் மக்கள் தலைவர் என்ற தோற்றப்பாட்டை உடையவர்.

பல விமர்சனங்களுக்கு அப்பால் கியூபாவிற்கு அடுத்ததாக அதிகம் நம்பிக்கையுடன் உலகம் எதிர்பார்க்கும் நாடாக இது இன்று வரை இருந்து வருகின்றது.

ஆனால் கியூபா, பிடல் காஸ்ரோவின் தலைமையிலான 1958 புரட்சியிற்கு பின்பு தொடர்சியாக கியூபாவை ஆண்டு வருவது போலன்று நிக்கரகுவாவின் 1979 ம் ஆண்டு புரட்சியிற்கு பின்னர் முதல் தவணையாக ஐந்து ஆண்டுகள் ஆட்சியில் அமர்ந்திருந்த சன்ட்டினிஸ்ட்டா டானியல் ஒடேகா தோல்வியடைச் செய்து அமெரிக்க சார்பு எதிர்ப் புரட்சிகர சக்தி கொன்ராஸ்(Contras) அமைப்பின் தலைவர் மக்களால்...? தெரிவு செய்து நாட்டின் தலைவராக அடுத்த ஒரு தவணை மட்டும் ஆட்சியில் இருந்தார் . இதற்கான காரணங்கள் புரியப்பட வேண்டும்.

புரட்சியின் போது ஏற்பட்ட அழிவுகளை கட்டியமைத்து மக்களின் இயல்பு வாழ்க்கையை உருவாக்க சற்று கால அவகாசம் தேவை. ஆனால் புரட்சி வென்றதும் மக்கள் அதிக எதிர்பார்ப்புடன் புதிய அரச ஆட்சியை நோக்குவர். 

இதனை நிறைவேற்றுவதில் ஏற்படும் தாமதம்... சிக்கல்கள் மக்களை சற்று ஏமாற்றம் அடையச் செய்யும் என்ற இயல்பான நிலை இங்கு மீண்டும் அமெரிக்க சார்ப்பு ஆட்சி அமைவதற்கு காரணமாக இருந்தது. இது உலகில் விளிம்பு நிலை மக்களின் புரட்சியை எற்படுத்திய பல நாடுகளும் சந்தித்த ஒரு பொதுப் போக்குதான் இது.

ஆனால் அந்த ஆட்சி அதிகாரத்தில் இல்லாது இருந்து ஐந்து வருடங்களில் டானியல் ஒடேகா தலமையில் சன்ட்டினிஸ்ட்டாகள் மக்களை இடைவிடாது கிராமம் கிராமாக செற்று தமது கருத்தியலை சொல்லி வந்தனர்... மக்களுடன் வாழ்ந்தனர். 

இந்த கிராமங்களுக்கான நெடுந்தூரப் பயணங்களில் அவர்கள் குதிரைகளை அதிகம் தமது பயணத்திற்காக உபயோகித்தனர். சன்ட்டினிஸ்ட்டாகளின் பாதுகாப்பையும் மக்களே உறுதியும் செய்தனர்.

எமது நாடு போலல்லாது மாற்றுக் கருத்தாளராக இருந்தாலும் டானியல் ஒடேக்காவின் முற்று முழுதான் எதிர் நிலைபாட்டை உடைய கொன்ராஸ் அமைப்பினர் அவர்களை கொன்றொழிக்க முடியவில்லை. டானியல் ஒடேகாவின் உயிர் வாழ்தலுக்கான அச்சுறுத்தலை கொலைகளை அவர்களால் செய்ய முடியவில்லை.
 
சர்வதேச சமூகத்திடம் சன்ட்டினிட்டுகள் பெற்றிருந்த தார்மீக ஆதரவு இதனை செய்யமுடியாமல் தடை போட்டது என்பது இங்கு கவனத்தில் எடுக்கப்பட வேண்டும். 

இதற்கு சிறப்பாக தென் அமெரிக்க, லத்தீன் அமெரிக் நாடுகளும் கியூபா தலமையும் இதற்கான செயற்பாடுகளுக்கு உறுதுணையாக இருந்தனர். கூடவே அமெரிக்காவின் அப்போதைய ஜனாதிபதி ஜிம்மி காட்டரின் போலி 'ஜனநாயக' முகமும் காரணங்களாக அமைந்தன.

அதனையும் விட அமெரிக்க சார்பு எதிர் புரட்சிகர சக்திகளின் கொலை அச்சுறுத்தல்களில் இருந்து டானியல் ஒடோவும் அவர்களது சகாக்களையும் பாதுகாத்து காப்பியதில் நிக்கரகுவாவின் மக்களின் தியாகங்கள் அளப்பரியன. 

அதன் பின் ஐந்து வருடங்களில் நடைபெற்ற தேர்தலில் மீண்டும் ஆட்சித் தலைவராக டானியல் ஒடேக்கா தெரிவு செய்யப்பட்டார். தொடர்ந்தார் போல் 2021 நவம்பரில் நடைபெற்ற தேர்தல் வெற்றியுடன் தனது நான்காவது தவணையில் காலடியும் எடுத்து வைத்துள்ளார். அவருக்கு எமது வாழ்த்துகள்.

அமெரிக்க ஆளும் வர்க்கம் தமது நாட்டுத் தேர்தலை விட அதிகம் நிக்கரகுவா தேர்தலை அவதானிப்பது பலருக்குத் தெரியாது டானியல் ஒடேகாவின் தலமையிலான சன்ட்டினிட்ஸ்டாகளின் தோல்வி அமெரிக்காவிற்கு தேவையாக இருக்கின்றது.

எனவே நிக்கரகுவா சன்ட்டினிஸ்ட்டாகளின் வெற்றியைத் தொடர்ந்து அன்றைய காலகட்டத்து அமெரிக்க புதிய தலைவர்கள் நிக்கரகுவாவின் தேர்தலை முறை தவறாக நடைபெற்றதாகவும் அமெரிக்காவால் அதனை ஏற்றுக் கொள்ளப்போவது இல்லை என்று பொருளாதாரத் தடைகளை அதிகம் போடுவதை வழமையாக கொண்டுள்ளனர்.

அது இம் முறையும் நடைபெற்றுள்ளது அவர்களைத் தொடர்ந்து அவர்களின் ஐரோப்பிய கூட்டாளிகளும் ஏனைய நேட்டோ நண்பர்களும் அமெரிக்காவுடன் சேர்ந்து ஒத்து ஊதுவார்கள். 

இம்முறை தேர்தல் வெற்றியின் பின்பு அமெரிக்காவும் ஏனைய அவர்களின் நண்பர்களும் இவ்வாறே செயற்படுகின்றனர்.

இவற்றையெல்லாம் மீறி உலகின் பொலிஸ்காரனாக செயற்படும் அமெரிக்காவின் கொல்லைப் புறத்தில் சமதர்மக் கொள்கைகளை தூக்கிப் பிடித்த வண்ணம் அமெரிக்கா, அவர்களின் கூட்டாளிகளின் பொருளாதாரத் தடைகளையும் மீறி நிக்கரகுவா வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றது இனியும் வாழும்.

வர்க்க அடிப்படையில்  இரு வேறு வேறு கருத்தியலைக் கொண்டவர்கள் போராட்ட வரலாற்றில் உருவாவது இயல்பானது. சமூகம் அவ்வாறுதான் கட்டமைக்கப்பட்டும் இருக்கின்றது. 

ஆனால் கருத்துக்களை கருத்துகளால் சந்திக்கும் சூழல் அங்கு இருந்தமையினால் பல கருத்துகளும் உடைய பன்முகத் தன்மையை பேணும் பல தலைவர்கள் உயிர்வாழ்தல் நிக்கரகுவாவில் சாத்தியமாயிற்று. 

அதுதான் அந்த போராட்டம் வென்றதற்கும் அது இன்றுவரை உயிர்திருப்பதற்கும் காரணம் ஆகும்.  

இதனை நாம் எமது போராட்டத்திலும் கைக் கொண்டிருக்க வேண்டும்.

உலகத்தை திரும்பி பார்க்க வைத்த பசுபிக் அந்திலாந்து சமுதிரங்களை இணைக்கு 270 கிலோ மீற்றர் நீளமான நிக்கரகுவாவின் மனாகுவா(Managua) ஏரியை ஊடறுத்து அமைக்கப்பட்டு உலகின் மிகப் பெரிய கடற் பயணத்திற்கான பாதை முழுமை பெறாமல் போகுமோ..? என்ற நிலமை ஏற்பட்டுள்ளது.  

சீன நாட்டின் பெரு நிறுவனம் ஒன்றில் ஏற்பட்ட நிதிப் பற்றாக் குறை ஏற்படுத்தியுள்ளது இதனை ஏற்படுத்தியுள்ளது.

கூடவே நிக்கரகுவாவின் பழங்குடி மக்களின் இயற்கை சார்ந்த வாழ்வை இந்த கால்வாய் அமைப்புகளின் பிரதேசங்கள் ஏற்படுத்தி வருவதினால் அந்த மக்களின் அதிருப்த்தியிற்கும் உள்ளாகி இருக்கின்றது.

இந்த கால்வாய் அமைத்தலும் அதன் பாவனையும் சரியாக அமைந்து முடியுமாயின் உலக மக்களின் அதிக கவனத்தை பெறும் நாடாக நிக்கரகுவா மாற்றம் பெறும் என்பதில் ஐயம் இல்லை. 

விவசாயமும் உல்லாசப் பயணத்துறையும் இவர்களது பொருளாதார ஈட்டலுக்கான அடித்தளங்களாக இருக்கின்றன. 

மல்யுத்தம் வலைப்பந்தாட்டம் பேஸ் போல் என்பன அதிகம் விருப்பத்துடன் ஆடப்படும் விளையாட்டுகள்.

சோத்துக் குழையலும் இசையும் கவிதையுமாக கிராமிய வாழ்வியலைக் கொண்டிருக்கும் அந்த மக்கள் வாழ்வுடன் அவர்களது பாராளுமன்றத்தில் உரையாற்றிய அனுபவங்களைக் கொண்டதே இணைந்த வடக்கு கிழக்கு மாகாணசபையின் ஆட்சியாளர் தோழர்களின் உறவு.

ஒருவேளை ஈழம் என்பது ராஜீவ் காந்தியின் தொடர்ந்த உயிர் வாழ்தலுடன் நடைபெற்றிருந்தால் ஈழத்தை அங்கீகரிக்க காத்திருந்த முதன்மை நாடாக நிக்கரகுவா இருந்திருக்கும் என்றளவிற்கான உறவுகள் எல்லாம் கனவாகிப் போன அந்த 1980 களின் இறுதிக் கால கட்டங்கள் 1990 இன் ஆரம்பமும் ஆகிப் போனவை இவ்விடத்தில் நினைவில் வந்து போகின்றது.

நிக்கரகுவாவின் விடுதலைப் போராட்டம்  அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக இன்று வரை தாக்கு பிடித்து நாட்டை கட்யெழுப்பும் செயற்பாட்டை முழுமையாக புரிந்த கொள்வதற்கு அதன் நூற்றாண்டு வரலாற்றை நாம் அறிந்த கொள்ள வேண்டும்.

ஏகாதிபத்தியம் நிலச்சுவாந்தாருக்கு எதிரான போராட்டத்தின் வெற்றி நீண்ட நெடிய போராட்டத்தின் இறுதியில் கிடைத்த அந்த வெற்றியை இன்றுவரை மக்கள் நலம் சார்ந்து காத்து நிற்பதே நிக்கரகுவாவின் வெற்றியாக நாம் பார்க்க முடியும்.

ஆனாலும் இன்னும் அவர்கள் பயணிக்க வேண்டி தூரங்கள் அதிகம் இதற்கு இடையில் உருவான இந்த அரசை சிந்தனையை வீழ்த்துவது என்று தென் அமெரிக்கா, மத்திய, லத்தீன் அமெரிக்கா எங்கும் அமெரிக்கா நடாத்திவரும் அரசியல் சடுகுடுக்கள் நின்று போகப் போவதும் இல்லை.

எனது வாசிப்பின் அடிப்படையில் இந்த தசாப்த காலத்து நிக்கராகுவா வரலாற்றை இங்கு கீழே தொகுத்து தந்துள்ளேன் ஆர்வம் உள்ளவர்கள் தொடர்ந்தும் வாசியுங்கள்....

***********************************************************************
நிக்கராகுவான் புரட்சியானது, அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் சொமோசா  அடக்குமுறை, சர்வாதிகாரம் ஆகிய இரண்டிலிருந்தும் சிறிய மத்திய அமெரிக்க நாட்டை விடுவிப்பதற்கான ஒரு தசாப்த கால செயல்முறையாகும். இது 1960 களின் முற்பகுதியில் சாண்டினிஸ்டா நேஷனல் லிபரேஷன் ஃப்ரண்ட் (F.S.L.N.) ஸ்தாபனத்துடன் தொடங்கியது, ஆனால் 1970 களின் நடுப்பகுதி வரை அது உண்மையில் அதிக முன்னேற்றத்தை கண்டிருக்கவில்லை.

இது 1978 இல் ஆரம்பித்து 1979 கால கட்டம் வரை சாண்டினிஸ்டா(F.S.L.N.) சோமோசா(Somoza) இன் நிக்கரகுவா அரசின் கிளர்ச்சியாளர்களுக்கும் தேசிய காவலர்களுக்கும் இடையே நடந்த சண்டையில் உச்சக்கட்டத்தை அடைந்தது. இறுதியில் F.S.L.N. சர்வாதிகாரத்தை தூக்கியெறிவதில் வெற்றி பெற்றது. 

புரட்சி முடிவுக்கு வந்த ஆண்டாகக் கருதப்படும் 1979 முதல் 1990 வரை சாண்டினிஸ்டாக்கள் ஆட்சி செய்தனர்.

F.S.L.N.  இன் இலக்குகளாக தேசிய இறையாண்மைக்கான சாண்டினோவின் போராட்டத்தைத் தொடர்வது, குறிப்பாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தை முடிவுக்குக் கொண்டுவருவது மற்றும் நிகரகுவா தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் சுரண்டலை முடிவுக்குக் கொண்டுவரும் ஒரு சோசலிசப் புரட்சியை அடைவது.

1937 முதல், நிகரகுவா ஒரு சர்வாதிகாரியான அனஸ்டாசியோ சொமோசா(Somoza) கார்சியாவின் ஆட்சியின் கீழ் இருந்தது, அவர் அமெரிக்க பயிற்சி பெற்ற தேசிய காவலர் மூலம் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியான ஜுவான் சகாசாவை அகற்றினார். சோமோசா(Somoza) அடுத்த 19 ஆண்டுகள் ஆட்சி செய்தார்.

இவர் முதன்மையாக தேசிய காவலரைக் கட்டுப்படுத்துவதன் மூலமும், அமெரிக்க தேசிய காவலரை திருப்திப்படுத்துவதன் மூலமும், தேசிய காவலர் மோசமான ஊழல், சூதாட்டம், விபச்சாரம் மற்றும் கடத்தல் ஆகியவற்றில் ஈடுபட்டார். மேலும் குடிமக்களிடம் லஞ்சம் கோரினார். 

அரசியல் விஞ்ஞானிகளான தாமஸ் வாக்கர் மற்றும் கிறிஸ்டின் வேட் ஆகியோரின் பாதுகாவலர்கள் ஒருவித மாஃபியா சீருடையில் இருந்தார்கள். இவர்கள்தான் சோமோசா குடும்பத்தின் தனிப்பட்ட மெய்க்காப்பாளர்கள்.

இரண்டாம் உலகப் போரின் போது நிகரகுவாவில் ஒரு இராணுவ தளத்தை நிறுவ சோமோசா அமெரிக்காவை அனுமதித்தார். மற்றும் C.I.A க்கு ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட குவாத்தமாலா ஜனாதிபதி ஜாகோபோ ஆர்பென்ஸை அகற்றும் சதித்திட்டத்தைத் திட்டமிடுவதற்கான பயிற்சிப் பகுதியை நிக்கரகுவாவில்  வழங்கினார். 

சோமோசா(Somoza) 1956 இல் ஒரு இளம் கவிஞரால் படுகொலை செய்யப்பட்டார். இருப்பினும், அவர் ஏற்கனவே வாரிசு அரசியல்  திட்டங்களைச் செய்திருந்தார். அவரது மகன் லூயிஸ் உடனடியாக அதிகாரத்தை ஏற்றுக்கொண்டார். மற்றொரு மகன் அனஸ்டாசியோ சோமோசா டெபயில், தேசிய காவலர் தலைவராக தொடர்ந்தும் செயற்பட்டார். கூடவே தனது அரசியல் போட்டியாளர்களை சிறையில் அடைத்தார். 

லூயிஸ் தொடர்ந்து அமெரிக்காவுடன் மிகவும் நட்பாக இருந்தார். கூடவே  சிஐஏ(C.I.A) ஆதரவு பெற்ற கியூபாவில் இருந்து நாடுகடத்தப்பட்டவர்கள் நிக்கரகுவாவில் இருந்து கியூபாவிற்கு எதிராக செயற்படுவதற்கான எல்லாவித உதவிகளையும் செய்தார்.

சாண்டினிஸ்டா தேசிய விடுதலை முன்னணி(F.S.L.N.) 1960 இல் கார்லோஸ் பொன்சேகா, சில்வியோ மயோர்கா மற்றும் டோமஸ் போர்க் ஆகியோரால் நிறுவப்பட்டது. இவர்கள் கியூபப் புரட்சியின் வெற்றியால் ஈர்க்கப்பட்ட மூன்று சோசலிஸ்டுகள். 

1920 களில் நிகரகுவாவில் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராகப் போராடிய அகஸ்டோ சீசர் சாண்டினோவின் நினைவாக F.S.L.N. பெயரிடப்பட்டது. அவர் 1933 இல் அமெரிக்கப் படைகளை வெளியேற்றுவதில் வெற்றி பெற்ற பிறகு, அவர் 1934 இல் முதல் அனஸ்டாசியோ சொமோசாவின் உத்தரவின் பேரில் தேசிய காவலர் பொறுப்பில் இருந்தபோது படுகொலை செய்யப்பட்டார். 

1960 களின் போது, பொன்சேகா, மயோர்கா மற்றும் போர்ஜ் அனைவரும் நாடு கடத்தப்பட்டு நிக்கரகுவாவிற்கு வெளியில் வாழ வேண்டிய சூழல் ஏற்பட்டது (F.S.L.N.  உண்மையில் ஹோண்டுராஸில் நிறுவப்பட்டது). எஃப்எஸ்எல்என்(F.S.L.N.) தேசிய காவலர் மீது பல தாக்குதல்களை நடத்தியது. ஆனால் அவர்களுக்கு போதுமான ஆட்கள் அல்லது தேவையான இராணுவ பயிற்சி இல்லாததால் பெரும்பாலும் தோல்வியடைந்தது. 

எஃப்.எஸ்.எல்.என்.(F.S.L.N.) 1970 களின் பெரும்பகுதியை கிராமப்புறங்களிலும் நகரங்களிலும் தங்கள் தளங்களை உருவாக்கியது. ஆயினும்கூட, இந்த புவியியல் ரீதியல் ஏற்பட்ட பிளவுச் செயற்பாடு  F.S.L.N. இன் இரண்டு வெவ்வேறு பிரிவுகளை உருவாக்கி இருந்தது. 

மேலும் மூன்றாவது பிரிவு மற்றைய இரு பிரிவுகளையும் இணைத்து டேனியல் ஒர்டேகா தலைமையில் உருவானது.  இறுதியில் 1976 மற்றும் 1978 க்கு இடையில், இந்த மூன்று பிரிவுகளுக்கும் இடையில் தொடர்புகளைப் பேண முடியவில்லை. 

மேலும் F.S.L.N. மூன்று கருத்தியல் போக்குகள் அல்லது பிரிவுகளாகப் பிரிந்து செயற்பட்தற்கான காரங்களா  அவை நகரங்களில் மட்டும் புரட்சிகரக் கலங்களை அமைப்பதா, படிப்படியாக நாடு முழுவதும் ஆதரவைத் திரட்டுவதா அல்லது வளர்ந்து வரும் பிற அரசியல் குழுக்களுடன் ஒன்றிணைவதா என்பதில் வேறுபாடுகளை கொணடிருந்தன.

1978-79 இன் நிகரகுவான் புரட்சியானது டேனியல் மற்றும் ஹம்பர்டோ ஒர்டேகா சாவேத்ராவின் தலைமையில் மூன்று பிரிவுகளும் ஒன்றிணைந்து ஐக்கிய முன்னணியாக சாண்டினிஸ்டாக்களை மீண்டும் ஒன்றிணைத்தது சாத்தியமாக்கியது.

 அதனால் அப்போது சுமார் 50000 போராளிகளைக் கொண்ட F.S.L.N. நிக்கரகுவா அரசின் தேசிய காவலர் படையைத் தோற்கடித்து ஜூலை 1979 இல் சோமோசாவை வீழ்த்தியது.

ஒன்பது உறுப்பினர்களைக் கொண்ட தேசிய செயலகம், ஒவ்வொரு பிரிவிலிருந்தும் மூன்று கமாண்டன்ட்களை உள்ளடக்கியதாக உருவாக்கப்பட்டது. பின்னர் ஒரு மத்திய குழு F.S.L.N. ஐ வழிநடத்தவும், டேனியல் ஒர்டேகா தலைமையிலான ஆளும் ஆட்சிக்குழுவுக்கான கொள்கையை அமைக்கவும் அமைக்கப்பட்டது. 

நிக்கரகுவாவில் ஆட்சிக்கு வந்ததும், F.S.L.N. தன்னை உள்ளூர் மற்றும் பிராந்திய குழுக்களாக ஒழுங்கமைத்து, தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் பிற குழுக்களின் வெகுஜன அமைப்புகளின் மூலம் ஆதரவைக் கட்டியெழுப்பியது.

கான்ட்ராஸ்(Contras)  எனப்படும் எதிர்புரட்சிகரப் படைகளின் (A rightist collection of counter-revolutionary groups)  நிக்கரகுவாவில் அமைந்து சன்ட்டினிஸ்ட களின் அரசை வீழ்த்துவதற்கு தாக்குதல்களை அயல்நாடான ஹொண்டுராஸை தளமாக கொண்டு அமெரிக்க ஆதரவு நிதி ஆயுத உதவிகளுடன் செயற்பட்டனர் 

ஹம்பர்டோ ஒர்டேகா 500000 பேர் கொண்ட சாண்டினிஸ்டா பாப்புலர் ஆர்மியை உருவாக்கினார். எதிர்புரட்சிகர சக்திகளின் உளவு மற்றும் கருத்து வேறுபாடுகளுக்கு எதிராக அமைந்த நிகரகுவா புரட்சிகர அரசை பாதுகாக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு இருந்தது. சாண்டினிஸ்டா தலைமையின் பல்வேறு மார்க்சிஸ்ட் அல்லாத உறுப்பினர்களின் ராஜினாமாக்கள் செய்தனர்.

இதனால்  முக்கியமாக அரசியல் உரிமைகள் தொடர்பான பிரச்சனைகளின் அடிப்படையில்  கட்சியும் நிகரகுவாவும் படிப்படியாக இடதுசாரிக் கருத்தியல் பக்கம் தள்ளியது. புதிதாக அமைந்த அரசு  சோவியத் யூனியன் மற்றும் கியூபாவின் ஆதரவைச் சார்ந்து இருந்தன.

ஆட்சிக்கு வந்ததும் சாண்டினிஸ்டா அரசாங்கம் சோமோசா குடும்பத்தின் பரந்த நில உடமைகளை பறிமுதல் செய்தது. மற்றும் நாட்டின் முக்கிய தொழில்களை தேசியமயமாக்கியது. ஆனால் சோவியத் பாணி சோசலிச பொருளாதாரங்களின் பொதுவான மத்திய திட்டமிடல் முறையை செயற்படுத்தவில்லை மாறாக தங்கள் நாட்டுச் சூழலுக்கு ஏற்ற சோசலிச கட்டுமானங்களை செயற்படுத்து முயன்றது. அதன் போக்கில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தனியார் பண்ணைகள் மற்றும் வணிகங்கள் தொடர்ந்தும் செயற்படுவதற்கு அனுமதிக்கப்பட்டது.

அரசியல் பன்முகத் தன்மையிற்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்ட F.S.L.N. மிதவாத எதிர்ப்புக் குழுக்களை வெறுப்புடன் பொறுத்துக்கொண்டது. தேர்தலை நடத்தாது அதிகாரத்தை ஆரம்பத்தில் தொடர்ந்த அவர்கள் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் ஏற்பட்ட கணிசமான அழுத்தத்திற்குப் பின்னரே தேர்தலுக்கு ஒப்புக்கொண்டதனர். 

1984 இல் F.S.L.N. ஒரு புதிய தேசிய சட்டமன்றத்தில் 96 இடங்களில் 60 க்கும் அதிகமான இடங்களை வென்றது.

எதிர்க்கட்சிகளுக்கு பாதுகாப்பு இருக்கவில்லை என்று பரவலாக விமர்சிக்கப்பட்ட தேர்தலில் டேனியல் ஒர்டேகா வெற்றி பெற்று ஜனாதிபதி பதவியை ஏற்றார். 

இருப்பினும் 1990 இல் போர் மற்றும் பொருளாதார மந்தநிலையால் சோர்வடைந்த நிக்கராகுவா மக்கள் தேசிய எதிர்க்கட்சி யூனியனின் 14 கட்சிகளுக்கு வாக்களித்தனர். இது சாண்டினிஸ்டாக்கள் அதிகாரத்தை கைவிட அமெரிக்க ஆதரவு கொன்ராஸ்ர்(Contras)கள் அரசாங்கத்தை அமைத்தனர்.

எதிர்க் கட்சியாகக் குறைக்கப்பட்டாலும்.... செயற்பட்டாலும் ... நாட்டின் இராணுவம் மற்றும் பொலிஸ் படைகளில் F.S.L.N. கணிசமான அதிகாரத் தளத்தைத் தக்க வைத்துக் கொண்டது. தேசிய தேர்தல்களிலும் அது பலமாக செயல்பட்டது. 

மீண்டும், 1996 இல் சன்டினிஸ்டாக்கள் பாராளுமன்றத் தேர்தலில் 37 சதவீத வாக்குகளைப் பெற்றனர். 2001 இல் கட்சி 42 சதவீத வாக்குகளைப் பெற்று 90 இடங்களைக் கொண்ட தேசிய சட்டமன்றத்தில் 43 இடங்களை வென்றது. F.S.L.N. அதன் தலைவரான ஒட்டேகா 2006 இல் மீண்டும் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு மீண்டும் அதிகாரத்தைகைப்பற்றியது.  

2009 ஆம் ஆண்டில் நிகரகுவான் உச்ச நீதிமன்றம், ஜனாதிபதிகள் தொடர்ச்சியாக பதவியில் இருப்பதில் இருந்து தடுக்கப்பட்ட அரசியலமைப்பு தடையை நீக்கியது. 2011 இல் ஒர்டேகாவின் மறுதேர்தலுக்கு வழி வகுத்தது.

தேசிய சட்டமன்றத்தில் 'பெரும்பான்மை' பெற்ற பின்னர், F.S.L.N. ஜனாதிபதியை நீக்கிய சரத்தை அரசியலமைப்பில் இருந்து நீக்கியது. அதனைத் தொடர்ந்து 2016 இல் ஒர்டேகாவின் மறுதேர்தலுக்கான களத்தை அமைத்தது. மீண்டும் 2021 தேர்தலில் F.S.L.N. தனக்கான தேர்தல் வெற்றியை உறுதி செய்து கொண்டது.

நன்றி* சிவா முருகப்பிள்ளை முகநூல்
»»  (மேலும்)

நிலச்சரிவில் மலேசியாவில் 16 பேர் பலி! மேலும் பலரரைக் காணவில்லை!

மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவின்போது முகாம்களில் தங்கியிருந்த குழந்தைகள் உட்பட குறைந்தது 16 பேர் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அங்குள்ள படாங் காளி (Batang Kali) டவுன்ஷிப் பகுதியில் உள்ள ஒரு பண்ணை தங்குமிடத்தில் வெள்ளிக்கிழமை (19:00 GMT வியாழன்) பிற்பகல் உள்ளூர் நேரம் 3 மணியளவில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டது.

அப்போது அதனுள்ளே சில குடும்பங்கள் தங்கள் கூடாரங்களில் தூங்கிக் கொண்டிருந்ததாக அறிய முடிகிறது.

நூற்றுக்கணக்கான மீட்புப் பணி ஊழியர்கள் சேறும் சகதியுமாகிப் போன சம்பவ பகுதியை அடைந்து நிலச்சரிவில் சிக்கியிருந்த உயிர் பிழைத்தவர்களை பார்த்தனர். இந்த முகாமில் 90க்கும் மேற்பட்டோர் தங்கியுள்ளனர்.

»»  (மேலும்)

12/15/2022

இராஜாங்க அமைச்சரினால் மீனவர்களுக்கு தோணிகள் வழங்கப்பட்டன

மீனவத் தொழிலாளர்களின் தொழில் முயற்சிகளை ஊக்குவிக்கும் முகமாக 20 தோணிகள் வழங்கிவைப்பு. 


மீன்பிடித் தொழில் நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் முகமாக நேற்றைய தினம் கோறளைப்பற்று பிரதேசசெயலக எல்லைக்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு 15 ஆற்றுத்தோணிகளும் 05 கடல்தோணிகளும் உள்ளடங்கலாக 20 தோணிகள் வழங்கி வைக்கப்பட்டன. 

ராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தன் அவர்களின் ஏற்பாட்டின் பெயரில் இத்தோணிகள் வழங்கி வைக்கப்பட்டன.


»»  (மேலும்)

12/14/2022

காணி மாஃபியாக்களுக்கு எதிராக மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்


மட்டக்களப்பில் இடம்பெற்றுவரும்  அரசகாணி அபகரிப்புகளுக்கு எதிராக இன்று ஒர் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது. அரசகாணிகளை தவறானவழிகளில் கையகப்படுத்தியும் போலி ஆவணங்களை  தயார்பண்ணியும் நூற்றுக்கணக்கான ஏக்கர்கள் மட்டக்களப்பில் காணி மாபியாக்களினால் அபகரிக்கப்பட்டுவருகின்றன. கடந்த 'நல்லாட்ச்சி'காலத்தில் மட்டும் ஆயிரத்துக்கும் அதிகமான ஏக்கர் அரச காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சி.சந்திரகாந்தன் பாராளுமன்றத்தின் கவனத்தை ஈர்த்த உரையொன்றை நிகழ்த்தியிருந்தார். 

அதுமட்டுமன்றி இத்தகைய காணி  மாபியாக்களுக்கு அரச அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் உடந்தையாக இருந்துவருவதாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார். 

இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கிய ராஜபுத்திரனின்பெயரிலும் நூறு  ஏக்கர் கடற்கரைக் காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளமை பேசுபொருளாகியுள்ளது.
»»  (மேலும்)

மண்ணை சுரண்டினால் மனிதன் அழிவான்

ஒவ்வொரு ஆண்டும் மனிதர்கள் 50 பில்லியன் டன் மண்ணையும், கற்களையும் பூமியில் இருந்து சுரண்டுகின்றனர் என்று சமீபத்திய ஐநா ஆய்வு கூறுகிறது. நீரிற்கு அடுத்தபடியாக உலகில் அதிகம் சுரண்டப்படும் பொருள் மண்ணே. 

 Central and state governments have formed a special committee on mineral sand storage

ஆனால் நீர் போல அரசுகள் மற்றும் தொழிற்துறை இதை முக்கிய மூலவளமாகக் கருதுவதில்லை. இந்தப் போக்கு விரைவில் மாற வேண்டும். கூடுதல் கண்காணிப்பு, விநியோகச்சங்கிலி, எடுக்கப்படும் மண் மூலம் இழக்கப்படும் தாவர விலங்கினங்களுக்கு சமமான இழப்பீடு, சமத்துவமற்ற மண் சுரண்டலிற்கு எதிரான நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஐ நா அறிக்கை வலியுறுத்துகிறது.

கட்டுமானம் முதல் தகவல் தொடர்பு வரை

தொழிற்துறையின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கும் கட்டுமானம் முதல் தகவல் தொடர்புத்துறை உட்பட பல்வேறு துறைகளின் முன்னேற்றத்திற்கு ஆதாரமாக இருப்பது மண்ணே. இந்நிலையில் மண் குறித்த அடிப்படைப் புரிதலும், அதன் மதிப்பும் உணரப்பட வேண்டும் என்று ஐ நா ஆய்வுக் குழு வலியுறுத்துகிறது.

மனித குலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியும் மண்ணை நம்பியே இருக்கும்போது அது அனைத்து வகையிலும் முக்கியத்துவம் பெற்ற பொருளாக மதிக்கப்பட வேண்டும் என்று ஐநா சூழல் திட்டத்தின் உலக வள தகவல் தரவு மைய (Global Resource Information Database) இயக்குனரும், ஆய்வுக்கட்டுரையின் முன்னணி ஆசிரியருமான பாஸ்கல் பெடுஸி (Pascal Peduzzi) கூறுகிறார்.

மற்ற வளங்கள் போலவே மண்ணும் கட்டுப்பாடு இல்லாமல் சுரண்டப்பட்டால் அது மறைந்து போகும். இந்தப் போக்கைக் கட்டுப்படுத்த சர்வதேச அளவில் வழிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும் என்று ஆய்வுக்குழு கூறுகிறது.

மண்ணை மதிக்கத் தெரியாத மனிதன்

மற்ற தாதுப்பொருட்கள் போலவே மண்ணும் கருதப்பட வேண்டும். பூமியில் தாதுக்கள், நீர், எண்ணெய் மற்றும் வாயு போன்றவற்றிற்குக் கொடுக்கப்படும் அதே மதிப்பும், முக்கியத்துவமும் மண்ணிற்கும் கொடுக்கப்பட வேண்டும் என்று நியூ கேஸில் (Newcastle) பல்கலைக்கழக ஆய்வாளர் மற்றும் ஆய்வுக்கட்டுரையின் மற்றொரு ஆசிரியர் கிறிஸ் ஹாக்னி (Chris Hackney) கூறுகிறார்.

கருந்துளை

ஆட்சியாளர்களின் அலட்சியப் போக்கினால் மண் வணிகம் குறித்த தகவல்கள் பெரும் இருட்டடிப்பு செய்யப்படுகிறது. மண் வியாபாரம் தொடர்பான தரவுகளைச் சுற்றிலும் ஒரு கருந்துளை (blackhole) நிலவுகிறது. இது தொடர்பான உலக மதிப்பிடல் தகவல் வலையமைப்பின் (Global Aggregates information network) புள்ளிவிவரங்களின்படி மண்ணை ஆதாரமாகக் கொண்டு உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் தயாரிப்பு கடந்த ஆண்டு 4.9% உயர்ந்துள்ளது.

2020ல் 42.2 பில்லியன் டன் என்ற அளவில் இருந்து இது 2021ல் 44.3 பில்லியன் டன்களாக அதிகரித்துள்ளது. உலகளவில் சுரண்டப்படும் மண் குறித்த துல்லியமான விவரங்கள் கிடைக்கவில்லை. அதைக் கொண்டு உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் அளவைப் பற்றி மட்டுமே விவரங்கள் கிடைக்கின்றன என்று ஐ நா கூறுகிறது.

மண் சுரண்டினால் சூழல் அழியும்

வரையறை இல்லாமல் தொடரும் மண் சுரண்டலால் உயிர்ப்பன்மயத் தன்மைக்கு இழப்பு ஏற்படுகிறது. புயல்களின்போது இயற்கை அரணாக இருக்கும் மண் குன்றுகள், மேடுகள் அழிவதால் வெள்ளப்பெருக்கு அபாயம் அதிகரிக்கிறது. இது மீனவர் சமுதாயத்தைப் பாதிக்கிறது. எரிபொருள் தகராறுகளுக்கும் வழிவகுக்கிறது. காலநிலைச் சீரழிவிற்கும் முக்கிய காரணமாகிறது. கான்க்ரீட் உற்பத்தி, உலகில் அதிகளவில் கார்பன் உமிழும் தொழிலாக மாறியுள்ளது.

தாவர விலங்கினங்களின் அழிவு

மண் மற்றும் சரளைக்கற்கள் சுரண்டலினால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிவப்புப் பட்டியல் தாவர விலங்கினங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த உயிரினங்களின் எண்ணிக்கை 24,000 இனங்களுக்கும் கூடுதல். என்றாலும் இன்னமும் மண்ணிற்குரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை.

மண் என்னும் மகத்தான இயற்கைச் செல்வம் ஆட்சியாளர்களின் கொள்கைகளுக்கும், சட்டரீதியிலான கட்டமைப்புகளுக்கும் இடையில் உள்ள விரிசல்களுக்கும் பிளவுகளுக்கும் இடையில் சிக்கித் தவிக்கிறது என்று மண் ஆய்வாளர், மண் சொல்லும் கதைகள் (Sand stories) என்ற அமைப்பின் ஆசிரியர் மற்றும் ஆய்வுக் கட்டுரையின் ஆசிரியர்களில் ஒருவரான கரன் பெரேரா (Kiran Pereira) கூறுகிறார்.

மாற்றுவழிகள்

மண் சுரண்டலைத் தடுக்க மாற்று வழிகள் உள்ளன என்று அறிக்கை கூறுகிறது. கட்டுமானப் பொருட்கள், மாற்றுப் பொருட்களைப் பயன்படுத்த விஞ்ஞானிகள் வலியுறுத்துகின்றனர். 2050ம் ஆண்டிற்கு முன் உலக மக்கட்தொகை 10 பில்லியனைத் தாண்டும். அப்போது உலக மக்களில் 70% பேர் நகரங்களிலேயே வாழ்வர் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் மண் மீதான மனிதனின் மோகம் வரும் ஆண்டுகளில் இன்னும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

இந்தியாவில்

தர நிர்ணயமும் விதிமுறைகளும் ஒழுங்காகப் பின்பற்றப்படாத இந்தியா போன்ற நாடுகளில் மண்ணிற்கு கிராக்கி அதிகம் உள்ளது. இந்தியாவில் மட்டும் 2020 முதல் மண் சுரண்டல் தொடர்பான வன்முறைகள் மற்றும் விபத்துகளில் அரசு ஊழியர்கள் உட்பட நானூறுக்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ளனர்.

கடுமையான சட்டதிட்டங்கள் நடைமுறையில் இருக்கும் வியட்நாம் மெக்காங் (Mekong) டெல்ட்டாவில் கொரோனா கொள்ளைநோய் காலத்தில் சட்டவிரோத மண் சுரண்டல் அதிகரித்துள்ளது.

மண் எடுத்தல் தொடர்பான சர்வதேச விதிமுறைகள் உருவாக்கப்பட்டால் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராக அரசுகளால் எளிதில் செயல்படமுடியும் என்று கிறிஸ் ஹாக்னி கூறுகிறார். 

மண் சுரண்டினால் மனிதன் அழிவான்

மிதமிஞ்சிய நிலத்தடி நீரை எடுப்பதால் டெல்லி, பாக்தாத் உட்பட உலகில் பல நகரங்களும் மண்ணிற்கடியில் புதைந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் மண் சுரண்டலை இதேபோல் தொடர்ந்தால் நாளை ஆறு, குளம், ஏரி போன்ற இயற்கை நீர்நிலை அமைப்புகளே இல்லாமல் போய்விடும். மண் என்னும் மகத்தான வளத்தின் மதிப்பை உடனடியாக மனிதன் உணராவிட்டால் அவனை அழிக்கும் மாபெரும் பேரிடராக விரைவில் அது மாறும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

- சிதம்பரம் ரவிச்சந்திரன் 

நன்றிகள் *கீற்று 

»»  (மேலும்)