11/06/2022

35 வது பெண்கள் சந்திப்பு - பரீஸ்


35  வது பெண்கள் சந்திப்பு கடந்த சனிக்கிழமை  29/10/2022 அன்று பாரிஸில் நடைபெற்றது.

இதில் புதிய முகங்களும், இளைய தலைமுறைப்பெண்களும் கலந்து கொண்டார்கள். இளைய தலைமுறைப் பெண்களின் வருகை  முக்கியமானது தேவையானதும் கூட.

ஆரம்ப உரையை விஜி நிகழ்த்தினார். அதைத்தொடர்ந்து சுய அறிமுகம் இடம்பெற்றது.

 பெண்ணுடல் மீதான சமூக வன்முறைகள் பற்றி விஜி  பேசினார். இதில் பெண்கள் ,ஆண்கள் என வேறுபடுத்திப் பார்ப்பது ,குழந்தை வளர்ப்பிலிருந்தே வேறுபாடு ஆரம்பிக்கப்படுகிறது என்பதனையும், பருவமடைந்த பெண்ணிடம் திணிக்கப்படும் கட்டுப்பாடுகள்,கல்யாணம், குழந்தைப் பேறுக்காக பெண்ணை உருவாக்கல், இன்னும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும் தெளிவுபடுத்தினார்.

 ஷாமிலா யூசுப் அலியின் நீயாகப் படரும் முற்றம் என்கின்ற கவிதைத்தொகுப்பைப் பற்றி வான்நிலா கவிதைகளை வாசித்தும், அக்கவிதைகளின் சாராம்சங்களையும் கூறியும் உரையாற்றினார்.

 நிறமில்லா மனிதர்கள் என்கிற பூங்கோதையின் சிறுகதை தொகுப்பு பற்றி செல்வி மிக தெளிவாக உரையாற்றினார்.கதைகள் நகரும் விதங்கள் பற்றியும் அழகாக விளக்கினார். 
அதனைத்தொடர்ந்து  ஸ்ரீ ரஞ்சினியின் 
 ஒன்றே வேறே சிறுகதை தொகுப்பு பற்றி சிவகுமாரி மிகவும் சிறப்பாகவும், கதைகளின் சிறப்புகள், அமைந்த விதங்களையும் அவரது உரையில் கூறினார்.

 தமிழ்க்கவியின் நரையான் 
பற்றி ஆனந்தியால் உரையாற்றப்பட்டது.
வெளிப்படையாக அவரது எழுத்துக்கள் பற்றியும் ஆனந்தியால் பகிரப்பட்டது.

இலங்கையின் அரசியல் பொருளாதார சிக்கலும் பெண்கள் மீதான தாக்கமும் பற்றி உமா ஷானிகாவின் உரை இடம்பெற்றது.

 உள்நாட்டு உற்பத்திக் குறைவு  அத்தோடு மலையக தொழிலாளர்களின் உடல் உழைப்பு சுரண்டப்படுகிறது. அதோடு விலைவாசி அதிகரிப்பு,போதுமானளவு  சம்பளம் இன்மை மற்றும் வளங்கள் பல இருந்தும் இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு பயன்படுத்தாது அவ்வளங்களை இறக்குமதிக்கு பயன்படுத்துவதால் பாதிக்கப்படுவது தொழிலார்களே என்றும், பொருளாதார நிலை பாதிக்கப்படுவதால் பாடசாலை பிள்ளைகள் பசியோசி போகும் அவலத்தினையும் விளக்கினார். தேயிலைத்தோட்ட தொழிலாளர்களின் பிரச்சனைகளை ஓடியோ மூலமும் போட்டுக்காட்டினார் .
வளங்களும் பாதிப்படைகிறது என்பதையும், அவரது உரையில் தெரிவித்தார்.
கிராஞ்சி இலவன்குடா மீனவர்களது பிரச்சனைகள் பற்றியும் தன் கருத்துக்களை பகிர்ந்தார். 

தொடர்ந்து மதிய உணவு .

ருக்ஷிக்யின்  தனி நடிப்பு இடம்பெற்றது. இதில் யுத்தத்தால் பாதிக்கக்கப்பட்டு மிகவும் வேதனையோடு  வாழும் பெண்ணின் நிலைமையை  முன்னிறுத்தி மிகவும் திறமையாக தன்  நடிப்பினை  வெளிப்படுத்தினார்.

 இளம்தலை முறையினர் எதிர்கொள்ளும் சமூக கலாச்சார முரண்பாடுகள் பற்றி இளம்தலைமுறையினரால் உரைகள், கருத்துக்கள் முன்னெடுக்கப்பட்டது .
  
வேர்ஜினி, அர்ச்சுனி,லறிஷா, குவேனி, நதி,மதுமிதா, மதி ஆகியோர் பங்கெடுத்தனர் . இரண்டு கலாச்சாரங்களை தாங்கள் சந்திப்பதாகவும்,அதில் வேறுபாடுகள் பல இருப்பதால் இரண்டையும் மதித்து பயணிப்பதாகவும் அதில் பல முரண்பாடுகளையும் சந்திப்பதாகவும் வேர்ஜினி கூறினார்.

சாதி பற்றிய விடயம் தமக்கு தெரியாமல் இருந்தாலும் பெற்றவர்கள் அதுபற்றி தமக்கு தெரியப்படுத்துவதாகவும் , வெளிநாட்டவர்களை பெருமையாக ஏற்றுக்கொள்கின்ற சில பெற்றோர் மனநிலை பற்றியும் அர்ச்சுனி கூறினார் .

 லறிஷா பிள்ளைகளிடம் வீட்டுச் சுமைகளை திணிப்பது, தங்கள் எதிர்பார்ப்புக்களை திணிப்பது , சமைப்பது பெண்ணுக்கு அவசியம் என்பது பற்றி சொல்லுவது , வெளியாட்களின் கேள்விகள் தங்களை மனதளவில் பாதிக்கும் எனவும் கூறினார். 

குவேனி தனதுரையில்  
தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்துவது,  அதாவது நிறங்களை வைத்து பிள்ளைகளை ஒப்பிடுவது, உடல் பருமன் பற்றி நேராகவே கூறுவது, பெண்பிள்ளைகள் கவனமாக இருக்கவேண்டும் என்றும் ஆண்  பிள்ளைகளை எதுவும் சொல்லாது வளர்ப்பதும்,உடைகள் அணிகின்ற விதத்தை வைத்து ஒருவரின் நடத்தையினை கணிப்பது போன்றவை பற்றி பேசினார். 

 ஆண் பிள்ளைகள் வளர்க்கப்படும் விதம் வேறுபடுவதால்  மனதைரியத்தின் அளவு  தங்களிடம் தானாகவே குறைக்கப்படுகிறது என்றும், உணவு விடயத்திலும் வேறுபாடு உண்டு என்பதையும் நதி தனதுரையில் கூறினார். 

 கேட்கப்படுகின்ற கேள்விகளுக்கும் நேர்த்தியாக பதில்களையும் வழங்கினார்கள்.  இவர்கள் பங்களிப்பு இந்த பெண்கள் சந்திப்புக்கு மிகவும் வலுச்சேர்த்ததாக அமைந்தது.

தேநீர் இடைவேளையை தொடர்ந்து புலம்பெயர்ந்த வாழ்க்கை சூழலில் பெண்களின் மனவுளைச்சலுக்கான காரணிகள் பற்றி இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் உரையாற்றினார் . அவரது உரையில்   எதனால் இப்பிரச்சனை ஏற்படுகிறது என்பதை உளவியலோடு ஒப்பிட்டு விளக்கினார் .

அதாவது  மனஉளைச்சல்,விவாகரத்து,
பொருளாதாரப் பிரச்சனை, உடல் தாக்குதல்,சொற்களால்  தாக்குதல்,   மெடிக்கல் பிரச்சனை
போன்றவையால் ஆசிய பெண்களே மனஉளைச்சலுக்கு அதிகளவில் உள்ளாகிறார்கள் எனவும். புலம் பெயர்ந்து வெளிநாட்டில் வசிக்கும் பெண்கள் குறுகிய காலத்தில் பலவகையாக பிரச்சனைகளுக்கு முகக்கொடுக்க வேண்டும் எனவும் ,அந்நிய நாட்டில் தனித்திருப்பதும் ,தகுதிக்கு ஏற்ற வேலை இல்லாதிருப்பது , விருப்பமில்லாத திருமணங்கள் ,அதிகளவு பொறுப்புக்கள்,இதுபோன்ற பல காரணங்களையும் கூறினார்.  வீடுகளில் எதிர்கொள்ளும் அவமானங்கள்,அச்சுறுத்தல்கள்   இதுபோன்ற பல காரணங்கள்  பற்றியும் அவர் உரையில் கூறினார் .

 இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் படைப்புலகமும் செயற்தளமும் பற்றி வனஜா எடுத்துரைத்தார்.

 சமூகப்பணி,பெண்கள் சந்திப்புகளின் தொடர்ச்சியான பங்களிப்பு,  மற்றும் இருபது  நூல்களை எழுதியும் இருக்கிறார்.இவையாவற்றையும் கருத்தில் கொண்டு 
இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் பூச்செண்டு கொடுத்து கௌரவிக்கப்பட்டார். 

இவர் எழுதிய நூல்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது.

பெண்கள் எழுதிய பல நூல்களும்  இங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. 
 
அடுத்து   நார்வேஜியக் கவிதைகளை உன்னத சங்கீதம் என்கிற  பானுபாரதியின்  மொழிபெயர்ப்பு கவிதைத் தொகுப்பு பற்றி தர்மினி உரையாற்றினார். இதில் மொழிபெயர்ப்பின்  அமைப்பு பற்றியும் வேறுமொழி கவிதைகளை வாசிக்கிறோம் என்கிற உணர்வு வாசிக்கும் போது ஏற்படவில்லை எனவும் சில கவிதைகளையும் அதில் உள்ளடக்கப்பட்டு இருக்கும் விடயங்களையும் தன் உரையில்  
நிகழ்த்தினார் .

  பிரமிளா பிரதீபனின் விரும்பித் தொலையுமொரு 
காடு என்கின்ற சிறுகதைத் தொகுப்பு பற்றி விஜி  உரையாற்றினார் .

 அனுபவப்பகிர்வுகள் , 
 36 வது பெண்கள் சந்திப்பை சுவிஸ்சர்லாந்தில் நடாத்துவதாகவும் முடிவெடுக்கப்பட்டது. 

விஜினது நன்றியுரையோடு பெண்கள் சந்திப்பு  நிறைவு பெற்றது .


*நன்றிகள் முகநூல்
வானிலா மகேஸ்வரன் 

0 commentaires :

Post a Comment