11/30/2022

தெற்காசிய கராத்தே சுற்றுப்போட்டியில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் நிகழ்த்தப்பட்ட முதல் சாதனை

தெற்காசிய கராத்தே சுற்றுப் போட்டியில் வடகிழக்கில் நிகழ்த்தப்பட்ட முதலாவது சாதனை.


தெற்காசிய கராத்தே சுற்றுப் போட்டியில் ( Kumite / fighting ) வெள்ளிப் பதக்கத்தை வென்று எமது மண்ணிற்கும், மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துத் தந்த கராத்தே வீரன் R. துஷியந்தன் மற்றும் அவரின் பயிற்றுவிப்பாளர்களான R. கௌசிகன், N. R. சில்வா ஆகியோர் இன்றைய தினம் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி சார்பாகவும், கட்சியின் கௌரவ தலைவர் சிவ. சந்திரகாந்தன் அவர்கள் சார்பாகவும் கட்சியின் தலைமை காரியாலயத்தில் வைத்து பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர்.

இச்சாதனையானது வடகிழக்கில் நிகழ்த்தப்பட்ட முதலாவது சாதனை என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதனடிப்படையில் கட்சியின் பொதுச் செயலாளர் கௌரவ. பூபாலபிள்ளை பிரசாந்தன், இளைஞரணி செயலாளர்  சுரேஷ்குமார், பிரதிச்செயலாளர் பஞ்சலிங்கம், கல்வி, கலை, கலாச்சார செயலாளர் மணிசேகரன், ஊடகச் செயலாளர் லிசோத்மன் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் JKMO கராத்தே விளையாட்டு கழக மாணவர்களென பலரும் கலந்து கொண்டனர்.
»»  (மேலும்)

11/29/2022

மட்டக்களப்பு வலையம் இலங்கையில் முதலிடம். வாகரையும் வவுணதீவு என்று இந்நிலைபெறும்?


கா. பொ. த சாதாரணதரப் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தினை பிடித்தது மட்டக்களப்பு கல்வி வலயம்.

இறுதியாக வெளிவந்த கா. பொ. த சாதாரணதரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மட்டக்களப்பு கல்வி வலயமானது அகில இலங்கை ரீதியிலுள்ள 100 கல்வி வலயங்களுக்குள் முதலிடத்தை பிடித்து எமது மாவட்டத்திற்கும், மாகாணத்திற்கும் பெருமையை சேர்த்துள்ளது. 

எனவே இவ்வாறான மகத்தான சாதனையினை புரிந்த மாணவ செல்வங்களை வாழ்த்துவதுடன் இதற்கென முன்நின்று உழைத்த கல்விப்பணிப்பாளர், அவருடன் இணைந்த குழாமினர், அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என அனைவருக்கும் உண்மைகள் இணையத்தளம் சார்பில் பாராட்டுக்கள்.

இதுபோன்ற பெறுபேறுகளை என்று வாகரை(வாழைச்சேனை) மற்றும் வவுணதீவு வலையங்கள் பெறுகின்றதோ அதுவே முழு மகிழ்ச்சிக்குரிய தினம்.
»»  (மேலும்)

11/28/2022

ஈஸ்டர் தாக்குதல் சந்தேக நபர் கொலை


மட்டக்குளிய பகுதியில், நபரொருவர்  இன்று திங்கட்கிழமை பகல் படுகொலைச் செய்யப்பட்டுள்ளார்.

காரொன்றில் வந்த இனந்தெரியாத நபர்களே அவரை வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். காயமடைந்த அந்த நபர், கொழும்பு ​தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி, உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்ற  குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு, நீதமன்ற உத்தரவின் பிரகாரம் பிணையில் விடுவிக்கப்பட்டவர் ஆவார்.

மட்டக்குளிய சஃபியா ஒழுங்கையில் வசிக்கும் மொஹமட் பதூர்தீன் மொஹமட் ஹரிநாஸ் (வயது 38) என்பவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளதாக மட்டக்குளிய பொலிஸார் தெரிவித்தனர்.


»»  (மேலும்)

மட்/பேத்தாழை விபுலானந்ததா நிகழ்வுகள்

மட்/பேத்தாழை விபுலானந்தா கல்லூரி தேசிய பாடசாலையில் கல்வி பயின்ற பழைய மாணவர்களை ஒருங்கிணைந்து அவர்கள் ஊடாக கல்லூரியின் அபிவிருத்தியை ஏற்படுத்துவது என்ற நோக்கத்தினை அடிப்படையாகக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டு நடந்து முடிந்த விளையாட்டு நிகழ்வின் இறுதி போட்டியில் ஆண்களுக்கான மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டியில் ந.நிமல்ராஜ் தலைமையிலான 2007 ஆம் ஆண்டு பழைய மாணவர் அணியினர் வெற்றி வாகை சூடினர்.

இதேபோன்று பெண்களுக்கான எல்லே போட்டியில் 2017 ஆம் ஆண்டு பழைய மாணவர் அணியினைச் சேர்ந்த சபீக்கா தலைமையிலான அணியினர் வெற்றி பெற்று வெற்றிக் கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டனர்.
கடந்த 4 நாட்களாக நடைபெற்ற மேற்படி நிகழ்வில் 23 கலகங்களாக கொண்ட கிரிக்கட்  அணியினரும் 17 கலகங்களைக் கொண்ட  எல்லே பெண்கள் அணியினரும்  போட்டியில் பங்குபற்றியிருந்தனர். இதன்போது இறுதிச்சுற்று கிரிக்கட் மென்பந்து போட்டியில் 2007 இற்கும் 2011 இற்கும் இடையிலான கழகங்களுக்கிடையில் நடைபெற்ற போட்டியில் 2007 ஆம் ஆண்டிற்கான அணியினர் வெற்றி பெற்றனர்.

இதேபோன்று பெண்களுக்கான எல்லே போட்டியில் 2012 இற்கும் 2017 இற்கும் இடையிலான கலகங்களுக்கிடையில் நடைபெற்ற போட்டியில் 2017 ஆண்டிற்கான அணியினர் 8 ஓட்டங்களால் வெற்றி பெற்றனர். கிரிக்கட் போட்டியில் சிறந்த துடுப்பாட்டம்,சிறந்த ஆட்ட நாயகன் மற்றும் பந்து வீச்சாளரருக்கான விருதினை 2007 ஆம் ஆண்டு அணி வீரர் தனராஜ் தனதாக்கிக் கொண்டார்.
கல்லுரி அதிபர் சி.முருகவேல் அவர்களின் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் கௌரவ அதிதியாக சமூகசேவையாளர் திருமதி தேவி பஞ்சலிங்கம் கலந்து கொண்டு வெற்றிக்கிண்ணங்களை வழங்கி வைத்தார்.இதற்கான வெற்றிக் கிண்ணங்கள் அனைத்தும் ப.விமலமராஜ் அவர்களினால் கல்லூரியின் நலன் கருதி அன்பளிப்பு செய்யப்பட்டிருந்தது.
 கல்வி பொதுத்தர சாதாரண தரத்தில் கல்வி பயின்ற 1997 – 2018 வரையான பழைய மாணவர்களை மையப்படுத்தியதாக இவ் விளையாட்டு நிகழ்வுகள் நடைபெற்றன.மேற்படி நிகழ்வுகளை விளையாட்டு துறைக்கான பொறுப்பாசிரியர் ஏ.சப்ராஸ் ஓழுங்கமைத்திருந்தார்.
 பழைய மாணவர்கள். கல்லூரி அபிவிருத்தி சங்கம் மற்றும் கல்லூரி நிர்வாகம் என்பனவற்றால் ஒருங்கிணைகப்பட்டு பாழைய மாணவர்களை மையப்படுத்தியதாக விளையாட்டு நிகழ்வு  ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இதன் தொடக்க நிகழ்வாக நடைபவணி இடம்பெற்றது.

ஆரம்ப நிகழ்வில் இக் கல்லூரியில் கல்வி கற்ற பழைய மாணவரான இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் பங்குபற்றியிருந்தார். இவ் நிகழ்வானது பழைய மாணவர்களுடையே பாடசாலை சமூகத்துடன் தொடர்பற்றிருந்த நீண்டகால உறவு  மீண்டும் உருவாக்கக் கூடிய வாய்ப்பாக அமைந்துள்ளதுடன் பாடசாலை சமூகத்திலும் பிரதேச மக்களிடையேயும் மகிழ்ச்சியும் வெளிப்படுத்தப்படுத்தக் கூடிய நிகழ்வாக அமைந்திருந்தாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர்.
 
க.ருத்திரன். 
*

நன்றி முகநூல் 
»»  (மேலும்)

வியாபாரம் ஆகிவிட்ட மாவீரர் தினம்-இன்பராசா


நாளைக்கே நாம் ஆயுதம் தூக்கவேண்டி வந்தால் நீங்கள் தப்புவீர்களாக என புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் க. இன்பராசா கேள்வி எழுப்பினார்.


வவுனியா ஊடக அமையத்தில் இன்று காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்,

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

மாவீரர்கள் வேறு அமைப்புக்களில் இருந்து வந்தவர்கள் அல்ல. எங்களில் ஒருவரே மாவீரர். யுத்தத்தில் இறந்தவர்கள் மாவீரர்களாகவும் தப்பி இன்று உயிருடன் இருப்பவர்கள் முன்னாள் போராளிகளாகவும் உள்ளனர்.

ஆனால் இன்று நாம் வேதனைப்படுபவர்களாக மாறியுள்ளோம். எங்கள் தோள்களில் தூக்கி சுமந்து மாவீரர் துயிலும் இல்லங்களில் விதைக்கப்பட்டவர்களுக்கும் காடுகளில் பல சந்தர்ப்பங்களில் மாவீரர்களாகியவர்களுக்கும் அகவணக்கம் செலுத்த முடியாதவர்களாக உள்ளோம்.

இன்று சில அரசியல்வாதிகள் எங்கள் மாவீரர்களுக்கான நிகழ்வுகளை எங்களை செய்ய விடாமல் தாங்கள் சென்று அதில் அக்கறை செலுத்துவது வேதனையளிக்கின்றது. சம்பூர் துயிலும் இல்லத்தின் காணி உறுதிகளை அந்த மக்களுடன் கலந்துரையாடி பெற்று துப்பரவு செய்வதற்கு முனைப்பு காட்டியிருந்தேன். எனினும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சில அரசியல்வாதிகளும் முகவர்களும் எங்களை அரசியல்வாதிகள் என தெரிவித்து வெளியே செல்லுமாறு தெரிவித்தனர். அப்போது அழுதோம். வேதனைப்பட்டோம். இதனால் நாங்கள் ஒதுங்கியிருந்தோம்.

பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது சட்டைப்பையில் இருந்து 1000 ரூபா செலவு செய்யமாட்டார். அவ்வாறான தலைக்கணம் மிக்கவர்களுக்கு 50 இலட்சம் வந்தால்தான் 10 இலட்சத்திற்கு வேலை செய்வார்கள். புலம்பெயர் தேசத்தில் இருந்து சிலர் இவர்களுக்கு பணத்தை கொடுப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் துயிலும் இல்லத்தில் வேலை செய்வதை பார்த்து வேதனைப்படுகின்றோம். 

யுத்தத்தில் ஈடுபட்ட நாம் ஒதுங்கியிருக்க இவர்கள் போய் நிற்கின்றார்கள். இவர்களே முன்னாள் போராளிகள் இராணுவ புலனாய்வுடன் தொடர்பு அவர்ளிடம் பணம் வாங்குவதாக குற்றம்சாட்டி விட்டு தாம் முன்னிற்கின்றனர்.
 
தமிழ் அரசியல்வாதிகள் எமது போராளிகளை குற்றம் சாட்டுவதை வன்மையாக கண்டிக்கின்றோம். அரசாங்கத்திற்கு காட்டிக்கொடுக்கவும் கூட்டிக்கொடுக்கவும் எங்களிடம் என்ன இருக்கின்றது. அவர்களே எல்லாவற்றையும் காட்டிக்கொடுத்து எம்மை வீதியில் விட்டார்கள். நாம் இறந்துபோகும் நிலையிலேயே இருக்கின்றோம்.

 
புலம்பெயர் தேசத்தில் உள்ள சில போராளிகளும் போராட்டத்தில் போராளிகள் பட்ட கஸ்டத்தினை அறிந்திருந்தும் அரசியல்வாதிக்கே பணத்தை கொடுக்கின்றனர். நிகழ்வுகள் செய்வதற்கு உதவி செய்கின்றனர். புனர்வாழ்வளிக்கப்பட்ட அனைவரும் வீரச்சாவடைந்திருந்தால் புனர்வாழ்வளிக்க எவரும் இல்லாமல் இருந்திருந்தால் எமது வரலாறே இல்லாமல் போயிருக்கும்.. ஆனால் இன்று எம்மை துரோகிகள் என்கின்றீர்கள். நாங்கள் யுத்தம் செய்யும் போது நீங்கள் எங்கு போய் இருந்தீர்கள். உங்கள் பெயர்களையே நாங்கள் கண்டதில்லை.
 
எங்கள் மாவீரர்களுக்கு நாங்கள் விளக்கேற்றும்போதே அவர்களின் ஆத்மா சாந்தியடையும்.. எங்களோடு இருந்த போராளிகளை நாங்களே ஒருகணம் சிந்திப்போம். அப்போதுதான் அவர்களின் ஆத்மா சாந்தியடையும். அவ்வாறான நிலையில் நாங்கள் அஞ்சலி செலுத்த சென்றால் அனைத்து அரசியல்வாதிகளும் வந்து எங்களை நாய்கள் போன்று கலைக்கின்றீர்கள். எங்களை அரசியல்வாதி என்று கலைத்து நீங்கள் எல்லாம் தேசியவாதிகள் என்று கூறி உள்ளே நிற்கின்றீர்கள்.

ரி.சி.சி அமைப்பில் இருந்து கஜேந்திரகுமாருக்கு போதிளவு பணம் வருகின்றது. இது நிறுத்தப்பட வேண்டும். இதேவேளை இந்த அமைப்புகளுக்கு கூறுகின்றோம். நீங்கள் அரசியல்வாதிகளை வளர்த்து செல்லுங்கள். ஆனால் எங்கள் மாவீர்களை நினைவு கூருவதற்கு இனி வரும் காலங்களில் புலத்தில் உள்ள விடுதலைப்புலி முன்னாள் உறுப்பினர்கள் அனைவருக்கும் அங்கீகாரத்தினை கொடுக்க வேண்டும்.
 
மாவீரர்நாளை போராளிகளும் மாவீரர் பெற்றோரும் செய்யும் போது இராணுவத்தினராலும் புலனாய்வாளர்களாலும் ஏற்படும் இடையூறுகளை களைவதற்காக அரசியல்வாதிகள் செயற்பட வேண்டும். ஆனால் அவர்கள் அதை செய்யாமல் துயிலும் இல்லத்தில் நின்று புல்லு கொத்திக்கொண்டு பொலிஸாருடன் சண்டித்தனமும் செய்துகொண்டிருக்கின்றார்கள். 
 
உங்கள் சண்டித்தனங்கள் எங்களுக்கு நிகராகாது. நீங்கள் பொலிஸாருக்கு கை வைக்க முடியாது. ஆனால் நாங்கள் சில வேளையில் பொலிஸாருக்கு கை வைத்துவிடுவோம். எங்களை மீறி எங்களுக்குள் ஒரு சக்தி உள்ளது. ஆனால் நாங்கள் பொறுமையாக உள்ளோம்.

இன்று துயிலும் இல்லத்திற்கு முல்லை ஈசனை அழைத்து செல்கின்றனர். அவர் போராளியாக இருந்திருந்தால் வேதனை தெரிந்திருக்கும். கூட்டமைப்பு மாகாணசபைக்கு முல்லை ஈசனை களத்தில் இறக்கவே அழைத்து செல்கின்றது. இதை பார்த்துக்கொண்டிருக்க நாங்கள் பைத்தியக்காரர்கள் இல்லை.
 
எங்கள் மாவீரர்களுக்கு நாங்கள் நினைவு தினம் செய்யாமல் எங்கிருந்தோ வந்தவர்கள் எல்லாம் செய்து இன்று அரசியல்மயமாகிவிட்டது. தயவு செய்து எமது மாவீரர் விடயத்தில் அரசியல்வாதிகள் அரசியலாக்காமல் ஒதுங்கியிருந்து எமக்கு பக்கபலமாக இருங்கள். போராளிகள் அமைப்புக்களையும் போராளிகளையும் ஒன்றிணைத்து நினைவேந்தல் செய்ய விடுங்கள்.
 
கொழும்பில் உள்ள சம்பந்தரின் வீட்டில் சில தீர்மானங்களை எடுத்துள்ளனர். ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளையும் அழைத்து பேசவுள்ளதாகவும் அறிந்தோம். இந்த வியடத்தில் அனைத்து தமிழ் அரசியல் கட்சி தலைமைகளுக்கும் ஒரு விடயத்தை செல்லிக்கொள்ள விரு;புகின்றேன். அதாவது விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்ட ஒருசில அரசியலே இங்கு தற்போது உள்ளது. இவர்கள் அரசியலுக்கு வருவதற்கு முன்பே விடுதலைப்புலிகளில் நல்ல அரசியல்வாதிகள் இருந்தார்கள்.
 
எனவே சம்பந்தர் மற்றும் கூட்டமைப்பினர் ஏனைய அரசியல்கட்சிளை இணைத்து சில தீர்மானங்களை எடுக்கும் போது விடுதலைப்புலிகள் சம்பந்தமான அமைப்புக்கள் கட்சிகள் புலம்பெயர் தேசத்தில் உள்ள விடுதலைப்புலிகள் சம்பந்தமான அமைப்புக்கள் சிவில் அமைப்புக்களையும் இணைத்து முடிவெடுக்க வேண்டும். தனித்து அரசியல்வாதிகள் நீங்கள் மட்டும் முடிவு எடுக்க முடியாது.
 
நாங்கள் யுத்தம் செய்யவேண்டும் நீங்கள் ரணிலுடனும் மகிந்தவுக்கும் ஆதரவாக தீர்மானம் எடுத்தால் நாங்கள் சம்மதிப்பதா? சில வேளை நாளைக்கே நாங்கள் ஆயுதத்துடன் இறங்கினால் நீங்கள் தப்புவீர்களா? எங்களுக்க 1000 பேர் தேவையில்லை. 10 பேர் போதும் வடக்கு கிழக்கை கெரில்லா போரால் கரைத்து குடிப்போம். உங்களுக்க எதிராகவே நாங்கள் எதனையும் செய்வோம். கட்டாயமாக செய்வோம். எனவே அந்த நிலைமைக்கு எங்களை தமிழ் அரசியல்வாதிகள் தள்ளக்கூடாது.
 
வடக்கு கிழக்கில் வாழும் அனைத்து போராளிகளையும் அவர்களின் அமைப்புக்களையும் சிவில் அமைப்புக்களையும் அங்கீகரியுங்கள். அவர்களையும் இணைத்து முடிவெடுத்து அதனை அரசாங்கத்திடம் முன்வையுங்கள்.

75 வருடமாக அரசியல் செய்து நீங்கள் என்ன செய்தீர்கள். காலம் கடந்துவிட்டது ஏமாற்றப்பட்டோம் என்றுதான் இத்தனைவருடமாக கூறுகின்றீர்கள். இதனால்தான் நாம் ஆயுதம் தூக்கினோம். இனி எதிர்கால சந்ததியையும் ஆயுதம் தூக்க வைக்கப்போகின்றீர்களா? மக்களை ஏமாற்றவும் ஒரு எல்லை உள்ளது. அரசியல் என்பதால் சாகும் வரைக்கும் மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்க முடியாது எனவும் தெரிவித்தார்.


»»  (மேலும்)

11/27/2022

மலையக இலக்கியத்தின் வாடிப்போன இளங்குருத்து





மலையக இலக்கியத்தின் பச்சை இளங்குருத்து வாடிப்போய் விட்டது. விமர்சன உலகின் ஊற்றின் ஓட்டம் வற்றி நின்ற துயர் இது. வசீகரமான - வாஞ்சை கொஞ்சும் புன்னகை, கம்பீரமான தோற்றம், உயர்ந்த மிடுக்கு. சிந்தனையிலும் செயலிலும் அந்த உயரம் தெரியும். அந்த இளம்பிள்ளை இவ்வளவு துரித கதியில் மீளாத் துயிலை அணைத்துக் கொண்டுவிடும் என்று நான் நினைத்திருக்கவில்லை.

நேசம் நிறைந்த நெஞ்சினனாய், சூழவும் குழுமி நிற்கும் நண்பர் குழாத்துடன் ஹற்றனில் எங்களை வரவேற்று, விருந்தோம்பிய விசால மனம் அவருடையது. மல்லியப்புசந்தி திலகர், மணிவண்ணன் என்று ஆற்றல்மிகு ஆளுமைகள் அவருக்கு என்றும் பக்கபலமாய் நின்றனர்.

இனிய துணைவி, மகன், பாசமிக்க நண்பர்கள், இலக்கிய நேசர்கள், அரசியலில் சகபயணிகள் என்று எல்லோரையும் ஏங்க வைத்து சென்று விட்ட இளைய மகன் அவர்.

உயர் கல்வித்தகைமைகள், பெரும் பதவிகள், இலக்கியத்தவிசின் உன்னத பீடம், சான்றோர் நட்பு என்று அனைத்தையும் இத்தனை வயதிற்குள் அள்ளிக்குவித்த வேகத்தை வாழ்க்கை ஓட்டத்திலும் காட்டியிருக்க வேண்டுமா? என்று மனம் அலை மோதுகிறது.

பல்கலைக்கழகங்களில் முழுநேர உள்வாரி மாணவராகவே பயின்று முதல் ஆண்டுப்பரீட்சையிலேயே தேற முடியாமல், ஒருமாதிரி ஒப்பேற்றி ஒரு பட்டத்தைப் பெறப் பாடாய்ப்படும் சூழலில், இளங்கலைமாணி, முதுகலைமாணிப்பட்டங்கள் எல்லாவற்றையுமே வெளிவாரிமாணவராகவே பயின்று தன் ஆற்றலின் மேன்மை காட்டியவர் லெனின் மதிவானம். இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் பட்டமேற் கல்வி டிப்ளோமா, தேசியக் கல்வி நிறுவகத்தின் பட்டமேற் கல்வி முகாமைத்துவ டிப்ளோமா என்று தன் உயர்கல்விப்பாதையை உறுதியான கற்பாறைகளால் நிர்மாணித்தவர். இராஜரீகத் துறையிலும் விஞ்ஞான முதுமாணிப் பட்டத்தையும் பெற்று கல்விவானில் சிறகடித்துப்பறந்த இராஜாளிப்பறவை அது.

அரசின் உயர் பதவிகளை வெகு இலகுவாக சுவீகரிக்கும் ஆற்றல் அவர் கைவசமிருந்தது. பாடசாலை ஆசிரியராகத் தொடங்கி, கொட்டகலை அரசினர் ஆசிரியர் கலாசாலையில் விரிவுரையாளராக உயர்ந்து, கல்வி அமைச்சின் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் பிரதி ஆணையாளராக சிகரம் தொட்ட பெருமகன். அவன் தொட்ட துறை எல்லாம் துலங்கியது. கல்வி வெளியீட்டு திணைக்களத்தில் தமிழ்ப் பாடநூலாக்கத்தில் நவீனத்தைப் புகுத்தியவன். வழக்கொழிந்துபோன வழக்குகள் தன் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டபோது, மணித்துளிக் கணக்கில் அதனை நேர்செய்தவன்.

ஹற்றன் -டிக்கோயாவில் 2015 ஆம் ஆண்டு எனது 'கூலித்தமிழ்' நூலின் வெளியீட்டு நிகழ்வினை மணிவண்ணனுடன் இணைந்து ஒழுங்கு செய்து, காலைப்பொழுதில் மண்டபம் நிறைந்த கூட்டத்தைச் சேர்த்து, நிறைவு செய்ததில் அந்த இளைஞனின் தலைமைத்துவம் தெரிந்தது. அந்த நிகழ்வில் லெனின் மதிவானம் ஆற்றிய உரையினைச் செவிமடுத்தபோது, ஆற்றல் வாய்ந்த சொற்பொழிவாளராக அவர் மெருகேறியிருப்பதனை உணர்ந்தேன். மார்க்ஸிய சித்தாந்தத்தில் சமூகத்தை, அரசியலை, இலக்கியத்தை மதிப்பிடும் புதியதலைமுறைக் குருத்து அவர். மார்க்ஸிய ஒளிதீபம் ஏந்தி நின்றவன் சூறைக்காற்றில் மோதிய தீபமாய் அணைந்து போய்விட்ட துயரம் எளிதில் தீராது. நினைவில் ஓயாது.

பேராசிரியர் க.கைலாசபதியை அவர் பிரத்தியட்சமாய்க் கண்டதில்லை. அவருக்குத் தன்னை ஏகலைவனாய் வரித்துக்கொண்ட பேரபிமானி லெனின் மதிவானம். அவரிடம் நேராய்ப் பாடம் கேட்டவர்கள் கணக்கற்றோர். கால்நூற்றாண்டு கால பல்கலைக்கழக வாழ்வில் அவரிடம் பயின்று கல்விப்புலத்தில் பிரகாசித்தோர் பலருண்டு. ஆனால், 'பேராசிரியர். க.கைலாசபதி: சமூக மாற்றத்துக்கான இயங்காற்றல்' என்ற நூலைத்தர லெனின் மதிவானத்தால்தான் முடிந்தது.

கைலாசபதி அவர்களின் அரசியல் தளத்திலிருந்து இலக்கிய மதிப்பீடுகளை, சமூக அணுகுமுறையைப் புரிந்து, அந்த வழிகாட்டலில் தனது விமர்சனப்பாதையைச் செதுக்கிக் கொண்டவர் லெனின் மதிவானம். வெற்றுப் பிரசங்கியாக இல்லாமல், மக்கள் மத்தியில் அவர் தொடர்ந்து இயங்கியதை நானறிவேன்.

'நிருவாகப்பணியும் வேறு சில கடப்பாடுகளும் தன் நேரத்தையெல்லாம் தமதாக்கிக் கொள்ளும் நிலையில் நூல் எழுதுவதற்குத் தேவையான அவகாசமின்றி ஏங்கும்' பொழுதிலும் எழுத்தைத் தெய்வமாய்த் தொழுதேத்தும் கொள்கையினன் லெனின் மதிவானம்.

உலகில் எந்த விஷயத்தையும் மலையகம் என்ற சாணைக்கல்லில் உரசிப்பார்த்து விளக்கம் காணும் பக்குவம் நிறைந்தவர்.'லெனின் மதிவானத்தின் எந்தவொரு தேடலும் மலையக மக்களின் அசைவியக்கம்- விடுதலை என்பன சார்ந்ததாகவே அமைவது இயல்பு.

குறைந்த வயதிற்குள் அவர் எழுதி விட்டுச் சென்றிருக்கும் 'மலேசியத் தமிழரின் சமகால வாழ்வியல் பரிமாணங்கள்' (2007), 'மலையகம் தேசியம் சர்வதேசியம்' (2010), ' உலகமயம் பண்பாடு எதிர்ப்பு அரசியல்'(2010), 'பேராசிரியர்.க.கைலாசபதி: சமூக மாற்றத்துக்கான இயங்காற்றல்' (2011), 'ஊற்றுக்களும் ஓட்டங்களும்' (மீனாட்சியம்மாள் முதல் மார்க்ஸிம் கார்க்கிவரை) (2012) ஆகிய நூல்கள் அவரின் பெயரை ஈழத்து இலக்கிய உலகில் என்றும் பேச வல்லன.

மு.நித்தியானந்தன்... நன்றி தினகரன் 

»»  (மேலும்)

11/25/2022

இதுதானா தமிழ் தேசியம்



இதுதானா  தமிழ் தேசியம்

1931ல் சர்வஜன வாக்குரிமை வழங்க ஆங்கிலேயர்கள் முன் வந்த போது பெண்களுக்கும் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் வாக்குரிமை கொடுக்க வேண்டாம் என்று வாதிட்டவர்கள் இந்த யாழ்ப்பாணம் மேட்டுக்குடி தலைவர்கள்.

சுதந்திர இலங்கையில் 1957ல் நிலச்சுவாந்தர்களிடமிருந்த அபரிதமான காணிகளை மீட்டு ஏழைகளுக்கு பகிர்ந்தளிக்க உருவாக்கப்பட்ட நெற்காணிச் சட்டத்தை தலைகீழாக நின்று எதிர்த்தனர் நிலச்சுவாந்தரான செல்வநாயகம் தலைமையிலான தமிழரசுக்கட்சி கட்சியினர்.

1970 ல் யாழ்ப்பாணத்தில் இடதுசாரிகள் மற்றும் அல்பிரட் துரையப்பா போன்ற இணக்க அரசியல் தலைவர்களின் முயற்சியால் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்ட போது இராமநாதன் கட்டிய பள்ளிக்கூடம் பறிபோகின்றது,சிங்களமானவர் குடியேறுவர், கலாச்சார சீரழிவு ஏற்படும் என்று கூச்சலிட்டு, ஹர்த்தால் போட்டு, கலவரம் பண்ணி பல்கலைக்கழக திறப்பு விழாவுக்காக வந்த பிரதமர் சிறிமாவுக்கு கறுப்பு கொடி காட்டி, துணைவேந்தர் கைலாசபதி வீட்டுக்குக்  கைக்குண்டெறிந்து, சன்னதமாடியவர்கள் இந்த தமிழரசுக்கட்சியினர்.

இப்போ மட்டக்களப்பில் அமைச்சர் சந்திரகாந்தன் சுய பொருளாதார மேம்பாடுகளுக்காக அரசகாணிகளை கிராமிய தொழிலாளர்களுக்கும் சிறு முதலீட்டாளர்களுக்கு பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்கின்றபோது எம்பி சாணக்கிய அதை எதிர்த்து கூக்குரல் இடுகின்றார். குழப்பியே ஆகுவேன் என்று ஒற்றக்காலில் நிற்கின்றார். சுத்துமாத்து சுமந்திரனோ சாணக்கியவுக்கு ஆதரவாக பாராளுமன்றத்தில் வக்காலத்து வாங்குகிறார்.

ஏன்? ஏன்? ஏன்?

சுமந்திரனை போல, சாணக்கியனைப் போல மேட்டுக்குடிகளின் வாரிசுகள் மட்டுமே படிக்க வேண்டும். பட்டம் பெறவேண்டும். பல்மொழி தேர்ச்சி பெற வேண்டும். அதைவைத்து இவர்களெல்லாம் பரம்பரை பரம்பரையாக அரசியல் தலைவர்களாக வலம் வர வேண்டும்.
அடுத்தவன் குழந்தைகள் எல்லாம் ஆடும் மாடு மேய்த்துக் கொண்டு ஆஹா! இவர்களல்லோ தலைவர்கள், என்ன இங்கிலீஷ்! என்ன சிங்களம்! என்ன ஆளுமை! என்று காலமெல்லாம் உங்கள் புகழ் பாடி பஞ்சப் பரதேசிகளாக வாழ்ந்து மடியவேண்டும். 

இதுதானே உங்கள் கேடுகெட்ட தமிழ் தேசியம்.

.






»»  (மேலும்)

11/23/2022

முஸ்லிம்களிடமிருந்து தமிழ் தலைமைகள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் - முகிலன் சாமிநாதன்( (ஆசிரியர்)



முஸ்லிம் அரசியல் தலைவர்களிடம் இருந்து தமிழ் அரசியல்வாதிகள் கற்றுக் கொள்ள வேண்டியது நிறையவே இருக்கு...

கடந்த காலங்களிலே எந்த அரசாங்கம் அமைந்தாலும் அதில் பங்காளர்களாக இருந்து பல முக்கிய அமைச்சுக்களையும் பதவி நிலைகளையும் பெற்று தமது சமூகத்திற்காக பணியாற்றிய முஸ்லிம் அரசியல் தலைமைகள்  பல கட்சி சார்ந்து அரசியலை முன்னெடுத்தபோதிலும் அவர்களுக்குள்ளும் பல கருத்து வேறுபாடுகள் கொள்கை ரீதியான பிரச்சினைகள் என பல இருந்தாலும் அதனை தேர்தல் மேடைகளோடு மட்டுப்படுத்திக் கொண்டு பாராளுமன்ற உயரிய சபையை மிக நுட்பமாக பயன்படுத்தி தமது சமூகத்துக்காக பேச வேண்டிய சந்தர்பத்தில் பேசி  பேச தேவையற்ற விடயங்களை தவிர்த்து கொண்டு  தனிப்பட்ட வன்மங்களை களைந்து சமூக முன்னேற்றத்துக்காக செயற்பட்டதன் பிரதிபலிப்பே கிழக்கு மாகாணத்தில் மட்டுமல்ல இலங்கை முழுவதிலும் முஸ்லிம் சமூகத்தின் அபரீத வளர்ச்சிக்கு காரணமாகியது... இது இவ்வாறு இருக்க..

தமிழ் சமூகம் ஓரளவேணும் அரசியல் ரீதியாக விழிப்படைந்து  வெறும்  உணர்ச்சி பேச்சுகளுக்கும் உசுப்பேத்தல்களில் இருந்தும் விடுபட்டு மாற்று அரசியல் நகர்வோடு பயணித்துக்கொண்டு இருக்கும் தருணத்தில்.. எமது மக்கள் பிரதிநிதிகள் பாராளுமன்றத்தை பயன்படுத்தும் விதம் மிக கேவலமாக உள்ளது... கல்வி ,பொருளாதாரம்,அரசியல் ரீதியாக மிகவும் நலிவடைந்த எமது சமூகத்துக்காக பேச எத்தனையோ விடையங்கள் இருக்க ..எமது முழுச் சமூகமும் தலை குனியும் அளவுக்கு தனிப்பட்ட மோதல்கள் அதிகரித்து வருகிறது தமக்காக வழங்கப்படும் முழு நேரத்தையும் இதற்காகவே பயன்படுத்துகின்றார்கள்...

திரு. பிள்ளையான் அவர்கள் மட்டக்களப்பு மக்களின் அதிக வாக்குகளைப் பெற்று பாராளுமான்றம் சென்று தனக்கு கிடைத்த வாய்ப்புக்களை  பயன்படுத்தி தமது மக்களுக்கான பணிகளை நாட்டின் இக்கட்டான சூழலிலும் செய்துகொண்டு இருக்கும் சந்தர்பத்தில்...
கடந்த காலங்களிலும் சரி தற்பொழுதும் சரி வாய்ப்பேச்சுகளால் மாத்திரம் அனைத்தையும் பெற்றுக்கொடுத்து அரசியல் செய்து எமது மக்களின் இன் நிலைக்கு காரணமானவர்களின் வழித் தேன்றல்களின் பாராளுமன்ற கூச்சல்கள்
எதை சாதிக்கப் போகிறது.....

மாவட்ட அபிவிருத்தி குழு தலைமை எனும் பதவியை இலக்கு வைத்து நடாத்தும் வசைபாடல்கள்...எதற்காக..?

த.தே.கூ அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கும் காலங்களில்  மாவட்ட அபிவிருத்தி குழு தலைமையை ஏன் பெற்றுக்கொள்ளவில்லை? யார் வசம் இருந்தது..? இவர்கள் இணைத்தலைவர்களாக இருந்து செய்தவை என்ன?  அப்பதவியை பயன்படுத்தி எமது அயல் சமூகத்தினர் சாதித்துக்கொண்ட விடயங்கள் எத்தனையோ உள்ளன...இவ்வாறு  கடந்தகாலம் பல கதைகள் சொல்லும்போது ...அப்பதவியின் முக்கியத்துவம் கருதி அதனை பெற்று மிக நுட்பமாக எமது இருப்புக்கான விடயங்களை நகர்த்திக் கொண்டிருக்கையில்... திரு. சாணக்கியன்  அவர்கள் அப்பதவிமீதும் அப்பதவியை பல அழுத்தத்தின் மத்தியிலும் பெற்று செயற்படும் திரு.பிள்ளையான் மீதும் போலி குற்றச்சாட்டுக்களை பாராளுமன்றத்திலும், அபிவிருத்திக் குழு கூட்டங்களின் போதும்  முன்வைப்பது ..இப்பதவியை வேறு பக்கம் நகரத்துவதற்கான செயற்பாடா..?என. பலமான சந்தேகத்தை ஏற்படுத்துகிறது...   

மாவட்ட அபிவிருத்தி தலைமை எனும் பதவியூடாக மாவட்ட மக்களுக்காக .... கிராமிய பொருளாதார நடவடிக்கைகளுக்கான பல செயற்பாடுகள், மக்களுக்கான காணிகளை பகிர்ந்தளிக்கும் செயற்பாடுகள் , எல்லைநிர்ணயம் தொடர்பான செயற்பாடுகள் , சூரிய சக்தி மின்பிறப்பாக்கி திட்டங்கள், வாழைச்சேனை பதிவாளர் தொடர்பான பிணக்குகளை தீர்த்தமை, வாழைச்சேனை நீதிமன்ற கட்டிடம் தொடர்பான சவால்களை முறியடித்து செயற்பட்டமை என பல வற்றை  சாத்தியப்படுத்தி இருக்கும் தருவாயில்...இவ்வாறான பாராளுமன்ற கூச்சல்கள்   எதை சாதிக்கப் போகிறது... ?  

இவ்வாறான கூச்சல்கள்  வேண்டுமென்றால் பல இளைஞர்களின் இரத்தத்தை சூடாக்கி உங்கள்  வாக்கு வங்கியை அதிகரிக்களாமே தவிர அதனால் விளையும் பயனேதுமில்லை...அவ்வாறு வாக்கு வங்கி அதிகரித்து நீங்கள் பாராளுமன்றம் போவதால் எம்மக்களுக்கு விளையும் பயன் என்ன???கடந்த காலத்தில் விளைந்த பயன் என்ன? திரு.சுமந்திரன் தனது இரு பதவி காலத்திலும் மக்களின் வளர்ச்சிக்காக செய்தவை என்ன? திரு. சாணக்கியன்  பாராளுமன்ற காலத்தில் மக்களுக்காக செய்தவை என்ன? வீதிப்போராட்டம் ...பாராளுமன்ற வசைபாடல்கள்  ....வெளிநாட்டு விஜயங்கள்...... இதனால் மக்கள் பெற்றுக்கொண்டவை என்ன???  பூச்சியம்,  பூச்சியம், பூச்சியதானே!

திரு சாணக்கியன் அவர்களே!  மக்களை வாழ விடுங்கள்....   
உங்களைப்போல்...பாட்டனின் சொத்துக்கள்  எமக்கில்லை...வெளி நாடுகளுக்குச் சென்று படிக்க வாய்ப்பில்லை...உழைக்காம வாழ பாட்டனின் சொத்துகளில்லை…

எம்மவர் இங்குதான் ...விவசாயம் செய்யதோ, மீன்பிடித்தோ ,அரச வேலைகளைப் பெற்றோ ,வியாபாரம் செய்தோ வாழவேண்டும் அதற்காக காணிவேண்டும், குளங்களை புணரமைக்க வேண்டும் சிறு நகரங்களையாவது உருவாக்கவேண்டும்...பாடசாலைகளை அபிவிருத்தி செய்து படிக்க வேண்டும் ...எமது மக்களின் காணிகள் காப்பாற்றப்படவேண்டும்...  எனவே வைக்கோல்  குவியலில் படுத்த நாய் போல் செயற்படாமல் செய்பவர்களை செய்ய விடுங்கள்.. மக்களை வாழவிடுங்கள்....

எமதுமக்கள் கடந்தகால அனுபவங்களை பாடமாகக் கொண்டு இவ்வாறான போலிகளை இனங்கண்டு செயற்படவேண்டும்.....

*நன்றி முகநூல் 
»»  (மேலும்)

11/21/2022

மாபியா முகவரா? மட்டக்களப்பு மக்களின் பிரதிநிதியா?


 

மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினரான ராஜபுத்திர  சாணக்கிய அடிக்கடி செய்யும்  ஐரோப்பிய பயணங்களின்போது ஆள்கடத்தும் ஏஜென்சி வேலை செய்து கோடிக்கணக்கில் உழைத்து வருகின்றார் எனும் திடுக்கிடும்  செய்திகள் வெளியாகிவருகின்றன. இன்று இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின்போதே மேற்படி தகவல்கள் பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களால் முன்வைக்கப்பட்டுள்ளது.

ராஜபுத்திர சாணக்கிய அண்மைக்காலங்களில் பல்வேறுவிதமான மேற்கத்தேய நாடுகளுக்கு அடிக்கடி சென்றுவருகின்றமை தெரிந்ததே. இதனடிப்படையில் முதல் சுற்றில் அவர் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுடன் இணைந்து பல நாடுகளுக்கு பயணம் செய்திருந்தார். 

அதன்பின்னர் கடந்த ஆறுமாதங்களுக்குள் மீண்டும் அவர் நான்கு நாடுகளுக்கு சென்று வந்துள்ளார். முதலில் சுவிஸ் நாட்டுக்கு சென்றுவந்த அவர் நாடுதிரும்பிய  ஒருசிலமாதங்களுக்குள் மீண்டும் கனடா சென்றுவந்தார். அவ்வேளையில் தன்னுடன் இணைத்து நான்கு இளைஞர்களை கனடாவுக்கு கூட்டி வந்து விட்டுச்சென்றுள்ளார் என்றும் அதற்காக  ஒரு ஆளுக்கு மூன்று கோடிரூபாய்வரை இவர் வசூலித்துள்ளார் என்னும்  தகவல்களும்  அப்போது கனடா வாழ் தமிழர்களிடையே பரவியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

அதேபோல கனடா பயணத்தின் பின்னர் ஒரு சிலமாத இடைவெளிக்குள் மீண்டும் பிருத்தானியா சென்ற  அவர் அங்கிருந்து பிரான்ஸ் நாட்டுக்கான இருநாள் பயணத்தை அவசரமாக மேற்கொண்டு திரும்பினார். 

இலங்கையிலுள்ள ஏனைய அரசியல் தலைவர்களும் வெளிநாடுகளுக்கு பயணம் செய்வதும் புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களை சந்தித்து அரசியல் கலந்துரையாடல்களை நடத்துவதும் வழமைதான். ஆனால் சாணக்கிய போன்று அடிக்கடி இத்தனை பயணங்களை மேற்கொண்டதாக  முடியவில்லை. 

நாட்டிலுள்ள மக்களுக்கு சேவைசெய்ய தெரிவானவர்களுக்கு அதை விடுத்து   அப்படியென்ன கடமைகள் இந்த வெளிநாட்டுப்பயணங்களால நிறைவேற்றப்படுகின்றன என்று தெரியவில்லை என்று சிந்திப்பவர்களுக்கு இப்போது விடை கிடைக்க ஆரம்பித்துள்ளது.




»»  (மேலும்)

11/13/2022

கல்வியாளர் லெனின் மதிவானம் மறைந்தார்


எழுத்தாளர், கல்வியாளர்,லெனின் மதிவாணம் இன்று. காலமானார்.   காசல்ரீயை பிறப்பிடமாக கொண்ட அவர், ஆசிரியராக, ஆசிரியர் கலாசாலை விரிவுரையாளராக,  இலங்கைக் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தில் உதவி ஆணையாளராக என்று பல பதவிகளை வகித்தார்.

அரசியல் இலக்கிய துறை சார்ந்த பல சிறந்த நூல்களையும் எழுதியுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக  நோய்த்தாக்கத்துக்கு உள்ளாகி இருந்த லெனின் மதிவானம் இன்று காலமானார்.

»»  (மேலும்)

11/06/2022

35 வது பெண்கள் சந்திப்பு - பரீஸ்


35  வது பெண்கள் சந்திப்பு கடந்த சனிக்கிழமை  29/10/2022 அன்று பாரிஸில் நடைபெற்றது.

இதில் புதிய முகங்களும், இளைய தலைமுறைப்பெண்களும் கலந்து கொண்டார்கள். இளைய தலைமுறைப் பெண்களின் வருகை  முக்கியமானது தேவையானதும் கூட.

ஆரம்ப உரையை விஜி நிகழ்த்தினார். அதைத்தொடர்ந்து சுய அறிமுகம் இடம்பெற்றது.

 பெண்ணுடல் மீதான சமூக வன்முறைகள் பற்றி விஜி  பேசினார். இதில் பெண்கள் ,ஆண்கள் என வேறுபடுத்திப் பார்ப்பது ,குழந்தை வளர்ப்பிலிருந்தே வேறுபாடு ஆரம்பிக்கப்படுகிறது என்பதனையும், பருவமடைந்த பெண்ணிடம் திணிக்கப்படும் கட்டுப்பாடுகள்,கல்யாணம், குழந்தைப் பேறுக்காக பெண்ணை உருவாக்கல், இன்னும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும் தெளிவுபடுத்தினார்.

 ஷாமிலா யூசுப் அலியின் நீயாகப் படரும் முற்றம் என்கின்ற கவிதைத்தொகுப்பைப் பற்றி வான்நிலா கவிதைகளை வாசித்தும், அக்கவிதைகளின் சாராம்சங்களையும் கூறியும் உரையாற்றினார்.

 நிறமில்லா மனிதர்கள் என்கிற பூங்கோதையின் சிறுகதை தொகுப்பு பற்றி செல்வி மிக தெளிவாக உரையாற்றினார்.கதைகள் நகரும் விதங்கள் பற்றியும் அழகாக விளக்கினார். 
அதனைத்தொடர்ந்து  ஸ்ரீ ரஞ்சினியின் 
 ஒன்றே வேறே சிறுகதை தொகுப்பு பற்றி சிவகுமாரி மிகவும் சிறப்பாகவும், கதைகளின் சிறப்புகள், அமைந்த விதங்களையும் அவரது உரையில் கூறினார்.

 தமிழ்க்கவியின் நரையான் 
பற்றி ஆனந்தியால் உரையாற்றப்பட்டது.
வெளிப்படையாக அவரது எழுத்துக்கள் பற்றியும் ஆனந்தியால் பகிரப்பட்டது.

இலங்கையின் அரசியல் பொருளாதார சிக்கலும் பெண்கள் மீதான தாக்கமும் பற்றி உமா ஷானிகாவின் உரை இடம்பெற்றது.

 உள்நாட்டு உற்பத்திக் குறைவு  அத்தோடு மலையக தொழிலாளர்களின் உடல் உழைப்பு சுரண்டப்படுகிறது. அதோடு விலைவாசி அதிகரிப்பு,போதுமானளவு  சம்பளம் இன்மை மற்றும் வளங்கள் பல இருந்தும் இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு பயன்படுத்தாது அவ்வளங்களை இறக்குமதிக்கு பயன்படுத்துவதால் பாதிக்கப்படுவது தொழிலார்களே என்றும், பொருளாதார நிலை பாதிக்கப்படுவதால் பாடசாலை பிள்ளைகள் பசியோசி போகும் அவலத்தினையும் விளக்கினார். தேயிலைத்தோட்ட தொழிலாளர்களின் பிரச்சனைகளை ஓடியோ மூலமும் போட்டுக்காட்டினார் .
வளங்களும் பாதிப்படைகிறது என்பதையும், அவரது உரையில் தெரிவித்தார்.
கிராஞ்சி இலவன்குடா மீனவர்களது பிரச்சனைகள் பற்றியும் தன் கருத்துக்களை பகிர்ந்தார். 

தொடர்ந்து மதிய உணவு .

ருக்ஷிக்யின்  தனி நடிப்பு இடம்பெற்றது. இதில் யுத்தத்தால் பாதிக்கக்கப்பட்டு மிகவும் வேதனையோடு  வாழும் பெண்ணின் நிலைமையை  முன்னிறுத்தி மிகவும் திறமையாக தன்  நடிப்பினை  வெளிப்படுத்தினார்.

 இளம்தலை முறையினர் எதிர்கொள்ளும் சமூக கலாச்சார முரண்பாடுகள் பற்றி இளம்தலைமுறையினரால் உரைகள், கருத்துக்கள் முன்னெடுக்கப்பட்டது .
  
வேர்ஜினி, அர்ச்சுனி,லறிஷா, குவேனி, நதி,மதுமிதா, மதி ஆகியோர் பங்கெடுத்தனர் . இரண்டு கலாச்சாரங்களை தாங்கள் சந்திப்பதாகவும்,அதில் வேறுபாடுகள் பல இருப்பதால் இரண்டையும் மதித்து பயணிப்பதாகவும் அதில் பல முரண்பாடுகளையும் சந்திப்பதாகவும் வேர்ஜினி கூறினார்.

சாதி பற்றிய விடயம் தமக்கு தெரியாமல் இருந்தாலும் பெற்றவர்கள் அதுபற்றி தமக்கு தெரியப்படுத்துவதாகவும் , வெளிநாட்டவர்களை பெருமையாக ஏற்றுக்கொள்கின்ற சில பெற்றோர் மனநிலை பற்றியும் அர்ச்சுனி கூறினார் .

 லறிஷா பிள்ளைகளிடம் வீட்டுச் சுமைகளை திணிப்பது, தங்கள் எதிர்பார்ப்புக்களை திணிப்பது , சமைப்பது பெண்ணுக்கு அவசியம் என்பது பற்றி சொல்லுவது , வெளியாட்களின் கேள்விகள் தங்களை மனதளவில் பாதிக்கும் எனவும் கூறினார். 

குவேனி தனதுரையில்  
தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்துவது,  அதாவது நிறங்களை வைத்து பிள்ளைகளை ஒப்பிடுவது, உடல் பருமன் பற்றி நேராகவே கூறுவது, பெண்பிள்ளைகள் கவனமாக இருக்கவேண்டும் என்றும் ஆண்  பிள்ளைகளை எதுவும் சொல்லாது வளர்ப்பதும்,உடைகள் அணிகின்ற விதத்தை வைத்து ஒருவரின் நடத்தையினை கணிப்பது போன்றவை பற்றி பேசினார். 

 ஆண் பிள்ளைகள் வளர்க்கப்படும் விதம் வேறுபடுவதால்  மனதைரியத்தின் அளவு  தங்களிடம் தானாகவே குறைக்கப்படுகிறது என்றும், உணவு விடயத்திலும் வேறுபாடு உண்டு என்பதையும் நதி தனதுரையில் கூறினார். 

 கேட்கப்படுகின்ற கேள்விகளுக்கும் நேர்த்தியாக பதில்களையும் வழங்கினார்கள்.  இவர்கள் பங்களிப்பு இந்த பெண்கள் சந்திப்புக்கு மிகவும் வலுச்சேர்த்ததாக அமைந்தது.

தேநீர் இடைவேளையை தொடர்ந்து புலம்பெயர்ந்த வாழ்க்கை சூழலில் பெண்களின் மனவுளைச்சலுக்கான காரணிகள் பற்றி இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் உரையாற்றினார் . அவரது உரையில்   எதனால் இப்பிரச்சனை ஏற்படுகிறது என்பதை உளவியலோடு ஒப்பிட்டு விளக்கினார் .

அதாவது  மனஉளைச்சல்,விவாகரத்து,
பொருளாதாரப் பிரச்சனை, உடல் தாக்குதல்,சொற்களால்  தாக்குதல்,   மெடிக்கல் பிரச்சனை
போன்றவையால் ஆசிய பெண்களே மனஉளைச்சலுக்கு அதிகளவில் உள்ளாகிறார்கள் எனவும். புலம் பெயர்ந்து வெளிநாட்டில் வசிக்கும் பெண்கள் குறுகிய காலத்தில் பலவகையாக பிரச்சனைகளுக்கு முகக்கொடுக்க வேண்டும் எனவும் ,அந்நிய நாட்டில் தனித்திருப்பதும் ,தகுதிக்கு ஏற்ற வேலை இல்லாதிருப்பது , விருப்பமில்லாத திருமணங்கள் ,அதிகளவு பொறுப்புக்கள்,இதுபோன்ற பல காரணங்களையும் கூறினார்.  வீடுகளில் எதிர்கொள்ளும் அவமானங்கள்,அச்சுறுத்தல்கள்   இதுபோன்ற பல காரணங்கள்  பற்றியும் அவர் உரையில் கூறினார் .

 இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் படைப்புலகமும் செயற்தளமும் பற்றி வனஜா எடுத்துரைத்தார்.

 சமூகப்பணி,பெண்கள் சந்திப்புகளின் தொடர்ச்சியான பங்களிப்பு,  மற்றும் இருபது  நூல்களை எழுதியும் இருக்கிறார்.இவையாவற்றையும் கருத்தில் கொண்டு 
இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் பூச்செண்டு கொடுத்து கௌரவிக்கப்பட்டார். 

இவர் எழுதிய நூல்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது.

பெண்கள் எழுதிய பல நூல்களும்  இங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. 
 
அடுத்து   நார்வேஜியக் கவிதைகளை உன்னத சங்கீதம் என்கிற  பானுபாரதியின்  மொழிபெயர்ப்பு கவிதைத் தொகுப்பு பற்றி தர்மினி உரையாற்றினார். இதில் மொழிபெயர்ப்பின்  அமைப்பு பற்றியும் வேறுமொழி கவிதைகளை வாசிக்கிறோம் என்கிற உணர்வு வாசிக்கும் போது ஏற்படவில்லை எனவும் சில கவிதைகளையும் அதில் உள்ளடக்கப்பட்டு இருக்கும் விடயங்களையும் தன் உரையில்  
நிகழ்த்தினார் .

  பிரமிளா பிரதீபனின் விரும்பித் தொலையுமொரு 
காடு என்கின்ற சிறுகதைத் தொகுப்பு பற்றி விஜி  உரையாற்றினார் .

 அனுபவப்பகிர்வுகள் , 
 36 வது பெண்கள் சந்திப்பை சுவிஸ்சர்லாந்தில் நடாத்துவதாகவும் முடிவெடுக்கப்பட்டது. 

விஜினது நன்றியுரையோடு பெண்கள் சந்திப்பு  நிறைவு பெற்றது .


*நன்றிகள் முகநூல்
வானிலா மகேஸ்வரன் 
»»  (மேலும்)