இலங்கையின் கிழக்கு மாகாண தொல்பொருள் மரபுரிமைகளை முகாமைத்துவம் செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி செயலணிக்கு, தமிழ் மற்றும் முஸ்லிம் உறுப்பினர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
கிழக்கு மாகாண தொல்பொருள் மரபுரிமைகளை முகாமைத்துவம் செய்வதற்காக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதலாம் தேதி ஜனாதிபதி செயலணியொன்று நியமிக்கப்பட்டது.
16 உறுப்பினர்களை கொண்டு அமைக்கப்பட்ட இந்த செயலணியில், தமிழ் மற்றும் முஸ்லிம் உறுப்பினர்கள் இடம்பிடிக்காமை பாரிய சர்ச்சையை தோற்றுவித்திருந்தது.
கிழக்கு மாகாணத்தில் தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்களவர்கள் என மூவின சமூகங்களும் வாழ்ந்து வரும் நிலையில், அந்த மாகாணத்தில் தமிழர்கள் மற்றும் சிங்களவர்களுக்கு சொந்தமான தொல்பொருள் சின்னங்கள் காணப்படுகின்றன.
எனினும், ஜனாதிபதியினால் 16 பேரை கொண்டு நியமிக்கப்பட்ட செயலணியில், தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் இடம்பிடிக்காமை பாரிய சர்ச்சையை தோற்றுவித்திருந்தது.
கிழக்கு மாகாணத்திலுள்ள தொல்பொருள் பெறுமதி வாய்ந்த இடங்களை அடையாளம் காணுதல், அடையாளம் காணப்படும் தொல்பொருள் பெறுமதி வாய்ந்த இடங்களை பாதுகாத்தல் மற்றும் மீள் நிர்மாணம் செய்து, அவற்றை முகாமைத்துவம் செய்வதற்கான நடைமுறைகளை பின்பற்றுதல், தொல்பொருள் பெறுமதி வாய்ந்த இடங்கள் காணப்படும் நிலங்களை அளவீடு செய்து, அவற்றை சட்ட ரீதியிலான இடங்களாக மாற்றுதல் உள்ளிட்ட விடயங்களை இந்த செயலணி செய்வுள்ளது.
இவ்வாறான எதிர்ப்புகள் வலுப்பெற்று வந்த பின்னணியில், சுமார் ஒரு வருடமும் ஐந்து மாதங்களும் கடந்த நிலையில், இந்த செயலணிக்குள் சிறுபான்மை சமூகத்தினர் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
இந்த செயலணியில் ஏற்கனவே இடம்பிடித்திருந்த நில அளவையாளர் நாயகம் டப்ளியூ.எம்.எஸ்.பீ.தென்னக்கோன், அரர சேவையிலிருந்து ஓய்வுப் பெற்ற நிலையில், அந்த வெற்றிடத்தை நிரம்பும் வகையில் புதிய நில அளவையாளர் நாயகம் ஆரியரத்ன திஸாநாயக்க செயலணிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், ஓய்வுப் பெற்ற மாகாண பிரதம செயலாளர் ஏ.பத்திநாதன், ஜனாதிபதி செயலணியின் தமிழ் உறுப்பினராகவும், விரிவுரையாளர் முபிசால் அபுபக்கர் செயலணியின் முஸ்லிம் உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் 24ம் தேதியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல், ஜனாதிபதி செயலாளர் பீ.பி.ஜயசுந்தரவினால் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், குறித்த செயலணியின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 18ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
0 commentaires :
Post a Comment