என்.ஐ.ஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட இலங்கை தமிழர் சற்குணன் விவகாரத்தில் சீமானின் தொடர்பு குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். `சற்குணன் மூலமாக சீமானுக்கு பெரும் நிதி வழங்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன,' என்கிறார் கே.எஸ்.அழகிரி.
லட்சத்தீவின் மினிக்காய் (Minicoy) கடற்கரையில் கடந்த மார்ச் மாதம் ஏ.கே 47 துப்பாக்கிகள், 1000 கிலோ தோட்டாக்கள், 300 கிலோ ஹெராயின் போதைப் பொருள் ஆகியவற்றை கடலோர காவல்படை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக தகவல் வெளியானது. இதுதொடர்பாக நடந்த விசாரணையின் முடிவில் இலங்கையைச் சேர்ந்த 6 பேர் மீது தேசிய புலனாய்வு முகமையின் அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்தனர். அந்த 6 பேர் அளித்த தகவலின்பேரில் இலங்கையை சேர்ந்த சற்குணன் என்கிற சபேசன் குறித்து தெரியவந்துள்ளது.
பாகிஸ்தான் நாட்டில் இருந்து இலங்கைக்கு போதைப் பொருள்களையும் ஆயுதங்களையும் கடத்தி விடுதலைப் புலிகள் அமைப்பை புதுப்பிக்கும் வேலைகளில் சற்குணன் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. சென்னை, வளசரவாக்கத்தில் தங்கியிருந்த சற்குணனின் வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் நடத்திய சோதனையில் பல்வேறு டிஜிட்டல் சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக, கடந்த 6ஆம் தேதி என்.ஐ.ஏ வெளியிட்ட செய்திக் குறிப்பில், ` அக்டோபர் 5 ஆம் தேதியன்று புலிகளின் உளவுப் பிரிவின் முன்னாள் உறுப்பினர் சற்குணன் என்கிற சபேசன் கைது செய்யப்பட்டார். அவர் பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு ஆயுதம் மற்றும் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டார். அதன்மூலம் கிடைத்த பணத்தை புலிகள் அமைப்பின் கட்டுமானத்துக்குப் பயன்படுத்தியதும் தெரியவந்துள்ளது. இந்தியாவில் புலிகள் அனுதாபிகளோடு அவர் சதிக் கூட்டங்களையும் ஏற்பாடு செய்துள்ளார்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 commentaires :
Post a Comment