தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் பணிக்குழு உறுப்பினரும் மகளீரணி தலைவியுமான திருமதி செல்வி மனோகர் அவர்கள் இன்று காலை மரணமடைந்தார்.
இவரது மரணம் குறித்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய கெளரவ சந்திரகாந்தன் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில்
கட்சியின் மூத்த தலைமைகளின் ஒருவராக இருந்து கட்சியை வளர்த்தெடுத்தமையில் செல்வி மனோகர் அவர்களின் பங்களிப்பு என்றும் எம்மால் மறக்க முடியாதது.
ஒரு கட்சியின் மகளீரணி செயற்பாடுகள் என்பதைத் தாண்டி பெண்களை அணிதிரட்டுவதிலும் அரசியல் மயப்படுத்துவதிலும் செல்வி அவர்களின் களப்பணிகளும் கடின உழைப்பும் என்றும் போற்றத்தக்கன.
வருடந்தோறும் இடம்பெறும் மகளீர்தின நிகழ்வுகளை மக்கள் மயப்படுத்தி கிழக்கிலங்கை பெண்களின் விடுதலை குரல்களை உலகறியச் செய்த அவரது அயராத பணியானது கனதிமிக்கது .
குறிப்பாக 'நல்லாட்சி' காலத்தில் எமது கட்சி எதிர்கொண்ட நெருக்கடிமிகுந்த சூழலில் கட்சியை பாதுகாப்பதில் அவர் காட்டிய பிரயத்தனங்கள் எமது கட்சியின் வரலாற்றில் என்றும் நினைவுகூரத்தக்கன.
செல்வியக்கா என்று எங்களனைவராலும் அன்பாக அழைக்கப்பட்ட செல்வி மனோகரனது இழப்பில் மீளாத்துயரில் உழலும் அவரது கணவர்,குழந்தைகள் உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவருக்கும் கட்சியின் மகளீரணியினர் மற்றும் உறுப்பினர்கள், தொண்டர்கள் அனைவருக்கும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் தலைமைப் பணிக்குழு சார்பில் எனது ஆழ்ந்த அனுதாபங்களை பகிர்ந்து கொள்வதோடு செல்வியக்காவுக்கு எனது கண்ணீர் அஞ்சலியை காணிக்கையாக்குகின்றேன். என்றும் தெரிவித்துள்ளார்.
0 commentaires :
Post a Comment