இலங்கை அரசியலில் – குறிப்பாக எனது ஊடக பணியில் இந்த ஓகஸ்ட் மாதம் முக்கியமான மறக்கமுடியாத மாதங்களில் ஒன்று.
#ஞாபகங்கள் 2005ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 12ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஒரு மாலைப்பொழுதில்தான் கொழும்பின் கறுவாக்காட்டுப் பகுதியில் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி மூதூரில் பிரான்ஸை சேர்ந்த தொண்டு நிறுவனமான அக்ஷன் பாம் (ACTION CONTRALA RAIM AGAINST HUNGER) என்ற நிறுவனத்தைச் சேர்ந்த 17, தொண்டர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
இதே 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 12ஆம் திகதி ஒரு சனிக்கிழமை இரவு 9.30 ஆளவில் கேதீஸ் என்று அழைக்கப்படும் அப்போதைய அரச சமாதான செயலகத்தின் பிரதிப் பணிப்பாளர் கேதீஸ்வரன் லோகநாதன் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இதே 2006ஆம் அண்டு ஓகஸ்ட் மாதம் 28ஆம் திகதி காலை 4.40அளவில் அலுவலகத்திற்கு எனது வாகனத்தில் புறப்பட்டு சென்ற வேளை நான் காணாமல் போனேன்.
சமூக வலைத்தளங்களில் வெளிவந்துகொண்டிருக்கும் முன்னைய சம்பவங்கள், என் வாழ்வில் கடந்து வந்த கரடு முரடான பக்கங்களின் ஞாபகங்களையும் மீண்டும் நினைவில் கொண்டு வருகின்றன. அவையே இந்தப் பதிவின் வெளிப்பாடு.
2005 ஓகஸ்ட்டில் லக்ஸ்மன் கதிர்காமர், அவரது வாசஸ்தலத்தில் நீச்சல் தடாகத்தில் ஸ்னைப்பர் தாக்குதலுக்கு உள்ளான ஒரு சில நிமிடங்களிலேயே அன்று நான் பணிபுரிந்த சூரியன் எவ்.எம்மின் செய்தியில் Breaking news ஆக ஒலிபரப்பினோம்.
வழமைபோல் நம் செய்திப்பிரிவே முதலில் இந்தத் தகவலை ஒலிபரப்பிய ஊடகங்களில் முன்னிலை வகித்தது. அன்று பணி முடிந்து நான் வீடு சென்ற சில மணித்தியாலங்களில் இந்த சம்பவம் குறித்து வந்த தொலைபேசி தகவல்களை உறுதிப்படுத்தி செய்தி வெளியிட்டோம். அது குறித்து மேலதிக தகவல்களை அறிவதற்கு நிறுவனத் தலைவரிடம் இருந்தும் எனக்கு அழைப்பு வந்தமை 16 வருடங்களின் பின் ஞாபகம் வருகிறது.
2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி மூதூரில் பிரான்ஸை சேர்ந்த தொண்டு நிறுவனமான அக்ஷன் பாம் (ACTION CONTRALA RAIM AGAINST HUNGER) என்ற நிறுவனத்தைச் சேர்ந்த 17, தொண்டர்கள் படுகொலை செய்யப்பட்டு 15, வருடங்கள் பூர்த்தியடைந்துள்ளன.
இந்தக் கொலை இடம்பெற்று ஒரு மிகக் குறுகிய நேரத்திலேயே சூரியன் எவ்.எம் செய்தியில் Breaking news வெளியானது.
அதுமட்டுமல்லாது அந்தப்பகுதியில் இருந்த ஒருவர் (பெயர் ஞாபகம் இல்லை) கடுமையான தாக்குதல்கள் தொடர்ந்த அந்த சூழலில், கையடக்கத் தொலைபேசிக்கான சிக்னல் குறைவாக இருந்த நிலையிலும், ஒரு கட்டடத்தின் கூரையில் இருந்து தந்த தகவல்கள் நேரடி ஒலிபரப்பாக கலையகத்தில் இருந்த அறிவிப்பாளருடன் (யார் என்பது நினைவில் இல்லை) இணைந்து நான் மேற்கொண்டிருந்தேன்.
ஆனால் ஒரு கட்டத்தில் இவ்வாறு கொல்லப்பட்ட ஆண்கள் பெண்களின் சடலங்கள் இருப்பதனை உறுதிப்படுத்தி இருந்தோம். ஆனால் அவர்கள் அக்ஷன் பாம் தொண்டு நிறுவன ஊழியர்கள் என்பது பின்பே தெரிய வந்தது. இந்த செய்தியும் சூரியன் எவ்.எம்மிலேயே முதலில் வெளிவந்தது.
இவ்வாறே 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 12ஆம் திகதி ஒரு சனிக்கிழமை இரவு 9.30 ஆளவில் அப்போதைய அரச சமாதான செயலகத்தின் பிரதிப் பணிப்பாளர் கேதீஸ் என்றழைக்கப்படும் கேதீஸ்வரன் லோகநாதன் சுட்டுக்கொல்லப்பட்டார்.
உடனடியாகவே தெஹிவளையில் இருந்து வந்த தகவல் ஒன்றி அடிப்படையில் இந்த தகவலை உறுதிப்படுத்த தெஹிவளை காவற்துறைக்கு அழைப்பெடுத்தேன். அவர்கள் துப்பாக்கிச் சூடு ஒன்று இம்பெற்றதை உறுதிப்படுத்தினார்கள் மேலதிக தகவல்களை தெரிவிக்கவில்லை. பின்னர் தெஹிவளையில் இருந்த சிங்கள, தமிழ் நண்பர்களிடம் மேலதிக தகவல்களை பெறக் கூடியதாக இருந்தது. அதத்துடன் அலுவலகத்தில் இருந்தும் இது குறித்து சிங்கள செய்திப்பிரிவும் கூடுதல் தகவல்களை பெற்ற்று இருந்தனர். இவை நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில் நான் நினைக்கிறேன் 9.45 – 10.00 மணிக்கு இடையில் சூரியனில் Breaking news ஆக ஒலிபரப்பினோம்.
எனக்கு கவலையை ஏற்படுத்திய மரணங்களுள் கேதீஸின் மரணமும் ஒன்று. இவரது மரணத்திற்கு சில வாரங்களுக்கு முன்புதான் எமது அலுவலகம் இருந்த உலக வர்த்தக மையத்தின் ஒரு மாடியில் இருந்த சமாதான செயலகத்தில் இவரைச் சந்தித்து இருந்தேன். அதன் பின் வானொலியில் ஒரு நேர்காணலையும் செய்திருந்தேன். புலமைசார் மட்டத்தில் அப்போது இருந்த புத்திஜீவிகளில் முக்கியமானவர்.
இவ்வாறான சம்பவங்கள் இலங்கையின் எப்பாகத்தில் இடம்பெற்றாலும், முதலில் சூரியன் செய்தியிலேயே Breaking news வரும் என்பது பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாக இருந்தது. இதனை இலங்கையின் ஊடக பரப்பினரும் அன்று அங்கீகரித்திருந்தனர்.
ஆனால் துர்ப்பாக்கியம் என்னவெனில் இதே 2006ஆம் அண்டு ஓகஸ்ட் மாதம் 28ஆம் திகதி காலை 4.40அளவில் அலுவலகத்திற்கு எனது வாகனத்தில் புறப்பட்டு சென்ற வேளை காணாமல் போன என் செய்தியையும் இதே சூரியன் எவ்.எம் செய்தியே முதலில் ஒலிபரப்பியது. அன்றைய காலை 6.45 ற்குரிய செய்தி ஆசிரியர் காணாமல் போனதை Breaking news ஆக காலையிலேயே ஒலிபரப்பாக்கி இருந்தனர்.
நன்றிகள்*முகநூல் நடராஜா குருபரன்
0 commentaires :
Post a Comment