இன்று ஆதிக்குடிகள் தினம். அதற்குப் பொருத்தமாக கனகசபாவதி சரவணபவன் எழுதிய கிழக்கின் பழங்குடிகள் (Tribes of the East) நுாலை நண்பர் சிராஜ் மஸ்ஹுர் அனுப்பியிருந்தார். அதனை நண்பர் கவிஞர் அலறி சேர்ப்பித்திருந்தார். கிழக்கு மாகாண ஆதிக்குடிகள் பற்றிய நுால். கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பழங்குடிகள், வேட்டையாடிகள், காப்பிரிகள் பற்றி உரையாடல்களாலான நுால்.
கிழக்கின் ஆதிக்குடிகள் (வேடர்கள்) பற்றி மூன்று தசாப்தங்களுக்கு முன் கலாநிதி சி.வி. தங்கராஜா பல ஆய்வுகளை செய்திருந்தார். கலாநிதி சி. ஜெயசங்கர் குழுவினர் கிழக்கு வேடர்களின் அரங்க, இலக்கியச் செயற்பாடுகளை வெளியுலகு அறியச் செய்ய பல்வேறு செயற்பாடுகளை செய்து வருகின்றார்கள். பேராசிரியர் கிருஸ்ணராஜா, கலாநிதி சி.வி. தங்கராஜா, நான் உட்பட நரிக்குறவர்களில் சில முன்னெடுப்புக்களைச் செய்திருந்தோம். இதனையும் பல்வேறு ஆய்வுச் செயற்பாடுகள் அதிகம் நடந்திருக்கலாம்.
நண்பர் கமல் பத்திநாதன் கிழக்கின் வேடுவர்கள் பற்றிய ஆய்வில் ஈடுபட்டு, அதனை நுாலுருவாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றார். இது உள்ளிருந்து தன் வரலாறு காணும் முயற்சி. என்னிடமும் சில, பல விடயங்களை அவ்வப்போது பரீட்சித்துக்கொள்வார்.
இதனைவிடவும், உதிரியாக பல்கலைக்கழக மாணவர்கள் ஆய்வுகளுக்காகவும், புள்ளிகளுக்காகவும் செய்த பல ஆய்வுகள் வெளிப்படுத்தப்படாமல் கறையான்கள் அரித்த கதைகளும் இருக்கின்றன.
உயிரியல் பல்வகைமையில், ஒரு முக்கியமான மட்டம், கலாச்சார பல்வகைமை. இது மனிதர்களின் காணப்படும் வாழ்க்கை முறைகளின் பல்வேறுபட்ட தன்மைகளுடன் சம்பந்தப்பட்டதுடன், பாரம்பரிய மனித குழுக்கள், பழங்குடிகள், அவர்களின் தாவர, விலங்கு, மருத்துவ, காலநிலை போன்ற பல்வேறு சுதேசிய அறிவுகளுடன் ஆராய்ந்து, அதனை பயனுள்ள முறையில் உபயோகிக்கின்றது.
கலாச்சார பல்வகைமை:
உலகில் 200 மில்லியன் பழங்குடி மக்கள் காணப்படுகின்றனர். உதாரணமாக அமேசன் காடுகளில் காணப்படும் மக்கள், அவுஸ்திரேலியாவிலுள்ள பழங்குடி மக்கள், இலங்கையிலுள்ள வேடர்கள். நாம் பழங்குடி மக்களை, அவர்களின் வாழ்க்கை முறைகளை உயிர்ப்பல்வகைமையின் ஒரு அங்கமாகவும் நோக்கலாம்.
உயிர்ப்பல்வகைமை போன்று, பழங்குடி மக்களும் அவர்களின் வாழ்க்கை முறையும் நவீன மனிதர்களின் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டுச் செல்கின்றன. உதாரணமாக அமேசன் பகுதியில் காணப்பட்ட 6 மில்லியன் பழங்குடி மக்களில், தற்போது 200,000 கும் குறைவானோரே எஞ்சியுள்ளனர். இலங்கையிலுள்ள வேடர்கள் சிங்களவர், தமிழரிடையே தன்மயமாக்கப்பட்டுள்ளனர். பூகோளமயமாதலின் விளைவாக உலகில் காணப்படும் 6000 மொழிகளில் அரைவாசி அடுத்த 100 வருடங்களில் அழிந்து விடலாம் என எதிர்வு கூறப்படுகிறது. பழங்குடி மக்களிடையே பாரம்பரியமாக உபயோகிக்கப்பட்டு வரும் பயிர்ச்செய்கை இனங்களும் இறக்குமதி செய்யப்பட்ட இனங்களால் அழிக்கப்படும் அபாயமும் உண்டு. எமது கிராமங்களில் பாரம்பரியமாக உபயோகிக்கப்பட்ட பயிரினங்கள், புதிய கூடிய விளைவுகளைக் கொடுக்கக் கூடிய பயிர்களிற்கு இழக்கப்பட்டு வருவதும், பல வகையான கோழி, ஆடுகள் போன்ற பண்ணை விலங்குகள் வர்த்தக ரீதியான இனங்களிற்கு இழக்கப்பட்டு வருவதும் நடைபெற்று வருகின்றன.
பழங்குடி மக்கள் முக்கியமாக உயிர்ப்பல்வகைமை கூடிய இடங்களிலேயே, அதாவது காடுகள் போன்ற இடங்களிலேயே காணப்படுகின்றனர். அதனால் தொன்று தொட்டு இவர்கள் உயிர்ப்பல்வகைமையுடன் சேர்ந்து வாழ்வதற்கு, அவற்றை அழிக்காமல் உபயோகிப்பதற்கான வழிமுறைகளை அறிந்தவர்கள். பழங்குடிமக்கள் பற்றிய அறிவு எமது தற்போதைய உயிர்ப்பல்வகைமையின் பாதுகாப்பு தேவைகளுக்கு முக்கியமானது.
உயிர்ப்பல்வகைமையை பேண்தகு முறையில் உபயோகிப்பதற்கான முறைகளை அவர்களிடமிருந்து நாம் அறிந்து கொள்ளலாம். உதாரணமாக, நாம் இருபதிற்கும் குறைந்த தாவரங்களையே உணவிற்காக பயன்படுத்துகிறோம். ஆனால் ஆபிரிக்கா நாட்டைச் சேர்ந்த Efe pygmies 100 க்கும் மேற்பட்ட தாவரங்களை உணவிற்காக பயன்படுத்துகின்றனர். ஒரு இனத்தில் காணப்படும் வான் வகை (wild strains) பல்வகைமை தன்மையின் அறிவு எமது பயிர்ச்செய்கை நடவடிக்கைகளிற்கு முக்கியமாகும்.
விஞ்ஞான முன்னேற்றமடைந்த மனிதன் கண்டுபிடிக்காத பல மருந்து வகைகள் பழங்குடி மக்களிடையே உபயோகத்திலுள்ளது. உதாரணமாக 3000 கும் மேற்பட்ட தாவரங்கள் கருத்தடைக்காக பழங்குடி மக்களிடையே பயன்படுத்தப்படுகிறது. நமது நாட்டில் காணப்படும் ஆயுர்வேத வைத்திய முறையில் பயன்படும் மூலிகைகளும் இதற்கு மற்றுமொரு உதாரணமாகும்.
இவை போன்ற பல்வேறு காரணங்களால் பழங்குடிகள் பாதுகாக்கப்பட வேண்டும். பழங்குடிகளை பாதுகாப்போம். அவர்களைப் போற்றுவோம்.
நன்றி முகநூல் *அம்ரிதா
0 commentaires :
Post a Comment