7/20/2021

படைத்தலின் கடவுளை ஆசிரியனென்பேன் - பிரின்ஸ் காசிநாதர் பிறந்த தினம்


The Great Prince Casinader - 
படைத்தலின் கடவுளை ஆசிரியனென்பேன் நான் 
******

நாளை எனது பேராசான் பிரின்ஸ் சேரின் 95 வது பிறந்ததினம். இன்று அவர் இல்லை. ஆனால் மனம் நனைந்துருகியபடி, அவரது நல்நினைவுகளில் மூழ்கித் திளைத்துக்கொண்டிருக்கிறேன். 

எனது பேராசான், எங்கள் பாடசாலையின் தனித்துவமான அதிபர். தலைசிறந்த ஆங்கில ஆசான். ஆங்கில இலக்கியத்தில் ஞானமிக்கவர். இலங்கையின் தனித்துவமான பேராளுமைகளில் ஒருவர். தனது 20களின்பின் எமது பாடசாலைக்கென்றே வாழ்ந்த சரித்திரம்.

“நீ ஒரு சமூகப் பிராணி எனவே, என்றும் சமூகத்திற்குப் பிரதியுபகாரமாய் இரு” என்னும் கருத்தியலை நெஞ்சிலறைந்த மனிதர்.

”நாமார்க்குங் குடியல்லோம் நமனையஞ்சோம்” என்பதற்கு அவர் உதாரணம். 

போர்க்காலத்தில் பிரசைகள் குழுத் தலைவராக இருந்தார். மாடுமேய்க்கச் சென்றிருந்த சில முஸ்லீம்களை விடுதலைப்புலிகள் செங்கலடிக் கறுத்தப் பாலத்திற்கு அப்பாலுள்ள வயல்வெளிக்குள் தடுத்து வைத்திருந்தனர். பேச்சுவார்த்தைகள் பயனளிக்கவில்லை.

கீறீஸ்தவப் பாடசாலை எனினும், 1960-1980 காலத்தில் தெற்கே பொத்துவிலில் இருந்து வடக்கே மூதூர்வரை முஸ்லீம் மாணவர்கள் பெருமளவில் எமது பாடசாலையிலும் விடுதியில் தங்கியிருந்து கல்விகற்க அனுமதித்தவர். 

மட்டக்களப்பில் வேறெந்த பாடசாலைக்கும் இல்லாத அப்பெருமைக்கு, கல்வியின் முக்கியத்துவம் உணர்ந்த அவரது விரிந்த சமூக தொலைநோக்குச் சிந்தனையே காரணம். 

அவரது கல்வி மற்றும் சமூகச்சேவையின் காரணமாக, முஸ்லீம் சமூகத்தினருக்கு அவரிடத்தில் பெரும் மரியாதையும் அன்பும் இன்றுமுண்டு.

ஊர்ப்பெரியவர்கள் விடயத்தினை அவருக்கு அறியத்தந்தனர். 

அந்நாட்களில் கிழக்கின் தளபதியாகவும் இராணுவத்திற்குச் சிம்ம சொப்பனமாகவும் இருந்தவர் விடுதலைப் புலிகளின் தளபதி கருணா. அவரையெதிர்த்து எதுவும் செய்யமுடியாதிருந்த காலம்.

கருணா இவரது மாணவர் என்பது பலர் அறியாத கதை. ஒரு வார்த்தையில் விடயத்தை முடித்துவிட்டிருக்கலாம். ஆனால் அதிகாரத்திற்கு மண்டியிடுவதில்லை என்ற காரணத்தினால் அவர் மேலிடத்துடன் தொடர்புகொள்ளவில்லை.

தனியே, அவரது பழைய Hondaவில் செங்கலடி கறுத்தப்பாலத்தைக் கடந்து சென்று, விசாரித்து, அவர்கள் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் இடத்தினை சென்றடைந்தபோது “சேர், ஏன் இங்கு வருகிறீர்கள். சொல்லியிருந்தால் நான் வந்திருப்பேனே” என்றபடி இடைநிலைத் தளபதியான இன்னுமொரு ஒரு பழைய மாணவன் வந்திருக்கிறான். 

வந்த விடயத்தை அறிவித்திருக்கிறார். ”மேலிட உத்தரவு. விடமுடியாது” எனப் பதில் கிடைத்தது.

”சரி… உன்ட மேலிடத்திக்கு பிரின்ஸ் சேர் இந்த ஆக்களோடதான் திரும்பிப்போவார். இல்லாட்டி இங்கதான் இருப்பார் என்று சொல்” என்றுவிட்டு அங்கு உட்கார்ந்துகொண்டாராம்.

காலைநேரம் முற்பகலாகி, மதியமாகி, மாலையாகி இரவானது.

கிழக்கு மாகாணம் மட்டுமல்ல முழு இலங்கையின் இராணுவத்தையும், அரசாங்கத்தையும் நடுங்கவைத்த தளபதியினால் ஆசானின் நல்லலெண்ணத்தினைக் கடந்து அதிகாரம் செய்ய முடியவில்லை. 
அனைவரும் விடுவிக்கப்பட்டனர். 

அன்றொருநாள் இக்கதையை அவர் சொல்லி முடித்தபின் ”சஞ்சயன், மனிதநேயத்திற்காக உயிரையும் விடலாம். எவருக்கும் அஞ்சவேண்டியதில்லை” என்றார்.

***

1977 என்று நினைக்கிறேன். ராஜன் செல்வநாயகம் மட்டக்களப்பின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலம். அவர் எமது பாடசாலைக்கு ஒரு கட்டடம் கட்டிக்கொடுத்துக்கொண்டிருந்தார். 

ஒரு நாள் அதிபரின் அனுமதியின்றி பாடசாலைக்குள் வந்த அவர், கட்டடத் தொழிலாளிகளிடம் நேரடியாச் சென்று மேற்பார்வை செய்தார்.

”மிஸ்டர் ராஜன் செல்வநாயகம்” என்று ஒலித்தது கடுமையான குரல். 

”இது எனது பாடசாலை. என் அனுமதியின்றி உள்ளே நுழைய முடியாது என்றார். 

”மன்னியுங்கள் சேர்” என்றுவிட்டு இடத்தை விட்டு அகன்றார் ராஜன் செல்வநாயகம். அதன்பின் அலுவலக வாசலில் நின்று அனுமதி பெற்ற பின்பே உள்ளே வரத்தெடங்கினார் ராஜன் செல்வநாயகம். 

***

ஆசான், ஆங்கில மொழி வழியில் எமது பாடசாலையிலேயே கற்றவர். அவரது கடைசி அதிபர் ஆங்கிலேயரான Rev. Cartmen. 

பல ஆண்டுகள் மட்டக்களப்பிற்குச் சேவையாற்றியவர். இவர் தனது வயதான காலத்தில் ஒரு முறை மட்டக்களப்பிற்கு வந்திருந்தார். அன்று புளியந்தீவு கண்ட ஊர்வலமும் பாடசாலை கண்ட கொண்டாட்டமும் சரித்திர நிகழ்வுகள். அதை ஒழுங்கு செய்வதவர் வேறு யாராக இருக்க முடியும்?

மட்டக்களப்பில் போட்டியிட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியின் அமிர்தலிங்கத்தினை தேர்தலில் வென்று (அப்படித்தான் நினைவிருக்கிறது) 1990களில் இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினரானார்.

இவரது ஆங்கிலப் புலமையையும் பேச்சுத் திறனின் காரணமாக இவர் பாராளுமன்றத்தின் பேச்சாளராக நியமிக்கப்பட்டார். 

பாராளுமன்றத்தின் குழுவொன்று இங்கிலாந்து செல்கிறது. இவரும் செல்கிறார். 

அங்கு, தனது அதிபரைத் தேடிக்கண்டுபிடித்து, நாளை மாலை அவரைச் சந்திக்க வருவதாக ஒப்பந்தம் செய்துகொள்கிறார். 

மறுநாள் காலை, இங்கிலாந்தின் பாராளுமன்றத்தினர் இலங்கையிலிருந்து சென்ற குழுவினரை தேனீர் விருந்திற்கு அழைக்கின்றனர். இவர் இலங்கைப் பாராளுமன்றப் பேச்சாளர். எனவே நீங்கள் கட்டாயம் சமூகமளிக்கவேண்டும் என இங்கிலாந்தின் பாராளுமன்றத்தினர் அறிவிக்கின்றனர்.
 
சற்றேனும் சலனப்படாது, ”மன்னிக்கவேண்டும், நாளை நான் எனது ஆசானைச் சந்திப்பதாக ஒப்பந்தம் செய்திருக்கிறேன். என்றால் வரமுடியாது” என்றாராம். 

அவரை ஆண்டாண்டுக் காலம் அறிந்தவர்களுக்கு இதுவென்றும் ஆச்சர்யமான செய்தியல்ல. அவரது நேரம் தவறாமை, வாக்கு மீறாமை ஆகியவை அவரது அடிப்படைக் குணங்கள். 

என்னிடமும் அவரது சில குணங்கள் உண்டு. என்னால் ஒப்பந்தம் செய்யப்பட்ட நேரம் தவறுகிறது என்றால் நான் பதறி அந்தரித்து, அசௌகரீயப்பட்டு, வெட்கப்படுவேன். இதற்கு ஆசானின் வழிவந்தமையன்றி வேறெதுவும் காரணமாக இருக்க முடியாது.

2018 மார்கழி மாதம் அவரைத் தோள்சுமந்து வழியனுப்பியிருந்தாலும், இன்றும் மனமெங்கும் நல்நினைவுகள் சுரக்கும் மனிதரவர்.

வாழ்வின் வழியெங்கும் நல்லாசான்கள் கிடைக்கும் வரம்பெற்றவன் நான். ஆனால், என்னால் வலியுணர்ந்த ஆசானொருவரும் இருக்கிறார். வாழ்வுக் காலத்தில் சீர்செய்ய முடியாத பழியும் சோகமும் அது. அதீத விலைகொடுத்துக்கொண்டு கற்ற பாடம். வாழ்வென்பது கற்றலுக்கானது அல்லவா?

நன்றிகள் முகநூல்
செ.சஞ்சயன்

0 commentaires :

Post a Comment