கடந்த பத்தாண்டுகளுக்கு முன்னர் வட ஆபிரிக்க-மத்திய கிழக்கு நாடுகளில் பல அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டன. நீண்டகால ஆட்சியாளர்களை தூக்கிவீசி புதிய தலைமைகள் உருவாகின. இந்த மாற்றங்களுக்கு "அரபின் வசந்தம்" என்று அரசியல் வானில் பெயரிடப்பட்டது. குடும்ப,மற்றும் சர்வாதிகார ஆட்சிகளை மாற்றியமைத்து புதிய தலைமைகளை உருவாக்குவதே சிறந்தது என்றும், அதுவே ஜனநாயகம்,மக்களாட்சி என்றெல்லாம் பாரிய நம்பிக்கைகள் விதைக்கப்பட்டன. லிபியாவில் கடாபி போன்ற தேசிய தலைமைகள் மக்களின் பெயரால் ஆயுதக்குழுக்களால் கொன்றொழிக்கப்பட்டன.
ஆனால் அனைத்து எதிர்பார்ப்புக்கு மாறாக இந்த மாற்றங்கள் இன்று தோல்வியில் முடிவடைந்துள்ளன. ஜனநாயகம் என்னும் பெயரில் இந்த நாடுகளின் அரசியல் ஸ்திரத்தன்மை தொடருகின்றது.
துனீசியாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்ததால், பிரதமரைப் பதவி நீக்கம் செய்த அதிபர் நாடாளுமன்றத்தையும் முடக்கினார்.
பொருளாதாரம் மற்றும் சமூக கொந்தளிப்பு காரணமாக நாட்டில் ஏற்கனவே அமைதியின்மை நிலவி வந்த நிலையில், கோவிட் தொற்றை அரசு சரியாகக் கையாளவில்லை என்ற மக்களின் கோபம் போராட்டத்திற்கு வழிவகுத்தது.
2019ல் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் கைஸ் சையத், இனி ஆட்சியை தான் கவனித்துக்கொள்ளப்போவதாக அறிவித்துள்ளார்.
அவரது ஆதரவாளர்கள் இதைக் கொண்டாடினாலும், அதிபர் கைஸ் சையத் ஆட்சிக்கவிழ்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.அரபு பிராந்தியம் முழுக்க நடந்த அரபு வசந்த போராட்டத்திற்கு, 2011-ம் துனீசியாவில் தொடங்கிய புரட்சியே காரணம் என அடிக்கடி கூறப்படுவதுண்டு. ஆனால், இது அந்த நாட்டில் பொருளாதார ரீதியாகவோ அல்லது அரசியல் ரீதியாகவோ ஸ்திரத்தன்மைக்கு வழிவகுக்கவில்லை.
இது நாடுகளின் தோல்வியல்ல. ஐரோப்பிய அரசியல் வழிமுறைகளை உலகின் எந்த மூலை முடுக்குகளுக்கும் பொருத்தலாம் என்கின்ற சிந்தனை முறையின் தோல்வியேயாகும்.
0 commentaires :
Post a Comment