சுமந்திரனின் ஒப்புதல் வாக்குமூலம்!
தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மதியாபரணம் ஏப்ரகாம் சுமந்திரன் இன்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் அளவுக்கு அதிகமான முறையில் சீன எதிர்ப்பு வாந்தி எடுத்திருக்கிறார்.
சீனாவில் ஜனநாயகமோ மனித உரிமைகளோ இல்லையென்றும், அங்கு ஒரு கட்சி சர்வாதிகார ஆட்சி நடைபெறுகிறது என்றும் சொன்ன சுமந்திரன், ஜெனிவா ஐ.நா. மனித உரிமைப் பேரவைக் கூட்டங்களில் சீனா தொடர்ந்தும் இலங்கை அரசாங்கத்துக்கு ஆதரவு அளித்து வருவதால் சீனா இலங்கையில் செல்வாக்குப் பெறுவதை தமிழ் மக்கள் விரும்பவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார். (எந்தத் தமிழ் மக்களை இவர் குறிப்பிடுகிறாரோ தெரியவில்லை)
அத்துடன் இந்தியாதான் தமிழ் மக்களுக்கு உதவுகிறது என்றும் தெரிவித்த சுமந்திரன், எனவே தாங்கள் இந்தியாவுடன் சேர்ந்து வேலை செய்வதாகவும் கூறியதுடன், ஜனநாயகத்தை மதிக்கும் நாடுகள் (அதாவது மேற்கு நாடுகள்) இலங்கையில் வந்து வேலை செய்ய வேண்டும் எனவும் அழைப்பு விடுத்திருக்கிறார். சுமந்திரன் தெரிவித்த இந்த சீன விரோத, இந்திய மற்றும் மேற்குலகம் சார்ந்த கருத்துக்கள் அவரது தனிப்பட்ட கருத்தாக இருக்க முடியாது. அது அவர் சார்ந்திருக்கும் தமிழரசுக் கட்சி மற்றும் தமிழ் தேசியக் கூடடமைப்பின் கருத்தாகவே கொள்ள வேண்டும்.
சுமந்திரனின் இந்தக் கருத்துகளையிட்டு ஆச்சரியப்பட ஏதும் இல்லை. ஏனெனில் தமிழரசுக் கட்சி உருவான காலம் தொடக்கம் அது சீன விரோத, சோசலிஸ விரோதக் கருத்துகளையே கொண்டிருந்து வந்திருக்கிறது. தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் எஸ்.ஜே.வி.செல்வநாயகத்துக்கு மார்க்சிஸ மறற்றும் சோசலிஸக் கருத்துகள் அறவே பிடிக்காது என செல்வநாயகத்தின் மருமகன் காலஞ்சென்ற பேராசிரியர் ஏ.ஜே.வில்ஸன் தனது கட்டுரையொன்றில் பகிரங்கமாகவே குறிப்பிட்டிருக்கிறார்.
சுமந்திரனின் இந்தக் கருத்துகளுக்கு மாஓவின் பின்வரும் மேற்கோளை பதிலாகக் குறிப்பிடலாம்.
'எதிரி எதை ஆதரிக்கிறானோ அதை நாம் எதிர்க்க வேண்டும். எதிரி எதை எதிர்க்கிறானோ அதை நாம் ஆதரிக்க வேண்டும்'.
0 commentaires :
Post a Comment