1970 இல் பதவிக்கு வந்த இடதுசாரிகளை கூட்டாகக் கொண்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சி அரசு நவீனகல்வி முறையில் உருவாகிய பல்கலைக்கழக வாய்ப்புகளை இலங்கையின் சகல பிரசைகளும் சமமாக பெற்றுக்கொள்வதற்கு ஏதுவாக உருவாக்கியதே கல்விதரப்படுத்தல் சட்டமாகும். அக்காலங்களில் இலங்கையின் சனத்தொகையில் 5 சதவீதத்துக்கும் வீதமாக இருந்த யாழ் வேளாள மத்தியதர வர்க்கத்தினர் மருத்துவ, பொறியியல் துறைகளில் 40-50 வீதமான பல்கலைக்கழக வாய்ப்புக்களை பெற்றுக்கொண்டிருந்தனர். இந்நிலையானது 1900 ஆண்டுகளில் சென்னை மாகாணத்தில் இருந்த பார்ப்பனர்களின் நிலைக்கு ஒப்பானது. எப்படி சிறுபான்மையான பார்ப்பனர்கள் பல்கலைக்கழக அரச பதவிகளில் அபரீதமாக ஆதிக்கம் செலுத்தினாரோ அதேபோலத்தான் யாழ்-வேளாள மேட்டுக்குடிகள் இலங்கையில் ஆதிக்கத்தில் இருந்தனர். இந்நிலைமையானது மிக சிறுபான்மையான ஏழை சிங்கள மக்களிடையே பெரும் விசனத்தை உருவாக்கியிருந்தது. இந்த யாழ்ப்பாண மத்தியதர வர்க்கத்தினரை தமிழர்களாகப் பார்த்த சிறிலங்கா சுதந்திரக்கட்சி அரசு இன அடிப்படையில் ஆரம்பத்தில் தரப்படுத்தலைக் கொண்டு வந்தது. ஆனால் அது இனவாத பார்வை என்று விமர்சனங்கள் எழுந்தபோது சிங்களப் பகுதிகளில் கொழும்பு, கம்பகா போன்ற மாவட்டங்களும் இப்படி அதிகவாய்ப்புகளை பெற்று வருவது கவனத்தில் கொள்ளப்பட்டது. எனவே இனத்தின் அடிப்படையில் இருந்த தரப்படுத்தலுக்கான அளவுகோலை 1974ல் இனவாரியாகவோ மொழிவாரியாக அன்றி மாவட்ட அடிப்படையில் மாற்றியது.அதாவது கல்விக்கான வசதி வாய்ப்புகளை அதிகம் கொண்டிராத மாவட்டங்களை பின்தங்கிய மாவட்டங்களாக அறிவித்து அப்பகுதி மாணவர்களுக்கு ஒதுக்கீடுகளை நிர்ணயித்தது. அத்தோடு அந்த அரசு கொண்டிருந்த இனவாத அணுகுமுறை முடிந்துபோனது.
இதனுடாக உண்மையிலேயே யாழ்-வேளாள மேட்டுக்குடிகளைப்போல சிங்களப்பகுதிகளிலும் இருந்த கொவிகம மேட்டுக்குடிகள் வைத்திருந்த கல்வி,உத்தியோக ஆதிக்கங்கள் முடிவுக்கு வந்தன. யாழ்ப்பாணம், கொழும்பு,கம்பஹா போன்ற பகுதிகளில் இருந்த சாதிய ரீதியாக மேலோங்கியிருந்த மத்தியதர வர்க்கத்தினர் அதுவரை காலமும் பல்கலைக்கழக வாய்ப்புகளில் அபகரித்து வந்த இடங்கள் மட்டுப்படுத்தப்பட்டது.
இந்த மட்டுப்படுத்தபட்ட வாய்ப்புகள் ஊடாக பெறப்பட்ட இடங்கள் கல்விபெறும் வசதிகளில் பின்தங்கியிருந்த தென் மாகாணம், கிழக்கு மாகாணம் போன்ற பகுதிகளுக்கு வழங்கப்பட்டது. வடமாகாணத்திலும் கூட யாழ்ப்பாணத்துக்கு வெளியே இருந்த முல்லைத்தீவு, மன்னார், வவுனியா போன்ற மாவட்ட ஏழை மாணவர்கள் ஓரளவேயாயினும் பட்டதாரிகள் ஆகும் வாய்ப்பை இந்த தரப்படுத்தல் சட்டமே வழங்கியது.
இதே வேளை யாழ்ப்பாணத்துக்கு வெளியே ஆசிரியர்களாக கடமை புரிந்துவந்த யாழ் மேட்டுக்குடி உத்தியோகத்தர்கள் தமது பரம்பரையினரை மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை, அம்பாறை, மட்டக்களப்பு போன்ற பகுதிககளில் உள்ள பாடசாலைகளில் பதியச் செய்து அங்கே பரீட்சை எடுக்க வைத்து தாம் இழந்து போன வாய்ப்புகளை மீண்டும் பெற்றுக் கொண்டனர். ஏழ்மையான மாவட்டங்களுக்கு இலங்கை அரசாங்கம் வழங்கிய ஒதுக்கீடுகளின் ஊடாக கிடைக்கப் பெற்ற பல்கலைக்கழக இடங்கள் யாழ்ப்பாண வேளாள மேட்டுக்குடிகளால் களவாடப்பட்ட உண்மைகள் வெட்கத்துக்குரியன.
எது எப்படி இருந்த போதும் தமிழரசு கட்சியின் தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியினர் மோசமான முறையில் இந்த தரப்படுத்தலைப் பற்றிய எதிர் பிரச்சாரங்களை தொடருவதை கைவிடவில்லை. யாழ்ப்பாண வேளாள மேட்டுக்குடிகள் தாம் அடைந்த பாதிப்புகளை தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி என கூக்குரலிட்டனர். அதேவேளை இந்தத் தரப்படுத்தல் காலம் வரை யாழ்பாணம் தவிர்ந்த மற்றைய தமிழ் மாவட்டங்களில் ஆரம்பக்கல்வி வசதியற்றும், பல்கலைக்கழக வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்ள போதிய தராதரங்களைப் பெறமுடியாத நிலையிலும் ஏழ்மை காரணமாக பின்தங்கியிருந்த மாணவர்களை இட்டு ஒருபோதும் தமிழ் அரசியல்வாதிகள் கவலைப்பட்டது கிடையாது. எப்படி இலவச கல்வியை எல்லோருக்கும் வழங்க கூடாது என்று ஜி.ஜி.பொன்னம்பலம் போன்ற ஆதிக்க தலைமைகள் வெள்ளையரிடம் முறையிட்டனரோ அதேபோல இந்த மேட்டுக்குடிகள் வடமாகாணத்தில் தாழ்த்தப்பட்ட தலித் மாணவர்கள் கல்வி கற்பதற்கு தடைவிதித்து சமூக நெருக்கடிகளை கொடுத்துக்கொண்டேயிருந்தனர். அவர்களுக்கான கல்விபெறும் வாய்ப்புகள் அதிகரிக்கப்பட வேண்டும் என இவர்கள் ஒருபோதும் கோரியதில்லை.
ஏனைய தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் அக்கறை இன்றி கவனம் கொள்ள மறுத்த யாழ்ப்பாண வேளாள தலைமையும் தனக்கு ஏற்பட்ட இழப்புகள் குறித்து மட்டுமே அழுதுபுலம்பியது. தனது நலன்களை காக்க கிழக்கு மாவட்டங்களின் மாணவர்களுக்குரிய உயர்கல்வி வாய்ப்புகளை தொடர்ந்தும் யாழ்ப்பாணத்துக்கு தாரைவார்க்கக் கோரியதாகவே இந்தத் தரப்படுத்தலுக்கெதிரான கூக்குரல் இருந்தது. இதையே தமிழீழம் கேட்பதற்கான பிரதான காரணம் என தமிழர் விடுதலைக் கூட்டணியினர் பிரச்சாரப்படுத்தினர். அப்படியென்றால் தமிழர்விடுதலைக்கூட்டணியினர் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகவா அல்லது யாழ்ப்பாணத்தின் பிரதிநிதிகளாகவா இருந்தனர் என்பதை நாம் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும்.
யாழ்ப்பாண வேளாள மேட்டுக்குடிகள் தொடர்ந்து கிழக்குமாகாண மாணவர்களின் பல்கலைக்கழக வாய்ப்புகளை தம்மிடம் மட்டுமே தக்கவைப்பதற்காக அர்தமற்ற கோரிக்கையை முன்வைத்து தரப்படுத்தலுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்தனர். இந்த சட்டத்தின் பெயரிலேயே தமிழீழக் கோரிக்கையை முன்வைத்தனர். ஆனால் விளக்கமற்றுக் கிடந்த கிழக்கு மாகாண மக்களும் தமிழர்விடுதலைக் கூட்டணி பித்தர்களும் அன்று தமிழீழத்தை ஆதரித்தனர். தமது பரம்பரையினர் முதன்முதலாக பட்டம் பெறும் வாய்ப்புகளை வழங்கிய சிங்கள அரசுக்கு எதிராக யாழ்ப்பாண வேளாள மேட்டுக்குடிகளுடன் இணைந்து போராட்டக்களத்தில் குதித்தனர். அன்றைய கிழக்கு மாகாணத்தின் அறியாமையை என்னவென்று சொல்வது. அது ஒரு அற்புதமான மடத்தனம். ஆனால் இன்றைய கிழக்கின் நிலை வேறு.
0 commentaires :
Post a Comment