5/03/2021

இந்திய மாநில தேர்தல் முடிவுகள்

இந்திய மாநிலத் தேர்தல் முடிவுகள்


இந்தியாவின் 5 மாநிலங்களான தமிழ்நாடு, மேற்கு வங்காளம், கேரளா, அசாம், பாண்டிச்சேரி ஆகியவற்றுக்கு நடைபெற்ற சட்டசபைத் தேர்தல்களில் தேர்தலுக்கு முந்திய கருத்துக் கணிப்புக்கள் தெரிவித்தபடியே முடிவுகள் அமைந்துள்ளன.

இந்த 5 மாநிலங்களில் அசாமில் மட்டுமே மத்தியில் ஆளும் பா.ஜ.க. மீண்டும் தனது ஆட்சியைத் தக்க வைக்க முடிந்துள்ளது. மேற்கு வங்கத்திலும் இம்முறை வெற்றி பெற்றுவிட வேண்டும் என்ற நோக்கத்தில் பா.ஜ.க. வரிந்து கட்டிக்கொண்டு வேலை செய்தபோதிலும், அதனால் ஒரு குறிப்பிடத்தக்களவு தொகுதிகளைக்கூடப் பெற முடியவில்லை. தமிழ்நாடு மற்றும் கேரளா போலவே மேற்கு வங்கமும் தேசிய உணர்விலும் முற்போக்கு சிந்தனையிலும் ஊறித்திளைத்த ஒரு மாநிலம் என்றபடியால் தீவிர மதச்சார்பும், அமெரிக்க சார்பும், கோப்பரேட்டுகளுக்கான ஆதரவும் கொண்ட பா.ஜ.க.வால் அங்கு வெற்றிபெற முடியவில்லை.

பா.ஜ.க.வால் மேற்கு வங்கம், கேரளா, தமிழநாடு ஆகிய மூன்று மாநிலங்களிலும் ஒரு குறிப்பிட்ட அளவுக்குத்தன்னும் வெற்றிபெற முடியாமல் போனமைக்கு இன்னொரு காரணம் இந்த மூன்று மாநிலங்களும் ஒப்பீட்டு வகையில் இந்தியாவிலேயே கல்வி கற்றவர்கள் அதிகம் வாழும் மாநிலங்களாகும்.

அத்துடன், மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு கொவிட் - 19 தொற்றுக்கெதிராக காத்திரமான நடவடிக்கை எடுக்கத் தவறியமையும், டில்லியில் போராடும் விவசாயிகளை ஊதாசீனப்படுத்தி வருவதும், இந்தி மொழியைத் திணிக்க முயல்வதும், மாநிலங்களின் அதிகாரங்களைப் பறிக்க முயல்வதும், பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மாநிலங்களைப் புறக்கணிப்பதும், மதச் சிறுபான்மையினர் மீதான ஒடுக்குமுறையும் பா.ஜ.க.வை மக்கள் நிராகரித்தமைக்கான ஏனைய காரணங்களாகும்.

கேரளாவைப் பொறுத்தவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது முன்னணி அமோக வெற்றி பெற்று தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் ஆட்சியைப் பிடித்து 40 வருட பாரம்பரியத்தை முறியடித்துள்ளது. அல்லது வழமையாக இடது முன்னணியும் காங்கிரஸ் கட்சி தலைமையிலான முன்னணியுமே அங்கு மாறி மாறி ஆட்சிக்கு வருவது வழமை. முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான இடது முன்னணி அரசு மேற்கொண்ட மக்கள் சார்பு நடவடிக்கைகளுக்கான ஒரு அங்கீகாரமாகவே இதைப் பார்க்கலாம்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 10 வருடங்களின் பின்னர் கருணாநிதி இல்லாத தி.மு.க. அவரது மகன் ஸ்டாலின் தலைமையில் அமோக வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. முன்னர் ஆட்சியில் இருந்த அ.தி.மு.கவின் செயல் தினற்ற, ஊழல் மிகுந்த ஆட்சியில் மக்கள் வெறுப்புக் கொண்டிருந்ததும், இம்முறை தேர்தலில் அது மதச்சார்புள்ள பா.ஜ.க. உடன் அமைத்துப் போட்டியிட்டதுமே அ.தி.மு.க.வின் தோல்விக்கான பிரதான காரணங்களாகும்.

அதேநேரத்தில் ஸ்டாலின் தலைமையில் அமையப்போகும் தி.மு.க. ஆட்சி கவனத்தில் எடுக்க வேண்டிய முக்கியமான விடயம் ஒன்றும் உள்ளது. கடந்த காலங்களில் கருணாநிதியின் தலைமையில் இருந்த தி.மு.க. ஆட்சிகள் ஊழல் மிகுந்தவை என்ற அபிப்பிராயம் தமிழக மக்கள் மத்தியிலே உண்டு. எனவே இம்முறை மக்கள் தந்த அங்கீகாரம் முற்றுமுழுதாக தி.மு.க. மேல் ஏற்பட்ட பாசத்தினாலும் நம்பிக்கையாலும் ஏற்பட்டது அல்ல, அது அ.தி.மு.க. ஆட்சி மீது ஏற்பட்ட வெறுப்பினால் என்பதை ஆட்சி அமைக்க இருக்கும் தி.மு.க. தலைமை கவனத்தில் எடுத்து மக்களுக்கு ஊழலற்ற நல்லாட்சியை வழங்குவதில் கவனமாக இருப்பது முக்கியமானது.

மொத்தத்தில் இந்த 5 மாநிலத் தேர்தல் முடிவுகளும் பா.ஜ.க.வுக்கு ஒரு பின்னடைவு என்ற போதிலும், அதன் தலைமையிலான வலதுசாரி பாசிஸ சக்திகள் இன்னமும் பலமாகவே இருக்கின்றன என்ற யதார்த்தத்தையும் கவனத்தில் கொள்வது அவசியம்.

நன்றிகள் தோழர் மணியம்

0 commentaires :

Post a Comment