5/12/2021

மட்டக்களப்பில் பொலிவு பெறும் பொதுசன நூலகம்


ஒரு நாட்டின் சமூக, பொருளாதார, அரசியல் வளர்ச்சியானது அந்நாட்டு மக்களின் அறிவு வளர்ச்சியிலேயே பெரிதும் தங்கியுள்ளது. தான் பெற்ற கல்வியின் பாற்பட்டும், அதன் உதவியுடன் பெற்றுக்கொள்ளும் பல்துறை அறிவுசார் விழிப்புணர்வின் பாற்பட்டும் அறிவுபூர்வமாகச் சிந்திக்கும் ஒரு சமுதாயத்தைக் கொண்டுள்ள ஒரு நாகரீகமுள்ள நாட்டிலே மனிதநேயம் படைத்த மக்களைக் காணமுடியும். அதனைக் கருத்திற்கொண்டே அரசாங்கங்கள் தமது கல்வித்துறையில் கூடுதல் முதலீட்டைச் செய்கின்றன. பாடசாலை, பல்கலைக்கழகக் கல்விக்கும் அப்பால் மக்களின் அறிவை வளர்க்கும் சமூக அறிவியல் நிறுவனங்களாக நூலகங்கள் இயங்குகின்றன.  

ஒரு நூலகத்தின் மதிப்பீடு அதன் வடிவமைப்பினாலும், விசாலமான தோற்றத்தினாலும் மாத்திரம் மேற்கொள்ளப்படுவதில்லை. அதன் அறிவியல் சேர்க்கைகளையும், அந்த நூலகத்தில் பாதுகாக்கப்படும் பெறுமதிவாய்ந்த ஆவணங்களையும், நூலக அங்கத்தினர்களின் வழியாக வழங்கப்படும் சமூகத்துக்கான சேவைகளையும் வைத்தே அந்த நூலகத்தின் மதிப்பு உய்த்துணரப்படுகின்றது.  

மட்டக்களப்புப் பொது நூலகம் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 18 நூலகங்களுள், முதலாம் தரத்திலுள்ள (Library Grade -I) ஒரேயொரு நூலகமாகும். மண்முனை வடக்கு பிரதேசத்தில் இந்த நூலகம் இயங்குகின்றது. 

மற்றைய பதினேழு நூலகங்களும் மூன்றாம் தரத்தில் (Library Grade -III) இயங்குபவையாகும். இவை முறையே கீழ்க்கண்ட பிரதேச செயலகங்களின் நிர்வாகங்களின் கீழ் இயங்குகின்றன. 

பிரதேச செயலகப் பிரிவு, ஊர்ப்பெயர், நூலகங்களின் எண்ணிக்கை       

மண்முனை மேற்கு, வவுணதீவு – 1 

மண்முனைப்பற்று, ஆரையம்பதி – 1 

மண்முனை தெற்கு/ எருவில் பற்று, களுவாஞ்சிக்குடி – 2 

காத்தான்குடி, காத்தான்குடி – 1 

போரதீவுப் பற்று, வெல்லாவெளி – 3 

ஏறாவூர்பற்று, செங்கல்லடி – 1 

ஏறாவூர் நகரம், ஏறாவூர் – 1 

கோறளைப்பற்று, வாழைச்சேனை – 2 

கோறளைப்பற்று தெற்கு, கிரான் – 1 

கோறளைப்பற்று வடக்கு, வாகரை – 1 

கோறளைப்பற்று மத்தி, கோரளைப்பற்று மத்தி – 1 

கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி – 1 

மண்முனை தென்மேற்கு, பட்டிப்பளை – 1 

மட்டக்களப்பு பொதுநூலகம் 1855இல் டச்சுக்காரர்களின் ஆட்சியின் போது புதினப் பத்திரிகைகள் வாசிப்பறையாக ஆரம்பிக்கப்பட்டது. அது பின்னர் ஒரு பொது நூலகமாகப் பரிணாம வளர்ச்சிபெற்றமை 1884-ஆம் ஆண்டிலாகும். உள்ளூர் சபையொன்றினால் நிர்வகிக்கப்பட்டுவந்த இச்சிறிய நூலகம், 1933இல் நகர சபைக்கு (Urban Council) கையளிக்கப்பட்டது. பின்னர் 1967 முதல் இதன் நிர்வாகத்தை மட்டக்களப்பு மாநகரசபை பொறுப்பேற்றுக் கொண்டது.  

இன்று மட்டக்களப்பு பொது நூலகம் பல்வேறு தரங்களிலான பன்னிரண்டு கிளைகளுடன் செயற்பட்டு வருகின்றது. கல்லடி, புதூர் ஆகிய இரண்டு கிளைகளும் தரம் மூன்று நூலகர்களைக் கொண்டு நிர்வகிக்கப்படுகின்றன. பார் வீதி, சின்ன ஊரணி, நாவற்குடா, எல்லை வீதி, பாரதி ஒழுங்கை, இருதயபுரம், மட்டிக்களி ஆகிய ஏழு கிளைகளும் சஞ்சிகைகளும், புதினப் பத்திரிகைகளும் கொண்ட வாசிகசாலைகளாக இயங்குகின்றன. இவற்றின் மேற்பார்வை, பராமரிப்பினை மேற்கொள்ள நூலக உதவியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். புதினப் பத்திரிகைகள் மாத்திரம் கொண்ட வாசிக சாலைகளாக மஞ்சந்தொடுவாய், கொக்குவில், ஜயந்திபுரம் ஆகிய மூன்று கிளைகளும் இயங்குகின்றன.  

முன் ஒரு காலகட்டத்தில் மட்டக்களப்பின் மூதறிஞர்கள் பலரின் இதயத்துக்கு நெருக்கமாகவிருந்து சுமார் 83,700 நூல்களுடன் சுறுசுறுப்பாக இயங்கிய நூலகமே மட்டக்களப்பு பொது நூலகமாகும். பெறுமதியான பல நூல்களையும் சோதிட, மாந்திரீக ஏடுகளையும் பல நாட்டாரியல் கையெழுத்துப் பிரதிகளையும் தன்னகத்தே அது கொண்டிருந்தது. பெரு வெள்ளம், கிழக்கின் சூறாவளி, சுனாமி ஆகிய அநர்த்தங்களின்போது பல ஆவணங்களை படிப்படியாக இழந்து,  நலிந்து வந்த இந்நூலக கட்டிடம் போர்க் காலத்தில், இந்திய இராணுவம், இலங்கை இராணுவம் ஆகியவற்றின் ஆக்கிரமிப்புக்கும் உட்பட்டு தனது சேர்க்கைகளை மேலும் இழந்து, இன்று வெறும் 27000 நூல்களுடன் இயங்கிவருகின்றது.  

2009இல் கிழக்கு மாகாண அரசின் முதல்வராக திரு.சி.சந்திரகாந்தன் (பிள்ளையான்) அவர்களிருந்த காலத்தில்  மட்டக்களப்பு பொது நூலகத்தை புதிதாகக் கட்டியெழுப்பப்படும் திட்டத்தின்படி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. 2015இல் அவரது கைதின் பின்னரான காலகட்டத்தில் கட்டிட வேலைகள் அரசியல் மற்றும் நிதிப் பிரச்சினைகளின் காரணமாக ஸ்தம்பிதமாயின. பின்னர் 2018இல் கட்டடப் பணிகளை மீளத்தொடங்குவதற்கான கபினட் அங்கீகாரம் பாராளுமன்றத்தில் பெறப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போதைய ஆட்சிக்காலத்தில் பாராளுமன்றத் தேர்தலின் வெற்றியுடன் திரு.சி.சந்திரகாந்தன் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினரான கையோடு, கட்டிட வேலைகள் மீளவும் முழுவீச்சுடன் தொடங்கப்பெற்றுள்ளன. முன்னர் திட்டமிடப்பட்டிருந்த ஒற்றைத்தள கட்டிட நிர்மாண அமைப்பிலிருந்து, மேலதிகமாக ஒரு தளத்தைச் சேர்த்து மாடிக்கட்டிடமாகவும், அதற்கு மேலாக ஒரு குவிமாடக் கட்டமைப்பை கொண்டதாகவும் யாழ்ப்பாணப் பொது நூலகத்தை நினைவூட்டும் வகையில் விசாலமான பரப்பளவில் அது கட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இதனால்  நூலகத்தின் பயன்பாட்டுக்கான தளப் பரப்பு இரு மடங்காக உயர்வடைந்துள்ளது. அந்த வீதத்தில் எதிர்காலத்தில் ஆளணி நிர்வாகம், நூலீட்டல்,சேவை முனையங்கள் என்பனவும் மீளக் கணக்கிடல் வேண்டும்.  

இந்நிலையிலேயே இந்நூலகத்தின் கட்டுமானத்திற்குச் சமாந்தரமாக அதன் உட்கட்டமைப்பைப் பற்றியும் அதற்குத் தேவைப்படும் முக்கிய நூலக சேர்க்கைகள், தளபாடங்கள், ஆளணி பற்றியும் பல்வேறு பிரிவுகளின் உருவாக்கம் பற்றிய விழிப்புணர்வினை எமது சமூகத்தில் ஏற்படுத்தக்கூடிய வகையில் ஒரு பருந்துப் பார்வையை வழங்கும் நோக்கிலேயே இக்கட்டுரைத் தொடர் எழுதப்படுகின்றது.  

தற்போதுள்ள நூலகத்தின் ஆளணி, நூற்சேர்க்கை, சேவை முனையங்கள் ஆகியவற்றை விட ஆகக்குறைந்தது ஐந்து மடங்கு அதிகரிப்பை புதிய நூலகம் கோரி நிற்கின்றது என்பதை இந்நூலகக் கட்டமைப்புடன் தொடர்புகொண்டுள்ள அனைத்து அதிகாரிகளும் அறிவார்கள். இப்பொழுதே இவை பற்றிய புரிதல் இன்றேல், கட்டிடம் கட்டி முடித்த பின்னர் அதற்கான வளங்களை உடனடியாகப் பெற்றுக்கொள்வதில் பாரிய சிக்கல்கள், கால தாமதங்கள் ஏற்படலாம். எனவே மட்டக்களப்பு பொது நூலக ஊழியர்கள் தொடக்கம், அவர்களை வழிநடத்தும் உயர் அதிகாரிகள் வரை இவ்விடயத்தில் இப்பொழுதே கரிசனை கொள்ளவேண்டியவர்களாக உள்ளனர்.  

முதலில் நாம் கவனிக்கவேண்டிய அம்சம், எமது நூலகச் சேர்க்கைகளை வளர்த்துக்கொள்வதாகும். நூலக நியமங்களுக்கேற்ப தளப்பரப்பின் விகிதாசாரத்தில் அதில் கொள்ளக்கூடிய நூல்தட்டுகளின் நீளத்தை கணக்கிடமுடியும். இதற்கான தகவல் உதவிகளை இலங்கைத் தேசிய நூலகத்திடமிருந்து பெற்றுக்கொள்ளமுடியும். உத்தேசமாக புதிய நூலகத்தின் தளப் பரப்பளவு யாழ்ப்பாணப் பொது நூலகத்தின் தளப் பரப்பளவினை அண்ணளவாகக் கொண்டதாக இருக்கலாம் என்ற உத்தேசத்தில் நாம் இரண்டு லட்சம் நூல்களை ஆகக்குறைந்த அளவில் முழுமைபெற்ற மட்டக்களப்பு பொது நூலகத்தின் இரு தளங்களும் கொண்டிருக்கும் என மதிப்பிடலாம்.  

IFLAவின் பொது நூலக நியமத்தின்படி ஒரு குறித்த பிரதேசத்தின் சனத்தொகை மதிப்பீட்டின் அடிப்படையில் ஒரு நபருக்கு மூன்று நூல்கள் என்ற கணிப்பின்படி நூல்கள் ஈட்டப்பட்டிருத்தல் வேண்டும். 68 சதுர கி.மீ. பரப்பளவுள்ள மட்டக்களப்பு மாநகரசபைப் பிரதேசத்திலுள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை 63914. மேலும் 20 வட்டாரங்களைக் கொண்ட இப்பிரதேசத்தில் 18 வயதுக்குட்பட்ட இளையோரை நான் சேர்க்கவில்லை. அதற்காக 35 சதவிதத்தை (உத்தேசமாகவேனும்) சேர்த்தால் எண்ணிக்கை 2237ஆல் அதிகரித்து அப்பிரதேசத்தின் உத்தேச சனத்தொகை 66151 ஆக அதிகரிக்கும். பெரும்பாலான பொது நூலகங்களைப் போலவே, இந்நூலகத்தினதும் கட்டிடவேலைகள் முதல் தளத்தில் பூர்த்தியானதும் பழைய நூலகத்தை அக்கட்டிடத்திற்கு மாற்றி அங்கேயே இயங்கச்செய்யும் சூழ்நிலையும் உருவாகக்கூடும். அத்தகைய சந்தர்ப்பத்தில் குறைந்தபட்சம் ஒரு லட்சம் நூல்களாவது முதலில் தேவைப்படும். இந்நூல்களின் வகைப்பிரிப்பு பற்றி பின்னர் ஒரு இயலில் விரிவாக ஆராயப்படவுள்ளது. 

340 மில்லியன் ரூபா செலவில் புதிய நூலகம் கட்டப்பட்டு வருகின்றது. இதற்கான நிதி ஒதுக்கீட்டை மட்டக்களப்பு மாநகரசபையுடன் இணைந்து மாகாண அரசும், உள்ளூராட்சி அமைச்சும் பொறுப்பெற்றுள்ளன. இப்பாரிய செலவினத்துக்கு நியாயம் வழங்கும் வகையில் நூலகத்தின் அங்கத்தவர்களும், நூலகத்தின் பரவலான சேவைத்திட்டங்களும் விரிவுபடுத்தப்படவேண்டும். சனத்தொகை வீதத்தின் படி மட்டக்களப்பு பொது நூலக அங்கத்தவர்கள் எண்ணிக்கை தற்போது மிகக்குறைவாகும். வாசிகசாலையைப் பயன்படுத்துவோரையும், தமது பாடநூல்களை வாசிப்பறைகளில் வைத்துப் படிக்கவரும் மாணவர்களையும் இக்கணக்கெடுப்புக்குள் சேர்க்கமுடியாது. இன்றைய நிலையில் நூலக அங்கத்தவர்களாகப் பதிவுசெய்யப்பட்டவர்கள் 1425 பேர் வரையில் உள்ளனர். இந்த எண்ணிக்கை விரைவில் அதிகரிக்கப்படவேண்டும். இன்றைய நிலையில் மாநகரத்தின் 66 பேருக்கு ஒரு நூலக அங்கத்தவர் என்ற வீதத்திலேயே நூலகத்தில் இணைந்துகொண்டுள்ளனர்.  

மட்டக்களப்பு பொது நூலகத்தில், அண்மைக் காலங்களில் வாசிப்பு மாதம், நூலக மாதம் என குறிப்பிட்ட காலங்களில் அங்கத்துவர்கள் சலுகை அடிப்படையில் இலவசமாக இணைத்துக்கொள்வதான செய்திகளை வாசிக்க முடிந்தது. இது ஒரு நல்ல வரவேற்பைப் பெறும் முயற்சியாகும். இவ்வாறான மேலும் பல செயற்திட்டங்களை நூலக ஊழியர்கள்,நூலகத்தின் வளர்ச்சிக்குப் பொறுப்பான நிர்வாக அதிகாரிகளுடன் இணைந்து தொடர்ந்தும் முன்னெடுக்கவேண்டும். இப்பிரதேசத்திலுள்ள பாடசாலைகளை அணுகி அங்குள்ள மாணவர்கள், ஆசிரியர்களிடையே நூலக விழிப்புணர்வினை ஊட்டும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ளலாம்.  

நூலீட்டல் 

அங்கத்தவரை வரவைப்பதற்கு மிக முக்கியமான செயற்பாடு நூலகத்தின் சேர்க்கைகளை அதிகரித்துக்கொள்வதாகும். பொதுவாக நூலகத்தின் நூலீட்டல் (Acquisition) என்று குறிப்பிடும் போதெல்லாம் நூல்கொள்வனவு என்ற செயற்பாட்டைச் சுற்றியே சிந்தனை வலம்வருவதை அவதானிக்கமுடிகின்றது. அதற்கான நிதிவருவாயை தேடும் எண்ணமே அதிகாரிகளிடம் மேலோங்குகின்றது. இது தவறான எண்ணமாகும். நூலீட்டல் என்பது நூல்களை விலைகொடுத்து வாங்கிச் சேர்ப்பது தான் என்பதாகாது. ஒரு நூலகத்தின் அரிய பொக்கிஷங்களை பணத்தால் மாத்திரம் வாங்கிக் குவித்துவிட முடியாது. புத்தகசாலைகளில் இறாக்கைகளில் உள்ள நூல்களை மாத்திரம் அவ்வப்போது கொள்வனவு செய்வது மாத்திரமே நூலீட்டலாகிவிடாது. வழக்கொழிந்துபோன பழையதும் அரியதுமான நூல்களை அங்கே காணமுடியாது. அதற்கான சிறப்பு வழிமுறைகளைக் கையாண்டு நூலீட்டல் பணிகளை முன்னெடுக்கவேண்டும்.  

முன்னைய காலங்களில் ஒரு பிரதேசத்தின் அறிஞர் ஒருவர் தனது வாழ்நாள் சேகரிப்புகளை தான் அதிகம் புழங்கிய, இதயத்துக்கு நெருக்கமான பொது நூலகத்திற்கு வழங்கிவிட்டு மறைந்துவிடுவார். அந்த நூலகத்தினர் அவரது சேகரிப்புகளை தனியானதொரு அலுமாரியில் அடுக்கி வைத்து இது அமரர் இன்னாரின் சேகரிப்பு என்ற குறிப்புடன் நூலகக் கட்டிடத்தின் வரவேற்பறையில் அல்லது கட்டட மூலைகளில் வைத்துவிடுவார்கள். அன்று அது நூலகங்களுக்குப் பெருமை தருவதாகக் கணிக்கப்பட்டது. உண்மையில் இத்தகைய கொடையாளர்களை காலம் நூலக வரலாற்றில் பதிந்துகொண்டே செல்கின்றது. யாழ்ப்பாணப் பொது நூலகத்தில்கூட 1981இல் எரியூட்டப்படுவதற்கு முன்னர் இத்தகைய அலுமாரிகள் பல ஆங்காங்கே காணப்பட்டிருந்தன.  

பின்னாளில் நூலகச் சிந்தனையில் ஒரு புரட்சிகர மாற்றம் ஏற்படுத்தப்பட்டது. எவருக்கும் பயன்படுத்த முடியாதவாறு, பொதுவான பகுப்பாக்கம் பட்டியலாக்கம் என்ற தொழில்நுட்பங்களுக்கு உட்படுத்தப்படாது பூட்டிய அலுமாரிகளில் ஒரு பிரமுகரின் நினைவினை மாத்திரம் சுமந்தபடி பெருமை பேசிக்கொண்டிருக்கும் நிலைமையை இல்லாதொழிக்கும் வகையில் தனிப்பட்ட சேகரிப்புகளுக்கு பொது நூலகங்களில் இடம் வழங்கும் முறை இல்லாதொழிக்கப்பட்டது. இப்போது ஒருவரின் தனிப்பட்ட சேகரிப்புகள் பொதுநூலகத்தை அடையும்போது, அதனை வழங்குநருடன் ஒரு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுகின்றது. அதாவது பிரமுகரின் தனிப்பட்ட நூற்சேர்க்கையை கையளித்ததும் அதில் தமது நூலகத்தில் இல்லாத நூல்களை மாத்திரம் ஏற்றுக்கொண்டு அதற்கான ஏற்புக்கடிதம் ஒன்றினை நூலக நிர்வாகத்தினரால் வழங்குவதெனவும், எஞ்சியவற்றை பிற நூலகக் கிளைகளிடையே அல்லது பிற பிராந்திய நூலகங்களிடையே பகிர்ந்தளிப்பதெனவும் அதற்கு அன்பளிப்பவர் ஒப்புதல் வழங்குவதாகவும் ஒப்பந்தமொன்று கைச்சாத்தாகும். அதற்கு உடன்படாத பிரமுகர்களின் நூல்கள் நூலகத்தில் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை.  

இத்தகைய சேகரிப்புகளின் வாயிலாகவும் மட்டக்களப்பு பொது நூலகத்தின் நூற்சேர்க்கைகளை வளர்த்துக்கொள்ளமுடியும். அப்பிரதேசத்திலுள்ள தனிப்பட்ட நூற்சேர்க்கையாளர்களை அணுகி அவர்களது நூல்களை நூலகத்திற்குப் பெற்றுக் கொள்ளமுடியும். 2010இல் அம்பாறை மாவட்டத்தில் அக்கரைப்பற்று பிரதேசத்தில் ஆலையடி வேம்பு என்ற ஊரில் வீரகேசரி பிராந்திய அலவலக நிருபராகவிருந்த திரு சிவப்பிரகாசம் அவர்களின் இல்லத்தில் ஏராளமான அரிய நூல்களை சேகரித்து வைத்திருந்ததை கண்டு அதிசயித்ததேன். இவ்வாறே அமரர் எப்.எக்ஸ்.சி.நடராஜா, தோற்றாத்தீவு ஈழத்துப் பூராடனார், செ.குணரத்தினம், பெராசிரியர் சி.மௌனகுரு எனப் பல அறிவு ஜீவிகளின் தனிப்பட்ட சேகரிப்புகளும் இறுதியில் உரிமையாளர்கள் விரும்பும் நூலகங்களை சென்றடைந்திருக்கும் அல்லது எதிர்காலத்தில் சென்றடையும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன. இவர்களைப் போல பலரும் பின்னாளில் தமது சேகரிப்பகளை வரலாற்று முக்கியத்துவமான மட்டக்களப்பு பொது நூலகத்தின் வளர்ச்சிக்காக கொடுத்த உதவுவார்கள் என்று நம்பகின்றேன். அண்மையில் தென்னிந்திய திரைப்பட பிரமுகர் பாலு மகேந்திரா அவர்களின் மறைவின் பின்னர் அவரது சேகரிப்பிலிருந்த ஆயிரக்கணக்கான திரைப்பட டீவீடீகளும் நூல்களும் கிளிநொச்சியில் அவரது பெயரில் அமைக்கப்பட்ட நூலகமொன்றுக்கு வழங்கப்பட்டுள்ளது.  

யாழ்ப்பாண நூலகம் 1934இல் க.மு.செல்லப்பா என்ற தனிமனிதரின் 844 நூல்களுடனும் 30 பருவ வெளியீடுகளுடனும் ஆரம்பிக்கப்பட்டதே என்பது வரலாறு. ஒவ்வொரு பொது நூலகமும் இத்தகைய நூல் சேர்க்கைகளின் கூட்டு முயற்சியால் தான் வளர்த்தெடுக்கப்பட்டுள்ளதென்பது வரலாறு. சிறிய எண்ணிக்கையிலான நூல்களைக் கொண்டியங்கும் மட்டக்களப்பு பொது நூலகத்திற்கு பெரும்பாலும் ஒரு அன்பளிப்பாளரின் தனிப்பட்ட சேகரிப்புகளில் உள்ள நூல்களில் அதிகம் தவிர்க்கவேண்டிய தேவை இருக்காது.  

ஒரு நூலக இறாக்கையில் நூலைப் பேணுவதென்பது செலவுக்குரிய விடயமாகும். இது கண்ணுக்குப் புலப்படுவதில்லை. பிரித்தானிய நூலகங்களில் நூலகத் தட்டொன்றில் ஒரு நூல் இருப்பதற்காக ஆண்டொன்றுக்கு மூன்று பவுண்கள் பராமரிப்புக்கென செலவாகின்றன என்று அறிக்கையொன்று கூறுகின்றது. மேலதிக பிரதிகளை நூலகத் தட்டுகளில் பராமரிப்பது வீண்செலவு என்பதை இன்றைய  நூலகர்கள் நன்றே உணர்ந்திருக்கிறார்கள். இன்று இலங்கையில் உள்ள பல பிரபல்யமான நூலகங்கள் தங்கள் நூற்சேர்க்கைகளில் காணப்படும் மேலதிகமான நூல்களை (ஒரு நூலின் இரண்டுக்கு மேற்பட்ட பிரதிகளை கழித்துவிடுகிறார்கள்) பொதுவாக தனியாகச் சேகரித்து வைத்து அவர்களை நாடிவரும் பிற சிறிய நூலகங்களுக்கும் சனசமூக நிலைய நூலகங்களுக்கும் அவற்றை அன்பளிப்பாக வழங்கிவருகிறார்கள். அந்த நூல்களை இலவசமாகவே அவர்கள் வழங்குகின்றபோதிலும், அங்கிருந்து அவற்றை மட்டக்களப்பு பொது நூலகத்திற்கு எடுப்பிப்பதற்கான போக்குவரத்துச் செலவினை மட்டக்களப்பு மாநகரசபையினரே பொறுப்பேற்கவேண்டியிருக்கும். இன்றைய நிலையில் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகம், கொழும்பு மாநகரசபை நூலகம், யாழ்ப்பாணப் பொது நூலகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகம் என்பவற்றை மாநகரசபை நூலகர் நேரில் அணுகி, நூல்களை தேர்வுசெய்து பெற்று, நூலகத்தின் சேர்க்கையினை குறைந்த பணச்செலவுடன் வளர்த்துக்கொள்ளமுடியும். 

நூலீட்டலில் மற்றுமொரு வழிமுறை புலம்பெயர்ந்த தமிழ் மக்களிடம், தமிழ் வாசகர் வட்டங்களிடம் தமது நூலகத்தில் இல்லாததும் தமக்கு வேண்டியதுமான நூல் தலைப்புகளை பட்டியலிட்டு வழங்கி அவர்கள் மூலம் கொள்வனவு செய்து அன்பளிப்பாகப் பெற்றுக்கொள்வதாகும். இன்று உலகெங்கும் புலம்பெயர்ந்து வாழும் கிழக்கின் மைந்தர்களை மட்டக்களப்பு மாநகரசபையினர் நேரடியாக அணுகி அவர்களின் மூலம் அன்பளிப்பாக நூல்களைப் பெற்றுக்கொள்ளலாம். இதற்கு முன்னோடியாக நூலகர் தமக்கென்றொரு விருப்புத் தேர்வுப் பட்டியலொன்றினை தயாரித்துக்கொள்ள வேண்டும். இத்தகைய தயாரிப்புக்குத் தேவையான ஆதார நூல்களாக ஈழத்தின் தமிழ் நூல்களுக்கான பதிவாவணமாகத் திகழும் ‘நூல்தேட்டம்’ தொகுதிகளிலிருந்து தமக்குத் தேவையான ஈழத்து நூல்களைத் தேர்வு செய்யலாம். 15 தொகுதிகளில் 15000 ஈழத்துத் தமிழ் நூல்களை நூல்தேட்டம் குறிப்புரையுடன் பதிவுசெய்து வைத்திருக்கிறது. மேலும் குமரன் பதிப்பகம், பூபாலசிங்கம் புத்தகசாலை, சேமமடு புத்தக சாலை போன்ற பிரபல நூல் வெளியீட்டு விற்பனை நிறுவனங்களின் புத்தகப் பட்டியல்களையும், இணையத்தள விலைப்பட்டியல்களையும் பார்வையிட்டு முன்கூட்டியே நூலகத்தில் இல்லாத நூல்களை பட்டியலிட்டு தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும். இப்பட்டியலில் நூலின் தலைப்பு, ஆசிரியர், வெளியிட்ட நிறுவனம், வெளியிட்ட ஆண்டு, விலை ஆகிய தகவல்களைக் குறித்துவரவேண்டும். தேவை ஏற்படும்போது இப்பட்டியலில் உள்ள நூல்களை அன்பளிப்பாளர்களின் மூலம் கொள்வனவுசெய்து பெற்றுக்கொள்ளலாம்.  

நூலீட்டலில் மற்றுமொறு வழிமுறையாகக் கருதப்படுவது மட்டக்களப்பு பொதுநூலகத்தின் வளர்ச்சித் திட்டங்களை சுருக்கமாகக் குறிப்பிட்டு ஒரு சிறு கைநூலொன்றையும் நிதியுதவிகோரும் கடிதமொன்றையும் அச்சிட்டு மின்நூலாகவோ சிறு பிரசுரமாக அச்சிட்டோ, பொதுமக்களுக்கு வழங்கி அவர்களின் மூலம் தமது உறவுகளை மட்டக்களப்பு பொது நூலக வளர்ச்சிக்குப் பங்களிப்புச் செய்யும் வண்ணம் கேட்கலாம்.  

சமூக ஊடகங்களில் மட்டக்களப்பு பொது நூலக நண்பர்கள் வட்டம் என்ற ஒன்றினை நிறுவி, நூலக அபிவிருத்திக் குழு, நூலக ஆலோசனைக் குழு ஆகியவற்றின் பங்கேற்புடன் மட்டக்களப்பு பொதுநூலக அபிவிருத்தி தெடர்பான செய்திகளைத் தெரிவிக்கும் அதே வேளையில் நூலீட்டலுக்கான ஆதரவை உலகத்தமிழர்களிடம் இணைய வழியில் கோரலாம். 

0 commentaires :

Post a Comment