5/18/2021

மறைந்துவிட்ட கரிசல் காட்டு எழுத்தாளர்


தமிழின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான கி. ராஜநாராயணன் காலமானார். அவருக்கு வயது 98. புதுச்சேரியில் வசித்துவந்த அவர், மூப்பின் காரணமாக திங்கட்கிழமை இரவு உயிரிழந்தார்.

உடல்நலக் குறைவு ஏற்பட்டு கடந்த சில நாட்களாக வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்த கி. ராஜநாராயணன், நேற்று இரவு (மே 17-ம் தேதி) சுமார் 11:30 மணியளவில் காலமானார்.

கோபல்ல கிராமம், கோபல்ல கிராமத்து மக்கள், அந்தமான் நாயக்கர் ஆகிய நாவல்களை எழுதிய கி.ரா. 'கரிசல் இலக்கியத்தின் தந்தை' என அழைக்கப்படுகிறார்.

கி. ராஜநாராயணனின் முழுப்பெயர், ராயங்குல ஸ்ரீ கிருஷ்ண ராஜ நாராயணப் பெருமாள் ராமானுஜ நாயக்கர். 1923-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16-ம் தேதி ஸ்ரீகிருஷ்ண ராமானுஜம், லட்சுமி அம்மாள் தம்பதியரின் ஐந்தாவது பிள்ளையாக கோவில்பட்டி அருகில் உள்ள இடைச்செவல் கிராமத்தில் பிறந்தார் கி.ரா..

கரிசல்வட்டார அகராதி என மக்கள் பேசும் மொழிக்கென ஓர் அகராதியை உருவாக்கினார் கி.ரா. சாகித்ய அகாதெமி விருந்து, இலக்கியச் சிந்தனை விருது, கனடா தமிழ் தோட்ட விருது ஆகிய விருதுகளைப் பெற்ற கி.ரா, புதுச்சேரியில் வசித்துவந்தார்.

'நான் மழைக்குத்தான் பள்ளிக்கூடம் ஒதுங்கியவன். பள்ளிக்கூடத்தைப் பார்க்காமல் மழையைப் பார்த்துக்கொண்டு இருந்துவிட்டேன்' என்று கூறிக்கொள்ளும் கி.ரா., பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் சிறப்புப் பேராசிரியராக பணியாற்றியவர்.

0 commentaires :

Post a Comment