5/14/2021

வட- கிழக்கு இணையுமா?- முன்னாள் முதல்வர்


இன்று நிலவும் அரசியற் சூழ்நிலையில் வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைவதற்கான சாத்தியங்களைக் காண முடியவில்லை.

இலங்கையின் மத்திய ஆட்சியில் அதிகாரத்துக்கு வரும் எந்த கட்சியும் வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைப்பதற்கு தயாராக இல்லை. கிழக்கு மாகாணத்தில் வாழும் பெரும்பான்மையான மக்கள் அவ்வாறான ஓர் இணைப்பை விரும்பவில்லை. கிழக்கு மாகாணத்தில் வாழும் முஸ்லிம் மக்கள் மற்றும் சிங்கள மக்கள் மட்டுமல்ல தமிழர்களிலும் கணிசமானவர்கள் அதனை விரும்பவில்லை. இந்நிலையில் கிழக்கு மாகாணத்தோடு இணைப்பது என ஒரு திணிப்பை மேற்கொள்வது சாத்தியமில்லை.

கேள்வி:- இலங்கையின் வடக்கு கிழக்கின் முதலாவது முதலமைச்சர் என்ற வகையில் உங்கள் பார்வையில் தற்போது வடக்கு கிழக்கு இணைந்திருப்பதால் – அல்லது பிரிந்திருப்பதால் உள்ள சாதக பாதகங்கள் எவை?

பதில்:-வடக்கு கிழக்கு இணைந்திருந்தால் தமிழர்களும் முஸ்லிம்களும் மொத்தத்தில் தமிழ் பேசும் மக்கள் என்ற வகையில் வடக்கு கிழக்கின் மொத்த சனத்தொகையில் 85 சதவீதமானோரை பிரதிநிதித்துவப்படுத்துவதாக இருக்கும். வெறுமனே தமிழர்கள் என்று பார்த்தாலும் கிட்டத்தட்ட 65 சதவீதமானோரை பிரதிநிதித்துவப்படுத்துவதாக அமையும். இலங்கையின் மத்திய ஆட்சியில் சிங்கள மக்களின் பிரதிநிதிகள் மிகப் பெரும்பான்மையாக இருந்து ஆட்சி செய்கையில், வடக்கு கிழக்கு இணைந்ததொரு மாகாண ஆட்சிக் கட்டமைப்பானது இலங்கையின் அரசியலில் இனரீதியான விவகாரங்கள் தொடர்பில் ஒரு சமநிலையைப் பேணுவதற்கு வாய்ப்பாக இருக்கும். தமிழ்ப் பேசும் மக்களினுடைய சமூக பொருளாதார கலாச்சார மற்றும் நில உரிமைகளையும் மற்றும் அவை தொடர்பான பாதுகாப்புகளையும் உறுதிப்படுத்துவதாக இருக்கும். அத்துடன் அவற்றின் முன்னேற்றகரமான வளர்ச்சிக்கும் துணையாக இருக்கும்.

இதேவேளை, வடக்கு கிழக்கு இணைந்திருந்தால், வடக்கைச் சேரந்தவர்களின் குறிப்பாக யாழ்ப்பாணத்தவர்களின் ஆதிக்கமே மேலோங்கியிருக்குமென கிழக்கு மாகாண தமிழர்களிடையே ஓர் அச்சம் இருக்கிறது. கடந்தகால அநுபவங்கள் இந்த அச்சத்தை உறுதிப்படுத்துகின்றன. அதேபோல, வடக்கு கிழக்கு இணைந்தால் தாங்கள் மிகவும் சிறுபான்மையினராகி விடுவர் என்பதனால் தமக்கு எந்தவித பாதுகாப்பும் இல்லாமற் போய்விடும் என இங்குள்ள முஸ்லிம்கள் கருதுகிறார்கள். அவர்களது கடந்த கால அநுபவங்களும் அதனையே உறுதிப்படுத்துகின்றன. அத்தோடு வடக்கு கிழக்கு இணைப்பானது தமது சமூக பொருளாதார முன்னேற்றங்களுக்குத் தடையாக அமையும் என கருதுகின்றனர்.

இவ்வாறாக, வடக்கு கிழக்கு  இணைப்பு தொடர்பாக எதிரும் புதிருமான உணர்வுகளே இங்கு மேலோங்கி நிற்கின்றன. 1980களில் சமூகங்களுக்கிடையில் இருந்த உறவு நிலைமைகளிலிருந்து பெரும் மாற்றங்களை கடந்த 30 ஆண்டுகால இலங்கையின் அரசியல் ஏற்படுத்திவிட்டது. எனவே இன்று நிலவும் யதார்த்தங்களுக்கு ஏற்றபடியே நாட்டின் அரசியற் பொருளாதாரமும் நகரும். 

கேள்வி:- இலங்கையின் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்ந்தும் முடிவின்றி தொடர்கிறது. இதற்கு தமிழ் அரசியல் கட்சிகள் எவ்வாறான ஆக்கபூர்வமான செயற்பாடுகளில் இணைந்து முன்னெடுக்க வேண்டும்?

பதில்:- தமிழ்க் கட்சிகள் ஒரு நிதானமான அரசியலைக் கொண்டவையாகவோ இன்றைய காலகட்டத்தில் நிலவும் அகப்புற யதார்த்தங்களைக் கருத்திற் கொண்டவையாகவோ இல்லை. இவர்களின் அரசியலானது தேர்தற் போட்டிகளை மையமாகக் கொண்டதாகவே உள்ளது. இங்கு தமிழ்த் தேசியக் கட்சிகள் என்று ஒரு பிரிவினரும் அரசாங்கத்தோடு ஒத்துப் போகும் கட்சியினர் என இன்னொரு பிரிவினரும் ஒருவரோடு ஒருவர் பகைமை கொண்டவர்களாக உள்ளனர். இங்கு தாங்கள் தியாகிகள் மற்றவர்கள் துரோகிகள் என்ற அரசியலும், தாங்கள்தான் தமிழ் மக்களுக்காக அதிக பட்ச உரிமைகளைக்  கோருபவர்கள் என்ற போட்டியுமே பிரதானமானதாக உள்ளது. இந்தக் கட்சிகள் ஆங்கிலத்தில் ஓர் அரசியலையும் தமிழில் வேறொரு அரசியலையும் பேசுகின்றன. இவ்வாறான குழப்பங்களையும் போலித்தனங்களையும் கொண்டதாக உள்ள தமிழ்க் கட்சிகளை ஒரு புள்ளியில் கொண்டு வந்து நிறுத்துவதென்பது சாத்தியமா என்பதே பெரும் கேள்வியாகும். அரசியற் கட்சிகள் மட்டுமல்ல தமிழ் மக்கள் மத்தியிலுள்ள சமூக அமைப்புக்களும் ஒட்டுமொத்தத்தில் அவ்வாறுதான் பிளவுபட்டுக் கிடக்கின்றன.

இன்றைக்கு ஒரு சமூகத்தின் அரசியற் தலைவர்களை மக்களே தமது வாக்குகள் மூலம் தீர்மானிக்கிறார்கள். மக்களின் வாக்குகளைக் கணிசமாகப் பெற முடியாதவர்களால் சமூக அரசியலில் இன்று எதனையும் சாதிக்க முடியாது. சமயத் தலைவர்கள், ஆசிரியர்கள் சமூகம், பல்கலைக் கழக மாணவர் சமூகம், சட்டத்தரணிகள் சங்கம், தொழிற் சங்கத்தவர்கள் என உள்ளவர்கள் அரசியற் போக்குகள் மீது ஓரளவு செல்வாக்கு செலுத்த முடியும். ஆனால் அவர்களும் அரசியற் கட்சிகளை விட மிக அதிகமாகவே கருத்து வேறுபாடுகளால் ஓரணிக்குள் வரத் தயங்குகின்றனர். தமிழர்களின் மத்தியில் உள்ள பத்திரிகைகளும் எழுத்தாளர்களும் தமிழர்களுக்கு வெறுப்பையும் விரக்தியையும் ஆத்திரத்தையும் நம்பிக்கையீனங்களையும் ஊட்டுவதிலேயே தமது திறமைகளை நிலைநாட்டுகின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலுள்ள சக்திகளை துண்டு துண்டாக கூறு படுத்துவதன் மூலமே அவை தமது வியாபாரத்தை லாபகரமாக நடத்துகின்றன.

இவ்வாறாக தமிழர் சமூகத்தை அழிவுப்பாதையிலிருந்து விலக முடியா வகையில் வைத்திருக்கும் சக்திகள் மிகப் பெரும் வளமும் செல்வாக்கும் கொண்டவையாக உள்ளன. 

இந்நிலையில் இப்போதுள்ள தமிழ்க் கட்சிகளை ஓர்                          ஆக்கபூர்வமான பாதையில் பயணிக்க வைப்பது எப்படி என்று முயற்சிப்பதில் பயனில்லை. தமிழ் மக்கள் மத்தியிலிருந்து சரியான பகுத்தறிவான முற்போக்கான புதிய சக்திகள் எழுச்சி பெறும் வரை பொறுத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லையென்றே தெரிகிறது.         

கேள்வி:- தமிழ் மக்களுக்கான தீர்வு தொடர்பில் இந்தியா எவ்வாறான நிலைப்பாட்டில் உள்ளது என்று தாங்கள் கருதுகிறீர்கள்?

பதில்: இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் அவர்கள் இவ்வாண்டு ஆரம்பத்தில் இலங்கைக்கு விஜயம் செய்த போது மற்ற வெளிப்படுத்திய கருத்துதான் இந்தியாவின் நிலைப்பாடு என்பது உறுதியாகத் தெரிகிறது. இதில் புதிதாக எதுவுமில்லை. ‘இலங்கை அரசியல் யாப்பின் 13வது திருத்தத்தை இலங்கை அரசாங்கம் முழுமையாக நிறைவேற்ற வேண்டும்’, அதற்காக ‘மாகாண சபைகளுக்கான தேர்தலை விரைவில் நடாத்த வேண்டும்’ என்பதையே மீண்டும் மீண்டும் இந்திய அரசாங்கம் தனது அறிக்கைகளில் வெளியிடும் – இந்திய அமைச்சர்கள் பத்திரிகையாளர் மாநாடுகளில் கூறுவர். அது தொடர்பாக இந்தியா செயல்பூர்வமான நடவடிக்கை எதையும் மேற்கொள்ளும் என எதிர்பார்க்க முடியாதுள்ளது.

இந்தியாவின் இந்த நிலைப்பாட்டில் தமிழர்களினுடைய அரசியற் பிரதிநிதிகளுக்கும் சமூக பிரமுகர்களுக்கும் எவ்வளவு தூரம் உடன்பாடு உண்டு என்பது கேள்விக்குரிய ஒன்றாகும். அவை தொடர்பாக இவர்கள் என்ன நடைமுறை வேலைத்திட்டங்களை மேற்கொள்ளப் போகிறார்கள் என்பதைப் பொறுத்தே இந்தியாவின் அக்கறையும் வெளிப்படும்.

இந்த விடயத்தில் இந்தியாவும் இலங்கையும் முரண்பட்டு ராஜரீதியான மோதல் நிலையை அடையும் என்று எதிர்பார்ப்பது அறிவீனம் ஆகும். ‘தமிழர்களின் தேசம்’, ‘தமிழர்களின் சுயநிர்ணய உரிமை’ என்ற கருத்துக்களையோ, தமிழர்களுக்கு சமஷ்டியே தீர்வு என்ற கோரிக்கையையோ இந்தியா ஏற்றுக் கொள்ளப்போவதில்லை. 1983 – 1990 ஆண்டு காலகட்டத்தில் நிலவிய அரசியற் காட்சிகள் மீண்டும் வரமாட்டா. 

கேள்வி:- இந்த அரசாங்கம் சிறுபான்மை சமூகங்களுக்கு பாதகமாக உள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது. இது தொடர்பாக உங்கள் கருத்து என்ன?

பதில்:-  இதில் மாற்றுக் கருத்து சொல்வதற்கு என்ன இருக்கிறது. இந்த அரசாங்கம் மட்டுமல்ல பிரித்தானியரின் காலனி ஆட்சியின் கீழ் 1931ம் ஆண்டு இலங்கையில் அரச சபை அமைக்கப்பட்ட காலத்தில் இருந்தே அதுதான் நிலைமை. இதில் சிறி லங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி, சிறி லங்கா சுதந்திரக் கட்சி என்று எந்த வேறுபாடும் கிடையாது. ரணசிங்க பிரேமதாசா அவர்கள் ஜனாதிபதியாக இருந்த போதும் அதையேதான் செய்தார். நாளை ஒருவேளை சஜித் பிரேமதாசா ஜனாதிபதியானாலும் அதையேதான் செய்வார். அதுதான் இலங்கையின் ஜனநாயகம் என ஆகிவிட்டது.

ஜே.வி.பி. எனும் மக்கள் விடுதலை முன்னணி கூட 13வது திருத்தத்தை முழுமையாக நிறைவேற்றுவதற்கு எதிரான கட்சிதான். மாகாண சபை ஆட்சி முறைமையே தேவையில்லை என்பதுதான் அதனுடைய அரசியல் நிலைப்பாடு. வடக்கு கிழக்கை பிரிப்பதற்கான அனைத்து வேலைகளையும் அந்தக் கட்சிதானே செய்தது.

இலங்கையின் ஒட்டு மொத்த அரசியற் பொருளாதாரக் கட்டமைப்பிலும் புரட்சிகரமான மாற்றங்கள் ஏற்பட்டாலே தவிர இலங்கை சிறுபான்மையினராக வாழும் தேசிய இனங்களின் அரசியல் பொருளாதார சமூக பாதுகாப்பு மற்றும் உரிமைகள் தொடரந்தும் கேள்விக்குரியனவாகவே இருக்கும்.  

நன்றி*சூத்திரம்

0 commentaires :

Post a Comment