ஜூன் 07 வரை தளர்வின்றிய பயணத்தடை
ஜூன் மாதம் 07ஆம் திகதி வரை பயணத்தடையை மேலும் தொடர்ந்து நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.
கொவிட் தடுப்பு சிறப்பு செயலணி இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் கூடிய சந்தர்ப்பத்திலேயே, ஏனைய அதிகாரிகளின் பரிந்துரைகளுக்கு அமைய இந்த தீர்மானத்தை ஜனாதிபதி எடுத்துள்ளார்.
பயணத்தடையின் காரணமாகப் பொது மக்களுக்கு அசௌகரியங்கள் ஏற்படாமல் இருப்பதற்காக, தெரிவு செய்யப்பட்ட மூன்று நாட்களுக்கு பயணத்தடையை தளர்த்துவதற்கு முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
ஆனாலும் - கடந்த 25ஆம் திகதி அதிகாலை 04.00 மணிக்கு பயணத்தடை தளர்த்தப்பட்டவேளையில், பொதுமக்கள் செயற்பட்ட விதமானது, நோய்த்தொற்று மேலும் பரவுவதற்கு இடமளிப்பதைப் போன்றதாகவே அமைந்தது.
எனவே - நோய்த்தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த அரசாங்கம் எடுக்கும் முயற்சிகள் அனைத்துமே, இவ்வாறான செயற்பாடுகள் மூலம் தோல்வியடைந்தது.
அதன்படி - மே மாதம் 31ஆம் திகதி மற்றும் ஜூன் மாதம் 04ஆம் திகதி ஆகிய இரு தினங்களில் பயணத்தடையைத் தளர்த்துவதற்கு எடுக்கப்பட்டிருந்த தீர்மானம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
பயணத்தடை நடைமுறையில் உள்ள காலங்களில் அத்தியாவசிய சேவைகளைப் பெற மாத்திரம் வீடுகளிலிருந்து வெளியேறுவதற்கு அனுமதி உண்டு.
வீதிகளில் பயணிக்கும்போது தொழில்புரியும் இடங்களினால் வழங்கப்பட்டுள்ள கடிதம் மற்றும் தொழில் அடையாள அட்டையை கைவசம் வைத்திருக்க வேண்டியது அவசியமாகும்.
0 commentaires :
Post a Comment