மே தின வாழ்த்துச் செய்தி
சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பா, ஆஸ்திரேலியா,
அமெரிக்கா, ரஷ்யா என்று பல தேசங்களிலும் ஆடை மற்றும் இரும்புத் தொழிற்சாலைகள் சார்ந்து பெரும் முதலாளிகள் உருவாகத் தொடங்கினர்.
இந்த முதலாளிகள் கூலித் தொழிலாளர்களை கசக்கிப் பிழிந்து ஈவிரக்கமற்ற முறையில் வேலை வாங்கினர். நாள் ஒன்றுக்கு சுமார் 15 மணி நேரத்துக்கும் மேலாக தொழிற்சாலைகளில் மக்கள் அடிமைகளாக வேலை செய்ய வேண்டி இருந்தது.
இந்நிலைமையை மாற்றுவதற்காக தொழிலாளர்கள் நடத்திய பல்வேறுபட்ட போராட்டங்களின் விளைவாகவே நாளொன்றுக்கு 8 மணி நேர வேலை என்பதை இவ்வுலகம் படிப்படியாக ஏற்றுக்கொண்டது.
இந்த உரிமையை வென்றெடுப்பதற்காக நடத்தப்பட்ட போராட்டங்களும் கைதுகளும் சிறைக் கொடுமைகளும் உயிரிழப்புகளும் சொல்லிமாளாதவை.
அந்த நினைவுகளை முன்வைத்தே மே முதல் நாளை தொழிலாளர் தினமாக நாம் அனுஷ்டித்து வருகிறோம்.
அவைகளெல்லாம் கடந்த நூற்றாண்டு கதைகள். ஆனால் இன்றும் கூட நமது தொழிலாளர் வர்க்கத்தின் உழைப்பு சுரண்டப்படுவது முடிந்த பாடில்லை. எமது மாகாணத்தை எடுத்துப்பாருங்கள் இங்கே நிறைந்து வாழும் விவசாயிகளும், மீனவர்களும் நாளும் பொழுதும் உழைத்து உழைத்து ஓடாய் தேய்ந்து போகின்றனர். எப்படித்தான் உழைத்தாலும் ஏழ்மை அவர்களை விட்டு தொலைந்தபாடில்லை.
இதற்கு காரணமென்ன? சுரண்டல், சுரண்டல். ஆம் மூலதனத்தை கையிலே வைத்திருக்கும் முதலாளிகள் எமது மக்களின் உழைப்பை வியாபாரம்
எனும் பெயரில் உறுஞ்சிக்கொண்டிருக்கின்றார்கள்.
அது மீனாக இருக்கலாம்.நெல்லாக இருக்கலாம். வெள்ளரிக்காயாக இருக்கலாம். வத்தவை பழமாக இருக்கலாம். கஜுவாக இருக்கலாம்.
ஆடு மாடு கோழியாக கூட இருக்கலாம். அனைத்திலும் கொள்ளை இலாபம் தலைவிரித்தாடுகிறது.
வியாபாரம் என்பது எமது மக்களின் கையில் இல்லை. இவை குறித்தெல்லாம் நாம் தீவிரமாக கவனம் கொண்டுள்ளோம். உழைக்கும் மக்களின் மகிழ்ச்சியான வாழ்வே தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் லட்சியம்.
இந்த மே தினத்தை மிகச்சிறப்பாக கொண்டாடவும் மாபெரும் மேதின ஊர்வலம் ஒன்றை மட்டக்களப்பில் நடாத்தி முதலாளிகளின் சுரண்டல் குறித்து உழைப்பாள வர்க்கத்தின் கவனத்தை ஈர்க்கவும் நாம் திட்டமிட்டு இருந்தோம்.
ஆனபோதிலும் உழைக்கும் மக்களாகிய உங்களனைவரதும் மகிழ்ச்சியும் நிம்மதியுமான வாழ்வுக்காக எமது கட்சி என்றும் ஓயாது பயணிக்குமென்று உறுதி கூறுவதோடு உழைக்கும் மக்களாகிய உங்களனைவருக்கும் மே தின வாழ்த்துக்களை கூறிக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
சிவ.சந்திரகாந்தன்
தலைவர்
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்
0 commentaires :
Post a Comment