(ஏப்ரல் 22, 1870 – ஜனவரி 21, 1924)
"லெனின்" என்பது ரஷ்யப் புரட்சிக்காக அவர் கொண்டிருந்த புனைபெயர்களில் ஒன்று. பின்னாளில் தன்னுடைய உண்மையான "விளாதிமிர் உலியனொவ்" என்கிற பெயரை "விளாதிமிர் லெனின்" என்று மாற்றிக்கொண்டார்.
விளாதிமிர் லெனின் 22 ஏப்ரல் 1870ல் ரஷ்யாவில் வால்கா நதியின் கரையோரம் உள்ள சிம்பிர்ஸ்க் எனும் நகரத்தில் இல்யா உல்யனாவ் - மாயா உல்யானவ் தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார். இவருடைய இயற்பெயர் விளாதிமிர் இலீச் உல்யானவ் என்பதாகும். அலெக்ஸாண்டர், டிமிட்ரி என்ற சகோதரர்களும், ஆனர், மரியா, ஆல்கா என்ற சகோதரிகளும் லெனினுக்கு இருந்தனர்.
இவருடைய தந்தையின் இறப்பிற்குப் பிறகு, அண்ணன் அலெக்ஸாண்டர் ஜார் மன்னனை கொல்ல முயன்றதுக்காக 1887 ஆம் ஆண்டு மார்ச் 1ம் நாள் கைது செய்யப்பட்டhர். அதனையடுத்து 1887 ஆம் ஆண்டு மே 8ம் நாள் ஜார் மன்னரின் காவல்துறையால் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு உயிரிழந்தார்.
1887 ஆம் ஆண்டு கசான் பல்கலைக்கழகத்தில் லெனின் சேர்ந்தார். அப்பொழுது அன்னையுடன் சில்பர்க் நகரில் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்தார். லெனின் பல்கலைகழகத்தில் சட்டப் படிப்பினை படித்தார். அப்பொழுது மாணவர்களுடன் இணைந்து போராட்டங்களில் ஈடுபட்டார். இதனால் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். பல்கலைக்கழகம் அவருக்கு படிப்புதர மறுத்தது. இதனையடுத்து லெனின் தானே சட்டப்படிப்பினை படிக்க தேர்ந்ததாக கூறப்படுகிறது.
தொழிலாளர் விடுதைலை இயக்கம் என்பதை தொடங்கி ரஷ்யாவில் தொழிலாளர்களிடையே கார்ல்; மார்க்ஸின் கொள்கைகளை பரப்புரை செய்தார். 1895-ல் கைது செய்யப்பட்டு சைபீரியாவிற்கு நாடு கடத்தப்பட்டார். அவர் விடுதலையாகி வந்தது 1900ல். ஸ்பார்க் (தீப்பொறி) என்ற பெயரில் நாளிதழ் ஒன்றினை தொடங்கினார்.
சைபீரியாவில் இவர் இருந்தபோதுதான் 1898 இல் தமக்கு தோழியராக இருந்த குரூப்ஸ்காயா என்பவரை மணந்து கொண்டார். "ரஷ்யாவில் முதலாளித்துவம் வளர்ந்த வரலாறு" என்ற நூலையும் அப்போதுதான் எழுதினார். இவருடைய சைபீரிய வாழ்க்கை 1900 பிப்ரவரியில் முடிவடைந்தது. சில மாதங்களுக்குப் பிறகு இவர் மேற்கு ஐரோப்பாகவுக்குச் சென்றார். அங்கு இவர் சுமார் 17 ஆண்டுகள் கழித்தார். அதன்போது, இவர் சார்ந்திருந்த ரஷ்ய சமூக-ஜனநாயகத் தொழிலாளர் கட்சி "போல்ஷ்விக்" கட்சி என்றும், "மென்ஷவிக்" கட்சி என்றும் இரண்டாக உடைந்தது. லெனின் பெரும்பான்மையினரின் கட்சியாக இருந்த "போல்ஷ்விக்" கட்சிக்குத் தலைவரானார்.
1914 இல் தொடங்கிய முதல் உலகப் போர் லெனினுக்குப் பெரிய வாய்ப்புகளைத் தேடித் தந்தது. அந்தப் போரில் ரஷியாவுக்குப் பெருந்தோல்வி ஏற்பட்டது. பொருளாதாரத் துறையில் பேரழிவுகள் ஏற்பட்டன. முதலாம் உலகப் போரினைத் தொடர்ந்து ரஷ்யாவில் தொழிலாளர்கள் பலரும் பாதிக்கப்பட்டனர். வறுமை, பட்டினி சூழ்ந்தது. இப் போரினை லெனின் போன்ற தலைவர்கள் “கொள்ளக்காரப் போர்” என்று வர்ணித்தனர்.
1917 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஜார் மன்னனின் அரசு கவிழ்க்கப்பட்டது. ஜார் ஆட்சி வீழ்ந்த பின்னர் ரஷியாவில் ஜனநாயகக் கட்சிகள் ஒன்று சேர்ந்து ஒரு தற்காலிக அரசை அமைத்திருந்தன. ஆனால், அந்தக் கட்சிகளுக்கு மக்கள் ஆதரவு இல்லை என்பதையும், மக்களின் எதிர்ப்பைச் சமாளிக்கும் வலிமை அக்கட்சிகளுக்கு இல்லை என்பதையும் லெனின் அறிந்து கொண்டார். கட்டுக் கோப்பும் ஒழுக்கமும் வாய்ந்த தம்முடைய பொதுவுடைமைக் கட்சி எண்ணிக்கையில் சிறியதாக இருப்பினும், அது ஆட்சியைப் பிடிப்பதற்கு அரிய வாய்ப்பு உருவாகியிருப்பதையும் லெனின் கண்டார். எனவே, தற்காலிக அரசை கவிழ்த்துவிட்டு பொதுவுடைமை அரசை நிறுவும்படி அவர் போல்ஷ்விக் கட்சியினரைத் தூண்டினார்.
1917 ஜூலையில் நடந்த ஒரு புரட்சி முயற்சி வெற்றி பெறவில்லை. இந்தப் புரட்சியின் எதிரிகள் இவரை ஜெர்மன் கையாள் என்று காட்ட முயன்றனர். பின்னர், 1917 நவம்பரில் நடந்த இரண்டாவது புரட்சி வெற்றி பெற்றது. லெனின் தாயகம் திரும்பி, புதிய ஆட்சியின் தலைவரானார். மக்கள் நலனுக்குப் பயன்படுகின்ற கொள்கைகளைச் செயல்படுத்துவதில் தீவிர நாட்டமுடையவராக இருந்தார்.
அக்டோபர் புரட்சியானது 1917ல் நிகழ்த்தப்பட்ட பிப்ரவரி புரட்சியை தொடர்ந்து இரண்டாவது கட்டமாக நடத்தப்பட்டதாகும். இது விளாதிமிர் லெனின் தலைமையில் போல்ஷெவிக்குகளால் நடத்தப்பட்டது. “போல்ஷெவிக் புரட்சி” என்றும் இப்புரட்சி அறியப்படுகிறது. இதன் மூலம் இடைக்கால ரஷ்ய அரசாங்கம் வீழ்ந்து 1918லிருந்து 1920 ரஷ்யா உள்நாட்டு கலகங்களை சந்தித்தது. அதன் பிறகு 1922ல் சோவியத் ஒன்றியம் அமைக்கப்பட்டது.
லெனின் ஒரு செயல்வீரராக விளங்கினார். ரஷியாவில் பொதுவுடமை அரசை நிறுவுவதற்குக் கண்ணுங் கருத்துமாகப் பாடுபட்டார். அவர் கார்ல் மார்க்சின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு அவற்றை நடைமுறைப் படுத்தினார். 1917 நவம்பர் முதற்கொண்டு உலகெங்கும் பொதுவுடமை ஆட்சி தொடர்ந்து விரிவடைந்து வந்தது. லெனின் முக்கியமாக அரசியல் தலைவராக விளங்கிய போதிலும், அவர் தமது புரட்சிகரமான எழுத்துகளின் மூலமாகவும் கணிசமான அளவுக்குச் செல்வாக்கு பெற்றார்.
லெனின், மார்க்ஸ் தத்துவத்தில் ஊறியவர். லெனின் புரட்சி இயக்கங்களை நிறுவுவதில் மிகுந்த அனுபவம் உடையவர். உலகம் முழுவதும் நடைபெற்ற தொழிலாளர் இயக்கங்களை நன்கு அறிந்தவர். ஒரு நாட்டுக்கு உகந்த முறைகளைப் பிற நாடுகளுக்கும் பயன்படுத்துவதை வன்மையாக எதிர்த்தவர். நாட்டுக்கும் உலகத்துக்கும் ஏற்ற முறையில் புரட்சி இயக்கங்களை உருவாக்க வேண்டும் என்ற உறுதியான கொள்கை உடையவர். அவர் புரட்சி நடவடிக்கைகளில் மிகுந்த ஈடுபாடு உடையவராக இருந்தார். விளாதிமிர் லெனின் மீது 1918-ஆம் ஆண்டு துப்பாக்கி சூடு நடந்தது. அதை ஒரு ரஷ்யப் பெண் நிகழ்த்தினார். இருப்பினும் அந்நிகழ்வில் லெனின் உயிர் பிழைத்தார்.
லெனின் இடைவிடாமல் நீண்டகாலம் உழைத்து வந்தது, அவருடைய உடல் நலத்தைச் சீர் குலைத்தது. அதனால் 1922 மே மாதம் அவருக்குப் பக்கவாதம் ஏற்பட்டது. அவர் வேலை செய்யாமல் ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் ஆலோசனை கூறினார்கள். அவருக்குத் திசு தடித்தல் என்னும் நோய் முற்றியது. பேச முடியாத நிலையும் ஏற்பட்டது. டிசம்பரில் இவரது வலக்கையும் செயல் இழந்தது. அது முதல் முற்றிலும் செயலற்ற நிலையிலேயே இருந்த லெனின் தனது 54-ம் வயதில் 1924-ஆம் ஆண்டு ஜனவரி 21-ஆம் நாள் மூளை நரம்பு வெடித்து மரணமடைந்தார். இவருடைய மறைவினால் சோவியத் யூனியனிலும் உலகம் முழுவதிலும் மக்கள் துயரத்தில் ஆழ்ந்தனர். அவருடைய உடல் தைலமூட்டி மாஸ்கோவிலுள்ள செஞ்சதுக்கத்தில் கல்லறையில் வைக்கப் பெற்றது. அந்த உடல் இன்றும் அழியாமல் உள்ளது. அதனை இன்றும் ஆயிரக்கணக்கான மக்கள் நாள்தோறும் பார்த்து மரியாதை செலுத்தி வருகிறார்கள்.
நன்றிகள் தோழர் மணியம்
0 commentaires :
Post a Comment