4/30/2021

மே தின வாழ்த்து

மே தின வாழ்த்துச் செய்தி

இன்று உலக தொழிலாளர் தினம். உலகிலுள்ள தொழிலாளர் வர்க்கம் தனது உரிமைகளுக்காக போராடிய நினைவுகளை உயர்த்திப் பிடிக்கும் நாள். 

சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்னர்  ஐரோப்பா, ஆஸ்திரேலியா,
அமெரிக்கா, ரஷ்யா என்று பல தேசங்களிலும் ஆடை மற்றும் இரும்புத் தொழிற்சாலைகள் சார்ந்து பெரும் முதலாளிகள் உருவாகத் தொடங்கினர்.

இந்த முதலாளிகள்  கூலித் தொழிலாளர்களை கசக்கிப் பிழிந்து ஈவிரக்கமற்ற  முறையில் வேலை வாங்கினர். நாள் ஒன்றுக்கு சுமார் 15 மணி நேரத்துக்கும் மேலாக தொழிற்சாலைகளில் மக்கள் அடிமைகளாக வேலை செய்ய வேண்டி இருந்தது.

இந்நிலைமையை மாற்றுவதற்காக தொழிலாளர்கள் நடத்திய பல்வேறுபட்ட போராட்டங்களின் விளைவாகவே நாளொன்றுக்கு 8 மணி நேர வேலை என்பதை இவ்வுலகம் படிப்படியாக ஏற்றுக்கொண்டது.

இந்த உரிமையை வென்றெடுப்பதற்காக நடத்தப்பட்ட போராட்டங்களும் கைதுகளும் சிறைக் கொடுமைகளும் உயிரிழப்புகளும் சொல்லிமாளாதவை.
அந்த நினைவுகளை முன்வைத்தே மே முதல் நாளை தொழிலாளர் தினமாக நாம் அனுஷ்டித்து வருகிறோம்.

அவைகளெல்லாம்  கடந்த நூற்றாண்டு கதைகள். ஆனால் இன்றும் கூட நமது தொழிலாளர் வர்க்கத்தின் உழைப்பு சுரண்டப்படுவது முடிந்த பாடில்லை. எமது மாகாணத்தை எடுத்துப்பாருங்கள் இங்கே நிறைந்து வாழும் விவசாயிகளும், மீனவர்களும் நாளும் பொழுதும் உழைத்து உழைத்து ஓடாய் தேய்ந்து போகின்றனர். எப்படித்தான் உழைத்தாலும் ஏழ்மை அவர்களை விட்டு தொலைந்தபாடில்லை.

இதற்கு காரணமென்ன? சுரண்டல், சுரண்டல். ஆம் மூலதனத்தை கையிலே வைத்திருக்கும் முதலாளிகள் எமது மக்களின் உழைப்பை வியாபாரம் 
எனும் பெயரில் உறுஞ்சிக்கொண்டிருக்கின்றார்கள்.

அது மீனாக இருக்கலாம்.நெல்லாக இருக்கலாம். வெள்ளரிக்காயாக இருக்கலாம். வத்தவை பழமாக இருக்கலாம். கஜுவாக இருக்கலாம்.
ஆடு மாடு கோழியாக கூட இருக்கலாம். அனைத்திலும் கொள்ளை இலாபம் தலைவிரித்தாடுகிறது.

வியாபாரம் என்பது எமது மக்களின் கையில் இல்லை. இவை குறித்தெல்லாம் நாம் தீவிரமாக கவனம் கொண்டுள்ளோம். உழைக்கும் மக்களின் மகிழ்ச்சியான வாழ்வே தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் லட்சியம்.

இந்த மே தினத்தை மிகச்சிறப்பாக கொண்டாடவும் மாபெரும் மேதின ஊர்வலம் ஒன்றை மட்டக்களப்பில் நடாத்தி முதலாளிகளின் சுரண்டல் குறித்து உழைப்பாள வர்க்கத்தின் கவனத்தை ஈர்க்கவும் நாம் திட்டமிட்டு இருந்தோம்.
ஆனால் துரதிஷ்டவசமாக கொரோனா பரவல் தாக்கம் அதிகரித்து விடும் என்ற காரணத்தினால் அது சாத்தியமாகவில்லை.


ஆனபோதிலும்  உழைக்கும் மக்களாகிய உங்களனைவரதும் மகிழ்ச்சியும் நிம்மதியுமான வாழ்வுக்காக எமது கட்சி என்றும் ஓயாது பயணிக்குமென்று உறுதி கூறுவதோடு உழைக்கும் மக்களாகிய உங்களனைவருக்கும் மே தின வாழ்த்துக்களை கூறிக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

சிவ.சந்திரகாந்தன்
தலைவர்
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்




»»  (மேலும்)

தொலைத்தொடர்பு கோபுரத்துக்கு எதிராக போராடி கைதான பெண்கள் பிணையில் விடுதலை




 ஐயங்கேணி கிராமத்தில் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்தினால் மக்கள் குடியிருப்பிற்கு மத்தியில் தொலைத்தொடர்பு கோபுரம் ஒன்று அமைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

பிரதேசவாசிகள் அதற்கு எதிராக தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தி இருந்ததன் காரணமாக நான்கு பெண்களும் ஒரு ஆணும் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நேற்றைய தினம் பிரபல சட்டத்தரணி மங்களேஸ்வரி சங்கர் அவர்களுடைய தன்னார்வ  தலையீட்டுடன் நீதிமன்றத்தில் அந்த ஐவருக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது
»»  (மேலும்)

4/25/2021

மன்றத்தில் தூங்குவது யார்


பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் செயற்பட்ட விதம் தொடர்பான புள்ளிவிபர தகவல் தொடர்பில் கடைசி பத்து இடங்கள் தொடர்பில் கலாய்த்துக் கொண்டிருக்கும் எம்மவர்க்கு சில விஷயங்களை புரிய வைக்க வேண்டியுள்ளது.

பாராளுமன்றத்தில் மக்கள் பிரதிநிதிகள் தனிநபர் பிரேரணைகள், பிரதம மந்திரியுடனான கேள்விகள், மனுக்கள், வாய் மொழி மூல விவாதங்கள் (சட்டமூலம், உத்தரவு, தீர்மானங்கள் தொடர்பில்) ,எழுத்துமூல வினாக்கள், எழுத்து மூல வினாக்களுக்கான பதில் போன்ற செயற்பாடுகளில் எத்தனை தடைவைகள் ஈடுபடுகின்றனர் என்பதை மதிப்பிட்டு இப்புள்ளிவிபரங்கள் தயாரிக்கப்பட்டிருக்கின்றது...

இன்னிலையில்  மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் இறுதி பத்து இடங்களுக்குள் தெரிவாகி உள்ளார்.
இதனை சாட்டாக வைத்து பிள்ளையானுடைய பாராளுமன்ற செயற்பாடுகள் செயலூக்கம் அற்றவை என்று நிரூபிக்க பலர் தலையால் மண் கிண்ட முனைகின்றனர்.

பல பத்து வருடங்களாக பாராளுமன்றத்தில் தூங்கி வழியும் சம்பந்தன் சித்தார்த்தன் போன்றோரது அசட்டுத்தனங்களை இதன் மூலம் சரிசெய்வது அவர்களது நோக்கம் ஆகும்.
அடுத்தது பிள்ளையானது செயலூக்கம், இயங்கு திறன் போன்றவற்றை குறைவாக சித்தரிக்க முனைகின்றனர்.

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் இடம்பெற்ற முதலாவது பாராளுமன்ற அமர்வு ஆகஸ்ட் மாதம் 20ஆம் திகதி நடைபெற்ற போது சிறையில் இருந்து பிள்ளையான் முதலாவது அமவுர்க்கு கலந்து கொண்டார்.

அதன் பின்னர் கொராணா காரணமாக சிறையில் அதிகமான தொற்று பரவல் காணப்பட்டது. அதன் காரணமாக சிறையிலிருந்து பிள்ளையானுக்கு பாராளுமன்றத்துக்கு செல்வதற்கான அனுமதி வழங்கப்படவில்லை.

2021  ஜனவரி மாதம் 13ம் திகதியன்று பிள்ளையான் வழக்கிலிருந்து விடுதலையான பின்னர்தான் தொடர்ச்சியாக பாராளுமன்ற அமர்வுகளுக்கு கலந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டது.
இதன் காரணமாக அதிக அமர்வுகளை அவர் தவற விட நேர்ந்தது. அவ்வேளைகளில் இடம்பெற்ற விவாதங்கள் உரையாடல்கள் பிரேரணைகள் அனைத்திலும் அவர் கலந்து கொள்ள முடியவில்லை.

இந்நிலையில். பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்வதை ஒட்டிய செயற்பாடுகளை மட்டும் வைத்துக்கொண்டு பிள்ளையானின் செயல் ஊக்கத்தை குறைத்து மதிப்பிட முனைவதன் பின்னணி அவர் மீதான காழ்புணர்ச்சி அன்றி வேறில்லை. 

பிள்ளையானின் செயலூக்கமும் இயங்குதிறனும் ஊரறியும் உலகறியும்.






»»  (மேலும்)

4/23/2021

வாகரையில் ஒன்று கூடிய தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள்

இன்று மாலை வாகரையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் முக்கிய கூட்டம் ஒன்று இடம்பெற்றது. 



வாகரை பிரதேச கட்சி செயற்பாட்டாளர்களின் வேண்டு கோளுக்கு இணங்க கட்சியின் தலைமை குழுவினர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

வாகரை பிரதேசத்தின் எதிர்கால மேம்பாடுகள் சம்பந்தமாக பல்வேறு விதமான ஆலோசனைகளும் கலந்துரையாடப்பட்டது.

»»  (மேலும்)

4/22/2021

மாமேதை லெனின் பிறந்த தினம்


மாமேதை லெனின் 151ஆவது பிறந்த தினம்
(ஏப்ரல் 22, 1870 – ஜனவரி 21, 1924) 

"லெனின்" என்பது ரஷ்யப் புரட்சிக்காக அவர் கொண்டிருந்த புனைபெயர்களில் ஒன்று. பின்னாளில் தன்னுடைய உண்மையான "விளாதிமிர் உலியனொவ்" என்கிற பெயரை "விளாதிமிர் லெனின்" என்று மாற்றிக்கொண்டார். 

விளாதிமிர் லெனின் 22 ஏப்ரல் 1870ல் ரஷ்யாவில் வால்கா நதியின் கரையோரம் உள்ள சிம்பிர்ஸ்க் எனும் நகரத்தில் இல்யா உல்யனாவ் - மாயா உல்யானவ் தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார். இவருடைய இயற்பெயர் விளாதிமிர் இலீச் உல்யானவ் என்பதாகும். அலெக்ஸாண்டர், டிமிட்ரி என்ற சகோதரர்களும், ஆனர், மரியா, ஆல்கா என்ற சகோதரிகளும் லெனினுக்கு இருந்தனர். 

இவருடைய தந்தையின் இறப்பிற்குப் பிறகு, அண்ணன் அலெக்ஸாண்டர் ஜார் மன்னனை கொல்ல முயன்றதுக்காக 1887 ஆம் ஆண்டு மார்ச் 1ம் நாள் கைது செய்யப்பட்டhர். அதனையடுத்து 1887 ஆம் ஆண்டு மே 8ம் நாள் ஜார் மன்னரின் காவல்துறையால் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு உயிரிழந்தார்.

1887 ஆம் ஆண்டு கசான் பல்கலைக்கழகத்தில் லெனின் சேர்ந்தார். அப்பொழுது அன்னையுடன் சில்பர்க் நகரில் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்தார். லெனின் பல்கலைகழகத்தில் சட்டப் படிப்பினை படித்தார். அப்பொழுது மாணவர்களுடன் இணைந்து போராட்டங்களில் ஈடுபட்டார். இதனால் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். பல்கலைக்கழகம் அவருக்கு படிப்புதர மறுத்தது. இதனையடுத்து லெனின் தானே சட்டப்படிப்பினை  படிக்க தேர்ந்ததாக கூறப்படுகிறது.
தொழிலாளர் விடுதைலை இயக்கம் என்பதை தொடங்கி ரஷ்யாவில் தொழிலாளர்களிடையே கார்ல்; மார்க்ஸின் கொள்கைகளை பரப்புரை செய்தார். 1895-ல் கைது செய்யப்பட்டு சைபீரியாவிற்கு நாடு கடத்தப்பட்டார். அவர் விடுதலையாகி வந்தது 1900ல். ஸ்பார்க் (தீப்பொறி) என்ற பெயரில் நாளிதழ் ஒன்றினை தொடங்கினார்.
சைபீரியாவில் இவர் இருந்தபோதுதான் 1898 இல் தமக்கு தோழியராக இருந்த குரூப்ஸ்காயா என்பவரை மணந்து கொண்டார். "ரஷ்யாவில் முதலாளித்துவம் வளர்ந்த வரலாறு" என்ற நூலையும் அப்போதுதான் எழுதினார். இவருடைய சைபீரிய வாழ்க்கை 1900 பிப்ரவரியில் முடிவடைந்தது. சில மாதங்களுக்குப் பிறகு இவர் மேற்கு ஐரோப்பாகவுக்குச் சென்றார். அங்கு இவர் சுமார் 17 ஆண்டுகள் கழித்தார். அதன்போது, இவர் சார்ந்திருந்த ரஷ்ய சமூக-ஜனநாயகத் தொழிலாளர் கட்சி "போல்ஷ்விக்" கட்சி என்றும், "மென்ஷவிக்" கட்சி என்றும் இரண்டாக உடைந்தது. லெனின் பெரும்பான்மையினரின் கட்சியாக இருந்த "போல்ஷ்விக்" கட்சிக்குத் தலைவரானார். 

1914 இல் தொடங்கிய முதல் உலகப் போர் லெனினுக்குப் பெரிய வாய்ப்புகளைத் தேடித் தந்தது. அந்தப் போரில் ரஷியாவுக்குப் பெருந்தோல்வி ஏற்பட்டது. பொருளாதாரத் துறையில் பேரழிவுகள் ஏற்பட்டன. முதலாம் உலகப் போரினைத் தொடர்ந்து ரஷ்யாவில் தொழிலாளர்கள் பலரும் பாதிக்கப்பட்டனர். வறுமை, பட்டினி சூழ்ந்தது. இப் போரினை லெனின் போன்ற தலைவர்கள் “கொள்ளக்காரப் போர்” என்று வர்ணித்தனர். 

1917 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஜார் மன்னனின் அரசு கவிழ்க்கப்பட்டது. ஜார் ஆட்சி வீழ்ந்த பின்னர் ரஷியாவில் ஜனநாயகக் கட்சிகள் ஒன்று சேர்ந்து ஒரு தற்காலிக அரசை அமைத்திருந்தன. ஆனால், அந்தக் கட்சிகளுக்கு மக்கள் ஆதரவு இல்லை என்பதையும், மக்களின் எதிர்ப்பைச் சமாளிக்கும் வலிமை அக்கட்சிகளுக்கு இல்லை என்பதையும் லெனின் அறிந்து கொண்டார். கட்டுக் கோப்பும் ஒழுக்கமும் வாய்ந்த தம்முடைய பொதுவுடைமைக் கட்சி எண்ணிக்கையில் சிறியதாக இருப்பினும், அது ஆட்சியைப் பிடிப்பதற்கு அரிய வாய்ப்பு உருவாகியிருப்பதையும் லெனின் கண்டார். எனவே, தற்காலிக அரசை கவிழ்த்துவிட்டு பொதுவுடைமை அரசை நிறுவும்படி அவர் போல்ஷ்விக் கட்சியினரைத் தூண்டினார். 

1917 ஜூலையில் நடந்த ஒரு புரட்சி முயற்சி வெற்றி பெறவில்லை. இந்தப் புரட்சியின் எதிரிகள் இவரை ஜெர்மன் கையாள் என்று காட்ட முயன்றனர். பின்னர், 1917 நவம்பரில் நடந்த இரண்டாவது புரட்சி வெற்றி பெற்றது. லெனின் தாயகம் திரும்பி, புதிய ஆட்சியின் தலைவரானார். மக்கள் நலனுக்குப் பயன்படுகின்ற கொள்கைகளைச் செயல்படுத்துவதில் தீவிர நாட்டமுடையவராக இருந்தார். 
அக்டோபர் புரட்சியானது 1917ல் நிகழ்த்தப்பட்ட பிப்ரவரி புரட்சியை தொடர்ந்து இரண்டாவது கட்டமாக நடத்தப்பட்டதாகும். இது விளாதிமிர் லெனின் தலைமையில் போல்ஷெவிக்குகளால் நடத்தப்பட்டது. “போல்ஷெவிக் புரட்சி” என்றும் இப்புரட்சி அறியப்படுகிறது. இதன் மூலம் இடைக்கால ரஷ்ய அரசாங்கம் வீழ்ந்து 1918லிருந்து 1920 ரஷ்யா உள்நாட்டு கலகங்களை சந்தித்தது. அதன் பிறகு 1922ல் சோவியத் ஒன்றியம் அமைக்கப்பட்டது.

லெனின் ஒரு செயல்வீரராக விளங்கினார். ரஷியாவில் பொதுவுடமை அரசை நிறுவுவதற்குக் கண்ணுங் கருத்துமாகப் பாடுபட்டார். அவர் கார்ல் மார்க்சின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு அவற்றை நடைமுறைப் படுத்தினார். 1917 நவம்பர் முதற்கொண்டு உலகெங்கும் பொதுவுடமை ஆட்சி தொடர்ந்து விரிவடைந்து வந்தது. லெனின் முக்கியமாக அரசியல் தலைவராக விளங்கிய போதிலும், அவர் தமது புரட்சிகரமான எழுத்துகளின் மூலமாகவும் கணிசமான அளவுக்குச் செல்வாக்கு பெற்றார்.

லெனின், மார்க்ஸ் தத்துவத்தில் ஊறியவர். லெனின் புரட்சி இயக்கங்களை நிறுவுவதில் மிகுந்த அனுபவம் உடையவர். உலகம் முழுவதும் நடைபெற்ற தொழிலாளர் இயக்கங்களை நன்கு அறிந்தவர். ஒரு நாட்டுக்கு உகந்த முறைகளைப் பிற நாடுகளுக்கும் பயன்படுத்துவதை வன்மையாக எதிர்த்தவர். நாட்டுக்கும் உலகத்துக்கும் ஏற்ற முறையில் புரட்சி இயக்கங்களை உருவாக்க வேண்டும் என்ற உறுதியான கொள்கை உடையவர். அவர் புரட்சி நடவடிக்கைகளில் மிகுந்த ஈடுபாடு உடையவராக இருந்தார். விளாதிமிர் லெனின் மீது 1918-ஆம் ஆண்டு துப்பாக்கி சூடு நடந்தது. அதை ஒரு ரஷ்யப் பெண் நிகழ்த்தினார். இருப்பினும் அந்நிகழ்வில் லெனின் உயிர் பிழைத்தார்.

லெனின் இடைவிடாமல் நீண்டகாலம் உழைத்து வந்தது, அவருடைய உடல் நலத்தைச் சீர் குலைத்தது. அதனால் 1922 மே மாதம் அவருக்குப் பக்கவாதம் ஏற்பட்டது. அவர் வேலை செய்யாமல் ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் ஆலோசனை கூறினார்கள். அவருக்குத் திசு தடித்தல் என்னும் நோய் முற்றியது. பேச முடியாத நிலையும் ஏற்பட்டது. டிசம்பரில் இவரது வலக்கையும் செயல் இழந்தது. அது முதல் முற்றிலும் செயலற்ற நிலையிலேயே இருந்த லெனின் தனது 54-ம் வயதில் 1924-ஆம் ஆண்டு ஜனவரி 21-ஆம் நாள் மூளை நரம்பு வெடித்து மரணமடைந்தார். இவருடைய மறைவினால் சோவியத் யூனியனிலும் உலகம் முழுவதிலும் மக்கள் துயரத்தில் ஆழ்ந்தனர். அவருடைய உடல் தைலமூட்டி மாஸ்கோவிலுள்ள செஞ்சதுக்கத்தில் கல்லறையில் வைக்கப் பெற்றது. அந்த உடல் இன்றும் அழியாமல் உள்ளது. அதனை இன்றும் ஆயிரக்கணக்கான மக்கள் நாள்தோறும் பார்த்து மரியாதை செலுத்தி வருகிறார்கள்.

நன்றிகள் தோழர் மணியம்
»»  (மேலும்)

சில்லிகொடியாற்று உதைபந்தாட்ட கிண்ணம்

கடந்த ஒரு வாரமாக சிலிக்கொடியாற்றில்
இடம்பெற்ற மாபெரும் உதைப்பந்தாட்ட  போட்டியில் சுமார் 28 விளையாட்டு கழகங்கள் பங்கேற்று இருந்தனர்.

இதில் இறுதிச்சுற்றுக்கு பனையறுப்பான் கஜமுகா விளையாட்டுக் கழகம் மற்றும்  காஞ்சிரங்குடா ஜெகன் விளையாட்டு கழகமும் தெரிவாகி நேற்றைய தினம் இரு அணிகளுக்கும் இடையிலான இறுதிப்போட்டி இடம்பெற்றன.

விறுவிறுப்பாக இடம்பெற்ற இப்போட்டியில் இரண்டு அணிகளுமே ஒரு கோள்களும்  போடவில்லை பின்னர் பெனால்டி முறை வழங்கப்பட்டது. இதில் காஞ்சிரங்குடா ஜெகன் விளையாட்டுக்கழகமானது  வெற்றிக்கிண்ணத்தை தன்வசப்படுத்திக்கொண்டது.

இப் போட்டிக்கு மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவரின் செயலாளர், சிரேஷ்ட சட்டத்தரணி மங்களேஸ்வரி சங்கர் அவர்கள் பிரதம அதீதியாக சிறப்பித்திருந்தமை குறிப்பிடக்கத்தக்கது.

»»  (மேலும்)

4/20/2021

ஜனாதிபதி கோத்தபயா மட்டக்களப்பு வருகிறார்



 மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அழைப்பின் பெயரில்
06.05.2021 அன்று ஜனாதிபதி மட்டக்களப்புக்கு விஜயம் செய்யவுள்ளார்

ஜனாதிபதியின் மட்டக்களப்பு விஜயத்திற்கான ஏற்பாடுகளை செய்வதற்கான இணைப்பாளராக சட்டத்தரணி #மங்களேஸ்வரி_சங்கர் அவர்கள் நியமிக்கப்பட்டு வேலைத்திட்டங்கள் துரிதமாக இடம்பெற்றுவருகின்றன.

ஜனாதிபதியின் வருகையினை முன்னிட்டு ஜனாதிபதி வருகைதரவுள்ள இடங்களை பார்வையிடுவதற்கான கள விஜயம் இன்றைய தினம் இடம்பெற்றது.

இதன்போது ஜனாதிபதியின் இணைப்பாளர் இசுரு ஹேரத் உட்பட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டமை குறிப்படத்தக்கது.
»»  (மேலும்)

4/09/2021

சமூக நிறுவனங்களின் ஏற்பாட்டில் வெருகல் படுகொலை நினைவு தினம்






வெருகல் படுகொலையின் 17வது ஆண்டு நினைவேந்தல் இன்று மட்டக்களப்பு மாநகரின் இடம்பெற்றுள்ளது. இந்நிகழ்வை மட்/சமூக மேம்பாட்டு நிறுவனங்களின் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்தது.
சுமார் இருநூற்றுக்கும் அதிகமானோர் கலந்து கொண்டிருந்தனர்.

கிழக்கிலங்கை உயர் கல்வி மாணவர் ஒன்றியம் சார்பில் பத்திநாதன் அவர்கள் வரவேற்புரையுடன் நிகழ்வு ஆரம்ப யானது.
'கா' இலக்கிய  வட்டம் சார்பில் அதிபர் மணிசேகரன் அவர்கள் தலைமையுரை நிகழ்த்தினார்.பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி சிவரத்தினம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.



»»  (மேலும்)

4/05/2021

பிரம்படி தீவிலிருந்து தொடங்கும் நூறு நூலகங்கள்



'அடங்கமறு' அமைப்பானது கடந்த ஆண்டு ஒரு வேலைத்திட்டத்தை ஆரம்பித்தது.
மட்டக்களப்புப் பகுதியில் நூல் நிலையங்கள் அறவே இல்லாத,
புத்தகங்கள் மற்றும் வாசிப்பின் தேவையுள்ள 100 கிராமங்களைத் தேடியறிந்து அங்கே சிறிய அளவிலான நூலகங்களை உருவாக்குவது என்னும் பெருமுயற்சி இது.

இளையோர் கையில் நிர்வகிக்க கொடுப்பதும், வாசிப்பு, உரையாடல், தர்க்க விவாதங்கள் என்கிற வகையில் அறிவு நுகர்ச்சிக்கும் சிந்தனைக்குமான புதிய தளங்களை உருவாக்குவதுமே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

அந்த வகையில் விபுலானந்தர் நூலகம் என்கிற பெயரோடு நமது முதலாவது நூலகத்தை 29.08.2020 அன்று பிரம்படித்தீவில் உருவாக்கியுள்ளனர்.

புத்தகங்கள் அதிகமாகத் தேவைப்படுவதால் வாய்ப்புள்ள நண்பர்கள் புதிய நூல்களை வாங்கிக் கொடுத்தோ அல்லது உங்கள் சேகரிப்பிலுள்ள பழைய புத்தகங்களை நன்கொடையாக வழங்கியோ எமக்கு உதவி செய்யலாம்.

இந்த முயற்சி ஒரு சிறுபொறி.
பெருந்தீயாக எழுவதற்கு தோழமைகளின் பங்களிப்பும், ஆதரவுமே நாம் எதிர்பார்த்து நிற்கின்றனர் அடங்க மறு தோழமைகள்.

குறிப்பு: 
புத்தகங்கள் கொடுத்து உதவ விரும்பினால்
தொடர்புகொள்ளுங்கள்.
0777257905
0754141021
0772532296


»»  (மேலும்)

4/04/2021

கிழக்கு பிளவும் வெருகல் படுகொலையும் விட்டுச் சென்றவை


வெருகல் படுகொலை 17 வது நினைவு தினம்.10.04.2021


அன்றொருகாலம் தமிழீழ விடுதலை புலிகள் “அசைக்கமுடியாத” சக்திகளாய் இருந்தனர்.1976ம் ஆண்டு உருவாக்கப்பட்ட புலிகள் அமைப்பின் தலைவரான திருவேங்கடம் வேலுப்பிள்ளை பிரபாகரன் யாராலும் “வெல்லப்பட “முடியாதவர் “அனுமானுஷ” சக்தி படைத்தவர் என்கின்ற ஒளிவட்டங்களின் சொந்தக்காரராய் இருந்தார்.

இந்த புலிகள் அமைப்பானது தனது 27வருடகால வரலாற்றில் கடந்துவந்த சவால்களும், நெருக்கடிகளும் எண்ணற்றவை. ஆனால் அவையனைத்தையும் தாண்டி வென்று நின்றவர்கள்தான் புலிகள். ஆனால் 2004ம் ஆண்டு புலிகள் எதிர்கொள்ள நேர்ந்த “கிழக்கு பிளவு”அவர்களுக்கு மாபெரும் சவாலொன்றை விடுத்தது.

புலிகளின் தலைமை தளபதியும் கிழக்கு மாகாண பொறுப்பாளருமான கேர்ணல் கருணா அறிவித்த கிழக்கு பிளவே மேற்படி நெருக்கடிக்கு காரணமாயிற்று.

புலிகளின் வரலாற்றை புரட்டிபோடும் வல்லமை அந்த கிழக்கு பிளவிற்குள் ஒழிந்திருந்ததை இருந்ததை புலிகளால் அனுமானிக்க முடியவில்லை.

கிழக்கு மாகாணத்திலிருந்து உருவாகிய நெருக்கடிகளுக்கு முகம்கொடுப்பதில் புலிகள் தவறுக்குமேல் தவறிழைத்தனர். கிழக்கு பிளவை தாண்டிச்செல்லுதல் என்பதே கடைசிவரை புலிகளால் முடியாது போன ஒரே காரியம் என வரலாறு  தன்பக்கங்களில்  குறித்துக்கொண்டது. அதன் காரணமாக 2004ம் ஆண்டை தொடர்ந்துவந்த ஆண்டுகள் புலிகளின் வீழ்ச்சிகாலங்களாக அமைந்தன.

வடக்கு, கிழக்கு மாகாணங்களிடையே நீண்ட காலமாக தொடர்ந்துவந்த பிரதேசரீதியான ஏற்றத்தாழ்வுகளே இந்த கிழக்கு பிளவின் அடிப்படையாக இருந்தது.

எனினும் 2002ம் ஆண்டு உருவாக்கப்பட்ட சமாதான ஒப்பந்தத்தின் பின்னர் புலிகள் உருவாக்கிய நிழல் நிர்வாக கட்டமைப்பில் நியமிக்கப்பட்ட 32 துறைசார் பொறுப்பாளர்களும் வடக்கு மாகாணத்தையே சேர்ந்தவர்கள். கிழக்கு மாகாண மக்களும் போராளிகளும் வடக்கு தலைமையால் வஞ்சிக்கப்பட்டுவிட்டார்கள்.

என்கின்ற குற்றச்சாட்டே இந்த கிழக்குபிளவிற்கு உடனடி காரணமாயிற்று புலிகளது இராணுவ வெற்றிகளுக்கு முதுகெலும்பாக இருந்த ஜெயந்தன் படைபிரிவும், அதன் தளபதி கருணாம்மானும் சுமார் ஆறாயிரம் போராளிகளுடன் பிரிந்து நின்று கிழக்கு பிளவை அறிவித்தனர்.

கிழக்கு மாகாணத்தின் சார்பில் அவர்கள் எழுப்பிய நியாயமான கோரிக்கைகளை பல தளபதிகளும் புத்திஜீவிகளும் பொதுமக்களும் ஆதரித்து ஆர்ப்பாட்டங்களையும் ஊர்வலங்களையும் கிழக்கு மாகாணமெங்கும் நடாத்தினர். ஆனால் அந்த மக்களின் குரல்களுக்கு புலித்தலைமை கிஞ்சித்தேனும் மதிப்பு வழங்கவில்லை.

“கருணாம்மான் தமிழ் தேசிய துரோகி “என்றும் அவர் ஒரு “தனிநபர்”என்றும் முழு பூசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் எத்தனிப்பில் புலிகள் இறங்கினர்.அதுமட்டுமன்றி புலிகளின் முதுகெலும்பாக இருந்த கிழக்கு போராளிகள் மீது படையெடுத்து அவர்களை அழித்தொழிக்கும் முயற்சியில் புலிகள் ஈடுபட்டனர்.

2004ம் ஆண்டு மார்ச் மாதம் 4ம் திகதி அறிவிக்கப்பட்ட கிழக்கு பிளவானது யாழ்-மேலாதிக்கத்தின் இராணுவ வடிவமான  தமிழீழ  விடுதலை   புலிகளால் மூர்க்கத்தனமாக கையாளப்பட்டமை மாபெரும் படுகொலைக்கு வழிவகுத்தது.

     கிழக்கு பிளவின் மீதான புலிகளது இந்த மிலேச்சத்தனமான அணுகுமுறைக்கு ஊக்கமளிப்பவர்களாகவும் ஆலோசனை வழங்குவர்களாகவும் தமிழ் புத்திஜீவிகளும், பத்திரிகையாளர்களும், தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் செயற்பட்டனர்.

இது அன்று தமிழ் இனத்துக்கு கிடைத்த பெரும் சாபமாகும். எதிரி என்று சொல்லப்பட்ட இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த முடிந்தவர்களுக்கு தமது சொந்த போராளிகளுடன்,நேற்றுவரை ஒன்றாகவிருந்து உணவுண்டவர்களுடன் பேச தெரியாதுபோனது.

இதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் வெருகல் ஆற்றங்கரையில் மிகப்பெரிய படுகொலையொன்றை வன்னியிலிருந்து வந்த பிரபாகரனின் படையினர் நிகழ்த்தினர். பிரிந்து செல்கிறோம், ஜனநாயக பாதைக்கு திரும்புகிறோம், சரணடைகிறோம் என்று என்று சொன்ன கிழக்கு போராளிகள் சுமார் 210 பேர் கோரத்தனமாக படுகொலை செய்யப்பட்டனர்.

      பெண் போராளிகள் மானபங்க படுத்தப்பட்டு அவர்களது உடலங்கள் சின்னபின்ன படுத்தப்பட்டன. அந்த பிரதேசத்து கிராமவாசிகள் எல்லோரும் துரத்தியடிக்கப்பட்டு எவரது உடல்களும் புதைக்கப்படாமலும் அடையாளம் காணப்படாமலும் சுமார் ஒரு வாரத்துக்கு வெருகல் பிரதேசம் நாற்றமெடுத்து கிடந்தது.

இத்தனைக்கும் ஏப்ரல் 10ல் இந்த வெருகல் படுகொலை நடாத்தப்பட்டபோது இலங்கையில் நோர்வே தலைமையிலான சர்வதேச கண்காணிப்பாளர்கள் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

யுத்த நிறுத்தம் அமுலில் இருந்தது. இந்த படுகொலையை  தொடர்ந்து கிழக்கு மாகாணம்   எங்கும் புகுந்த புலிகள் கிழக்கு பிளவை ஆதரித்த புத்திஜீவிகளை கொன்று வீசினர் ராஜன் சத்திய மூர்த்தி, கிங்ஸ்லி இராசநாயகம்,தில்லைநாதன் என பலரும் கொல்லப்பட்டனர்.

இந்த நிகழ்வுகளின் தொடராக கிழக்கு போராளிகள் பிரபாகரனது தலைமையிலான புலிகளுடன் மோதலில் ஈடுபட நிர்ப்பந்திக்கப்பட்டனர். தனித்த கிழக்குமாகாண கோரிக்கை வலுப்பட்டது. கிழக்குப்போராளிகள் தமது போராட்டத்தின் ஊடாக   வன்னிபுலிகளை கிழக்கிலிருந்து துரத்தியடிப்பதில் தொடர்ந்து வந்த ஆண்டுகளில் வெற்றிபெற்று அதன் பின்னர்  ஜனநாயக பாதையில் காலடி வைத்தனர்.

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் எனும் அரசியல் கட்சி கிழக்கிலிருந்து உதயமானது.வடக்குக்குள் மட்டும் குறுக்கப்பட்ட புலிகளின் ஆயுள் 2009ம் ஆண்டு அரசபடைகளால் முடித்து வைக்கப்பட்டது.

– மட்டுநகரிலிருந்து எழுகதிரோன்
»»  (மேலும்)

களுதாவளை பிரதேச சபைக்கு கடன் கொடுத்த காத்தான்குடி


கடந்த 16.03.2021 அன்று களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டத்தில் களுதாவளை பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் பல கோரிக்கைகளை பாராளுமன்ற உறுப்பினரிடம் முன்வைத்தார்.

அதில் ஒரு கோரிக்கை
கடற்கரை சுத்தப்படுத்தலுக்கு கடற்கரையை சுத்தப்படுத்தும் இயந்திரம் இல்லை என்பது. அப்பொழுது உடனடியாகவே காத்தான்குடி நகரசபையுடன் தொடர்பினை ஏறட்படுத்திய பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் ஒரு வாரத்திற்கு இலவசமாக அவ் இயந்திரத்தை பாவிப்பதற்கான அனுமதியினை பெற்றுக்கொடுத்திருந்தார்.

ஆனால் இரு வாரங்களில் பின்னரே பிரதேச சபை வேலைகளை ஆரம்பித்துள்ளது.

பிரதேச சபைகள்   ஆமைபோல் வேகமாகத்தான் வேலை செய்கின்றன.
»»  (மேலும்)

4/03/2021

வாகரையில் மாபெரும் நிலக்கடலை பதனிடும் நிலையம்


 
நேற்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் தந்த விவசாய அமைச்சர் கௌரவ மஹிந்தானந்த அலுத்கமகே அவர்களினால் விவசாயத்தை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் ரூபா 147 மில்லியன் ரூபாய் செலவில் கோறளைப்பற்று வடக்கு வாகரை  பிரதேச செயலகத்தில் நிலக்கடலை பதப்படுத்தல்நிலையம் திறந்து வைக்கப்பட்ட்டது. 
  
அதேபோன்று  ஏற்றுமதிக்காக வழங்கப்பட்ட ரூபாய் 350 மில்லியன் பெறுமதியான உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டு உற்பத்தி செய்யப்படும் பச்சை வெள்ளரிக்காய், மிளகாய், தர்பூசணி என்பனவற்றை ஏற்றுமதிக்கு முன் பகுதியாக பதப்படுத்துவதற்கு ரூபா 600 மில்லியன் செலவில்  நிர்மாணிக்கப்படவுள்ள தொழிற்சாலைக்கான அடிக்கல்லும் நடப்பட்டது. 

அத்துடன் கௌரவ விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே அவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாய செயற்பாடுகளை அவதானிக்கும் வண்ணம் கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பல இடங்களுக்கு  விஜயம் தந்து நிலைமைகளை அவதானித்ததுடம் அங்குள்ள மக்க்குக்கு எதிர்காலத்தில் விவசாய விருத்திக்கு தேவையான அனைத்து செயற்பாடுகளையும் தான் முன்னெடுப்பேன் என்ற உறுதிமொழியினை வழங்கியதுடன் அங்குள்ள கமநல அமைப்புக்களுக்கு 4 உளவு இயந்திரங்களையும் வழங்க இருப்பதாகவும் குறிப்பிட்டார். 

அத்துடன் அங்கு பயன்படுத்தப்படாத ஏராளமான காணிகளையும் உற்பத்திகளை ஊக்குவிக்கும்
பொருட்டு இளம் தொழில் முயற்சியாளர்களுக்கு நீண்ட கால குத்தகை அடிப்படையில் வழங்க வேண்டும் என்ற எமது கௌரவ தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் கோரிக்கையினை ஏற்று மிக விரைவாக அங்குள்ள காணிகளை பகிர்ந்தளிக்க நவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

தற்போதைய கொவிட் சூழலிலும் அரசாங்கம் நாட்டின் பொருளாதாரத்தினை முன்னேற்றும் வண்ணம் உள்ளூர் உற்பத்தி, விவசாயம் போன்றவற்றை விருத்தி செய்து தன்னிறைவு அடையும் வண்ணமாக பல செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது.

அதில் குறிப்பாக கிராமிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதில் தீவிரமாக  செயற்பட்டு வருகின்றது. அதன் மூலமாக 25,000 மேற்பட்ட இளைஞர் யுவதிகளுக்கு தொழில்வாய்ப்புக்களை நாடளாவிய ரீதியில் வழங்குவதற்கான வேலைத்திட்டங்களும் தற்போது நடைபெற்றுக் வருகின்றது.
»»  (மேலும்)