வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் நடிகர் ரஜினிகாந்த் யாருக்கும் ஆதரவு அளிக்கமாட்டார் என ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி சுதாகர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரத்தில், அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சி, மக்கள் நிதி மய்யம் உள்ளிட்ட கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே, 2021 சட்டமன்ற தேர்தலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்த், உடல் நலம் காரணமாக அரசியலுக்கு வரமாட்டேன் என்று திட்டவட்டமாக அறிவித்துவிட்டார். இதனால், அதிர்ச்சியடைந்த ரஜினி ஆதரவாளர்கள், இனியும் ரஜினியை நம்பி இருக்க முடியாது என்று பல மாவட்ட நிர்வாகிகள் வேறு கட்சிகளில் இணைந்தனர்.
இதன் காரணமாக, ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ளவர்கள் ஏதேனும் அரசியல் கட்சியில் இணைந்து செயல்பட விரும்பினால் ரஜினி மக்கள் மன்றத்திலிருந்து ராஜினாமா செய்துவிட்டு அவர்கள் விருப்பம்போல் எந்த அரசியல் கட்சியில் வேண்டுமானாலும் இணைந்து கொள்ளலாம். ரசிகராக இருக்க வேண்டும் அவர்கள் வேறு கட்சிகளில் இணைந்தாலும், அவர்கள் எப்போதும் நம் அன்பு தலைவரின் ரசிகர்கள்தான் என்பதை ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்கள் யாரும் மறந்துவிடக் கூடாது என்று கடந்த மாதம் அறிக்கை வெளியிடப்பட்டது.
இந்நிலையில், ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுக்கு நிர்வாகி சுதாகர் தொலைபேசியில் அளித்த தகவலின்படி, ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி சுதாகர் கூறுகையில், ரஜினிகாந்த் இந்த சட்டமன்றத் தேர்தலுக்கு 100% வரமாட்டார் எனவும், தேர்தலில் ரஜினிகாந்த் யாருக்கும் ஆதரவு அளிக்கமாட்டார் என்று தெரிவித்துள்ளார். மேலும், ரஜினிகாந்தின் மனைவி லதா கட்சி தொடங்குவதாக வரும் தகவல்களில் உண்மையில்லை எனவும், அர்ஜுன மூர்த்தி கட்சி தொடங்கினால் ரஜினி மக்கள் மன்றத்துக்கும் அவருக்கும் தொடர்பு இல்லை என்றும் சுதாகர் தெரிவித்துள்ளார்.
0 commentaires :
Post a Comment