1/07/2021

கஜேந்திரர்களின் தெருச்சண்டை அரசியல்





முன்னணி, ‘கஜேந்திரர்கள் அணி எதிர் மணிவண்ணன் அணி’  என்கிற செங்குத்துப் பிளவை இன்று சந்தித்து நிற்கின்றது. யாழ். மாநகர சபை மற்றும் நல்லூர் பிரதேச சபைகளில் மணி ஆதரவு அணி, கஜேந்திரர்களின் நிலைப்பாடுகளுக்கு எதிராக நின்று பெற்றிருக்கின்ற வெற்றி அதற்கான அண்மைய சான்று. 


முன்னணியின் ஆதரவாளர்கள் இன்றைக்கு இரண்டு அணிகளாக பிரிந்து நின்று சமூக ஊடகங்களில் ஒருவரை ஒருவர் துயிலுரிந்து கொண்டிருக்கிறார்கள். கடந்த காலத்தில் என்னென்ன தகிடுதித்தங்களைச் செய்தோம், யாரின் மீது எவ்வாறான அவதூறுகளையெல்லாம் திட்டமிட்டு உருவாக்கி பரப்பினோம், யாரை எதற்காக அச்சுறுத்தினோம் என்பது தொடங்கி அனைத்து தரம் தாழ்ந்த வேலைகள் பற்றியும் எந்தவித சங்கோஜமும் இன்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். 

முன்னணியின் தலைமைத்துவம் இவ்வாறான தரம் தாழ்ந்த வேலைகளை எந்தவித அறமும் இன்றி கடந்த காலங்களில் அனுமதித்தது. மாற்றுக் கட்சிகள், அமைப்புக்கள், ஊடகவியலாளர்கள், கருத்துருவாக்கிகள் என்று எந்தவித பாகுபாடுமின்றி ‘துரோகிகள்’ அடையாளம் தொடங்கி அவதூறுகள் வரையில் வகை தொகையின்றி போலி பேஸ்புக் கணக்குகளில் பரப்பினார்கள். அரசியல் விமர்சனத்துக்கும் அவதூறுக்கும் இடையிலான வித்தியாசம் தெரியாத நிலையொன்றை, முன்னணியை நோக்கி திரண்ட இளைஞர்களிடம் போதித்தார்கள். கஜேந்திரர்கள், மணி தொடங்கி அதற்கான பொறுப்புக்களை முன்னணியின் அனைத்து சிரேஷ்ட உறுப்பினர்களும், ஆலோசகர்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும். 

இன்றைக்கு முன்னணியின் இரு அணி ஆதரவாளர்களும் மிகுந்த மன உளைச்சலோடு இருக்கிறார்கள். அது, ஒருவரை ஒருவர் துயிலுரிந்து கண்ட களைப்பினால் வருவது. முன்னணியின் இளைஞர்களை நோக்கி, கடந்த காலங்களில் அரசியல் அறமொன்றை பேணுங்கள் என்று பலரும் சொல்லி வந்திருக்கிறார்கள். அப்போதெல்லாம், கும்பல் மனநிலையில் செயற்பட்டு தங்களின் செயற்பாடுகளை நியாயப்படுத்தி வந்திருக்கிறார்கள். இரு அணிகளாக பிரிந்து விட்ட போதிலும், கடந்த காலத்தில் எவ்வாறான பழக்கத்தை அரசியலாக நம்பி பழகிக் கொண்டார்களோ, அதிலிருந்து அவர்களினால் மீள முடியவில்லை. 

அரசியல் என்பது அவதூறுகளினால் ஆனது என்ற நிலைப்பாட்டினை முன்னணி எந்தவித சங்கடமும் இன்றி விதைத்தது. தம்முடைய கருத்துக்களை, நிலைப்பாட்டினை ஆதரிக்கும் வரையில்தான், அவர்கள் குறித்து பேச மாட்டோம். கொஞ்சமாக மாற்றுக் கருத்தினையோ, நிலைப்பாட்டினையோ வெளிப்படுத்தினாலே, அவர்களை நோக்கி அவதூறு எனும் கொடுங்கரங்களை நீட்டுவோம் என்பதுதான் முன்னணியின் ஒற்றை நிலைப்பாடு. 

முன்னணிக்குள் கற்றவர்கள், புத்திஜீவிகள் என்ற பெயரில் இருக்கின்ற பலரும் இவ்வாறான நிலைப்பாடுகளை பெருமளவு ஊக்குவித்தார்கள். சொந்தப் பெயர்களில் அறம் போதித்துக் கொண்டு போலிக் கணக்குகளில் அசிங்கங்களை அரங்கேற்றினார்கள். (இன்னமும் அப்படியே இருக்கிறார்கள்.)  அதுவும் முன்னணியின் இளைஞர்களை ஏவல் நாய்களாகவே செயற்பட வைத்தார்கள். இன்றைக்கு அவர்கள் வளர்த்து விட்ட அவதூறு அரசியல் அவர்களை பழிவாங்கிக் கொண்டிருக்கின்றது. பொது வெளியில் பல்லிளிக்க வைக்கின்றது. 

எந்தக் கட்சியாக, அமைப்பாக, தரப்பாக இருந்தாலும் அரசியலை குறைந்தபட்ச அறத்தோடாவது முன்னெடுக்க முனையுங்கள். அதுதான் அரசியல் மீதான நம்பிக்கையை விதைக்கும். இல்லையென்றால், இவ்வாறான அசிங்கங்களைத்தான் அரங்கேற்றும். 

(முன்னணியின் அவதூறு அரசியலுக்கு எந்த வகையிலும் சளைத்ததல்ல இன்றைய தமிழரசுக் கட்சியின் அரசியல். அது பற்றி நிறையத் தடவைகள் சுட்டிக்காட்டியிருக்கிறேன். தேவைப்படுபவர்கள், கடந்த காலப் பத்திகளை வாசியுங்கள்.)

 நன்றி *முகநூல் புருஷோத்தமன் தங்கமயில்

0 commentaires :

Post a Comment