1/28/2021

கூட்டமைப்பினர் சிறையில் வாடும் முன்னாள் போராளிகளையிட்டு பேச முன்வராதது ஏன்? - இனியபாரதி

'ஐக்கிய நாடுகள் சபைக்குச் சென்று மரணடைந்தவர்களைத் தேடுவதை விடுத்து, தற்போது உயிரோடு வாழ்ந்து வருபவர்களின், குறிப்பாக சிறையில் வாடும் முன்னாள் தமிழ்ப் போராளிகளுக்கு எதிர்காலத் தீர்வைப் பெற்றுக் கொடுக்க முன்வாருங்கள்' என்று முன்னாள் ஜனாதிபதியின் இணைப்பாளரும், கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினருமான குமாரசாமி புஷ்பகுமார்(இனியபாரதி) தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வேண்டுகோள் விடுத்தார்.   


காரைதீவிலுள்ள அம்பாறை ஊடக மையத்தில் நேற்றுமுன்தினம் மாலை அவர் நடத்திய ஊடக சந்திப்பிலேயே மேற்கண்டவாறு வேண்டுகோள் விடுத்தார்.

"நான் திட்டமிட்ட பழிவாங்கல் காரணமாக சிறைக்குச் சென்றிருந்தேன். இதுவரை என் மீது நீதிமன்றில் 11வழக்குகளைத் தொடுத்துள்ளார்கள். அனுராதபுரம், கொழும்பு, காலி என பல சிறைச்சாலைகளுக்கும் சென்று தற்போது பிணையில் வந்துள்ளேன். அங்குள்ள முன்னாள் போராளிகள் படும் துயரம், கஷ்டங்கள் சொல்லில் அடங்காதவை.

மரணமடைந்தவர்களைப் பற்றி பேசுவோர் எம் மண்ணிற்காகப் போராடிய, உயிரோடு இருக்கின்ற முன்னாள் போராளிகளையிட்டு பேச முன்வராதது ஏன்? 'சிறையில் வாடும் முன்னாள் போராளிகளை விடுதலை செய்கிறேன், அனைவரும் என்னோடு இணைந்து பயணிக்க வாருங்கள்' என்று அன்று மஹிந்த ராஜபக்ஷ தமிழ் தேசியக் கூட்மைப்பினரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். அன்று கூட்டமைப்பினர் அப்படிச் செய்திருந்தால் இன்று அவர்கள் விசாரணையின்றி வீணாக சிறையில் வாடுவதை தவிர்த்திருக்கலாம்.

30 வருட காலம் போராட்டத்தை வைத்துஅரசியல் செய்தார்கள். இன்று காணாமல் போனோர் மற்றும் தமிழ்சிறைக் கைதிகளின் விடுதலை என்று கூறி அரசியல் செய்கிறார்கள்.

0 commentaires :

Post a Comment