1/24/2021

நூல்களூடாக சில நினைவுகள்- 'கிளிவெட்டி' குமாரதுரை




இலங்கையின் அரசியல் வரலாற்றில் குமாரதுரை என்னும் மனிதரும் தன்னாலான சில தடயங்களை விட்டுச்சென்றுள்ளார். எவ்விதமான அரசியல் பதவிகளையும் வகித்திராதபோதும் சில களப்பணிகளிலும் கருத்துருவாக்க  முயற்சிகளிலும் குமாரதுரையவர்கள் ஏற்படுத்திய அதிர்வுகள் மறக்கமுடியாதன. 

1939ஆம் ஆண்டு ஒரு சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்த இவர் 1956ஆம் ஆண்டு  அரசகரும மொழிசட்டம் கொண்டுவரப்பட்ட வேளைகளில் உருவான தமிழ் மொழி எழிச்சியினால் கவரப்பட்டு தமிழரசு கட்சியின் ஊடாக தமது அரசியல் வாழ்வை  ஆரம்பித்தவர். 

1960 ஆம் 70ஆம் ஆண்டுகாலப்பகுதிகளில் ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள்,பகிஷ்கரிப்புக்கள், என்று இடம்பெற்ற ஒத்துழையாமை செயற்பாடுகளில் ஒரு முன்னணி வீரனாக திருகோணமலையில் பிரகாசித்தவர் இவர்.

திருகோணமலை மாவட்டம் கிளிவெட்டியை பிறப்பிடமாக கொண்ட இவர் இலங்கையில் ஆயுதப்போராட்டம் உருவான ஆரம்ப காலங்களில் பல்வேறு தடவைகளில் ராணுவத்தால் கைதாகி 1975-1976ஆம் ஆண்டுகளில் மட்டக்களப்பு சிறையில் 11 மாதங்களும் 1984-1985ஆம் ஆண்டுகளில் வெலிக்கடை சிறையில் இரு வருடங்களுக்கு மேலாகவும்  சிறைவாசங்களையும் சித்திரவதைகளையும் அனுபவித்தவர்.

1983ஆம் ஆண்டு இடம்பெற்ற வெலிக்கடை சிறை படுகொலையின் பின்னர் எஞ்சிய தமிழ் கைதிகளின் பாதுகாப்பு கருதி  மட்டக்களப்பு சிறைக்கு அவர்கள் மாற்றப்பட்டிருந்தனர். இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சிறையை உடைத்து அரசியல் கைதிகளை மீட்கும் திட்டத்தை தமிழீழ விடுதலை போராளிகள் மேற்கொண்டனர். இந்த சிறையுடைப்பில் தப்பித்த பலபோராளிகளை மட்டக்களப்பில் இருந்து காடுகள் மலைகளை கடந்து திருகோணமலை வரை பாதுகாப்பாக கொண்டுசெல்லும் பணியில் பங்கெடுத்தவர்களுள் குமாரதுரை  அவர்களும் ஒருவராக இருந்திருக்கின்றார்.

இறுதியாக அவர் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழல் வந்தபோது பல்வேறு நெருக்கடிகளைக்கடந்து டென்மார்க் நாட்டில் அரசியல் தஞ்சம் பெற்றார்.

அங்கிருந்துகொண்டும் புகலிட எழுத்து முயற்சிகளிலும் ஊடகப்பணியிலும் தன்னை ஈடுபடுத்தியவண்ணமே இருந்தார். விழிப்பு,மகாவலி போன்ற இணையத்தளங்களை  தனியாகவே முன்னின்று நடத்தினார். அதேபோன்று ரி.பி.சி, ரி.ஆர்.ரி  போன்ற புகலிட வானொலிகளின்  ஊடாக  யுத்தம் நிறுத்தப்படவேண்டும் என்றும் யுத்த சூழலில் இருந்து நாடும் மக்களும்  மீட்கப்பட வேண்டும் என்றும் தொடர்ச்சியாக குரல்கொடுத்துவந்தவர்.

அதேபோன்று 2004 ஆம் ஆண்டில்  புலிகளுக்குள்  ஏற்றப்பட்ட கிழக்கு பிளவின் ஊடாக பல்லாயிரம் போராளிகள் ஜனநாயகப்பாதைக்கு திரும்பிய நிகழ்வை ஆதரித்து வரவேற்றார். அதே போல அந்த பிளவிலிருந்து உருவாகிய தமிழ் மக்கள் விடுதலை புலிகள் என்னும் புதிய அரசியல் கட்சியின் உருவாக்கத்தை ஆதரித்து ஐரோப்பியநாடுகளில்  தீவிர பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டார். 

இறுதியாக தனது நீண்ட கால அரசியல் வரலாற்று அனுபவங்களின் முடிவாக "தமிழ் தேசியம் என்பது யாழ்ப்பாண மேட்டுக்குடிகளின் நலன்களிலேயே  பின்னிப்பிணைந்தது"   என்பதனை அம்பலமாக்கும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டார். அதனை கிழக்கு மாகாண மக்களுக்கு எடுத்து சொல்வதில் தமிழ் மக்கள் விடுதலை புலிகளுடன் இணைந்து தனது தள்ளாத வயதிலும் கிழக்குமாகாணத்தின் முலை முடுக்குகள் எங்கும் களப்பணியாற்றினார்.  அதனை தனது வரலாற்று கடமையாக நம்பினார்.

அதற்காகவே தன்னால் முடிந்தவரை தனது இறுதி காலங்களில் இரு நூல்களை எழுதி வெளியிட்டார். "இலங்கை அரசியல் வரலாறு-இழப்புகளும் பதிவுகளும்"  ,"எனதான வாழ்வும் மண்ணும்" என்பவையே அவையாகும்.


இலங்கையின் வரலாறு என்பது எப்படி தமிழரின் வரலாறுகளை புறமொதுக்கி  சிங்கள மேலாதிக்க வரலாறாக கட்டியமைக்கப்பட்டுள்ளதோ அதேபோன்றுதான் ஈழத்தமிழர் வரலாறு என்பதும் கிழக்கு தமிழர்களை புறமொதுக்கி யாழ்ப்பாண மேலாதிக்கத்தின் வரலாறாக கட்டியமைக்கப்பட்டுள்ளது. என்பதனை  விலாவாரியாக தருகின்றன இவ்விரு நூல்களும். 

  ஆட்சிக்காலங்ளையும் யாப்புகளையும் வரிசைப்படுத்தி தொகுத்தளிக்கும் நூலாகவன்றி ஒவ்வொரு அரசியல் மாற்றத்தின் பின்னணிகளையும் அவை ஏற்படுத்திய சமூக பொருளாதார மாற்றங்களையும் பேசுகின்றது இழப்புகளும் பதிவுகளும் என்கின்ற நூல். அதுமட்டுமன்றி சுமார் நூறாண்டுகாலத்தில் நாம்  கடந்துவந்த பாதைகளை கிழக்கு மாகாண பிரசையொருவனின் பார்வையிலிருந்து விளக்குகின்ற புதியதொரு வரவாக இந்நூல் அமைந்திருப்பது சிறப்பாகும். 

குமாரதுரையவர்கள் இறந்து நேற்றுடன் ஈராண்டுகள்  நிறைவு பெறுகின்ற தருணத்தில் அவர் விட்டுச்சென்றுள்ள இந்த இரு நூல்களும்   வரலாற்று ஆர்வமுள்ள இளம் தலைமுறையினரின்  கவனத்தை கோரி நிற்கின்றன. 








0 commentaires :

Post a Comment