1974ஆம் ஆண்டில் நண்பர்களோடு இணைந்து 'க்ரியா' பதிப்பகத்தைத் துவங்கினார். சுந்தர ராமசாமியின் 'ஜே.ஜே. சில குறிப்புகள்', அம்பை எழுதிய 'வீட்டின் மூலையில் ஒரு சமையலறை', இமயத்தின் 'கோவேறு கழுதைகள்', பூமணியின் 'அஞ்ஞாடி', ந. முத்துச்சாமியின் 'மேற்கத்திக் கொம்பு மாடுகள்' உள்ளிட்ட மிகச் சிறந்த புனைவுகளையும் ஆல்ஃபர் காம்யுவின் 'அந்நியன்', காஃப்காவின் 'விசாரணை', எக்ஸ்பரியின் 'குட்டி இளவரசன்' போன்ற மொழிபெயர்ப்புகளையும் இவரது மேற்பார்வையின் கீழ் க்ரியா வெளியிட்டது.
ஐராவதம் மகாதேவனின் ஆய்வு நூலான Early Tamil Epigraphy from the Earliest Times to the Sixth Century A.D. புத்தகத்தை ஹாவர்ட் பல்கலைக்கழகத்துடன் இணைந்து வெளியிட்டது இவருடைய சாதனைகளில் ஒன்று.
க்ரியாவின் தற்கால தமிழகராதி, எஸ். ராமகிருஷ்ணனின் வாழ்நாள் சாதனைகளில் ஒன்று.
தற்கால பொது எழுத்துத் தமிழில் பயன்படுத்தப்படும் சொற்களைத் தொகுத்து, அவற்றுக்குப் பொருள் அளிக்கும் நோக்கில் க்ரியா அகராதி திட்டம் உருவாக்கப்பட்டது.
1985ல் இந்த அகராதிக்கான பணிகள் துவங்கப்பட்டு, 1992ல் முதல் பதிப்பு வெளிவந்தது. 12 முறை மறு அச்சாக்கம் செய்யப்பட்ட பிறகு, விரிவாக்கப்பட்ட இரண்டாம் பதிப்பு 2008ல் வெளியானது. அந்த அகராதியின் மேலும் விரிவாக்கப்பட்ட மூன்றாம் பதிப்பு எஸ். ராமகிருஷ்ணன் மருத்துவமனையில் இருக்கும்போது, அவர் மறைவுக்கு சில நாட்களுக்கு முன்பாக வெளியிடப்பட்டது. ப்ரெஞ்ச் மொழியிலிருந்து வெ. ஸ்ரீராம் மொழிபெயர்ப்பில் நேரடியாக பல படைப்புகளை க்ரியா கொண்டு வந்திருக்கிறது.
0 commentaires :
Post a Comment