பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் வேரூன்ற கடும் முயற்சிகள் செய்கிறது. நிறைய பணம் செலவு செய்கிறது. பல்வேறு மாவட்டங்களிலும், நகரங்களிலும் சிற்றூர்களிலும் ஆட்களை பிடித்து போஸ்டர்கள் ஒட்டுவது, பேனர்கள் வைப்பது, தோரணங்கள் கட்டுவது என வேலை பார்ப்பதை நண்பர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொள்கிறார்கள். தங்கள் கட்சி ஒன்று இருக்கிறது என்பதை மக்களுக்கு காட்சிப்படுத்துவதில் வெற்றியடைந்து வருகிறார்கள். ஆனால் அவர்களுடைய பிரச்சினை எதை வைத்து அரசியல் செய்வது என்பதில்தான் அடங்கியுள்ளது.
தமிழக மக்களிடம் உணர்வுரீதியாக தாக்கம் செலுத்தும் சமூக நீதி பிரச்சினைகளில் அவர்கள் எதிர்மறையாக வில்லன் வேடம் போடுகிறார்கள். நீட்டால் பாதிக்கப்பட்ட கிராமப்புற மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் 7.5% உள் ஒதுக்கீடு என்ற முயற்சிக்கே ஆளுனர் அனுமதி தராமல் இழுத்தடித்து தனக்கும், தன்னை நியமித்த பாஜக ஆளும் மத்திய அரசிற்கும் இழுக்கை தேடிக் கொண்டார். அவருக்கு எதிராக தி.மு.க போராட்ட த்தில் இறங்கியது. இப்படி மக்களை அதிருப்திக்குள்ளாக்கும் காரியங்களை செய்துவிட்டு மோடி பட பேனர்களை வைத்துவிட்டால் அரசியலில் வெல்லலாம் என்று நினைக்கிறார்கள். முன்னம் ஒரு கட்டுரையில் சொன்னபடி பரிதாபமான அரசியல் இது.
குஷ்புவை நோக்கி கவனம் ஈர்ப்பது எப்படி?
குஷ்பு போன்ற பிரபலமான முன்னாள் திரை நட்சத்திரத்தை தங்கள் கட்சியில் சேர்த்தது உண்மையாகவே தங்கள் கட்சிக்கு வலுவூட்டும் என்று பாஜகவினர் நினைக்கிறார்கள் போலிருக்கிறது. குஷ்பு முன்னணி நடிகையாக இருந்த காலத்திற்குப் பிறகு நக்மா, சிம்ரன், திரிஷா, நயன்தாரா, தமன்னா என்று பல பிரபல நடிகைகள் முன்னணிக்கு வந்து விட்டார்கள். இதில் சிம்ரன் திரைப்பட வாய்ப்புகள் குறைந்த பிறகு 2006 தேர்தலில் அ.இ.அ.தி.மு.க-விற்கு பிரசாரம் செய்தார். அவரைக் காண கூட்டம் திரண்டது. ஆனால் கட்சி தோற்றது.
அதற்கடுத்த 2011 தேர்தலில் புகழின் உச்சத்தில் இருந்த நகைச்சுவை நடிகர் வடிவேலு தி.மு.க-விற்காக பிரசாரம் செய்தார். சென்ற இடமெல்லாம் கூட்டம் திரண்டது. கட்சி தேர்தலில் தோற்றது. இது போன்ற பல உதாரணங்கள் இருந்தால் கூட ஏதோ ஒரு காரணத்தால் குஷ்பு மக்களை ஈர்த்துவிடுவார் என்று ஒரு நம்பிக்கை பாஜகவில் நிலவுகிறது.
இந்த நம்பிக்கையின் அடிப்படையில் பாஜக ஒரு போராட்ட நாடகத்தை உருவாக்கியது. விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் ஒரு இணைய கருத்தரங்கத்தில் மனுஸ்மிருதியின் கருத்துக்களை விவரித்ததிலிருந்து ஒரு சிறிய துணுக்கை வெட்டியெடுத்து பரப்பிய பாரதிய ஜனதா கட்சியினர் அவர் பெண்களை அவமதித்து விட்டார் என்று அவர் மீது காவல்துறையில் புகார் அளித்தது. குஷ்பு தலைமையில் அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டம் நடத்தியது. அதாவது மனுஸ்மிருதியின் கருத்தை அவர் சுட்டிக் காட்டி கண்டித்ததை அவரே கூறியதாக கற்பித்து ஒரு போராட்டம். இதன் மூலம் தி.மு.க கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தலாம், குஷ்புவை நோக்கி கவனத்தை ஈர்க்கலாம் என்பன போன்ற நோக்கங்கள் செயல்பட்டிருக்கலாம்.
சிறுத்தையை சீண்டலாமா?
திருமாவளவன் முப்பதாண்டுகளாக ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலைக்காக, சமூக நீதிக்காக அரசியல் செய்து வருபவர். அம்பேத்கர்-பெரியார் கருத்தியலை அடியொற்றி ஜாதீய ஏற்றத்தாழ்வு, பெண்ணடிமைத்தனம் போன்ற பிற்போக்கு நிலைகளை கடுமையாக எதிர்த்து போராடி வருபவர். மிகவும் தெளிவாகவும், தீர்க்கமாகவும் இலட்சியங்களையும், நடைமுறை அரசியலையும் இணைத்துப் பேசி, செயலாற்றி வருபவர். அவர் அரசியல் முதிர்ச்சிக்காக அனைத்து தரப்பினராலும் பாராட்டப்படுபவர். அவர் எதற்காக பெண்களை கொச்சைப்படுத்தியோ, இழித்தோ, பழித்தோ பேசப் போகிறார்? அதற்கான காரணம் ஏதேனும் வேண்டுமல்லவா? அவர் சனாதன தர்மத்தை ஆதரிப்பவர் என்றால் இன்று பெண்கள் படிதாண்டி விட்டார்கள் என்றெல்லாம் குறைபட சாத்தியம் இருக்கிறது. அவரோ மிகவும் தீர்க்கமாக முற்போக்கு அரசியல் பேசுபவர். அவர் பெண்களை இழிவு படுத்தி பேசினார் என்றால் யாராவது நம்புவார்களா?
இந்த விஷயத்தில் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் குஷ்புவை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் மகளிரணி போராடியது குறிப்பிடப் படுகிறது. இது பழைய விரோதம் என்று கூறப்படுகிறது. ஆனால் அப்போது நிகழ்ந்தது என்ன என்பதைக் குறித்த தெளிவு பலருக்கும் இல்லை. குஷ்பு முதலில் ஒரு இதழுக்கு கொடுத்த நேர்காணலில், இளம்பெண்கள் திருமணத்திற்கு முன்னால் உறவு கொள்ள நேர்ந்தாலும் அவர்கள் பாதுகாப்பாக கருத்தடை சாதனங்களை பயன்படுத்த வேண்டும்; எய்ட்ஸ் போன்ற நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த கூற்று ஒழுக்கமின்மையை ஏற்றுக்கொள்வதாக, கற்பு என்ற கோட்பாட்டை மறுப்பதாக பலபேர் கண்டனம் தெரிவித்தனர். வழக்குகள் போடப்பட்டன. இந்த நிலையில் ஒரு நாளிதழ் குஷ்புவை இது குறித்து கேட்டபோது அவர் “ஏன் இவ்வளவு கேள்விகள் கேட்கிறார்கள், தமிழ் பெண்கள் எல்லோருமே கற்புடையவர்களா ?” என்று கேட்டதாக வெளியாகியிருந்தது.
இந்த “தமிழ்ப் பெண்கள் எல்லோருமே கற்புடையவர்களா?” என்ற கேள்விக்கு எதிராகத்தான் தமிழ் பாதுகாப்பு இயக்கம் என்று இயங்கிய பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளின் அணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த இட த்தில் ஒரு வரலாற்றுப் பிரச்சினையையும் நினைவில் கொள்ள வேண்டும். மேட்டுக்குடிப் பெண்கள் வீட்டிற்குள்ளேயே வசித்ததாலும், உழைக்கும் வர்க்க பெண்கள் வெளியே பொது இடங்களில் வேலை செய்ததாலும், உழைக்கும் பெண்கள் ஐயத்திற்கு உட்பட்டவர்களாக மேட்டுக்குடியினரால் சித்தரிக்கப்பட்டனர். சங்கராச்சாரியார் போன்றவர்கள் பெண்கள் வேலைக்கு செல்வது ஒழுக்கம் தவற வழிவகுக்கும் என்று பேசிவந்தனர். அதனால் தமிழ் பெண்கள் அனைவரும் கற்புடன்தான் இருக்கிறார்களா என்ற கேள்விக்கு எதிராக உழைக்கும் வர்க்க பெண்கள் அணிதிரண்டதை, குஷ்புவுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தியதை கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரானது, பிற்போக்குத்தனமானது என்று மட்டும் பார்க்க முடியாது.
பெண்ணிய சிந்தனைகளில் வர்க்கம், ஜாதி போன்றவை ஏற்படுத்தும் வேறுபாடுகளை சிந்தனையுலகம் அங்கீகரிக்கிறது. குஷ்புவுக்கு எதிரான விடுதலை சிறுத்தைகள் மகளிரணியின் போராட்டம் ஒரு மேட்டிமைத்தனமான குரலுக்கு எதிரான போராட்டம் என்பதையும் ஆங்கில கல்விப்புலத்தில் சில பெண்ணிய சிந்தனையாளர்கள் சுட்டிக்காட்டினார்கள்.
தற்போது பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த குஷ்பு புகழ் வெளிச்சத்திற்காக திருமாவளவன் பெண்களை இழிவு படுத்திவிட்டார் என்று போராடுவது அபத்தமானது. அதற்கு எந்த ஒரு வரலாற்றுப் பின்னணியும் கிடையாது. மாறாக பெண்களுக்கு எதிரான செயல்பாடுகள், வன்முறை, பிற்போக்கு சிந்தனைகள் அனைத்திற்கும் உறைவிடமாக இருப்பது பாரதிய ஜனதா கட்சிதான்.
மனுஸ்மிருதியை தடை செய்க!
தேவையில்லாமல் சீண்டப்பட்ட திருமாவளவன் தர்க்கரீதியாக ஒரு காரியம் செய்தார். மனுஸ்மிருதியை தான் மேற்கோள் காட்டியதே பெண்களை அவமதிக்கிறது என்றால், அந்த மொத்த நூலுமே பெண்களுக்கு எதிரானதுதானே. அதனால் மனுஸ்மிருதியை தடை செய்யுங்கள் என்று ஒரு போராட்டத்தை முன்னெடுத்தார். இது நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்தது. பலரும் மனுஸ்மிருதியை தேடிப் படிக்கத் துவங்கியுள்ளனர். தி.மு.க கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் மனுஸ்மிருதிக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவளித்துள்ளன. குறிப்பாக தமிழக கம்யூனிஸ்டு கட்சிகளை சார்ந்த கலை, இலக்கிய மாதர் சங்க அமைப்புகள் திருமாவளவனை அழைத்து சிறப்பான இணைய கருத்தரங்கம் ஒன்றை நடத்தி மனுஸ்மிருதி எதிர்ப்பை பரவலாக்கியுள்ளன.
மனுஸ்மிருதியை தடை செய்வது என்றால் என்ன?அதனை யாரும் அச்சிட்டு வினியோகிக்கக் கூடாது, அதை குறித்து பரப்புரை செய்யக்கூடாது என்பதே பொருள். காரணம் அதில் வெளிப்படையாக வர்ண, ஜாதி அமைப்பை வலியுறுத்தியும், பெண்ணடிமைத்தனத்தை வலியுறுத்தியும் கருத்துக்கள் உள்ளன. அது எந்தக்காலத்தில் எழுதப்பட்டது, அதிலுள்ள கருத்துக்கள்தான் இந்து மதமா, இன்றைக்கு இந்து மதம் என்று பொதுமைப்படுத்தி அழைக்கப்படும் பல்வேறு மத அமைப்புகள், சிந்தனை முறைகள் அனைத்தும் மனுஸ்மிருதியை ஏற்றுக்கொண்டனவா, காலனீய ஆட்சிதான் அதனை இந்துக்களின் சட்டமாக பொதுமைப்படுத்தியதா போன்ற கேள்விகள் இந்த கோரிக்கைக்கு முக்கியமானதல்ல. அதில் காலத்திற்குப் பொருந்தாத கருத்துக்கள் இருக்கின்றன. அவை சமகாலத்தில் பெண்களின், உழைக்கும் ஜாதியினரின் மனதை புண்படுத்துகின்றன. அதன் சமூக விதிமுறைகள் அரசியல் நிர்ணய சட்டத்திற்கு எதிராக இருக்கின்றன. அதனால் அந்த நூல் தொடர்ந்து சமூகத்தில் புழக்கத்தில் இருப்பது தடை செய்யப்பட வேண்டியது பொருத்தமானது. மற்றபடி அதன் பிரதிகள் ஆவணக்காப்பங்களில் ஆய்வாளர்களுக்கு என்றும் கிடைக்கும். இந்த தடை மனுவாத சிந்தனையை நவீன இந்திய அரசு முற்றிலும் மறுதலிப்பதன் அடையாளமாக மாறும்.
பாரதிய ஜனதா கட்சி தாங்கள் அனைத்து இந்துக்களையும் ஒன்றாகப் பார்ப்பதாக சொல்லும். பட்டியல் இனத்தவரை அலங்கார பதவிகளில் அமர்த்தும். ஆனால் அந்த கட்சியின் மூலவேரான ஆர்.எஸ்.எஸ்-சின் தலைமை அறுதிப்பெரும்பாலும் பார்ப்பனர்களிடமே இருந்து வந்துள்ளது. அது நவீன இந்தியாவை உருவாக்குவதாகச் சொன்னாலும் அது இந்து, இந்திய அடையாளமாகக் கொள்வது பார்ப்பனீய சனாதன தர்மத்தைதான். அதனால் அந்த கட்சியால் ஒருபோதும் மனுஸ்மிருதியை தடை செய்ய முடியாது. அது அந்தக்காலத்தில் எழுதப்பட்ட நூல், அதை நாம் இன்றைய நோக்கில் மதிப்பிடக் கூடாது என்றெல்லாம் இந்துத்துவ அறிவுஜீவிகள் பேசுவார்கள். நாம் எதற்கு அதை மதிப்பிட வேண்டும்? அதை இன்றைய விழுமியங்களை கருதி தடைதானே செய்ய வேண்டும்? பெண்களையும், சூத்திரர் என்று உழைக்கும் ஜாதியினரையும் இழிவுபடுத்தும் நூலை தடை செய்வதில் என்ன தயக்கம்?
மனுஸ்மிருதிக்கு தடை போடுவது இருக்கட்டும். ராஜஸ்தான் ஹைகோர்ட்டில் மனுவுக்கு சிலை ஒன்றையே 1989 ஆம் ஆண்டு எழுப்பியுள்ளார்கள். இதை பலரும் எதிர்க்க, ஹை கோர்ட் நீதிபதிகள் அந்த சிலையை அகற்ற உத்திரவிட்டுள்ளார்கள். உடனே அந்த சிலையை அகற்றக் கூடாது என்று வழக்குத் தொடுத்துள்ளார்கள். யார் அந்த வழக்கை தொடுத்தது?விஸ்வ ஹிந்து பரிஷத்தின் தலைவர் ஆச்சாரிய தர்மேந்திரா உள்ளிட்டவர்கள் என்று தெரிகிறது. சென்ற மாதம் இரண்டு தலித் பெண்கள் அந்த சிலையின் மீது பட்டப்பகலில் பகிரங்கமாக கறுப்பு வர்ணம் பூசியுள்ளார்கள். அதற்காக அவர்கள் மத உணர்வைகளை புண்படுத்தினார்கள் என்று கைது செய்யப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
மனுவின் சிலை அகற்றப்படவேண்டும், மனுஸ்மிருதி தடை செய்யப்படவேண்டும் என்ற குரல்கள் நாடெங்கும் ஒங்கி ஒலிக்கவேண்டும்! திருமாவளவனின் அறைகூவலுக்கு அனைத்து ஜனநாயக சக்திகளும் ஆதரவு அளிக்க வேண்டும்.
நன்றி *மின்னம்பலம்
0 commentaires :
Post a Comment