பிஹாரின் தலைநகரான பாட்னாவில் இருந்து சுமார் 200 கி.மீ தூரத்தில் உள்ள கயா மாவட்டத்தின் பங்கேபஜார் வட்டார மக்களின் முக்கிய தொழில் விவசாயம்,
ஆனால் இங்குள்ள மக்களால் நெல் மற்றும் கோதுமையை பயிரிட முடியவில்லை, ஏனெனில் நீர்ப்பாசன வசதி இல்லை.
இதன் காரணமாக இங்குள்ள இளைஞர்கள் வேலை தேடி வேறு நகரங்களுக்கு குடிபெயர்ந்தனர்.
கோடில்வா கிராமத்தில் வசிக்கும் லோங்கி புய்யானின் மகனும் வேலை தேடி வீட்டை விட்டுச் சென்றுவிட்டார்.
தனது கிராமத்தை ஒட்டியுள்ள பங்கேட்டா மலையில் ஆடு மேய்க்கும் போது, லோங்கி புய்யானின் மனதில் ஒரு எண்ணம் தோன்றியது. கிராமத்தில் தண்ணீர் வசதி ஏற்பட்டால் மக்களின் குடிபெயர்வு நிற்கும், விவசாயமும் செய்ய முடியும் என்று அவர் நினைத்தார்.
மழை காலத்தில் வழக்கமாக மழை பெய்கிறது, ஆனால் எல்லா தண்ணீரும் பங்கேட்டா மலையின் நடுவில் தங்கிவிடுகிறது என்பதை லோங்கி புய்யான் கண்டார். அதிலிருந்து நம்பிக்கையின் ஒளி அவருக்கு தென்பட்டது.
பின்னர் முழுப் பகுதியிலும் அலைந்து திரிந்து மலையின் நடுவே தேங்கி நிற்கும் தண்ணீரை வயலுக்கு எடுத்துச் செல்ல ஒரு வரைபடத்தைத் தயாரித்தார். மேலும் மலையை வெட்டி கால்வாய் அமைக்கும் பணியில் ஈடுபட்டார்.
ஒன்று, இரண்டு, மூன்று அல்ல, ஐந்து மற்றும் பத்து ஆண்டுகளும் அல்ல. முப்பது வருட கடின உழைப்புக்குப் பிறகு, மலையின் நீரை கிராமக் குளத்திற்கு அவர் கொண்டு சென்றார்.
தனி ஆளாக மண் வெட்டியால் வெட்டி, மூன்று கிலோமீட்டர் நீளமும், 5 அடி அகலமும், மூன்று அடி ஆழமும் கொண்ட ஒரு கால்வாயை உருவாக்கினார்.
இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், லோங்கி புய்யானின் இந்தப்பணி நிறைவடைந்துள்ளது. அவரது கடின உழைப்பின் பலன், இந்த மழைக்காலத்தில் தெரிகிறது.
அருகிலுள்ள மூன்று கிராமங்களின் விவசாயிகள் இதன் பலனைப் பெறுகிறார்கள், மக்களும் இந்த முறை நெல்லை பயிரிட்டுள்ளனர்.
0 commentaires :
Post a Comment