"வேட்கை" என்பது வெறுமனே வருவதில்லை. அது ஆழ்மனதின் அடித்தளத்தில் இருந்து மனசாட்சியின் பாதையிலே பயணித்து செயற்பாடுகளின் ஊடே வெளிப்படுவதற்கான உந்ததுல்.
ஒவ்வொரு வயதிலும் ஒவ்வொரு விதமாக வேட்கை வெளியே வரும். சிறு வயதில் மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருக்கும் நண்பர்கள் ஒரு ஓட்டத்துக்கோ அல்லது ஆட்மிழப்புக்கோ சண்டை பிடித்துக்கொள்ளலாம். அப்போது ஆளுக்கொரு விக்கட்ட கம்பைத் தூக்கிக் கொள்வார்கள். அப்போது அதன் பெயர் விக்கட் இல்லை. ஆயுதம்.
அப்படி ஆயுதம் ஏந்த நேர்ந்த சிறு பிள்ளை பிள்ளையான். அவரது சிறு வயதுப் பட்டப் பெயரிலேயே நாங்கள் இன்னும் அழைத்துக் கொண்டு இருக்கிறோம். அவர் சந்திரகாந்தன் ஆனதன் பின்னரும்.
பிள்ளையான் சிறை சென்ற காரணம் பற்றிய விமர்சனங்கள், சரி, பிழை எல்லாம் பின்னர் பார்த்துக் கொள்வோம். கொலைக் குற்றச்சாட்டுக்காக சிறையில் அடைக்கப்பட்டவர் பிள்ளையான் மட்டுமில்லை.
இரத்தினபுரி மாவட்ட எம்பி ( இப்போதும்) பிரேமலால் ஜயசேக்கரவுக்கு தேர்தலுக்கு ஒரு வாரம் இருக்கையில் தூக்குதண்டனை நிறைவேற்றப்பட்டது. ( அப்படி இருந்தும் அவர் வெற்றிபெற்று ) அவர் மீதான கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது கடந்த 2015 ஆம் ஆண்டு தேர்தலில். நான் அவருடன் பாராளுமன்றில் 5 வருடம் இருந்தேன். அவர் எனது நல்ல நண்பர். இன்று மரண தண்டனை விதித்து அவர் உயிர் இழக்கப் போகிறார் என்பது எனக்கு அன்று தெரியாது. ஆனால் அன்று சீன சுற்றுப் பயணத்தில் அவர் மரண தறுவாயை அடைகையில் அவரைக் காப்பாற்ற திலகர் பட்ட அவஸ்தையை "சொக்கா மல்லியை" கேட்டால் மட்டுமே தெரியும். "சொக்கா மல்லி" என்பது பிரேமலால் ஜயசேகர. அவரை "சொக்கா மல்லி" என்றே இரத்தினபுரி மாவட்ட குறிப்பாக நிவித்திகலை மக்கள் அழைக்கிறார்கள். அதே மாவட்டத்தில் இன்னுமொரு வேட்பாளரை " ஷர்ப்பயா" ( நாகம்) என்றும் மக்கள் அழைத்ததை இரத்தனபுரி தேர்தல் பிரசாரத்தில் அவதானித்தேன். மட்டக்களப்பில் மக்கள் சந்திரகாந்தனை "பிள்ளையான்" என அழைக்கிறார்கள்.
பிள்ளையான் சிறையில் இருந்தவாறு எழுதும் குறிப்புகளை நூலாக்க வேண்டும் என எனது குடும்ப நண்பர் என் குழந்தைகளின் "Pitzaa மாமா" ( பீட்ஷா கடை நடத்துகிறார்) "ஸ்டாலின் ஞானம்" என்னுடன் பேசினார். பிரதியைத் தாருங்கள் வாசித்துப் பார்ப்போம் என்றேன். மின்னஞ்சலில் அனுப்பினார்கள் "ரோ மெட்டிரியல்" ( மூலப்பொருள்) ஆக இருந்தது. நல்ல வெளியீட்டை ( out put ) செய்ய முதலில் நல்ல உள்ளீடு ( input ) வேண்டும். எனக்கு பிள்ளையானின் பிரதி நல்ல மூலப்பொருள் எனப்பட்டது. அதனை input ஆக்கி " வேட்கை " எனும் out put ஐ கொண்டு வந்ததில் திலகரின் பங்களிப்பு இருந்து. அதனை வெளியிட்ட " எக்ஸில்" பதிப்பகம்தான் ( தோழர் ஸ்டாலின் ஞானம் அவரது துணை எங்கள் இனிய தோழி விஜி) சொல்ல வேண்டும்.
நூல் வெளியீட்டுக்கு எனக்கு ஒத்துழைத்த எனது வடிவமைப்பாளர் சுரேஷ் முதல் பைன்டிங் செய்யும் கமல் - யோகா சகோதரர்கள் ( புறக்கோட்டை) வரை அதன் நேர்த்திக்கு பங்களித்தவர்கள்.
நூலை வாசித்த பின்னர் பிள்ளையானை சந்திக்க விரும்பினேன். ஸ்டாலின் ஞானம் ஏற்பாடு செய்தார். மட்டக்களப்புக்கு சென்ற சமயம் அதனை ஒழுங்கு செய்து கொண்டோம். செயலாளர் பிரசாந்தன் தலைமையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சித் தோழர்களின் சுறுசுறுப்பு எனக்கு பிடித்து இருந்தது.
ஸ்டாலின் ஞானம் வசிப்பது பிரான்சில் வாழ்வது மட்டக்களப்பில். அவரது பிரான்ஸ் பிட்சா கடையில் உட்கார்ந்தாலும் மட்டக்களப்பில் சந்தித்தாலும் மடகொம்பரயில் சந்தித்தாலும் நானும் ஞானமும் பேசுவது அரசியல் தான். "ஆரம்பிச்சிட்டீங்களா" என எனது துணைவியாரும், "ரெண்டும் கொழுவிட்டு. இனி கழட்ட ஏலா" என ஞானத்தின் துணை விஜி சொல்வதும் சாதாரணம்.
நான் குடும்பத்தோடு மட்டக்களப்பு போய் இருந்தேன். ஞானம் பிரான்ஸில். விஜியும் பிள்ளைகளும் பிரான்ஸில் இருந்து மட்டக்களப்பு வந்து இருந்தார்கள். அவர்களிடம் எனது குடும்பத்தை வீட்டில் விட்டுவிட்ட என்னை அவர்கள் வாகனத்தில் ஏற்றி கட்சி காரியாலயம் அழைத்துப் போனார்கள் கட்சி தோழர்கள்.
"ஒருநாள் அரசியல் வகுப்பு" ஏற்பாடு செய்து வைத்து இருந்தார் ஞானம். காலையில் ஆரம்பித்து மாலைவரை வகுப்பு. உணவு இடைவேளையில் சிறைக்கு சென்று பிள்ளையானை சந்தித்தேன். நான் எம்பி என்பதாலா அல்லது பிள்ளையான் முன்னாள் முதலமைச்சர் என்பதாலா தெரியாது. அவரை நான் சந்தித்து ஒரு கட்டில் ஒரு மேசை அதன் அருகே இருந்த நாற்காலியில் காவலாளி, எனக்கு ஒரு நாற்காலி இருந்தது. கட்டிலில் அமர்ந்திருந்த பிள்ளையான் என்னைக் கண்டதும் கையை கூப்பவில்லை அகல விரித்தார். நானும் அப்படியே விரித்தேன். இருவரும் எப்படி இருக்கிறீர்கள் "தோழர்" என இறுக்கமாக கட்டி அணைத்துக்கொண்டோம். புத்தகம் - வாசிப்பு தவிர வேறு எதுவுமே பேசவில்லை. மலையகம் சார்ந்து கொண்டுபோன புத்தகங்களைப் பரிசளித்தேன். வேட்கைக்காக. இடையில் யாரோ வந்து என்னவோ கேட்க காவலாளி பிள்ளையானை விளித்த விதம் எனக்குள் ஓர் உணர்வை ஏற்படுத்தியது. "மஹெமத்தித்துமா" ( முதலமைச்சரே). விடைபெற்றோம். அதே இறுக்கம் அணைப்பு.
அறைக்கு வெளியே வந்தேன். ஏற்பாடுகளைச் செய்தமைக்காக அனைத்து அதிகாரிகளுக்கும் கட்சி செயலாளர் நன்றி கூறிய விதமும் அதற்கு அவர்கள் காட்டிய பதிற்குறியும் என்னை பிரமிப்பில் ஆழ்த்தியது.
நாங்கள் வெளியே வந்தோம். என்னை நேராக கெமரா வீடியோ எடுப்பது தெரிந்தது. நான் கண்டும் காணாதது போல வாகனத்தில் ஏறி அமர்ந்ததும், கூட வந்த தம்பி
( அருண் என நினைக்கிறேன் ) "அண்ணா அவங்கள்ட்ட ஏதாவது சொல்லிபோட்டு போவம். இல்லாட்டிக்கு, அவங்க இந்த வீடியோவ போட்டு ஏதாவது சொல்லிப்போடுவாங்க". அவர்களுக்கு வகுப்பு எடுக்கப் போன நான் அந்த தம்பியிடமும் கற்றுக் கொண்டேன். அந்த கெமராகாரர் கேட்ட கேள்விக்கு பதிலை சொல்லிவிட்டு வந்தேன்.
அடுத்த வாரம் பாராளுமன்றம் வந்ததும் என்னோடு வழமையாக நன்றாக உரையாடும் ஒரு எம்பி திருப்பிக்கொண்டு போனார். நான் கண்டுகொள்ளவில்லை ஆனால் காரணம் புரிந்தது. உள்ளுக்குள் சிரித்துக் கொண்டேன். பிறகு அருகே வந்தார் " அவன் ஒரு கொலைகாரன். எவனோ எழுதின புத்தகத்தை அவன் பேரைப் போட்டு எவனிட்டையோ கொடுத்து அச்சடிச்சு போட்டு இருக்கானுகள். அவனைப் போய் பார்த்து இருக்கிறீங்களே. உங்க மேல எனக்கருந்த மரியாதையே போச்சு " என்றார். எனக்குந்தான் என உள்ளுக்குள் நினைத்துக்கொண்டு
"நான் சந்தித்தது புத்தகம் சார்ந்தது என்பதால் இப்படி சொல்கிறீர்கள். கடந்த வாரம் எங்கள் கூட்டணி தலைவர் ( எனக்கு அப்போது) மனோ கணேசன் பிள்ளையானைச் சந்தித்தாரே அவரை எந்தக் காரணத்துக்காக உங்கள் மரியாதையில் இருந்து குறைத்துக் கொள்வீர்கள்? என்று கேட்டேன்."
மௌனம் பதில். அப்போதே அவரிடம் விடைபெற்றுக் கொண்டேன்.
காரணம் அவர் பிள்ளையான் புத்தகம் எழுதவில்லை என்கிறார். அச்சு அடித்தவன் 'எவனோ' என என்னிடமே சொல்கிறார். அதே நேரம் பிள்ளையான் கொலையாளி என தீர்ப்பும் கொடுக்கிறார். பிள்ளையான் தான் "வேட்கை" எழுதினார் என என்னால் உறுதியாக சொல்ல முடியும். நான் அவரை சந்தித்த இடம் "சிறைச்சாலை".
அதனை பிள்ளையான் பல்கலைக்கழகம் ஆக்கிக் கொண்டுள்ளார். இப்போது பாராளுமன்றமும் வருகிறார்.
மட்டக்களப்பு சிறையில் இருந்த பிள்ளையான் மாவட்டத்தில் வாக்கு கேட்க வரவில்லை என அவர் பாராளுமன்றத்துக்கு போகாமல் இல்லை... அது வகுப்பு நடாத்தி அரசியல் செய்யும் அரசியல் கட்சியினர் எடுத்த தீர்மானம். மக்கள் அதற்கு மதிப்பு அளித்து உள்ளார்கள்.
கௌரவ. சிவ. சந்திரகாந்தன் அவர்களே. நீங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் வெற்றி பெற்று பாராளுமன்றம் வந்துள்ளீர்கள். நீங்கள் வேட்கை எழுதவில்லை என சொன்னவர் மட்டக்களப்பு மாவட்டத்தில் தோல்வி அடைந்துள்ளார்.
நானும் நீங்களும் பாராளுமன்றில் இல்லாத போதும் கட்டி அணைத்து வாழ்த்துச் சொல்லிக்கொள்வோம். ஏனெனில் நாம் "வேட்கை" கொண்டவர்கள்.
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் தோழா.
( வேட்கையை பதிப்பிக்கும் வாய்ப்பு தந்த விஜி - ஞானத்திக்கு நன்றி)
ஆமா ஞானம் யாரு ?
பிள்ளையானின் அரசியல் ஆலோசகர்
திலகரின் அரசியல் தோழர்
( ஈஸ்ட்டர் சம்பவத்தின் பின்னதாக தமவிபு கட்சியின் மீதான எனதும் விமர்சனத்தை - விவாதத்தை தோழர் ஞானத்திடம் முன்வைத்தேன் என்பதை ஞானம் அறிவார். அதுகுறித்து பாராளுமன்ற விருந்தினர் உணவறையில் பிள்ளையானைச் சந்தித்து உரையாட காத்திருக்கிறேன்)
0 commentaires :
Post a Comment