8/09/2020

மக்கள் மனதில் உறைந்து கிடந்த நெருப்பின் வெளிப்பாடு... பிபிசியின்மூத்த ஊடகவியலாளர் சீவகன் பூபாலரட்ணம்

மக்களின் மனதில் உறைந்துகிடந்த நெருப்பின் வெளிப்பாடு!
=======================================
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் வெற்றி மிகப்பெரியது. ‘அந்த வெற்றி அப்படியானது, இப்படியானது’... என்றெல்லாம் மட்டக்களப்பில் வாழும் பலர் பேசித்தள்ளி விட்டார்கள். ஆகவே நான் இங்கு அதனைப்பற்றி பேசப்போவதில்லை.

ஆனால், இந்த வெற்றி எதனைக் காண்பிக்கின்றது என்பதை கொஞ்சம் உள்ளே சென்று பார்க்க வேண்டிய தேவை இங்கு இருக்கின்றது. 

நான் முன்னர் சொன்னதுபோல மட்டக்களப்பில் அக்கறை உள்ள உள்ளூரவர்கள் பலர் இதனைப்பற்றி சிலாகித்து எழுதியுள்ளனர். அந்தக்கட்சியை எதிர்த்த சில உள்ளூரவர்களும் ஓரளவுக்கு அதனை ஏற்றுக்கொண்டு எழுதியுள்ளனர். ஆனால், இலங்கை தேசிய மட்டத்திலான அரசியல் ஆய்வாளர்கள் என்று தம்மை சொல்லிக்கொள்ளும் பலரும் அல்லது தற்காலத்தில் சர்வதேச தமிழ் ஆய்வாளர்களாக தம்மைக்கூறிக்கொள்ளும் பலரும் இதனை பேச விரும்பவில்லை அல்லது தவிர்த்தே வருகின்றனர். அவ்வளவு ஏன், அண்மைக்காலம் வரை மட்டக்களப்பில் ஏற்பட்டு வந்த மாற்றங்களை பல தேசிய ஊடகங்கள் கூட ஆழமாகப் பேசவில்லை. எமது “அரங்கம்” பத்திரிகை தவிர.

இப்போதுகூட தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பின்னடைவு, அதற்குள் நடக்கும் குத்துமுறிவுகள், அதற்கு என்ன செய்வது என்பனபோன்ற விடயங்களிலேயே இந்த ஆய்வாளர்களின் கவனம் இருக்கிறதே ஒழிய, கிழக்கின் மக்கள் ஒரு மிக மிக வித்தியாசமான ஒரு முக்கிய முடிவை எடுத்திருக்கிறார்களே என்ற தொனியில் ஆராய இவர்களின் “ஊன மனங்கள்” இடம்தரவில்லை.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் வெற்றியை பலரும் இன்னமும் ‘அதுவும் ஒரு வெற்றி’ என்ற அளவிலேயே பேசத்தலைப்படுகிறார்கள். அதன் தாற்பரியத்தை பேச அவர்கள் தயாராக இல்லை. இது ஒன்றில் அவர்கள் ஆய்வின் ஆழத்தில் உள்ள பிரச்சினையாக இருக்க வேண்டும் அல்லது அவர்களின் மனத்தில் இருக்கும் ஒரு பெரும் குறைபாடாக இருக்க வேண்டும். 

இந்த குறைபாட்டின், மன ஊனத்தின் காரணமாக இவர்களில் பலருக்கு இதனை “தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள்” என்ற ஒரு அமைப்பின் வெற்றியாகக்கூட பார்க்க முடியவில்லை. “பிள்ளையான் குழுவின் அல்லது ஒரு ஒட்டுக்குழுவின்” வெற்றியாக மாத்திரமே இவர்கள் கண்களுக்கு இது தெரிகிறது. 

போருக்குப் பின்னர் ஜனநாயகத்துக்குத் திரும்பிய ஒரு  அமைப்பாகக்கூட அந்த அமைப்பை அவர்கள் அங்கீகரிக்க அவர்களின் மனம் இன்னமும் இடம் தரவில்லை.

தனிமனித வெற்றி?
=================

இந்த வெற்றியை சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) என்ற ஒரு தனி மனிதனின் வெற்றியாகப் பார்ப்பதே இங்கு முதல் தவறு. இது ஒரு தனி மனிதனின் வெற்றியல்ல. உண்மையில் சுமார் 5 வருடங்கள்(ஒரு நாடாளுமன்ற ஆட்சிக்காலம்) சிறையில் இருக்கும் ஒருவர், பொதுத்தொடர்பற்ற நிலையில் இருக்கும் ஒரு நபர், வடக்கு கிழக்கு தமிழ் வேட்பாளர்களில் அதிகமான விருப்பு வாக்கைப் பெற்று வென்றிருக்கிறார் என்பது பெரும்விடயந்தான். ஆனால், இந்த வெற்றி வெறுமனே பிள்ளையான் மீது இருந்த அனுதாபத்தினால் மாத்திரம் அவருக்கு கிடைத்த வெற்றியல்ல. மாறாக நீண்டகாலமாக தாம் தமது தரப்பு என்று நம்பிய கட்சிகளால் புறக்கணிக்கப்பட்டதாக, சமூக, பொருளாதார, அரசியல் புறக்கணிப்பை எதிர்கொள்வதாக நம்பும் ஒரு பிரதேச மக்களின் விரக்தி உணர்வின் வெளிப்பாடு இது. தமது உணர்வின் பிரதிபலிப்பாக சில காலமாவது தமக்கு அபிவிருத்தியை செய்ய முடிந்ததாக தாம் நம்பும் ஒருவருக்கு அவர்கள் ஏகோபித்து வாக்களித்திருக்கிறார்கள்.

இன்றும்கூட தமிழ் தேசியக் கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் பெற்ற வாக்குகள் அதிகம்தான். ஆனால், வழமையைவிட மக்கள் வாக்களிப்பு அதிகரித்த சூழ்நிலையில் அந்தக் கட்சி கிட்டத்தட்ட ஐம்பதினாயிரம் வாக்குகளை இழக்க, “இருபதினாயிரம் வாக்குகளை தாண்டாது” என பொதுவில் தேசிய மட்ட தமிழ் ஆய்வாளர்களால் நம்பப்பட்ட பிள்ளையானின் கட்சி, கிட்டத்தட்ட எழுபதினாயிரம் வாக்குகளை பெற்றிருக்கிறது. இதுதான் இங்கு பெரிய மாற்றம். இந்த மாற்றத்தின் யதார்த்தம் இந்த மட்டக்களப்பு மாவட்ட மக்களின் உணர்வுகள், புறக்கணிக்கப்பட்ட நிலமை ஆகியவை சம்பந்தப்பட்டது என்பதை இந்த ஆய்வாளர்கள் காணத் தவறுகிறார்கள் அல்லது கண்மூடி, பாராதிருக்கிறார்கள் என்பதுதான் இங்கு வேதனை.

இத்தனைக்கும் இங்கு குறைந்தபட்சம் கடந்த 3 வருடங்களாக இந்த மாவட்ட மக்களின் நிலைமை குறித்து அரங்கம் பத்திரிகை பேசிவந்தும், “செவிப்பறை இழந்த” இவர்களின் காதுகளில் மாத்திரம் அது புகவில்லை. ஆனால், மட்டக்களப்பு மட்டத்தில் மக்களின் கூக்குரலை அனைத்து தரப்பினரும் செவிமடுக்க “அரங்கம்” காரணமாக இருந்துள்ளது.

தேர்தல் முடிவுகளில் இன்னுமொரு விடயமும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும். தமிழ் தேசியக்கூட்டமைப்பில் வெற்றிபெற்ற இரு உறுப்பினர்களும் தமது பிரச்சாரங்களில் வளர்ச்சி பற்றியே  பேசிவந்தனர். அதில் கோவிந்தன் கருணாகரன்(ஜனா) ஓரளவு மக்களோடு மக்களாக நின்று பணியாற்றியதையும், அம்பாறை மாவட்டம், வீரமுனையின் இருப்புக்கு காரணமாக இருந்ததும் பாராட்டுக்குரிய விடயங்கள். ஆனால், அவரது கட்சியினரே தன்னை முதுகில் குத்த விளைந்ததாக அவர் குற்றஞ்சாட்டியதையும் இங்கு மனதில்கொள்ள வேண்டும். ஜனா மற்றும் சாணக்கியன் ஆகியோர் அபிவிருத்தி விடயத்தில் கட்சி கடந்து பணியாற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். 

ஏன் இந்த நிலைப்பாடு?
===================
அண்மைக்காலமாக லண்டனில் வாழும் எனது சில நண்பர் அடிக்கடி பிறரிடம் விசாரிக்கும் ஒரு விடயம்- “சீவகன் ஏன் இந்த நிலைப்பாடு எடுத்திருக்கிறார்?” என்பதாகும். அதாவது ‘சீவகன் ஏன் பிள்ளையானை  ஆதரிக்கும் நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார்’ என்பது. 

பிபிசி என்ற ஒளிவட்டத்தை கொண்டிருக்கும் அரசியல் தீர்க்க தரிசியான(கொடுமை) சீவகன், ஏன் பிள்ளையானுக்கு ஆதரவு தருகிறார் என்ற பெரும் கவலை அவர்களுக்கு. 
சமூகத்தின் உயர் மட்டத்தில் இருந்துகொண்டு, அதற்கேற்ப முடிவெடுக்கும் அவர்களுக்கு எனது பிறந்த மண்ணின் மக்களின் மனதில் அடியில் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்த நெருப்பை புரிவது கஸ்டந்தான். என்னூரவன் அழுதுகொண்டிருக்க, நான் உயர்மட்ட அரசியல் சித்தாந்தம் பேசிக்கொண்டிருக்க முடியாது. வேரைத் தேடிச்சென்று பார்க்கும்போதுதான் ஊர் யதார்த்தம் புரியும். அதைவிடுத்து கொழும்பிலும், யாழ்ப்பாணத்திலும் லண்டனிலும் ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் இருந்துகொண்டு மட்டக்களப்பின் யதார்த்தத்தை எவரும் தீர்மானிக்க முடியாது. எனக்கும் அந்த ஒளிவட்டம் எல்லாம் தேவையுமில்லை.

முப்பது வருடமாக எமது மண் ஒரு கொடூரமான போரில் இருந்து வந்தது. அதற்கு நான் உட்பட அனைவரும் காரணம். நான் நேரடியாக போரில் ஈடுபட்ட எந்த தரப்பையும் ஆதரிக்கவில்லையாயினும் நானும் ஏதோ ஒரு வகையில் அதற்கு காரணம். வன்முறை புளுதியில் 30 வருடமாக புரண்டு வந்த என்னூர் இளைஞர்கள் எல்லாம், போர் முடிந்தது என்று அறிவிக்கப்பட்ட மறுநாள், புத்தனாகிவிடுவான் என்று எதிர்பார்ப்பது  முட்டாள்தனம். இத்தனைக்கும் இந்த குற்றச்சாட்டை முன்வைக்கும் பலர் நேரடியாக ஒரு கட்டத்திலேனும் போரை ஆதரித்தவர்கள். போர் மூலம் பிரச்சினையை தீர்க்க நினைத்தவர்கள். 

இவ்வளவு நாளும் இயக்கங்களில் இருந்து வன்செயல் மூலம் பிரச்சினையை தீர்க்கப்பழகிய ஒருவனால், அதிலிருந்து வெளிவந்த உடனேயே மகாத்மா ஆகிவிட முடியுமா? அல்லது அவர்களை திருத்த இவர்கள் எல்லோரும் என்ன முயற்சியை எடுத்தார்கள்? நான் இங்கு நடந்த, நடக்கக்கூடிய வன்செயல்களை ஆதரிக்கவில்லை. ஆதரிக்கவும் மாட்டேன். ஆனால், அதிலிருந்து அந்த இளைஞர்கள் விடுபட தொடர்ச்சியான முயற்சிகள் தேவை. அதைவிடுத்து தூரத்தில் இருந்து தனக்கு பிடிக்காதவன் மீது மாத்திரம் ‘கொலைகாரன்’ என்று குற்றஞ்சாட்டுவது நியாமில்லை. அதுமாத்திரமன்றி, ஒரு சட்டத்துறை இருக்கிறது, அதனிடம் இதனை முடிவுக்கு விடுவதைவிட இந்த பிரச்சினைக்கு வேறு என்ன வழி இருக்கிறது? 

தேசியவாதம் யாரின் சொத்து?
=============================
நான் அறிந்தவரை “தேசியவாதம்” என்பது ஒரு குறிப்பிட்ட குழுமக்களின் அனைத்து வகையான பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விடயம். அதனை முறண்பட்டு, போரிட்டு உறுதிப்படுத்தலாம், அது தோற்றால் சமரசம் பேசியும் பெறலாம். சமசரசமாக பேசிப்பெறுவது என்று முடிவான பின்னர் எதிர்த்தரப்பில் இருந்தும் பெறலாம், ஒரே தரப்பில் இருந்தும் பேசிப் பெறலாம். இந்த அனைத்து  முறைகளுக்கும் உலகில் உதாரணங்கள் இருக்கின்றன. அப்படியிருக்க, போரில் பாதுகாப்பை பெற முயன்ற தரப்பு, பெரும் அழிவுடன் அழிந்துபோக, இன்னும் சில தரப்புகள் மாத்திரம் தாம்தான் தமிழ் தேசியவாதத்தின் ஒட்டுமொத்த உரிமைதாரர்களாக நிலைநாட்ட முனைவது சுத்தமான ஏமாற்றுவேலை. எந்த தரப்பில் இருந்தாலும் தமிழர் சமூக, பொருளாதார, அரசியல் பாதுகாப்பை உறுதி செய்ய முனைபவர்கள் அனைவரும் தமிழ் தேசியத்துக்காக போராடுபவர்கள்தான். ஆக இந்த போலித்தமிழ் தேசியவாதிகளின் கூக்குரலுக்கு இந்த தேர்தல் கடும் அடி கொடுத்துள்ளது. இயக்கத்தில் இருந்தவர்களையே தீண்டத்தகாதவர்களாக பார்க்கும் பார்வைக்கும் இது ஒரு பெருத்த அடியை கொடுத்துள்ளது. 

ஒரு தேசியத்தின் அங்கமாக இருந்து வந்த ஒரு பிராந்திய மக்கள் தமக்கு சில பிரத்தியேக பிரச்சினைகள் இருக்கின்றன, அவை மிகவும் கடுமையாக இருக்கின்றன என்று முறையிட்ட போது, அவர்கள் அப்படி சொல்வதையே பிரதேசவாதம் என்று சாயம்பூச முனைந்தவர்கள் ஒரு தரப்பினர். ஆனால், நாம் ஏதோ கிழக்கில் மாத்திரந்தான் இப்படியான பிரச்சினை இருக்கிறது, மக்கள் குறிப்பிட்ட கட்சிகளால் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்று நினைத்திருக்க, வடக்கே குறிப்பாக யாழ்ப்பாணத்திலும் போலித்தேசியவாதிகளால் மக்கள் ஏமாற்றப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்பதை இந்த தேர்தல் முடிவு காண்பித்துள்ளது. 

சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு தேர்தலில் போட்டியிட கிடைத்த சகாக்களும் பாராட்டுக்குரியவர்கள். குறிப்பாக அவரது நெருங்கிய சகாவான பூ. பிரசாந்தனே இந்த கட்சியை, பிள்ளையான் வெளியில் இல்லாத சூழ்நிலையிலும் வெற்றிப்பதையில் அழைத்துச் சென்றவர். கூடவே, திரை மறைவில் ஸ்டாலின் ஞானத்தின் பணிகளும் சிறப்பானவை. தமிழ் தேசிய பாரம்பரிய கட்சி ஒன்றின் மூல ஆதரவாளர்களாக இருந்து, ஊரின் நிலைமையை உணர்ந்து, துணிந்து இந்த அணியில் போட்டியிட முன்வந்த மங்களேஸ்வரி சங்கரும் பாராட்டுக்குரியவர். அவர் எடுத்துக்காட்டிய விருப்ப வாக்குகள் மட்டக்களப்பின் முக்கியமான ஒரு அரசியல் புள்ளியாக அவரை மாற்றியுள்ளன. தனது உழைப்பால், மட்டக்களப்பின் படுவான்கரை மக்களின் பெருத்த ஆதரவை அவர் பெற்றுள்ளார். மட்டக்களப்பின் பல தமிழ் தேசிய பிரமுகர்களைவிடவும், ஏனைய பெண் வேட்பாளர்களைவிடவும் அதிகமான விருப்ப வாக்குகளை அவர் குவித்துள்ளார். அரசியலில் நல்ல எதிர்காலம் அவருக்கு காத்திருக்கிறது. அது மட்டக்களப்புக்கு பெரிதும் பயன்படட்டும். 

மஹிந்த ராஜபக்ஸ அவர்களின் கட்சியில் நேரடியாகவே போட்டியிட்டு தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும் வியாழேந்திரனின் வெற்றியும் முக்கியமானதே. இது எதிர்பாராததும்கூட. வாழ்த்துக்கள்.
ஆனால், ஒருவிடயம். பிள்ளையானும் வியாழேந்திரனும் ஓரணியில் போட்டியிட்டிருந்தால் மட்டக்களப்பு மாவட்டத்தில் அந்த அணிக்கு 3 உறுப்பினர்களும் தேசியப்பட்டியலில் ஒரு உறுப்பினரும் கிடைத்திருக்கும். அதனை அவர்கள் தவறவிட்டுவிட்டனர். நிதானம் தேவை.
 முஸ்லிம்களுக்கும் ஒரு உறுப்பினர் கிடைத்திருப்பது மகிழ்ச்சிக்குரியதே. அஹ்மட் ஜயனுலாப்தீன் நசீர் அவர்களுக்கு சிவநேசதுரை சந்திரகாந்தனைப் போல முதலமைச்சராக இருந்த அனுபவமும் இருக்கிறது. மட்டக்களப்பின் அபிவிருத்திக்கு அது உதவட்டும்.

அனைத்திலும் முக்கியமான விடயம் என்னவென்றால், இந்த தேர்தல் வெற்றி ஒரு முடிவு அல்ல. இது உண்மையில் ஒரு ஆரம்பம். அபிவிருத்தி வேண்டும் என்று மக்கள் வாக்களித்துள்ளார்கள். அதிலும் குறிப்பாக அபிவிருத்தியை வலியுறுத்திய தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் மீது இந்த அழுத்தம் அதிகமாக இருக்கும். அம்பாறை மாவட்டமும் தமிழ் பிரதிநிதித்துவத்தை இழந்துள்ளது. அதனைப் பொறுப்பேற்க வேண்டிய பொறுப்பும் பிள்ளையானுக்கு உண்டு. இவற்றுக்கு நிதானமான திட்டங்கள் தேவை. வெறுமனே கட்டிடங்களின் நிர்மாணம் மாத்திரம் மாவட்ட மக்களின் வளர்ச்சியாகாது. அது அதனையும் கடந்தது. அதற்கு ஒரு நாடாளுமன்ற ஆட்சிக்காலம் போதாது. ஆகவே தெளிவான திட்டமிடலும், துரித அமலாக்கமும் அதற்கு தேவை. பயணிக்க வேண்டிய பாதை நீளமானது. வேகத்தைவிட நிதானம் அவசியம். 
 
அன்புடன்
சீவகன் பூபாலரட்ணம்

0 commentaires :

Post a Comment