8/16/2020

கிழக்கில் சிறையை உடைத்து வெளியே சென்றவர்-- சீவகன் பூபாலரெட்ணம்




‘நீங்கள் இதனையும் முயற்சிக்கலாம் தோழர்’
=========================================
எம்.ஏ. சுமந்திரன், சிவநேசதுரை சந்திரகாந்தன்(பிள்ளையான்) ஆகியோரைப்பற்றி முதன்முதலில் நான் எழுதிய போது இவர்களை அதற்கு முன்னதாக எனக்கு தெரிந்திருக்கவில்லை என்று கூறியிருந்தேன். ஆனால், இவரைப்பற்றி எழுதும்போது என்னால், அப்படி கூறமுடியாது.
25 வருடங்களாக தோழர் டக்ளஸ் தேவாநந்தா அவர்களை எனக்கு நன்கு தெரியும். அவரை ஒரு இயக்கத்தின் போராளியாக எனக்கு தெரியாது. ஆனால், ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக செய்தியாளனான எனக்கு அவர் நாடாளுமன்ற வளாகத்தில் வைத்து அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.
அன்று முதல் இன்றுவரை ஒரு Love and Hate (அன்பு மற்றும் வெறுப்பு) உறவாகவே எங்கள் உறவு இருந்து வந்துள்ளது. பல சந்தர்ப்பங்களில் அவர் எனக்கு தனிப்பட்ட வகையில் உதவி இருக்கிறார். அதேவேளை, நான் அனுப்பிய செய்தி ஒன்றுக்கு எதிராக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினால் பிபிசிக்கு எதிராக மானநஸ்டக் குற்றச்சாட்டுடன், “சட்டத்தரணி அறிக்கை”  அனுப்பப்பட்டதும் உண்டு. ஆனால், இவை அனைத்தையும் கடந்த ஒரு மரியாதை அந்த “போராளி + அரசியல்வாதி” மீது இன்றுவரை எனக்கு இருக்கிறது. அவர் மீது ஒரு அபிமானமும் எனக்கு இருக்கிறது. (ஆக, அவரது ஆதரவாளன் நான் என்று கூறி என்னை திட்ட நினைப்பவர்கள் இப்போதே திட்டி முடித்துவிடுங்கள். உள்ளதை உள்ளபடி கூறி விமர்சனத்துக்கு போவதே நல்லது என்று நான் நினைக்கிறேன்.)
அவ்வளவு ஏன், நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அவர், போர்  கடுமையாக நடந்துகொண்டிருந்த காலப்பகுதியில் ஒரு அமைச்சராக வேண்டும் என்ற கருத்தை அப்போதே ஆதரித்தவர்களில் நானும் ஒருவன். அப்போது பகிரங்கமாக இதனை பெரிதாக நான் வெளியில் கூறவில்லைதான். அப்படி கூறியிருந்தால் அது எனக்கு ஆபத்தாகவும் அப்போது முடிந்திருக்கலாம். ஆனால், அபிவிருத்தி வேண்டும் என்ற எனது அப்போதைய நிலைப்பாடே அப்படி நான் கூறியதற்கு காரணம். அந்ந்த அபிவிருத்தியை வெற்றிகரமாக அவர் முடிந்தவரை செய்துமிருக்கிறார்.
மகாபாரதத்தில் பாண்டவர்களை வீழ்த்த நினைத்த கௌரவர்கள் பல தடவைகள் கொலை முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். ஆனாலும் பீம சேனனின் முயற்சியால் அவை தோற்கடிக்கப்பட்டன. அதுமாத்திரமல்லாது, ஒவ்வொரு கொலை முயற்சி தோற்கடிக்கப்பட்ட சந்தர்ப்பத்திலும் பீமசேனனின் பலமும் அதிகரித்தே வந்துள்ளது. அதுபோலத்தான் உங்கள் மீதான கொலை எத்தனங்களும் உங்களை பலப்படுத்தியே வந்துள்ளன. எனக்கு இவற்றில் சில சம்பவங்கள் பற்றி தெரியும். அப்போதெல்லாம் நீங்கள் தளர்ந்து நான் பார்த்ததில்லை. களுத்துறை சிறைச்சாலை தாக்குதலை அடுத்து உங்களை மருத்துவமனையில் நான் வந்து பார்த்தபோது ‘நீங்கள் ஒரு எம்.ஜி.ஆர் தோழர்’ என்று நான் கூறியிருந்தேன். அது உங்களுக்கு நினைவிருக்கலாம்.
உங்கள் தோழர்கள்
===============
உங்களது இன்றைய நிலைக்கு நிச்சயமாக உங்கள் தோழர்களும் ஒரு காரணம். களுத்துறை தாக்குதல் குறித்து பேசும் போது மகேஸ் அக்காவை (மகேஸ்வரி வேலாயுதம்) மறக்கமுடியாது. அவர் அன்று அழுததை என்னால் மறக்க முடியாது. அவரது குரல் இன்றும் நெஞ்சில் கேட்டுக்கொண்டே இருக்கின்றது. ஈபிடிபி போன்ற ஒரு முன்னாள் ஆயுதக்குழுவுடன் ஒரு மனித உரிமைச் சட்டத்தரணி சேர்ந்து செயற்படலாமா என்று கேள்வி கேட்டவர்கள் பலர். ஆம், ஒரு சிறந்த மனித உரிமைவாதியாக செயற்பட முடியும் என்று நிரூபித்தவர் மகேஸ் அக்கா. அவரைப் போன்ற பலரை இழந்ததன் தொடர்ச்சிதான் உங்கள் பாதை. அந்தப் பாதை மிகவும் கடினமானது. கரடு முரடானது. உங்கள் மீதும் பல இழப்புகள் குறித்த குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அவற்றில் சிலவற்றை நீங்கள் பொய் என்றும் காட்டியிருக்கிறீர்கள். ஆனால், நீங்கள் வந்த பாதை முட்கள் நிறைந்தது என்பது உண்மையே. உங்கள் பாதுகாப்பு 2010 வரை மிகவும் சிக்கலான ஒன்றாகவே இருந்தும் வந்துள்ளது. ஆனால், உங்கள் இழப்புகள்தான் உங்களை மேம்படுத்தி ஒரு திடமான மனிதராக மாற்றியிருக்கின்றன.
என்னை உங்களுக்கு முதன்முதலில் அறிமுகப்படுத்தியவர்  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் உங்கள் சகாவுமான முருகேசு சந்திரகுமார்(அசோக்). இன்று நீங்கள் இருவரும் ஒன்றாக இல்லை. உங்கள் நட்பு என்பது வெறுமனே ஒரு அரசியல் கட்சியின் உருவாக்கத்துக்காக ஏற்பட்டது அல்ல. அதனையும் கடந்து,  போராளிகளாக ஒன்றுபட்டவர்கள் நீங்கள். உங்கள் நட்பை பற்றி விமர்சிக்க எனக்கு அருகதை இல்லை. நான் வெளியாள். நீங்கள் இருவரும் முன்னரும் விலகியிருந்த நிலைமைகள் எனக்கு தெரியும். ஆனால், இந்த விடயம் எனக்கு கொஞ்சம் நெருடலாகவே இருக்கின்றது.
உங்களைப் போன்று சமூக நலனில் அக்கறை கொண்டவர்களில் அசோக்கும் ஒருவர். நீங்கள் இருவரும் பிரிந்திருப்பதில் இருவருக்கும் நன்மை இருக்கும் என்று என்னால் பார்க்க முடியவில்லை. வாக்குகளின் கூட்டு எண்ணிக்கைக்காகவோ அல்லது நாடாளுமன்ற இருக்கைகளுக்காகவோ நான் இதனைக் கூறவில்லை. அதனையும் கடந்து, மக்கள் சேவைக்கு இது மிகவும் அவசியம் என்று நான் நினைக்கிறேன். இருவரும் இந்த நிலைமையை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இருவருக்கும் இதில் பொறுப்பு இருக்கிறது. இது ஒரு செய்தியாளனின் கோரிக்கை. கோரிக்கைகளை செவிமடுப்பவர்களிடம் மாத்திரமே அதனை முன்வைக்கவும் முடியும்.
வடமாகாணசபை ஒரு ஆட்சிக்காலம் முடிந்த நிலையில் அந்த அவை குறித்து பாதகமான விமர்சனங்கள்தான் அதிகம். ஆனால், அதில் ஒரு சாதக அம்சத்தை எவரும் நிராகரிக்க முடியாது. அது அந்த அவையின் எதிர்க்கட்சித்தலைவரான சி. தவராஜாவின் பங்களிப்பு. பல தடவைகள் பலராலும் அவர் தனது கடின உழைப்புக்காகவும் அவை நடவடிக்கைகளுக்காகவும் பாராட்டப்பட்டுள்ளார். அவ்வளவு ஏன், அந்த சபையின் முதலமைச்சராக இருந்த விக்னேஸ்வரன் அவர்களால் கூட தவராஜாவின் பங்களிப்பை நிராகரிக்க முடியும் என்று நான் நினைக்கவில்லை. தவராஜா வடமாகாண சபைக்கு ஈபிடிபி வழங்கிய ஒரு சொத்து. சிறந்த அரசியல் செயற்பாட்டாளர். நீண்ட அரசியல் அனுபவம் கொண்ட ஒரு நிபுணர். இன்றும் கூட இலங்கை அரசியல் பற்றி, கட்சி கடந்து எவராலும் இவரிடம் ஆலோசனைகளை பெறமுடியும். இவர்களை புறந்தள்ளிவிட்டு உங்களைப் பற்றியும், ஈபிடிபி கட்சி பற்றியும் என்னாலும் பேசமுடியவில்லை. அதேபோல ஸ்டாலின் போன்ற உங்கள் இளம் தொண்டர்களின் செயற்திறனையும் நான் பார்த்து மகிழ்ந்திருக்கிறேன்.
அடிகளில் வீழ்ந்து வீழ்ந்து நீங்கள் எழுந்தபோதும்; பல விடயங்களில் விடாக்கண்டனாக நீங்கள் பிரதிபலித்தபோதும் உங்களைப்பார்த்து நானும் சரிநிகர் சிவகுமாரும் உங்களுக்கு முன்பாகவே ஒரு விடயத்தை கொஞ்சம் நகைச்சுவையாக கூறியுள்ளோம். அதாவது ‘என்னதான் கொள்கையில் வேறுபட்டாலும் நீங்களும் உங்கள் நண்பர் வே. பிரபாகரனும் ஒன்றுதான்’ என்று கூறியிருக்கிறோம். அதனை நீங்களும் வாயில் அரைப் புன்னகையுடன் உள்வாங்கியிருக்கிறீர்கள். பிடிவாதத்தில் இருவரும் ஒன்றுதான்.
இலங்கையின் கடற்பகுதியில் மூன்றில் இரண்டு பங்கை தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் மறைந்த வே. பிரபாகரன் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாக இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ஒருவர் கூறியதாக படித்திருக்கிறேன். இன்று யார் விரும்புகிறார்களோ இல்லையோ இலங்கையின் கடல்களும், உள்ளூர் நீர் நிலைகளும் உணவு உற்பத்திக்காகவாவது உங்கள் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றன. அவற்றை தமிழர் பகுதியில் ஏழ்மையில் வாழும் மக்களுக்காக பயன்படுத்த வேண்டிய தருணம் இது. இவ்வளவு பீடிகையை நான் போடுவதற்கும் காரணம் உண்டு. அது எங்கள் பிராந்தியம் சார்ந்தது. எங்கள் கிழக்கின் மூன்று மாவட்டங்களை உள்ளடக்கிய இலங்கையின் கிழக்கு கடற்கரை மிகவும் நீண்டது. வளமான கடல் வளத்தை கொண்டது. ஆனால், அங்கு மீன்பிடிக்குக் கூட போதுமான மீன்பிடி துறைமுகங்கள் கிடையாது. இதனை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கூட தனது பிரச்சார காலங்களில் குறிப்பிட்டிருந்தார்.
எங்கள் கடற்கரைகளுக்கு மீன்பிடி துறைமுகங்கள் தேவை. இலங்கைப் போரால் துவண்டுபோய் இருக்கும் வடக்கின் யாழ் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கும் அவை தேவை. இலங்கையின் மேற்கு மற்றும் தெற்கு கரையோரங்களில் மீன்பிடிதுறைமுகங்கள் நிரம்பி இருக்கின்றன. அங்கு மீனவர்கள்
“ஆழ் கடல் பலநாள் மீன்பிடி”யில் இலகுவாக ஈடுபட வசதி இருக்கிறது. வடக்கு கிழக்கில் அதற்கான வசதிகள் போதாது. இருப்பவையும் திருப்தியாக இல்லை. இவற்றில் கவனம் செலுத்துங்கள். எங்கள் மக்களுக்கு நிச்சயம் இவை பயன் தரும்.
தீர்வு
====
இறுதியாக நான் சொல்ல வருவது இன்னும் கொஞ்சம் முக்கியமான விடயம். உங்களுக்கு வாக்களித்த மக்கள் எல்லோரும் ஆரம்பம் முதலே அபிவிருத்திக்காக வாக்களித்தவர்கள்தான். தமிழர் உரிமை கோரும் எவரும் உங்களுக்கு வாக்களித்தார்கள் என்று கூறமுடியாது. ஆனால், அபிவிருத்தியோடு உங்கள் பணிகளை மட்டுப்படுத்திவிட முடியாது.
தமிழர் உரிமைப் பிரச்சினைக்கான உங்கள் நடவடிக்கைகளையும் நாங்கள் தீவிரமாக எதிர்பார்க்கிறோம். இந்தக் கோரிக்கை உங்களுக்கு சங்கடத்தைத் தரும் என்று நான் உணர்கிறேன். இன்றைய அரசியல் சூழ்நிலை உங்களுக்கு அந்த சங்கடத்தை அதிகப்படுத்தும் என்பதும் எனது கணிப்பு. ஆனால், வேறு வழியில்லை. உங்கள் பங்களிப்பு இந்த விடயத்தில் அதிகரித்துத்தான் ஆகவேண்டும்.
‘மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி’ என்பது உங்கள் கோட்பாடு. ஆனால், இன்றையை நிலை கொஞ்சம் சிக்கலானது. ஆனால், ‘நாளைக்கு கிடைக்கும் பலாக்காயைவிட, கையில் உள்ள காளாக்காய் சிறந்தது’ என்ற உங்கள் கூற்றையாவது காப்பாற்ற வேண்டியது உங்கள் பொறுப்பு.
அதிகாரத்தை மேலும் பகிரும் ஒரு அரசியலமைப்பு மாற்றம் வந்தால் எங்களுக்கு மகிழ்ச்சிதான். ஆனால், போரில் தோற்றமையும், கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பலதரப்பாலும் தோற்கடிக்கப்பட்டமையும் இன்று கடுமையான சூழ்நிலையை உருவாக்கியுள்ளன. இந்தியா வரும், அமெரிக்கா வரும், சீனா வரும் எல்லாவற்றையும் தங்கத்தாம்பாளத்தில் தூக்கிக்கொண்டுவந்து தரும் என்பதில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை.
ஆனால், ஏற்கனவே இருக்கும் விடயங்களையாவது கொஞ்சம் உறுதியாக்க முடியுமா என்று பாருங்கள். முடிந்தால் முதலில் அரச ஆதரவு தமிழ் கட்சிகளையும் பின்னர் ஏனைய தமிழ் கட்சிகளையும் ஒருங்கிணைத்து அபிவிருத்திக்காக மாத்திரமல்லாமல் உரிமை கோரும் மக்களுக்கும் ஏதாவது செய்ய முயற்சி செய்யுங்களேன்.
மக்களின் மாறுபட்ட அபிலாசைகளை அவர்கள் தரப்பில் இருந்து புரிந்துகொண்டு விடை காண முயலுங்கள். குறிப்பாக எங்கள் கிழக்கு மாகாண மக்களின் அபிலாசைகளை ஏனையோர் போல் அல்லாது சரியாக புரிந்துகொள்ள முயலுங்கள். கிழக்கில் உள்ள  அரசியல் அமைப்புக்கள், பொது அமைப்புக்களின் உதவிகளை அதற்கு பெற முயலுங்கள். கிழக்கில் தமிழர்கள் மேலும் பலவீனமடைவதில் இருந்து அவர்களை காப்பாற்ற உதவுங்கள். எங்கள் பகுதி அமைப்புக்களின் கோரிக்கைகளுக்கு துணையாக இருங்கள்.
கிழக்கில் சிறையை உடைத்து வெளியே சென்றவர் நீங்கள். கிழக்கு மக்களின் சமூக, பொருளாதார, அரசியல் விடுதலைக்கும் உதவியாக இருங்கள் என்று கோருகிறோம். ஏனைய யாழ் மையவாதக் கட்சிகளைப் போன்று ஈபிடிபி இருக்காது என்று எதிர்பார்க்கிறோம்.
L’image contient peut-être : 1 personne, barbe
நன்றி முகநூல்* சீவகன் பூபாலரெட்ணம் 

0 commentaires :

Post a Comment