கிழக்கு மாகாணத்தின் கடந்த காலப் பொதுத் தேர்தல்களில் இனத்துவ ரீதியாகத் தமிழர்கள் பின்தள்ளப்பட்டு வருவதைப் பொறுப்புடன் எவரும் கருத்தில் கொண்டதாகத் தெரியவில்லை. வெறுமனே கிழக்கு மாகாணமும் தமிழரின் தாயகப் பிரதேசம் என்று கூறிக் கொண்டிருப்பதால் பயனில்லை. அதனை உறுதிப்படுத்த தேர்தலைப் பயன்படுத்த வேண்டியது தமிழர் பிரதிநிதிகளின் கடமை ஆகும்.
இலங்கையின் அரசியலமைப்பின்படி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இரண்டும் தமிழ் மொழிக்கு முதன்மை நிர்வாக உரிமையுள்ள மாகாணங்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி மேற்படி இரு மாகாணங்களும் தமிழர்களின் தாயகப் பகுதிகள் என்பதும் தெளிவாகின்றது.
தமிழர் பிரதிநிதித்துவங்கள் இவ்வாறு குறைவடைவதற்கு தமிழர் மத்தியிலே பல்வேறு தரப்பினர் பிளவுபட்டுப் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது ஒரு காரணியாயுள்ளது. அத்துடன் தமிழர் வாக்குகளைப் பிளவுபடுத்தி மாற்று சமூகத்தினரது பிரதிநிதித்துவ அதிகரிப்புக்காக செயற்படும் தமிழர் தரப்பும்,வாக்களிப்பில் அக்கறை செலுத்தாத தமிழர் தரப்பும் காரணமானவர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.
தற்போது நடைமுறையிலுள்ள விகிதாசாரத் தேர்தல் முறைமையின்படி சிந்தித்து,ஒன்றுபட்டு இனத்துவ நலன் கருதி வாக்களிக்காவிட்டால் இருக்கும் தமிழர் பிரதிநிதித்துவங்களுக்கும் இழப்பு ஏற்பட வழி வகுத்ததாயமையும்.
அடுத்து வரும் ஐந்து ஆண்டுகளுக்கு நாட்டைஆள, மாகாணத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஏற்றபடி தரமும்,தகுதியும்,திறமையும், இனநல நோக்கும் கொண்ட பாராளுமன்றப் பிரதிநிதிகளைத் தெரிவு செய்யும் பொறுப்பும் கடமையும் கிழக்கு மாகாணத் தமிழ் மக்களைச் சார்ந்தது.
த.மனோகரன்
(துணைத் தலைவர், அகில இலங்கை இந்துமாமன்றம்)
0 commentaires :
Post a Comment