கீழடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மாநில தொல்லியல் துறை நடத்திவரும் ஆறாம் கட்ட அகழாய்வில் இதுவரை நான்கு எடைக் கற்கள் கிடைத்துள்ளன. கீழடி பகுதி தொழிற்கூடமாக இருந்திருக்கலாம் என்ற கருத்திற்கு இவை வலுச் சேர்ப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
கீழடியிலும் அதனை ஒட்டியுள்ள அகரம், கொந்தகை, மணலூர் பகுதிகளிலும் மாநில தொல்லியல் துறை தற்போது அகழாய்வுகளை நடத்திவருகிறது. இது கீழடி பகுதியில் நடந்துவரும் ஆறாவது கட்ட அகழாய்வாகும்.
இதில் கொந்தகை பகுதி ஈமக் குழிகள் அமைந்த பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளது. அகரம் பகுதி மக்கள் வாழ்ந்த பகுதியாக அடையாளம் காணப்பட்டிருக்கிறது.
கீழடியில் நடந்துவந்த அகழாய்வில் ஜூன் 20ஆம் தேதியன்று 1.53 மீட்டர் ஆழத்தில் ஒரு எடை கல் கண்டெடுக்கப்பட்டது. இந்த எடைக் கல் கறுப்பு நிறத்தில் உருளை வடிவில் இருந்தது. இதன் அடிப்பாகம் தட்டையாக இருந்தது. ஏதன் மேல் பகுதி பளபளப்பாக்கப்பட்டிருந்தது.
ஜூன் 25ஆம் தேதியன்று 1.22 மீட்டர் ஆழத்தில் ஒரு எடைக் கல் கண்டெடுக்கப்பட்டது.இதுவும் கறுப்பு நிறத்தில் பளபளப்பாக்கப்பட்டு, உருளை வடிவில் இருந்தது.
ஆகவே இதுவரை 8, 18, 150, 300 கிராம் எடையுடைய நான்கு எடைகற்கள் கிடைத்துள்ளன. ஆழத்தில் உலை ஒன்று இருந்த தடயமும் கிடைத்துள்ளது.
தற்போது கண்டறியப்பட்டுள்ள உலை அமைப்பு, இக்குழிகளில் கிடைத்துள்ள இரும்புத் துண்டுகள், இரும்பு ஆணிகள், கண்ணாடி உருக்கிய பின்னர் வெளியேறும் கசடுகள் ஆகியவை இப்பகுதி தொழில் கூடமாக செயல்பட்டிருக்கலாம் என்பதற்கு ஆதாரமாகத் திகழ்கின்றன.
எடைக் கற்கள் மூலம் இப்பகுதியில் வணிகமும் நடைபெற்றிருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
"இந்த எடை கற்களின் அளவு 8 கிராமிலிருந்து 300 கிராம் வரைதான் என்பதால், உலோகப் பொருட்களை எடைபோட இவை பயன்படுத்தப்பட்டிருக்கலாம்" என்கிறார் அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டிருக்கும் மாநில தொல்லியல் துறையின் இணை இயக்குனர் சிவானந்தம்.
0 commentaires :
Post a Comment