+
இலங்கைத் தமிழர் பிரச்சினை என்பது உலகறிந்த ஒன்று. அதனை உலகுக்குக் கொண்டு சென்றதற்கு மூன்று தசாப்தத்துக்கு மேலான உள்நாட்டு யுத்தமே காரணமாகிறது. சர்வதேசத்துக்கு இந்த இலங்கைத் தமிழர் பிரச்சினை சென்றுள்ள போதும் அத்தகைய தமிழர் பிரச்சினையைத் தீர்க்க வேண்டிய மையமாக இலங்கையே இருக்கிறது. அது தனிநாட்டு கோரிக்கையில் ஆரம்பித்து இப்போது சமஷ்டி கோரிக்கையில் நின்றாலும் இடையிலே ஏற்படுத்திக் கொண்ட மாகாண சபை முறைமையைத் தக்கவைத்துக்கொண்டாலே போதும் எனும் யதார்த்த அரசியல் செல்நெறிக்குள் சிக்கி இருக்கிறது.
இந்த நிலையில் இலங்கைத் தமிழர் தரப்பில் முன்வைக்கப்படும் சமஷ்டிக் கோரிக்கையிலோ அல்லது தக்கவைத்துக்கொண்டால் போதுமானது எனும் மாகாண சபை முறைமையிலோ வடக்கு கிழக்குக்கு வெளியே பரவலாக வாழும் தமிழ் மக்களின் பிரச்சினைகள், அதற்கான தீர்வுகள் உள்வாங்கப்படுகுன்றனவா? என்றால் இல்லை என்ற பதிலே இடம்பெறும்.ஏனெனில் வடக்கு - கிழக்குப் பகுதியில் வாழும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளில் இருந்து வடக்கு, கிழக்குக்கு வெளியே நுவரெலிய, பதுளை, கண்டி, இரத்தினபுரி, கேகாலை, மாத்தளை, களுத்துறை, காலி, மாத்தறை, மொனராகலை, குருநாகலை, புத்தளம், கம்பஹா, கொழும்பு ஆகிய பதினான்கு மாவட்டங்களில் பரந்து விரிந்து சிதறிவாழும் மக்கள் சமூகமாக பல்வேறு ஒருமித்த, வேறுபட்ட அடையாளங்களுடன் வாழ்ந்து வருகின்றனர். இதே பகுதிகளில் சிறு அளவில் வடக்கு - கிழக்கு பூர்விகத்தைக் கொண்ட மக்கள் வாழ்ந்தாலும் அவர்கள் தங்களது இனத்துவ அடையாளமாகக் கொண்டிருக்கிற “இலங்கைத் தமிழர்” என்ற பொது அடையாளத்தைக்குள் உள்வாங்கப்பட்டவர்களாக மேலே சொன்ன “இலங்கைத் தமிழர் பிரச்சினை” கோட்பாட்டுக்குள் வந்து விடுகின்றனர்.அதே நேரம் “இலங்கைத தமிழர் பிரச்சினை கோட்பாட்டுக்குள்” உள்வாங்கப்படாத வடக்கு கிழக்குக்கு மாகாணங்களுக்கு வெளியே வாழும் தமிழ் மக்களின் அடையாளமும் பிரச்சினைகளும் அவர்கள் சிதறுண்டு வாழ்வது போலவே சிதறுண்டு கிடக்கிறது. அவர்களது பிரச்சினைகள் வர்க்க அடிப்படையில், தொழில் அடிப்படையில், மாவட்ட அடிப்படையில் வேறுபட்ட பரிமாணங்களைக் காட்டி நிற்கிறது. ஆனால், அடிப்படையில் இவர்களை ஒருமுகப்படுத்துவது “இந்தியத் தமிழர்” எனும் இனத்துவ அடையாளத்தின் கீழ் இலங்கையின் சனத்தொகை கணிப்பீட்டில் பதியப்பட்டிருப்பதுதான். அதே நேரம் இவர்களில் சுதந்திர இலங்கையில் குடியுரிமை பறிக்கப்பட்டு காலத்திற்கு காலம் அதனை மீளப்பெற்றவர்களே.இந்த இனத்துவ அடையாளம், இழந்த குடியுரிமையைப் மீளப்பெற்றல் எனும் இரண்டு விடயங்களையும் வடக்கு கிழக்குக்கு வெளியே வாழும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளைத் தீர்மானிக்கும் அடிப்படைப் பொதுமைப் பரிமாணங்கள் ஆகும்.இதில் பெரும்பான்மையானவர்கள் தங்களை “மலையகத் தமிழர்” எனும் பண்பாட்டு அடையாளத்துக்குக் கீழ் கொண்டு வந்துள்ளனர். ஆனால் அது இன்னமும் அரசியல் பரிமாணம் பெறவில்லை. எனவே இலங்கை சனத்தொகை கணிப்பீடுகளின் பொது இந்தியத் தமிழர், இலங்கைத் தமிழர் ஆகிய இரண்டு வகையறாக்களிலும் தங்களைப் பதிவு செய்துவிடுவதால் ஒட்டுமொத்தமாக பதினான்கு மாவட்டங்களில் பரந்துவழும் பதினைந்து லட்சம் அளவான சனத்தொகை உண்மையான பிரதிபலிப்பைக் காட்டுவதில்லை. சுமார் 7.5 சதவீதம் என மொத்த சனத்தொகையில் அமைந்திருக்க வேண்டிய அளவினர் 4.2 வீதம் என்றே காட்டப்படுகிறது.இவ்வாறு இனத்துவ அடையாளத்தில் மாத்திரம் இன்றி, வேறுபட்ட காலங்களிலும் சட்டங்களினும் கீழ் இலங்கைப் பிரஜாவுரிமைப் பெற்றவர்கள் என்றவகையில் தாம் அனுபவிக்கும் உரிமைகள் தொடர்பில் வேறுபட்ட பிரச்சினைகளை எதிர் கொண்டுள்ளனர். ஆனால், இந்த இந்திய வம்சாவளி இனத்துவ அடையாளம் கொண்டவர்களில் பெருமளவானோர் பெருந்தோட்டங்களை சார்ந்ததாக தோற்றம் பெற்ற சமூகம் என்றவகையில் குடியுரிமை ( citizenship) என்ற அடிப்படையில் வாக்குரிமை ( voting ) பெற்றுக் கொண்டுள்ளார்களே அன்றி ஒரு நாட்டின் பிரஜைக்குரிய உரிமைகளை அனுபவிப்பவர்களாக இல்லை. அடிப்படை உரிமைகளான காணி, வீடு, கல்வி, சுகாதாரம், போக்குவரத்துப் பாதை என இன்னொரன்ன அடிப்படை உரிமைகளும் பொது நிர்வாகம், அரசியல் பங்கேற்பு ஆகிய இரண்டு விடயங்களிலும் இலங்கை அரசாங்கத்துடன் பங்கேற்பதில் உரிய இலக்கை அடையாதவர்களாக உள்ளனர்.வடக்கு கிழக்கு வாழ் இலங்கைத் தமிழர்கள் சமஷ்டியை தமக்கான தீர்வாக கோரி நிற்கும் நிலையில் வடக்கு கிழக்குக்குக்கு வெளியே வாழும் இந்திய வம்சாவளி மலையகத் தமிழர் ஏற்கனவே உருவாக்கப்பட்ட மாகாண சபைகளில் ஏன் உள்ளூராட்சி சபைகளில் கூட உரிய அந்தஸ்த்தோடு உள்வாங்கப்படாத நிலை காணப்படுகிறது. எனவே தமக்கான “அரசியல் அதிகாரப்பகிர்வு “ எத்தகையது என்பதை தீர்மானிக்க வேண்டியவர்களாக உள்ளனர். “மலையகத் தனிஅலகு” போன்ற விடயங்கள் ஏற்கனவே கொள்கை அளவில் முன்வைப்பு செய்யப்பட்டிருந்தாலும் அதனை அடைவதற்கான அரசியல் பொறிமுறைகள் உருவாக்கப்படவில்லை. அத்தகைய அதிகாரப்பகிர்வு குறித்த மாவட்டங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதாக அமைந்துவிடவும் கூடாது. எனவே அதிகார பகிர்வு தொடர்பான இற்றைப்படுத்தல் அவசியமாகிறது. மறுபுறம் “பொது நிர்வாகம்” முழுமையாக சென்று சேராது இன்னும் தனியார் வசம் சிக்கி இருக்கும் சமூக நிர்வாகத்தை கவனமாக கழற்றி எடுக்க வேண்டி உள்ளது. குறைந்தபட்சமாக உள்ளூராட்சி மன்ற மட்டத்தில் அரசியல் அதிகாரப்பகிர்வும், கிராம அலுவலர் பிரிவு மட்டத்தில் நிர்வாக அதிகாரப்பகிர்வும் இந்த மக்கள் வேண்டி நிற்கும் அரசியல் அபிலாஷகளாக உள்ளது. அதில் இருந்து அடுத்த கட்ட அபிவிருத்திக்கான அடித்தளத்தை அவர்கள் பெறும்வகையில் அரசியல் வியூகம் வகுக்கப்படுதல் வேண்டும்.இந்தப் பின்னணிகளை இலக்காகக் கொண்டு கடந்த 2015 ஆம்ஆண்டு உருவாக்கப்பட்ட தமிழ் முற்போக்கு கூட்டணியானது பின்வரும் அடையாளப்படுத்தல்களைச் சுட்டி நிற்கிறது.- பிரதேச சபைகள் சட்டத்திருத்தம்
- பிரதேச சபைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு- பிரதேச செயலகங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு- மலையக அதிகார சபை உருவாக்கும்- மலைநாட்டில் புதிய கிராமங்களின் உருவாக்கம் அதற்கு முன்னோடிகளின் பெயரிடுதல்- குறித்த மாவட்டங்களில் தமிழ் மொழி அமுலாக்கம்- பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கான காணி , கட்டட அபிவிருத்தியுடன் விஞ்ஞான துறையை விருத்தி செய்தல்.- பெருந்தோட்டப் பகுதி சுகாதாரத்தை தேசியமயப்படுத்தல்- பெருந்தோட்டங்களை பிரித்து சிறு தோட்டங்களாக மக்களுக்குப் பகிர்ந்தளித்தல்முதலான விடயங்களில் பாராளுமன்றிலும் அதற்கு வெளியிலும் ஒரு அரசியல் பரிமாணத்தையும் பரிணாமத்தையும் எடுத்துக்காட்டியுள்ளது. எதிர்காலத்தில் அதனை மேலும் விரிவுபடுத்தி முன்னோக்கிச் செல்ல இந்த இலக்கினை அடைதலுக்கு ஏற்ற அரசியல் அணியாக அடையாளம் காணக்கூடிய ஐக்கிய மக்கள் சக்தி யின் அங்கத்துவ கட்சியாக 2020 பொதுத்தேர்தலைச் சந்திக்கிறது.மயில்வாகனம் திலகராஜாஅரசியலாளர் - அரசியல் ஆய்வாளர்பொதுச் செயலாளர் - தொழிலாளர் தேசிய முன்னணிநிதிச் செயலாளர் - தமிழ் முற்போக்கு கூட்டணிபிரதிப் பொதுச் செயலாளர் - தொழிலாளர் தேசிய சங்கம்வேட்பாளர் - தேசிய பட்டியல் - ஐக்கிய மக்கள் சக்தி - 2020முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் - நுவரஎலியா மாவட்டம்.
0 commentaires :
Post a Comment