என்றும் எமது மதிப்புக்குரிய அரச உத்தியோகஸ்தர்களே உங்களனைவரோடும் சற்று உரையாட விரும்புகின்றேன் . இந்த உரையாடல் ஊடாக எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தல் (ஆண்டு-2020) தொடர்பான சில அவதானங்களை தங்களனைவரதும் மேலான கவனத்துக்கு கொண்டு வருவதே எனது நோக்கமாகும்.
கிழக்கு மாகாணத்தின் துறைசார் நிர்வாக கட்டமைப்புக்கள் அனைத்திலும் தமிழர்களின் வகிபாகம் தொடர்ச்சியாக நலிவடைந்து செல்வதனை நான் உங்களுக்கு விலாவரியாக விளக்கவேண்டிய அவசியம் இல்லை என்று எண்ணுகின்றேன். கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சராக நான் இருந்த காலத்தில் நெஞ்சை நிமிர்த்தி நின்ற கிழக்குத் தமிழன் இன்று தலை குனிந்து நிற்பதன் காரணம் யாது என்பதை நீங்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.
அரசின் நிதி ஒதுக்கீடுகள், வேலைவாய்ப்புக்கள், பதவியுயர்வுகள், இடமாற்றங்கள் என அனைத்திலும் தமிழினம் வஞ்சிக்கப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக ஒரு காலத்தில் நாடு கேட்டு போராடிய எமது இனம் இன்று வீதி விளக்குகளுக்காய் பிரதேசபைகளிடம் கையேந்தி நிற்கின்றது.
இதனை ஈழத்தமிழனின் இழிநிலை என்பதா? ஆண்ட பரம்பரையின் அவமானமென்பதா? இதற்கு காரணம் என்ன? இதற்கு காரணம் யார்? இதுவரைகால எமது அரசியல் பாதையின் தவறுகள்தானே அதற்கு காரணம். எனவேதான் இனி நாம் புதியபாதைகளை கண்டடைய வேண்டும்.
பெரும் தலைவர்களான இராஜதுரை, தேவநாயகம் போன்றோருக்கு பின்னர் அதாவது 1989ம் ஆண்டு தேர்தலுக்கு பின்னரான சுமார் முப்பத்தியொரு ஆண்டுகளில் அமைச்சரவை அந்தஸ்துள்ள ஒரு அமைச்சரேனும் கிழக்கு தமிழர்களாகிய எமக்கு கிடைக்கவில்லை. இலங்கையிலுள்ள எந்தவொரு மாகாணத்துக்கும் இப்படியொரு பரிதாபம் நிகழ்ந்திருக்க முடியாது.
இதுபோன்றதொரு இருண்ட காலம் இனிமேலும் தொடர நாம் இடமளிக்க போகின்றோமா? முப்பது வருட கால யுத்தம், யுத்ததுக்கு பின்னரான பத்து ஆண்டுகள் என்று நாற்பது வருடங்களில் ஒரு தலைமுறை மாற்றம் நிகழ்ந்துவிட்டது. எமது புதிய சந்ததிகளின் தேவைகளும் எதிர்பார்புக்களும் மாற்றம் பெற்றுவிட்டன. நவீன தொழிநுட்ப உலகில் போட்டிபோட்டு முன்னேறவேண்டிய காலம் இது. அதற்கிணங்க சர்வதேச தரமிக்க நவீன கல்வி மற்றும் தொழில் வாய்ப்புக்களை எமது இளைஞர் யுவதிகளுக்கு வழங்கவேண்டிய கடப்பாடு எமக்குண்டு.
எனவேதான் இத்தேர்தலின் ஊடாக அதிகார பீடங்களின் கிழக்கு தமிழர்களின் இருப்பினை உறுதிசெய்ய நாம் களமிறங்கியுள்ளோம்.
எமது மாவட்டதினையும் மக்களையும் பல வழிகளிலும் வழிநடத்திச் செல்கின்ற கல்வியாளர்களாக நீங்கள் இருக்கின்றீர்கள். அந்தவகையில் எதிர்வரும் பாரளுமன்றத் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து நீங்களனைவரும் தீவிர கவனம் கொள்ளவேண்டும். கட்சி பேதங்களை தாண்டி கிழக்கின் விடிவுக்காக சிறந்த முடிவொன்றினை தாங்களனைவரும் ஒருமித்து எடுக்கவேண்டுமென்று தயவுடன் கேட்டுக் கொள்கின்றேன்.
அந்த முடிவானது தமிழ் மக்கள் விடுதலை புலிகள் தலைமையில் களமிறங்கியுள்ள வேட்பாளர்களை ஆதரிப்பதாக மட்டுமே இருக்கும் என்று நான் திடமாக நம்புகின்றேன். எனவே கிழக்கின் சின்னமான படகு சின்னத்துக்கு உங்களனைவரதும் வாக்குகளையும் வாரி வழங்குங்கள் என உங்களனைவரிடமும் இருகரம் கூப்பி நிற்கின்றேன்.
தங்களனைவரதும் பூரண ஆதரவுடன் படகுசின்னத்துக்கு நேரே இடப்படுகின்ற ஒவ்வொரு வாக்குகளும் பாராளுமன்ற உறுப்பினர்களை மட்டுமல்ல அதிகாரமிக்க அமைச்சர்களை உருவாக்குவதற்குமான பெறுமதிமிக்க வாக்குகளாகும் என்பதனை ஒவ்வொருவர் மனதிலும் நிறுத்துங்கள் என தயவுடன் கேட்டு கொள்ளுகின்றேன் .
நன்றியுடன் என்றும் உங்கள்
பிள்ளையான் (சிவ-சந்திரகாந்தன்)
-தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி
0 commentaires :
Post a Comment