இம்முறை நடைபெறவிருக்கின்ற பாராளுமன்ற பொது தேர்தல் தொடர்பான செய்திகளில் தமிழ் தரப்பு பெண் வேட்பாளர்கள் தேர்வு குறித்து அதிகம் பேசப்பட்டுவருகின்றது. குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் சார்பாக களமிறக்கப்பட்டுள்ள திருமதி மங்களேஸ்வரி சங்கர் என்பவர் இச்செய்திகளினுடாக சர்ச்சைக்குரியவராக மாறியுள்ளார்.
தேர்தல்கள் அறிவிக்கப்பட்டவுடன் மட்டக்களப்பில் மங்களேஸ்வரி அவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளராவார்' என்று பரவலாக நம்பப்பட்டது. தமிழரசு கட்சி பாரம்பரியத்தை கொண்டவராக மட்டுமன்றி தமிழரசு கட்சியின் ஆயுட்கால உறுப்பினராகவும் இருந்தவர் மங்களேஸ்வரி ஆகும். இந்நிலையில் தமிழரசு கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரின் முயற்சியிலேயே மங்களேஸ்வரி தேர்தலில் களமிறங்க முடிவு செய்தார். அதேபோல வேட்பாளருக்கான நியமனம் கோரும் விண்ணப்பத்தை இன்பராஜா விதானையார் எனப்படுகின்ற தமிழரசு கட்சியின் மூத்த தலைமுறை செயற்பாட்டாளர் ஒருவரே தமிழரசு கட்சியின் செயலாளர் துரைராசசிங்கம் அவர்களிடம் மங்களேஸ்வரி சார்பாக கையளித்துமிருந்தார்.
அதேபோல வெளிநாடுகளில் குறிப்பாக சுவிஸில் வாழும் தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு மிக நெருக்கமான இரு ஊடகவியலாளர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பானது மங்களேஸ்வரிக்கு வேட்பாளர் நியமனம் வழங்குவதை சாத்தியமாக்க பல முயற்சிகளில் ஈடுபட்டிருந்தனர்.
அனைத்துக்கும் மேலாக மங்களேஸ்வரியே நேரிடையாக கொழும்பில் வைத்து சுமந்திரன் அவர்களை சந்தித்து தனக்கு வேட்பாளர் நியமனம் வழங்கப்படுவதை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
இத்தனை எதிர்பார்ப்புகளுக்கும் மத்தியில்தான் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலில் மங்களேஸ்வரிக்கான வாய்ப்பு அதிர்ச்சிதரும் வகையில் மறுக்கப்பட்டது. அதேவேளை மட்டக்களப்பை சேர்ந்த மற்றுமொரு பெண்ணிய செயற்பாட்டாளரான நளினி என்பவருக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படப்போகின்றது என்கின்ற செய்திகள் பரவியபோதிலும் இறுதியில் பெண் பிரதிநிதித்துவங்கள் எதுவுமின்றி தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் பட்டியல் உறுதி செய்யப்பட்டு விட்டதாக செய்திகள் கசிந்தன.
இந்நிலையில்தான் சட்டத்தரணியும் மனிதவுரிமை மற்றும் பெண்ணிய செயற்பாட்டாளராகவும் அறியப்பட்ட சிறந்த ஆளுமையான மங்களேஸ்வரியை தம்பக்கம் ஈர்ப்பதில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் தலைவர் சந்திரகாந்தன் முனைப்புக்கொண்டார். எட்டு வேட்பாளர்களில் சிறந்த ஆளுமைகளாக தெரிவாகியிருந்த ஏழு ஆண்களையும் உறுதிசெய்துகொண்ட நிலையில் பெண்களுக்கென ஒதுக்கப்பட்ட இடத்திற்கு மங்களேஸ்வரியை உள்வாங்குவதென்பதில் சந்திரகாந்தன் வைத்த குறி தவறவில்லை. மங்களேஸ்வரியின் சொந்த ஊரான முனைக்காடு ஏலவே தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் ஆதரவுத்தளம்மிக்க ஒரு கிராமமாகும். அந்த சூழலை சந்திரகாந்தன் சரியாக பயன்படுத்திக்கொண்டார். அக்கிராமத்து இளைஞர் யுவதிகளை கொண்டே மங்களேஸ்வரியை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் வேட்பாளராக்குவதில் வெற்றிகண்டார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு செய்த நம்பிக்கை துரோகத்தினால் மனமுடைந்திருந்த மங்களேஸ்வரி பெண் பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்ய தயாராக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளிடமிருந்த ஜனநாயக இடைவெளியை தனக்கானதாக்கிக்கொண்டார்.
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் வாக்கு வங்கியை தாண்டி தமிழ் தேசிய கூட்டமைப்பின் பெரும்பாலான வாக்காளர்களை கவர்வதில் மங்களேஸ்வரி தீவிரமாக வெற்றிகண்டு வருகின்றார். மங்களேஸ்வரியின் வெற்றிநோக்கிய நடையினால் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வேட்பாளரும் செயலாளருமான துரைராசசிங்கம் உட்படபே சுமந்திரன் கூட நிலைகுலைந்து போயுள்ளனர். சுமந்திரனின் அண்மைக்கால நேர்காணல்களில் இதனை அவதானிக்கலாம்.
சுமந்திரன் செல்லுமிடமெல்லாம் மங்களேஸ்வரிக்கு நியமனம் வழங்கப்படாமை குறித்த கேள்வியை எதிர்கொள்ள நேரிடுகின்றது. வேட்பாளர் நியமனம் கோருகின்ற ஒருவரை நிராகரிப்பதற்கு பல காரணங்கள் இருக்கமுடியும். கேட்பவர்களுக்கெல்லாம் நியமனம் வழங்க முடியாது. அவற்றை சாதாரணமாக சொல்லிவிட்டு கடந்துபோக வேண்டிய நிலையில் சுமந்திரனோ தமிழர்தம் அரசியலில் மிகவும் மலின யுத்தியான 'துரோகி' குற்றச்சாட்டை கையிலெடுத்துள்ளார்.
அதாவது மங்களேஸ்வரிக்கு நியமனம் வழங்காமை குறித்து அவர் தெளிவாக கீழ்வருமாறு குறிப்பிடுகின்றார் "அவருக்கு நியமனம் வழங்க கூடாது என்பதற்கான பலவிடயங்களை உயர்பீடத்தில் முன்வைத்தேன்,அவற்றையெல்லாம் விபரிக்க முடியாது,ஆனால் அவரை நாங்கள் ஏன் நிராகரித்தோம் என்பது இப்போது புரியும்,அவர் இப்போது பிள்ளையானோடு இணைந்துகொண்டுள்ளார்" சுமந்திரனின் பார்வையில் பிள்ளையான் துரோகி, அவரோடு இணைந்து கொண்டு மங்களேஸ்வரியும் துரோகியாகி விட்டார் என்பதுதான் அவரது கருத்தாகும்.
அதாவது தேர்தலுக்கு பின்னர் இதுபோன்ற 'துரோக'த்தை மங்களேஸ்வரி செய்வார் என்று சுமந்திரன் ஆருடம் சொன்னாராம்.அது இப்போதே பலித்துவிட்டதாம். எப்படியிருக்கிறது?.
பரம்பரை தமிழரசு கட்சி குடும்பமேயானாலும்,தமிழரசு கட்சி தூண்களே கொண்டுவந்து நிறுத்தினாலும் "தமிழ் தேசியத்தின் வாழ்நாள் சாதனையாளர்களே" நற்சான்றிதழ் கொடுத்தாலும்,மங்களேஸ்வரியே வந்து சுமந்திரனிடம் வேண்டுகோள் விடுத்தாலும் நாங்கள் சந்தேகம் கொண்டே தீருவோம் ஏனெனில் அவர் மட்டக்களப்பு என்பதுதானே இதன் அர்த்தமாக இருக்க முடியும்.
இப்படி சொல்லுவதற்கு எத்தகைய ஆதிக்க மனோநிலைவேண்டும்? இது மங்களேஸ்வரி என்கின்ற ஒரு நபரை மட்டும் அவமதிப்பதல்ல. மட்டக்களப்பு தமிழகத்தின் ஒட்டுமொத்த மாந்தர்களையே அவமதிப்பதாகும், அதுமட்டுமல்ல தமிழ் தேசியம் தமிழ்த்தேசியம் என்கிறீர்களே அந்த தமிழ் தேசியத்தையும் அவமதிப்பதாகும். குறித்த ஒரு பிரதேசத்தைச் சேர்ந்தவர்களை துரோகிகள் என்கின்ற முன்முடிவுகளுடன் அணுகுவதற்கு பெயர்தான் பிரதேச மேலாதிக்கம். யாழ்ப்பாணத்தாரை தவிர ஏனையவர்கள் நம்பிக்கைக்குரியவர்களல்ல என்று பிரதேச ரீதியாக நீங்கள் சிந்தித்தால் அதுவே யாழ் மேலாதிக்கம். இந்தமேலாதிக்க அணுகுமுறையே அன்று இருபத்தைந்து வருடம் தமிழரசுக்கட்சியை கட்டிவளர்த்த பெருந்தலைவர் இராஜதுரையை தலைமைக்குரிய நம்பிக்கைவாய்ந்தவரல்ல என்று ஒதுக்கியது. இன்று மங்களேஸ்வரியை நியமனம் கொடுக்காமலேயே தட்டிக்கழித்து ஒதுக்கியுள்ளது.
இத்தகைய அவமானத்தின் பின்னேரே மங்களேஸ்வரி மனம்மாறினார். தமிழரசுக்கட்சியின் மீது தான் கொண்ட நம்பிக்கையையிட்டு தன்னைத்தானே நொந்துகொண்டார். தமிழ் தேசியத்தின் காவலர்களாக நின்று தலையால் மண்கிண்டினாலும் மட்டக்களப்பாளராகில் ஒருநாள் ஒதுக்கப்படுவீர்கள் என்கின்ற யதார்த்தம் தெரிந்திருக்கும். அப்போதுதான் அவருக்கு பன்னிருவருடமாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் சொல்லிவரும் 'யாழ் மேலாதிக்கம்' என்பதன் அர்த்தம் புரிந்திருக்கும். யாழ் மேட்டுக்குடி தலைமைகளால் தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நிகர்த்த பிறிதொன்று இனியொருபோதும் எந்தவொரு கிழக்கு மாகாணத்தவர்களுக்கும் நடக்க விடக்கூடாது என்கின்ற ஓர்மம் வந்திருக்கும். கிழக்கின் தலைமையை வலுப்படுத்தவேண்டும் என்கின்ற தர்மத்தின் ஆவேசம் எழுந்திருக்கும். அதன்பின்னரே அவர் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் வேட்பாளராக முடிவு செய்திருப்பார்.
மீன்பாடும் தேனாடான்
1 commentaires :
நியமனம் கேட்டு நாலு காலில் போவது நியமனம் கிடைக்காவிட்டால் உடனே கட்சி மாறுவது. பிள்ளையான் தராவிட்டால் கருணா எனது நண்பன் அவரிடம் கேட்டு வாங்கியிருப்பேன் என்று ஆடையை மாற்றுவது போல கட்சியை மாற்றபவரை என்ன சொல்லி அழைப்பது? தமிழ் அரசக் கட்சி பதவிக்கு ஆக அலைகிறவர்களை அணைத்துக் கொள்ளக் கூடாது. சுமந்திரனின் மதியூகம் காரணமாக ஒரு துரோகியை முன்கூட்டியே அடையாளம் கண்டு கொண்டோம். பிள்ளையான் துரோகி இல்லையா? கொலைகாரன் இல்லையா?
Post a Comment