3/25/2020

ஆயிரமாயிரம் குழந்தைப் போராளிகளின் மனசாட்சியாக சந்திரகாந்தன் செய்யப்பட்டார்


கிழக்கு மாகாண சபை உருவாக்கப்பட்டபோது யுத்தம் முழுமையாக முடிந்திருக்க வில்லை.கிழக்கு மாகாணத்தில் மட்டுமே அப்போதுதான் யுத்தம் ஓய்ந்திருந்தது.எனவே சுமார் முப்பது வருட யுத்த வடுக்களுடன் கல்வித்துறை சீரழிந்து கிடந்தது.  கிராமப்புற பாடசாலைகளில் பல ஒற்றை ஆசிரியர்களுடனேயே இயங்கிக்கொண்டிருந்தன. குறிப்பாக வெருகல், பட்டிபளை,வாகரை, வெல்லாவெளி,வவுணதீவு,திருக்கோவில் போன்ற பிரதேச பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை தலைவிரித்தாடியது. அதிலும் கணித விஞ்ஞான ஆங்கில ஆசிரியர்கள் மிகவும் அரிதாகவே இருந்தனர். யுத்தகால இடப்பெயர்வுகள் காரணமாக வாகரை,கதிரவெளி புணானை,கரடியனாறு போன்ற எல்லைகிராமங்களில் காணப்பட்ட பல  பாடசாலைகள்ஆசிரியர் பற்றாக்குறை என்பதற்கு அப்பால் போதிய மாணவர்களின் வரவு இன்றி இன்றோ நாளையோ மூடப்படும் நிலையில் இருந்தன.

அதேவேளை பல நகர்புற பாடசாலைகளில் தேவைக்கும் மேலதிக ஆசிரியர்கள் காணப்பட்டனர்.யுத்தகால வன்முறை சூழலையும் சோதனை சாவடிகள்,தடுப்புகள்,கைதுகள் போன்றவைற்றையும் காரணமாக கொண்டு பல ஆசிரியர்கள் தத்தமது பிரதேசங்களை அண்டிய பாடசாலைகளுக்கு இடமாற்றம் பெற்றுக்கொண்டு சென்றிருந்தனர். இதற்கு பல அமைச்சர்களின் சிபார்சுகள் வாய்ப்பளித்திருந்தன. குறிப்பாக கல்முனை,மட்டக்களப்பு -மத்தி போன்ற கல்வி வலையங்களின் பாடசாலைகளில் தேவையற்ற நிலையில் பல ஆசிரியர்கள் மேலதிகமாக காணப்பட்டனர்.

இந்த நிலையில் மாற்றம்கொண்டுவர வேண்டியதன் அவசியம் முதலமைச்சரால் உணரப்பட்டது. கிழக்குமக்களின் கல்வியை வளர்த்தெடுப்பதே எமதுமக்களின் அடிமைத்தனங்களை அழித்தொழிக்க சரியான வழி என்பதில் முதல்வர்  திடமான நம்பிக்கை கொண்டிருந்தார்.  கிடைத்த சந்தர்ப்பங்களை முழுமையாக பயன்படுத்த உறுதி பூண்டார்.

பதின்மூன்றாவது சட்டத்திருத்தத்தின் ஊடாக மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பட்டியல் நீளமாக இருப்பினும் அவற்றில் உண்மையிலேயே தடையின்றி கையகப்படுத்தக்கூடிய அதிகாரங்கள் மிக சிலவாகவே இருந்தன. மாகாண சபைகள் சுதந்திரமாக செயல்படுவதை விரும்பாத   மத்திய அரசு, ஆளுனர் போன்றோரின் இரும்பு பிடிகள் மலையாக எழுந்து நின்றன. மறுபுறம் பல்வேறு கட்சிகளை சேர்ந்த தமிழ் ,முஸ்லிம்,சிங்கள இனங்களை பிரதிநிதித்துவம் செய்யும் சக அமைச்சர்கள் போன்ற பலதரப்பட்ட சிக்கல்களுடே காரியங்களை சாதிக்க வேண்டிய மாபெரும் பொறுப்பினை   வரலாறு எவ்வித முன்னனுபவங்களும் இன்றிய  சந்திரகாந்தனின் மீது சுமத்தியது.

பல்கலைகழகம், பயிற்சி கல்லூரிகள் மற்றும் பட்டபடிப்பு நிறுவனங்கள் தவிர்ந்த  ஏனைய கல்விசார் நிறுவனங்கள் அனைத்தும் மாகாண சபைக்குரிய அதிகாரங்களின்கீழ் வருபவை இதன் அடிப்படையில் ஆரம்ப பாடசாலைகள் தொடக்கம் கனிஸ்ட,உயர்தர வகுப்புக்களை கொண்ட கல்லூரிகள் வரை மாகாண கல்வியமைச்சின் ஆளுகைக்கு கீழ் வருபவையாகும். இந்த விடயத்தில் மாகாண சபைகள்  தத்தமது  மாகாண கல்வித்துறையில் பாரிய தாக்கம் செலுத்த முடியும் என்பதை அவர் அடையாளம் கண்டுகொண்டார். இதன் காரணமாக கிடைக்காத காணி, போலிஸ் அதிகாரங்களுக்காக ஒப்பாரிவைத்து மத்திய அரசுடன் முரண்படுவதையோ வாய் வீரம் பேசி  காலத்தை வீணடிப்பதையோ அவர் விரும்பவில்லை. எனவே  மாகாண சபைக்குரிய கல்வியதிகாரத்தை முடிந்தவரை பயன்படுத்தி பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்தார்.

முதலமைச்சராக சந்திரகாந்தன் இருந்தாலும் ஏழு   ஆசனங்களை கொண்ட அவரது கட்சியான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் கூட்டணி அமைத்தே கிழக்குமாகாண சபையின் ஆட்சியை தலைமை ஏற்று இருந்தது. இதன் காரணமாக மாகாண சபையின் கல்வியமைச்சு அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த சிறி லங்கா சுதந்திர கட்சி உறுப்பினரான விமலவீர திசநாயக்க என்பவருக்கே வழங்கப்பட்டடிருந்தது.

எனினும் விமலவீர அவர்களுடன் முதலமைச்சர்  ஏற்படுத்திக்கொண்ட புரிந்துணர்வின் காரணமாக தமிழ் பிரதேசங்களின் கல்வி பிரச்சனைகளை கையாளும் பொறுப்பினை முழுமையாகவே முதலமைச்சரிடம் கல்வியமைச்சர் பொறுப்பளித்தார். இந்த வாய்ப்பினை சந்திரகாந்தன் திறம்பட பயன்படுத்திக்கொண்டார்.

முதற்கட்டமாக மாவட்ட பாடசாலைகளிடையே உள்ள ஆசிரிய வளங்களை சமனாக பங்கிடுவது என்கின்ற வேலைத்திட்டம் நடைமுறை படுத்தப்பட்டது.

மேலதிக ஆசிரியர்களை கொண்ட பாடசாலைகளில் இருந்து  பின்தங்கிய பிரதேசங்களுக்கு முடிந்தவரை தேவையான ஆசிரியர்கள் இடமாற்றப்பட்டனர்.போக்குவரத்து தடைகளையும்,அலைச்சல்களையும் காரணமாக காட்டி பல ஆசிரியர்கள் இந்த தொலைதூர இடமாற்றங்களை ரத்து செய்ய கோரினர். ஆனால் இடமாற்றங்களை எவ்வித காரணங்களை முன்னிட்டும் ரத்து செய்வதில்லை என்பதில் முதலமைச்சர் உறுதியை கடைப்பிடித்தார்.(அப்போ நீங்கள் அங்கே வாகரைக்கும் திகிலிவட்டைக்கும்  போய் படிப்பிக்காவிடில் அந்த பிள்ளைகளுக்கு படிப்பிப்பது யார்? என்னும் கேள்வியை இடமாற்றத்தை ரத்து செய்ய கோரிவந்த ஆசிரியர்கள் ஒவ்வொருவரிடமும் அவர் கேட்டார்).கை லஞ்சம் பெற்றுக்கொண்டு ஆசிரியர்களை அவரவர் விரும்பிய இடங்களில் கற்பிக்க அனுமதித்து மாணவர்களுக்கு துரோகம் செய்துவந்த அரசியல் கலாசாரத்துக்கு முதலமைச்சர் சந்திரகாந்தன் முற்றுப்புள்ளி வைத்தார்.

 அதேவேளை தூர இடத்து ஆசிரியர்களின் சிரமங்களை புரிந்து கொண்டு வசதிகருதி முடிந்தவரை அதிகாலையிலிருந்து விசேட பஸ் சேவைகளை நடத்துவதற்கு உடனுக்குடன் நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதிகளவான ஆசிரியர்களை கொண்ட பட்டிருப்பு தொகுதியின் மையமான களுவாஞ்சிக்குடியிலிருந்து வாழைச்சேனை,வாகரை, கதிரவெளி பிரதேசங்கள் வரை விசேட பஸ் சேவைகள் சீரமைக்கப்பட்டன. ஆங்கிலஆசிரியர்களின் பற்றாக்குறையை தீர்க்க இந்தியாவிலிருந்து ஒப்பந்த அடிப்படையில் ஆங்கில ஆசிரியர்களை கொண்டுவரும் முயற்சி எடுக்கப்பட்டபோதும் பல நடைமுறை சிக்கல்கள் காரணமாக அம்முயற்சி கைகூடவில்லை.

யுத்தகாலத்தில் அழிக்கப்பட்டு  கைவிடப்பட்டநிலையிலும் அழிவின் விளிம்பிலும்   பல எல்லை கிராமங்கள் கிடந்தன. அவற்றையிட்டு
தமிழரின் பூர்வீக பூமி பறிபோகின்றது.என்று அவர் பத்திரிகைகளுக்கு அறிக்கை விட்டுக்கொண்டிருக்கவில்லை.  யுத்தத்தின் பின்னர் இடம்பெற்ற மீள்குடியேற்ற திட்டங்கள் ஒருபுறமிருக்க சுயமாக மக்களை மீள குடியமர செய்ய தடையாயிருந்த ஒருசில கட்டுமான வசதிகளை செய்து கொடுப்பதனூடாக அப்பிரதேச பாடசாலைகளை மீள இயங்க செய்ய முடியும் என மதிப்பிடப்பட்டது.குறிப்பாக தென்னமரவாடி தொடங்கி புனானை,கரடியனாறு, பாலையடிவட்டை , வளத்தாப்பிட்டி  வரையான  இடங்களில் கைவிடப்பட்டபோக்குவரத்துக்கள், கோவில்கள் கடைகள்,சந்தைகள் என்பன மீள அமைக்கப்பட வேண்டிய நிலையில் இருந்தன.இதற்காக தனது ஆளுகைக்குட்பட்ட அனைத்து வளங்களையும் சந்திரகாந்தன் பயன்படுத்த தீர்மானித்தார். குறிப்பாக புனானை பிரதான வீதியோரத்தில் ஒரு    கடைத்தொகுதிகூட  கட்டப்பட்டு வேலையற்றோருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. வாழைச்சேனை பிரதேச சபையின் ஊடாக  உருவாக்கப்பட்டது. மட்டக்களப்பின் எட்டு பிரதேச சபைகளும் தமிழ் மக்கள் விடுதலை புலிகளின் ஆட்சியில் இருந்தன  என்பதால் அந்த வாய்ப்புக்களை தனது மக்கள் நலம் சார்ந்த பணிகளுக்கு சரியாக பயன்படுத்தினார்முதலமைச்சர். இன்றுவரை இயங்குகின்றஇத்திட்டத்தின் பலனாக புணானை மீண்டும் புதுபொலிவு பெறஅடிகோலிடப்பட்டது .போக்குவரத்து சபையுடன் தொடர்பு கொண்டு தொலை தூர குக்கிராமங்களில் இருந்து புணானை பாடசாலைக்கு வரும் மாணவர்களில் வரவை உறுதிப்படுத்த வாழைச்சேனை போக்கு வரத்து சபை டிப்போவில் இருந்து விசேட சேவை ஒன்று உடனடியாக ஆரம்பிக்கப்பட்டது.

அதேபோல முப்பது வருடங்களுக்கு பின்னர் ஆரம்பிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தின் எல்லை கிராமங்களான  தென்னமரவாடிக்கான பஸ் சேவை,பாலையடிவட்டை சந்தை கட்டிடம் வளத்தாப்பிட்டி கோவில் புனரமைப்பு என்று அனைத்தும் சீரழிந்து கிடந்த கல்வித்துறையின் மீள் நிர்மாணம் நோக்கியே திட்டமிடப்பட்டன. இதுபோன்று பல்வேறு பிரதேசங்களில் கல்வித்துறை புனரமைக்கப்பட்டது.



இரண்டாம் கட்டமாக பாடசாலைகளை தரமுயர்த்துவதன் ஊடாக அவற்றுக்கான நிதி ஒதுக்கீடுகளையும் மேலதிக வளங்களையும் மத்திய அரசிடமிருந்து பெற்றுக்கொள்ளுவது என்பது திட்டமிடப்பட்ட ஒரு வேலைத்திட்டமாக உருவாக்கப்பட்டது.

பல ஆரம்ப பாடசாலைகள் கனிஸ்ட பாடசாலைகளாகவும் பல கனிஸ்ட பாடசாலைகள் உயர்தர பாடசாலைகளாகவும் தரமுயர்த்தப்பட்டன. இதனூடாக படுவான்கரை போன்ற பிற்படுத்தப்பட்ட பகுதிகளில் முதல்கட்டமாக க.பொ.த.சா/தரம் மற்றும் உயர்தரம்கொண்ட  வகுப்புக்கள் ஆரம்பிக்க ஏதுவாயின. கிழக்கு மாகாணமெங்கும் ஏறக்குறைய நூற்றுக்கும் மேற்பட்ட பாடசாலைகள் முதலமைச்சர் சந்திரகாந்தனால் தரமுயர்த்தப்பட்டன. இவற்றில் அதிகமானவை மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்தவையாகும். உதாரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பன்னிரண்டு பிரதேச அலகுகளில் ஒன்றான வெல்லாவெளி பிரதேசத்தில் மட்டும் தரமுயர்த்தப்பட்ட பாடசாலைகளின் விபரம் இக்கட்டுரையின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தும் நோக்கில் கீழே தரப்படுகின்றது..


1.40ம் கொலனி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை ( 09ஆம் ஆண்டிலிருந்து  க.பொ.த.சா/தரம் வரை தரமுயர்த்தப்பட்டது)
2.சின்னவத்தை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை ( 09ஆம் ஆண்டிலிருந்து  க.பொ.த.சா/தரம் வரை தரமுயர்த்தப்பட்டது)
3.கணேசபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை ( 09ஆம் ஆண்டிலிருந்து  க.பொ.த.சா/தரம் வரை தரமுயர்த்தப்பட்டது)
4.சங்கர் புரம் விக்னேஸ்வரா வித்தியாலயம் (க.பொ.த.சா/தரத்திலிருந்து க.பொ.த.உயர் /தரமாக தரமுயர்த்தப்பட்டது)
5.பாலையடிவட்டை நவகிரி வித்தியாலயம் (5 ஆம்   ஆண்டிலிருந்து - 9ஆம்  ஆண்டுவரை தரமுயர்த்தப்பட்டது)
6.பாலமுனை  அரசினர் தமிழ் கலவன்  பாடசாலை  (5 ஆம்   ஆண்டிலிருந்து - 9ஆம்  ஆண்டுவரை தரமுயர்த்தப்பட்டது)
7.ஆனைகட்டிய வெளி மலைமகள் வித்தியாலயம்(7 ஆம்   ஆண்டிலிருந்து - 9ஆம்  ஆண்டுவரை தரமுயர்த்தப்பட்டது)
8.13ஆம் கொலனி விக்கினேஸ்வரா வித்தியாலயம்   (க.பொ.த.சா/தரத்திலிருந்து க.பொ.த.உயர் /தரமாக தரமுயர்த்தப்பட்டது)
9.திக்கோடை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை ( 09ஆம் ஆண்டிலிருந்து  க.பொ.த.சா/தரம் வரை தரமுயர்த்தப்பட்டது).

இத்தகைய பாடசாலைகளுக்கு மத்திய அமைச்சுகளில் இருந்து போதிய வளங்களை பெற்று விநியோகிப்பதில் முதலமைச்சர் காட்டிய ஈடுபாடு குறிப்பிடத்தக்கது. அத்தோடு இந்திய தூதரகம் ஊடாக இந்திய அரசாங்கத்துக்கு முதலமைச்சர் விடுத்த வேண்டுகோளின் பயனாக ஆயிரம் கம்பியூட்டர்களையும் பத்து பஸ் வண்டிகளையும் பெற்று கொள்ள முடிந்தது.கிழக்குமாகாணத்தில் உள்ள பெரும்பாலான பாடசாலைகளுக்கும் கல்வி வலையங்களுக்கும் அவை பகிர்ந்தளிக்கப்பட்டன.பல்லாயிரம் மாணவர்கள் முதன்முதலாக கம்பியூட்டர் பயிற்சிகளை மேற்கொள்ள முதலமைச்சரின் அவ்வரிய பணி கால்கோலிட்டது.  போக்குவரத்து வசதிகள் இன்றி காணப்பட்ட தூர இடங்களில் இருந்து பாடசாலைக்கு செல்லும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் நோக்குடன் ஆயிரக்கணக்கான துவிசக்கரவண்டிகள் இலவசமாக கொடுக்கபட்டன.


மூன்றாம் கட்டமாக புதிய பாடசாலைகளையும் புதிய கல்வி வலையங்களையும் உருவாக்குதல் ஊடாக மாகாணத்தின் கல்வித்தரத்தை உறுதிப்படுத்தல்

யுத்தகாலங்களில்  குழந்தைகளுக்கான முன்பள்ளிகள் மத நிறுவனங்களாலும் அரசுசார்பற்ற அமைப்புகளினாலுமே நிர்வகிக்கப்பட்ட வந்தன.அவற்றினை சட்டரீதியாக மாகாண சபைகளுக்கு உட்பட்ட முறையில் மாற்றியமைப்பதும் நெறிப்படுத்துவதும் அவசியமாயிருந்தது. இதனடிப்படையில் பாலர்பாடசாலை நியதி சட்டம் உருவாக்கப்பட்டு கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து முன்பள்ளிகளையும் மாகாண கல்வியமைச்சின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவருவதில் வெற்றி காணப்பட்டது.இச்சட்டமானது கல்வி சார்ந்து 13வது சட்டத்திருத்தத்தின் ஊடாக  மாகாண சபைகளுக்கு வழங்கப்படுள்ள அதிகாரங்களை கையகப்படுத்தும் முயற்சிக்கு கிடைத்த ஒரு வெற்றியாகும்.

அதேபோன்று சுமார் முப்பது வருட காலமாக எதிர்காலம் பற்றிய எவ்வித திட்டமிடலும் முன்னேற்றமும் இன்றி இயங்கி கொண்டிருந்த கல்வி வலையங்கள் சம்பந்தமாக புதிய அலகுகள் அவசியமாயிருந்தன.குறிப்பாக படுவான்கரை போன்ற பிற்படுத்தப்பட்ட பிரதேசங்களும் நகரை அண்டிய வளர்ச்சியடைந்த பிரதேசங்களும் இணைந்து காணப்பட்ட கல்வி வலையங்களில் மாற்றம் அவசியமாயிருந்தது.அதாவது பிற்படுத்தப்பட்ட பிரதேச பாடசாலைகளின் தராதரங்களை பிரித்தறிந்து  அதற்கேற்ற திட்டமிடலை மேற்கொள்ள முடியாத நிலைஇருந்தது. எனவே அவசியமான இரண்டு புதிய கல்வி வலையங்கள் உருவாக்கப்பட்டன.

.மட்டக்களப்பு கல்வி வலயத்தில் இருந்து  27 பாடசாலைகளும் , பட்டிருப்பு கல்வி வலயத்தில் இருந்து  18 பாடசாலைகளும் , மட்டக்களப்பு மத்தி வலயத்தில் இருந்து  11 பாடசாலைகளையும் கல்குடா கல்வி வலயத்தில் இருந்து   7 பாடசாலைகளையும் இணைத்து 63 பாடசாலைகள் உள்ளடக்கிய வகையில் புதிய கல்வி வலையமான  "வவுணதீவு வலையம்" உருவாக்கப்பட்டது..அதேபோன்று அக்கரைப்பற்று கல்வி வலையத்திலிருந்து பிரித்து திருக்கோவில் பிரதேசத்தை கருத்தில் கொண்டு புதியதொரு கல்வி வலையமும் உருவாக்கப்பட்டது.. இப்புதிய வலயங்களினை உருவாக்கியமை  பிற்படுத்தப்பட்ட   பிரதேசங்களின் கல்வி வரலாற்றில் பெரும் வரபிரசாதமாகும்.

அடுத்ததாக கல்வி வளர்ச்சி என்பது பாடசாலை கல்வியை  மட்டும் அடிப்படையாக கொண்டிருக்க கூடாது என்னும்நோக்கில் வாசிப்பு திறனை ஊக்குவிக்கும் முகமாக பல நூல் நிலையங்களை ஆரம்பிக்கும் திட்டத்தினை முதலமைச்சர் உருவாக்கினார். மட்டக்களப்பு நகரின் மத்தியில் இலங்கையிலேயே மிக பெரியதான ஒரு நூல் நிலையத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது அதன் நிர்மாண(222 milion) வேலைகள் பூர்த்தியாக முன்னர் (ஒரு வருடத்துக்கு முன்னதாகவே) கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டதன் காரணமாக இந்த பிரமாண்டமான நூலக பணிகள்  பூர்த்தியாக முடியவில்லை. ஆனாலும் அரசியல் காழ்ப்புணர்வுகளை கடந்த  தேசப்பற்றுமிக்க ஒரு அரசியல் வாதியின்றி   இன்றுவரை இந்த நூலகத்தின் இறுதிக்கட்ட பணிகள்  காத்துக்கிடக்கின்றன.

   அடுத்து பேத்தாளை பொது நூலகம் மட்டக்களப்பில் உள்ள நூலகங்கள் அனைத்தையும் விட பெரியதாக அமைக்கப்பட்டது. கிழக்கு பல்கலைகழக மாணவர்களின் நன்மை கருதி அமைக்கப்பட்ட நூலகத்தில்  18 ஆயிரத்துக்கு மேற்பட்ட புத்தகங்கள், 03 கோடி ரூபாய்க்கு மேற்பட்ட பௌதிக வளம்  என்பன காணப்படுகின்றன.இணையதள வசதிகளுடன் காணப்படும் இந்த நூலகம் மாணவர்களின் அறிவு வளர்ச்சியில் பெரும் பங்காற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  2014 ம் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சும் களனி பல்கலைகழக நூலக மற்றும் தகவல் விஞ்ஞான பிரிவும் இணைந்து நடாத்திய தரப்படுத்தலில் அகில இலங்கை ரீதியில் பிரதேச சபைகளுக்கான நூலகங்களின் இந்த பேத்தாழை   பொது நூலகம்  ஆண்டு நாடளாவிய ரீதியில்   முதலாவது சுவர்ண புரவர  விருதுதை  பெற்று கொண்டது.  


2008ஆம் ஆண்டு தொடக்கம் 20012 ஆம் ஆண்டு வரையான சந்திரகாந்தனின் ஆட்சிக்காலத்தில் கிழக்கு மாகாணசபையால் நடைமுறைப்படுத்தப்பட்ட மேற்படி கல்வித்துறை சார்ந்த அபிவிருத்திகளின் பலனை கிழக்கு மாகாண மாணவர் சமுதாயம் தற்போது முதல் அனுபவிக்க தொடங்கியுள்ளன.கடந்த ஆண்டு இடம்பெற்ற க.பொ.த. சாதாரண தர/உயர்தர பரீட்சைகளில் பல பாடசாலைகள் வரலாற்றில் முதல் தடவையாக உயர்தரத்துக்கும்,பல்கலைகழகத்துக்கும் நுழையும் வண்ணம் தமது மாணவர்களை வெற்றியீட்ட செய்துள்ளன.அவற்றில் பல பிற்படுத்தப்பட்ட எல்லைகிராமங்க பாடசாலைகள் என்பது மாபெரும் சாதனையாகும்.

சுமார் அறுபது வருடங்களுக்கு முன்னர் மட்டக்களப்பு மண்ணுக்கு   நல்லையா மாஸ்டர் என்னும் அரசியல் பெருமகன் ஆற்றிய கல்விப்பணிக்கு பின்னர் மட்டக்களப்பின் கல்வித்துறையை மேம்படுத்தியவர்கள் அரசியல்வாதிகளின் வரிசையில்   சந்திரகாந்தனின் பெயரை தவிர்த்து யாதொரு வரலாறும்எழுதப்படமுடியாது.

இத்தகையதொரு  கல்வி வளர்ச்சியை நோக்கி கிழக்கு மாகாணத்தை வழிநடத்துவதற்கும் உத்வேகம் கொண்டு செயல்படுவதற்கும்  முதலமைச்சர் சந்திரகாந்தன் மாபெரும் அரசியல் மேதையாக  காலடி எடுத்து வைத்தவரல்ல. ஆனால் தன்னைப்போன்றே இளமையில் கல்வியை தொலைத்துநின்ற ஆயிரமாயிரம் குழந்தைபோராளிகளின் மனசாட்சியாக அவர் செயல்பட்டார் என்பதை காரணமாகும்.

மீன்பாடும் தேனாடான் 



0 commentaires :

Post a Comment