11/19/2019

தமிழக அரசியல்வாதிகள் முதலை கண்ணீர் வடிக்கின்றனர் - நாமல்

தமிழகத்திலுள்ள தமிழ் அரசியல்வாதிகள் தங்களுடைய சுயநல மற்றும் சந்தர்ப்பவாத அரசியல் தேவைகளுக்காக இலங்கை மக்களை பகடைக்காயாக பயன்படுத்தி வருவதாக மஹிந்த ராஜபக்ஷவின் மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இலங்கையின் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவாகியுள்ள பின்னணியில், தமிழக அரசியல்வாதிகள் வெளியிட்டுள்ள கருத்துக்களுக்கு பதிலளிக்கும் வகையிலேயே நாமல் ராஜபக்ஷ இதனைக் குறிப்பிட்டுள்ளார். நமால் ராஜபக்‌ஷ
இது தொடர்பாக தமிழில் அவர் விடுத்த அறிக்கையில், தமிழகத்திலுள்ள சில தமிழ் அரசியல் தலைவர்கள் இலங்கைத் தமிழ் மக்களை பற்றி ஒருபோதும் ஆழமாக சிந்தித்தது இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை தமிழ் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் தமிழக அரசியல் தலைவர்கள் ஆக்கபூர்வமான செயற்பாடுகளை முன்னெடுத்தது கிடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டமைக்கு இந்திய பிரதமர் உள்ளிட்ட பல நாடுகளின் அரச தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த தமிழக அரசியல் தலைவர்களின் அறிக்கைகளில் அப்பட்டமான சந்தர்ப்பவாத அரசியலைத் தவிர, அவற்றில் வேறேதும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை மக்களை பகடைக்காய்களாக்கும், எம்மக்களிடையே பகையையும், இனவாதத்தையும் தூண்டிவிடும் மூன்றாந்தர அரசியலைத் தவிர, தமிழக அரசியல் தலைவர்கள் வேறென்ன ஆக்கப்பூர்வமான விடயத்தை செய்துள்ளார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

0 commentaires :

Post a Comment