இலங்கை ஜனாதிபதி தேர்தல் நடவடிக்கைகளில் கட்சியின் ஒழுக்கத்தை மீறிய குற்றச்சாட்டில், ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும் ராஜாங்க அமைச்சருமான வசந்த சேனநாயக்கவை, கட்சி உறுப்பினர் நிலையில் இருந்து நீக்கியுள்ளதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்த வசந்த சேனநாயக்க, அதில் சில கேள்விகளையும் முன்வைத்திருந்தார்.
'சஜித் பிரேமதாஸ ஜனாதிபதியாகும்போது அமைக்கப்படும் அரசாங்கத்தில் ரணில் விக்ரமசிங்க பிரதமராக நியமிக்கப்படுவாரா? ரவி கருணாநாயக்க மற்றும் ரிசாட் பதியுதீன் ஆகியோருக்கு அமைச்சர் பதவிகளை வழங்குவீர்களா? ஏப்ரல் 21ஆம் தேதியன்று நடத்தப்பட்ட தாக்குதல்களுடன் தொடர்புபடுத்தி அமைச்சர் ரஊப் ஹக்கீம் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், அவர் உங்களுக்காக தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றார். இதுதொடர்பில் உங்கள் நிலைப்பாடு என்ன, தொடர்ந்தும் உங்கள் அரசாங்கத்தில் அவருக்கு நீங்கள் ஆதரவு வழங்குவீர்களா?' போன்ற கேள்விகளை அந்தக் கடிதத்தில் வசந்த சேனநாயக்க கேட்டிருந்தார்.
எவ்வாறாயினும், வசந்த சேனநாயக்கவின் அந்தக் கடிதத்துக்கு ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ இதுவரை பதிலளிக்கவில்லை.
இந்த நிலையிலேயே, ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து வசந்த சேனநாயக்க விலக்கப்பட்டுள்ளார்.
இலங்கையின் முதலாவது பிரதமர் டி.எஸ். சேனநாயக்கவின் பேரன்தான் வசந்த சேனநாயக்க என்பது குறிப்பிடத்தக்கது.
0 commentaires :
Post a Comment