9/12/2019

சாதியில்லை சாதியில்லை சாதியென்பதில்லையே என்பவர்கள் வரிசையில் வரவும்

கடவுளும் சாதியும் 
இலங்கையின் வடமாகாணச் ‘சமூகத்திலும்’ தழைத்துப் படர்ந்திருக்கும் பண்பாட்டு வேர்களின் கிளைகில் சாதியமும் தொடர்ந்து படர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அவ்வாறான சாதிய வேரானது வெவ்வேறு தருணங்களில் தன்னை மூடிப்படர்ந்திருக்கும் மண்ணை பிளந்து வெளியேறி நச்சுக்காற்றை உமிழ்ந்து கொண்டிருக்கின்றது.
சாதிய சமூக விவகாரங்களில் அதிகமான சம்பவங்கள் மண்ணுக்குள் மறைந்து படர்ந்து வரும் வேர்களாக இருப்பினும், கடவுளுக்கும் சாதிக்குமான விவகாரமாக எழுகின்றபோது மண்ணைப் பிளந்து வெளியேறி விஷ்வரூப தரிசனம் அழிக்கும் காட்சிகளை சமகாலத்தில் நாம் அதிகமாக தரிசித்தும் வருகின்றோம்.
அதன் தொடர்ச்சியாக பளையிலுள்ள இயக்கச்சி மல்வில் கிருஷ்ணன் கோவிலிலும் ‘கடவுளுக்கும் சாதிக்குமான போராட்டம்’ ஒன்று நிகழ்ந்ததாக அறிகின்றோம்.
தகவலாக: வடமாகாணத்தில் அனைத்து இடங்களிலும் நடைபெற்றுவரும் சாதிக்கொரு திருவிழாபோன்றே இயக்கச்சி மல்வில் கிருஷ்ணன் கோவிலிலும் கடைப்பிடிக்கப்பட்டு வந்திருக்கிறது. திருவிழாக்காலத்தில் கோவில்களில் அன்னதானம் வழங்கப்பட்டு வருவது வழமை. பல இடங்களைப்போன்று இங்கும் கோவில் நிர்வாகமே தொடர்ந்து சமைத்து அன்னதானம் வழங்குபவர்களாக இருந்து வருகின்றனர். அவர்களே அந்த கிராமச் சமூகத்தின் முதன்மையான மேலாதிக்க சாதியினராக கருதப்படுபவர்களாம்! அவர்களின் புனிதக் கரங்களால் சமைத்துப் பரிமாறப்படும் அன்னதான உணவையே பிற சமூகத்தவர்கள் நடத்துகின்ற திருவிழாக்களிலும் வழங்கப்பட்டு வந்திருக்கின்றது. அவ்வாறான புனிதப்பாரம்பரிய சமநிலை குலைந்ததால் இயக்கச்சி கிராமத்தில் சமூக பதட்டநிலை தோன்றியிருக்கின்றது. கோவில் நிர்வாகத்தின் வழமையை மீறி வேறொரு சாதிய சமூகத்தை சேர்ந்தவர்கள் தமது திருவிழாவின்போது தாமாகவே சமைத்து அன்னதானம் வழங்க முற்பட்ட சம்பவமே ‘கடவுளுக்கும் சாதிக்குமான’ சமநிலை குலைந்ததாக கருதப்படுகின்றது.
இவ்வாறாக தொடரும் சாதிய சமூக வேறுபாட்டு பிரிவினைகளை, சமூகங்களுக்கிடையிலான வெறுப்புகளைக் களைந்து உரையாடிப் பேசித்தீர்ப்பதற்கான வழிமுறைகள்தான என்ன?
இவ்வாறான சாதிய விவகாரங்களுக்கு எதிராகவும், சாதியரீதியாக ஒடுக்கப்படும் சமூகங்களுக்கு ஆதரவாக செயல்பட முன்வரும் அமைப்புகளை ஆதரிக்கவும் அவர்களுக்கான ஆலோசனைகளை வழங்குவதற்கும் அங்கு எத்தரப்பும் தயாராக இல்லை! அவ்வாறு செயல்பட முன்வருபவர்களை அரச சார்பானவர்கள், தமிழ்பேசும் மக்களின் ‘ஒற்றுமையை (!!!!)’ குலைக்க முற்படும் சிங்கள பேரினவாத சக்திகளின் கைக்கூலிகள் எனச் சாடுவதன் ஊடாக, அவ்வாறான தரப்பினரே சாதிய இருப்பின் சமநிலை குலைந்து விடாது பாதுகாத்தும் வருகின்றனர்.
அங்குள்ள தமிழ் அரசியல் கட்சிகளானது தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் இனப்பிரச்சனை குறித்து சிந்தித்து செயல்படுவதற்கும் அதற்கான போராட்டத்தில் சிங்கள பேரினவாத அரசுடன் முட்டி மோதுவதற்குமே அவர்களது காலம் விரயமாகிக் கொண்டிருக்கின்றது. அதற்காகவே நித்தமும் சிந்திப்பதெற்கென இயற்கை அவர்களுக்களித்த மூளையின் அளவோ மிகவும் சிறயதாக உள்ளது! அவ்வாறான குறைபாட்டுடன் மேலதிகமான தமிழ் சமூகத்தில் நிலவும் சாதிய சமூக விவகாரங்களில் அவர்கள் தலையிடவேண்டும் என்பதை நாம் எதிர்பார்ப்பது எவ்விதத்திலும் நியாயமாகதென்பதையும் நாம் உணருகின்றோம்.
ஆயினும் தொலைக்காட்சி, பத்திரிகை ஊடகங்களால் இவ்வாறான சமூகப்பிரச்சனைகளை கணிசமான வகையில் தீர்த்துவைக்க முடியும். எவ்விதமான பக்கசார்பும், வியாபார நோக்கமும் இல்லாது, சமூ அக்கறையோடு செயல்படும் ஊடகங்களால் இவ்வாறான பிரச்சனைகளையும், சமூகங்களுக்கிடையிலான சுமூகமான உரையாடலையும் முன்நோக்கி நகர்த்த முடியும் என நாம் நம்புகின்றோம்.
மேற்படி இயக்கச்சி மல்வில் கிருஷ்ணன் கோவில் விவகாரத்தை தீர்த்து வைப்பதில் அக்கறையுடன் செயல்பட்டு வரும் சில தனிநபர்களையும், இது குறித்த தமது கண்டனத்தை தெரிவித்து வரும் ஆதரவாளர்கள் மற்றும் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பையும் நாம் பாராட்டுகின்றோம்.
இலங்கை தலித்சமூக மேம்பாட்டு முன்னணி -பிரான்ஸ்-

0 commentaires :

Post a Comment