ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி (NPP) வேட்பாளர் அனுர குமார திஸாநாயக்கவை ஆதரிக்க ந.தே.மு (NFGG) தீர்மானம்.
- ந.தே.மு ஊடகப் பிரிவு
எதிர்வரும் நவம்பர் 16 இல் நடைபெற திகதி குறிக்கப்பட்டுள்ள ஜனாதிபதித் தேர்தலில், தேசிய மக்கள் சக்தியின் (NPP) வேட்பாளரான அனுர குமார திஸாநாயக்கவை ஆதரிப்பது என நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைமைத்துவ சபை தீர்மானித்துள்ளது.
கட்சியின் உள்ளக மட்டங்களிலும் சமூக மட்டத்திலும் பல சுற்றுக் கலந்துரையாடல்கள் மூலம் தொடர்ச்சியாகவும் விரிவாகவும் ஆராய்ந்ததன் பின்புலத்திலேயே இந்தத் தீர்மானம் பெறப்பட்டுள்ளது.
நாட்டின் பிரதான இரு அரசியல் முகாம்களுக்கு வெளியே வலுவான மூன்றாவது அரசியல் சக்தியொன்றைக் கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியத்தை ஆழமாக உணர்ந்ததன் பின்புலத்திலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் வேட்பாளர் அனுர திசாநாயக்கவுடன் கட்சியின் தலைமைத்துவ சபையினர் பல கட்ட பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வந்துள்ளனர்.
தேசிய மக்கள் சக்தி என்பது 28 அமைப்புகளை உள்ளடக்கிய ஒரு கூட்டணியாகும். இதன் ஸ்தாபக அமைப்புகளுள் ந.தே.மு.(NFGG) யும் ஒரு முக்கிய அங்கமாகவுள்ளது. அந்த வகையில் தேசிய மக்கள் சக்தியின் உள்ளகக் கலந்துரையாடல்களிலும் ந.தே.மு பிரதிநிதிகள் கலந்து கொண்டு பல்வேறு காத்திரமான பங்களிப்புகளை வழங்கி வந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் பிரதான பங்காளிகளான மக்கள் விடுதலை முன்னணியினருடனும் (JVP) நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) தொடர்ச்சியான கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருகிறது.
இதனடிப்படையில் இன்று (22.9.2019) ந.தே.மு யின் தேசிய செயற்குழு கொழும்பில் கூடி தேசிய மக்கள் சக்தி (NPP) யின் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு வழங்கும் தீர்மானத்திற்கு அங்கீகாரம் வழங்கியது.
மேலும், எதிர்வரும் 26.09.2019 வியாழக்கிழமை கொழும்பு புதிய நகர மண்டபத்தில் (New Town Hall) ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திஸாநாயக்க அவர்களின் பங்குபற்றுதலுடன், ந.தே.மு. (NFGG) யின் முதலாவது உத்தியோகபூர்வ பிரச்சாரக் கூட்டத்தை ஆரம்பித்து வைப்பதன் மூலம் கட்சியின் பிரச்சார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளது.
0 commentaires :
Post a Comment