8/30/2019

கிழக்கு மக்களுக்கான இலவசப் பத்திரிகை!


Aucune description de photo disponible.
கிழக்கு மக்களுக்கு ஒரு தனித்துவமான ஊடகம் அவசியம் என்பதை அடிநாதமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட எமது அரங்கம் செய்திகள் பத்திரிகை இந்த வாரத்துடன் தனது 77 வது இதழை எமது மக்களுக்கு இலவசமாக தந்திருக்கிறது. அதாவது ஒன்றரை வருடங்களாக கிழக்கு மக்களுக்காக இலவசமாக ஒரு பத்திரிகையை நாம் வழங்கி வந்துள்ளோம். இது தொடரும்.
கிழக்கின் அரசியல், சமூக, கலை, கலாசார விடயங்களை வலியுறுத்தி பேசுவதற்காக இந்த முயற்சியை விடா முயற்சியாக அரங்கம் நிறுவனம் செய்து வந்திருக்கிறது. இலங்கையில் இவ்வளவு காலம் இலவசமாக தனது வாசகர்களுக்கு பத்திரிகையை ஒரு நிறுவனம் விநியோகித்து வந்திருப்பதே ஒரு சாதனைதான்.
இந்த இலவச இதழின் மூலம் எமது மண்ணின் எழுத்தாளர்கள், செய்தியாளர்களுக்கு நாம் களமமைத்து வந்திருக்கின்றோம்.
பொருளாதார ரீதியாகவும் வேறு பலவகைகளிலும் பலவிதமான சவால்களை இதற்காக நாம் இதுவரை சந்தித்து வந்திருக்கின்றோம். அந்தச் சவால்களும் வேதனைகளும் தொடரவும் செய்கின்றன.
காலாவதியாகிப்போன ஒரே திசையில் எல்லோரும் ஓடுவதுபோல நாமும் ஓடாமல், நின்று நிதானித்து புதிய, வாய்ப்பான திசைகளையும் எமது மக்களுக்கு காண்பிக்க வேண்டும் என்பதற்காக நாம் முன்வைத்த பல கருத்துக்கள் கசப்பாக இருந்தாலும் அதுவே எமது மக்களுக்கு மருந்து என்று நாம் உணருகின்றோம். அதனையே வலியுறுத்தியும் வந்துள்ளோம். இதற்காக பல திட்டுக்களையும் வசைகளையும் நாம் கேட்டிருக்கின்றோம். ஆனால், மக்களுக்கு வழிகாட்டுவதாயின் அவர்களுக்கு கசப்பாக இருந்தாலும் உரிய, உயரிய திசையைக் காண்பிப்பதே எமது பணி என்பதை விடாப்பிடியாக நாம் கடைப்பிடித்து வருகின்றோம். அதற்காக எப்பழி வரினும் அதனை மகிழ்வுடன் ஏற்கவும் தயங்கமாட்டோம்.
கடந்துவந்த, தோற்றுப்போன வழியைப் பின்பற்றாமல், புதிய வழியைக் காண்பிப்பதே எமது பணி.
அரங்கம் செய்திகள் நிறுவனத்துக்கான இதுவரைகால செலவீனங்களில் 75 வீதத்துக்கும் அதிகமானவை எனது மற்றும் எனது குடும்பத்தினரின் நேரடி நிதி.
இது தவிர, எமது இந்த இலக்கை உணர்ந்த பல உறவுகள்(தனி நபர் மற்றும் நிறுவனங்கள்) எமக்கு பக்க அனுசரணை என்ற வகையிலும் விளம்பரமாகவும் நிதி உதவிகளை வழங்கி வந்துள்ளனர். இவை வெளிப்படையானவை. அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றி.
கிழக்கின் மீது அக்கறை கொண்ட உள்ளூர் மற்றும் வெளியூர் எழுத்தாளர்கள், செய்தியாளர்கள் பலர் எமக்கு இலவசமாகவே ஆக்கங்களைத் தந்து வருகின்றனர். இவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.
இலவசமாக பத்திரிகையை விநியோகிக்கும் அதேவேளை, இதுவரை மையநீரோட்டப் பத்திரிகைகள் விநியோகிக்கப்படாத கிழக்கின் பல பிந்தங்கிய பகுதிகளுக்கும் நாம் எமது பத்திரிகையை இலவசமாகவே விநியோகித்து வருகின்றோம்.
கிழக்கில் விவகாரங்களை ஆழமாக அலசுவதற்காக ஒரு களத்தை உருவாக்கல், கிழக்கு மக்களின் பிரச்சினைகளை உலகறியச் செய்தல், கிழக்கு மக்களுக்கு விழிப்பூட்டுதல், கிழக்கு மக்கள் தம்மை, தமது மண்ணை, அதன் பாரம்பரியத்தை புரிந்துகொள்ளச் செய்தல் ஆகியவை எமது இலக்கு. இவற்றுக்கு சமாந்தரமாக இளம் ஊடகவியலாளர்களை நாம் பயிற்றுவிக்கவும் செய்கிறோம்.
இவை தவிர, அரங்கம் நிறுவனம் இலங்கைத் தமிழ் மக்கள் குறித்து பல ஆவணப்படங்களையும் தயாரித்திருக்கிறது. எமது எதிர்கால சந்ததியின் தேவைக்காக இவை அனைத்தும் டிஜிட்டல் வடிவில் ஆவணமாக்கப்பட்டுள்ளன.
எமது இந்தப்பணி தொடர நாம் எம்மால் ஆன அனைத்து முயற்சிகளையும் செய்து வருகின்றோம். அதேவேளை கிழக்கில் ஒரு சிறந்த ஊடக கலாசாரத்தை பேணவும் முயற்சிக்கின்றோம். போற்றலும் தூற்றலும் எம்மை ஊக்குவிக்கும்.
அன்புடன்
சீவகன் பூபாலரட்ணம்

0 commentaires :

Post a Comment