தமிழீழப் போராட்டத்திற்குப் புலிகளால் முன் தள்ளப்பட்ட >துரோகி< எனும் சமூக உளவியலின் வரலாறு - என்ன? தோழர் தமிழரசன்(பேர்லின்)வரலாற்று ரீதியாக விளக்குகிறார் கீழ்வரும் விமர்சன ஆய்வினுடாக!
கள்ளக்கடத்தல் தொழில்தான் முதல் முதலில் வல்வெட்டித்துறையில் காட்டிக் கொடுப்போர், துரோகி என்ற பட்டம் பதவிகளும் அவர்களை அடிப்பது, கொல்வது, கிராமத்தை விட்டுத் துரத்துவது என்பனவும் தொடங்கியது. 1970 களில் 'மண்டையன் கோபாலன்' என்பவர் கடத்தலை பொலிசுக்கு காட்டிக்கொடுத்தற்காய் சுட்டுக் கொல்லப்பட்டார். இப்படிக் காட்டிக் கொடுப்பவர் கொல்லப்படுவது அடிக்கடி நடந்த போதிலும் காட்டிக் கொடுப்பதும் திரும்பத் திரும்ப நடைபெற்றது. காட்டிக் கொடுப்பவர்கள் வல்வெட்டித்துறையின் விரோதிகளாக, சிங்களவரின் ஆட்களாக வர்ணிக்கப்பட்ட போதும் இதை ஒழிக்க முடியவில்லை.
காட்டிக்கொடுப்பவர்கள் பெரும்பாலும் ஏழைகளாக, தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்களாக, பொருளாதார பலமற்றவர்களாக இருந்தனர். இவர்கள் காட்டிக்கொடுப்பதினை மிகவும் இரகசியமாகவே செய்து வந்தனர். காட்டிதருபவர்கட்கு பிடிபடும் கடத்தல் பொருளில் ஒரு பங்கும், பணமும் கிடைத்ததால், வாழ முடியாத ஏழைகள் அடிக்கடி பொலிசுக்குத் தகவல் தருவோர்களாக செயற்பட்டனர். இன்ஸ்பெக்டர் குமாரைத் துரோகி என்று குட்டிமணி சுட்டுக் கொன்ற நிகழ்ச்சியானது, கள்ளக்கடத்தல் சார்ந்த வல்வெட்டித்துறை கிராமத்தின் துரோகி ஒழிப்பின் தொடர்ச்சி தான்.
இன்ஸ்பெக்டர் குமார் கொலையில் குட்டிமணிக்கு எதிராகக் கண்ணால் கண்டதைச் சாட்சி சொன்னவர் குட்டிமணியாற் கொல்லப்பட்டார். குட்டிமணியால் சுடப்பட்டவரைச் சார்ந்தவர்கள் அதன் பின்பு குட்டிமணியின் விரோதிகளாக மாறினர். கடும் எதிர்ப்பை அவர்கள் குட்டிமணிக்கு காட்டினர்.
இராணுவம், பொலிஸ் வல்வெட்டித்துறையில் வீடுகளில் திடீர் திடீரென புகுவது சோதனையிடுவது கிட்டதட்ட அன்றாட நிகழ்வாக இருந்தது. அடிக்கடி நடந்தது. எனவே, அரசபடைகட்கு எதிரான உணர்வு தீவிரமாக இருந்தது. படையினர் சிங்களவர் என்று காட்டப்பட்டபோதும் வல்வெட்டித்துறைக்கடத்தல் பொருட்கள் தென்னிலங்கைக்கும் கொழும்பு வரை அனுப்பபட்டன. சிங்கள மக்களுக்கும் பொருட்கள் விற்கப்பட்டன என்பது முரண்பாடான உண்மையாகும.; சிங்கள மக்களிடையே கடத்தல் பொருட்கள் விற்கப்பட்டபோது தமிழ் சிங்கள முரண்பாடு இங்கு இயங்கவில்லை மாறாக, கடத்தல் தொழில்சார்ந்த வியாபார நலன்களே இயங்கின. அதேசமயம் வல்வெட்டித்துறையில் பொலிஸ், இராணுவத்துடனான துவக்குச்சூடு, குண்டு எறிவது, ஜீப் எரிப்பது என்று தகராறுகள் நிலவின. எனினும் பெரும் கள்ளக்கடத்தல் முதலாளிகள் பொலிஸ், இராணுவத்திற்கு இலஞ்சம் கொடுத்து கடத்தலை நடத்தினர். உயர் பொலிஸ் இராணுவ அதிகாரிகட்கு தென்னிலங்கைக்கு அவர்களின் வீடு தேடிப் போய் பெரும் அன்பளிப்புக்கள், பணம் என்பன கொடுப்பதை இவர்கள் வாடிக்ககையாய் கொண்டிருந்தனர். பல சமயங்களில் பொது நிகழ்வுகள், பாடசாலை விளையாட்டுப்போட்டிகட்கு ஆயதப்படைகளின் உயர்அதிகாரிகள் பிரதம விருந்தினர்களாக அழைக்கும் பழக்கமும் அவர்களை வசப்படுத்தும் தந்திரங்களும் சமமாய் நடந்து வந்தன. லஞ்சம் வாங்காத அன்பளிப்புகட்கு மசியாத நேர்மையான பொலிஸ் அதிகாரிகள் பெட்டிசம் போட்டு அரசியல் செல்வாக்கு ஊடாகவும் வேறு இடங்கட்கு மாற்றப்பட்டனர்.
வல்வெட்டித்துறையில் நடக்கும் பிரச்சனைகட்கு பொலிஸ் நீதிமன்றங்களுக்கு செல்லாமல் தமக்குள் தீர்த்துக் கொள்ளும் வழக்கம் மூலம் கிராம ஒற்றுமை பேண முயற்சிக்கப்பட்டது. இக்கிராமமானது சட்டத்தை உடைப்பதையும்; நன்னெறிகளை மீறுவதையும் வழக்காகக்கொண்டு இருந்தது. உழைப்பின் அருமை தெரியாத கடத்தல் தொழிலின் சொகுசில் உழைக்காமல் வாழ்பவர்களாக இவர்கள் இருந்தனர்.
கள்ளக்கடத்தலைச் சித்தரிக்கும் சிறுகதையொன்றை வெளியிட்டமைக்காக 'வீரகேசரி' பத்திரிகை ஒரு முறை வல்வெட்டித்துறையில் எரிக்கப்பட்டது. கள்ளக்கடத்தல் தமது உரிமையென்று வல்வெட்டித்துறையில் கருதப்பட்டது. கள்ளக்கடத்தல் வழக்குளில் கள்ளக்கடத்தல்காரர்களை பாதுகாக்க முதலில் தமிழ்காங்கிரஸ், பின்னர் தமிழரசுக்கட்சிச் சட்டத்தரணிகள் வழக்காடினார். இதன் பின்பே தமிழ்காங்கிரஸ், தமிழரசுக்கட்சி என்பன பலமடைந்தன. தமிழீழம் கோரிய தமிழர் கூட்டணியை உருவாக்க மூலகாரணமாக இந்த தமிழர் விடுதலைக்கூட்டணியினாரல் 'ஞானமூர்த்தியப்பா' என அழைக்கப்பட்ட ஞானமூர்த்தி வல்வெட்டித்துறையை சேர்ந்தவர் என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
கள்ளக்கடத்தல் உருவாகும் முன்பு சாதாரண மீனவக் கிராமமாக வல்வெட்டித்துறை இருந்த சமயத்தில் 1960 களில் திருப்பதி போன்ற கொம்யூனிஸ்டுகளே நகரசபைத் தலைவராக இருந்தனர். 1954 இல் கொம்யூனிஸ்ட்கட்சி தமது மாநாட்டை வல்வெட்டித்துறையில் நடத்தியது. அம் மாநாட்டில் தமிழ்மக்களின் இனப்பிரச்சனைக்கு 'பிரதேசசுயாட்சி' என்ற தீர்மானத்தை நிறைவேற்றியது. இது வல்வெட்டித்துறை தீர்மானம் என்று அப்போது அறியப்பட்டது. பொன் கந்தையா இப்பகுதிகட்கு மிகப்பெரும் சேவைகளைச் செய்தவர். தனது தொகுதியில் இருந்த 15ற்கு மேற்பட்ட ஒடுக்கப்பட்ட சாதி மக்களின் பள்ளிகளை அரசபள்ளிகள் ஆக்கினார்.
"'தனிச்சிங்களச்சட்டம்" கொண்டு வரப்பட்ட போது பொன் கந்தையா ' நெருக்கடியிலிருந்து நெருக்கடிக்கு' என்ற தலைப்பில் பாராளுமன்றத்தில் புகழ் கொண்ட உரையை நிகழ்த்தினார். வல்வெட்டித்துறையில் மீன்பிடித்தொழிலாளர்களின் உழைப்பாளர்களின் கிராம இருந்தவரை கொம்யூனிஸ்டுகளே அங்கு செல்வாககுப் பெற்றிருந்தனர். கள்ளக்கடத்தல் கலாச்சாரம் வளர்ந்த பின்பே தமிழ்தேசியவாதக் கட்சிகள் அங்கு வேர்விட்டன. 1960 களின் நடுப்பகுதியில் தொண்டமானாற்றிலிருந்து பருத்தித்துறை நோக்கி வந்த கொம்யூனிஸ்ட்டுக்களின் மேதின ஊர்வலம் வல்வெட்டித்துறையில் வைத்து தமிழரசுக் காடையார்களால் அடித்துக் குழப்பட்டது. 1970 நடுப்பகுதியில் ' தொழிலாளர்பாதை' பத்திரிகையை விற்ற வல்வெட்டித்துறையை சேர்ந்த தோழர் ஒருவர் விற்ற பத்திரிகைகளை திரும்பவும் வீடுவீடாகச் சென்று பணத்தைக் கொடுத்துவிட்டு திருப்பி வாங்க வேண்டும் என்று கத்தியைக் காட்டி வெருட்டும் மட்டத்திற்கு தமிழீழவாதிகள் அரசியல் விகாரமடைந்து விட்டனர். இவ்வாறாக கள்ளக்கடத்தல் மூலம் சட்டவிரோதப் பொருளாதாரத்தின் மூலம் வளர்ந்த சக்திகள் இறுதியில் தமிழீழக் கோரிக்கையின் பிதாக்களாக மாறினார்கள். பொன் கந்தையா போன்றவர்கள் வளர்த்த இடதுசாரி அரசியல் கலாச்சாரம் இப் பகுதியில் அழியத் தொடங்கியது.
N.M பெரேரா இலங்கையின் பழைய ரூபாய் நோட்டுக்களை செல்லாதவைகளாக்கி, புதிய ரூபாய் நோட்டுக்களை புழக்கத்திற்கு கொண்டு வந்த போது கள்ளக்கடத்தல் செல்வந்தர்களின் சட்டவிரோதப்பணத்தை மாற்றுவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. இதனால் இவர்கள் இடதுசாரிகள் மேல் கடும் கோபமடைந்தனர், பலத்த இடதுசாரி எதிர்ப்பைத் தூண்டியது. வங்கிமுகாமையாளர்கட்கு இலஞ்சம் கொடுத்தும் ஏனைய செல்வாக்குகள் மூலம் பெரும் தொகை வல்வெட்டித்துறைக் கடத்தல் சக்திகளின் பணம் மாற்றப்பட்டது. பணம் மாற்ற செல்வந்தர்கள் ஆட்களை அமர்த்தி ஆயிரம் ரூபாயிற்கு நூறு ரூபாய் என்ற அளவில் கூட பணம் மாற்றி தருபவர்கட்கு கூலி தரப்பட்டது. பொதுவாகவே மக்களுக்கு பணத்தை வங்கியில் போடும் பழக்கம் இருக்கவில்லை அவர்கள் தமது பணத்தை, தங்கத்தை இரகசியமாக பதுக்கி வைப்பதையே வழக்கமாய் கொண்டிருந்தனர். விவசாய சமூக வழக்கப்படி வட்டிக்கு விடுவது, காணிகள், வீடுகள் வாங்குவது, நகைகளை அடைவு பிடிப்பது என்ற பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
கனடாவில் உள்ள 'தாயகம்' இதழ் குட்டிமணியைக் கடத்தல்காரன் என்று எழுதியதையிட்டு புஸ்பராசா தமிழ்தேசியத்தின் பெயரால் கொதித்தெழுகின்றார்.
குட்டிமணி மட்டுமல்ல, தங்கத்துரை உட்பட TELO புலி இயக்கங்கள் கள்ளக்கடத்தல் பின்புலத்திலேயே தோற்றம் பெற்றன என்பது சகலருக்கும் பிரசித்தமான ஒன்று.
குட்டிமணி கைது செய்யப்பட்ட போது கொடுத்த வாக்கு மூலத்தில் தான் கள்ளக்கடத்தலையே தொழிலாக வயிற்றுப்பிழைப்புக்காக செய்து வந்ததாகவும் வெடிமருந்துப் பொருட்கள் கடத்துவது ஏனைய பொருட்களைக் கடத்துவதை விட 4 மடங்கு இலாபம் கிடைத்தாயும் சிறையில் காசி ஆனந்தன், சேனாதிராசா போன்றவர்களை சந்தித்த பின்பே தமிழீழ இலட்சியத்துக்கு மாற்றமடைந்ததாயும் கூறியிருக்கிறார். தங்கத்துரை, குட்டிமணியின் தொழில் கூட்டாளியான சின்னஜோதி தனது கள்ளக்கடத்தல் தேவையையொட்டி குண்டு தயாரித்துக் கொண்டிருந்த போது தென்னை மரத்திலிருந்து தற்செயலாக குரும்பட்டி விழுந்து குண்டு வெடித்தபோது அச்சமயத்தில் அருகே நின்று விடுப்புப் பார்த்துக் கொண்டிருந்த பிரபாகரனுக்கு காலில் காயம் ஏற்பட்டது. கள்ளக்கடத்தல்காரர்கள் இத்தகைய சம்பவங்களின் போது இலங்கையில் மருத்துவம் பார்ப்பதில்லை. பொலிஸ் பிரச்சனை வருமென்பதாய் இந்தியா போய்த்தான் வைத்தியம் பார்ப்பது வழக்கமாக இருந்தது. இந்தச்சம்பவம் புலிகளால் பிற்காலத்தில் பிரபாகரன் குண்டு தயாரித்த போது அது வெடித்துக் காலில் காயம் ஏற்பட்டதாய் கதையெழுதப்பட்டது. அதனூடு பிரபாகரன் ' கரிகாலன்' புனைபெயரையும் சூடிக்கொண்டார். தங்கத்துரை, குட்டிமணி, சின்னஜோதி போன்றவர்களின் கடத்தல்தொழில் உதவியாளனாகவே பிரபாகரன் முதலில் செயற்பட்டார்.
மாவை சேனாதிராசா உட்பட பல கூட்டணி முக்கியமானவர்களுக்குக் கூட குட்டிமணி போன்றவர்கள் கடத்தல் பொருட்களை அன்பளிப்புச் செய்துள்ளனர். கூட்டணியினர் சகலரும் இவர்கள் கடத்தலோடு தொடர்புடையவர்கள் என்று தெளிவாக அறிந்திருந்தனர். அது வெளிப்படையான உண்மையாகவே இருந்தது. இங்கு புஸ்பராசா வலிந்து குட்டிமணியை பரிசுத்தமான மனிதனாக வளர்த்தெடுக்க முயற்சிக்கின்றார். குட்டிமணியின் சிங்கள இனவாதத்திற்கு எதிரான அம்சத்தை நாம் பாராட்டலாமே தவிர ஒட்டுமொத்தமாக குட்டிமணியை புனிதப்படுத்தும் முயற்சிகள் வரலாற்று நேர்மைக்கு குந்தகம் விளைவிப்பதாகும். குட்டிமணி, தங்கத்துரையுடன் இந்தியாவில் இருந்து படகில் இலங்கைக்கு வந்த போது மூட்டை மூட்டையாக அவர்கள் மஞ்சள் கடத்தி வந்த நிகழ்ச்சியை சிவகுமாரின் போராட்ட நண்பரான அளவெட்டி ஆனந்தகுமார் இப்போது நினைவு கூர்கின்றார்.
குட்டிமணி பெண்கள் விடயத்தில் மோசமாக நடந்து கொண்டவர் என்று குற்றச்சாட்டி, அவரது TELO இயக்கமே அவர் மேல் நடவடிக்கை எடுக்க முனைந்த காலங்கள் இருந்தன. புஸ்பராசா கனடா 'தாயகம்' இதழுக்கு எதிராக முறுகுவதைவிட்டு விட்டு, பிரபாகரன் குட்டிமணிக்கு செய்த துரோகங்களில் கவனம் கொண்டு பல விடயங்களை எழுதியிருக்கலாம். குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் ஆகியோர் இந்தியாவிற்கு வள்ளத்தில் போகவிருப்பது பிரபாகரனுக்கு மட்டுமே தெரியும். அப்படியிருக்க எப்படி அந்தத் தகவல் பொலிசாருக்கு சென்றது? ஜெர்மனிக்கு முன்பு ஒருமுறை வந்திருந்த TELO வின் தலைவர் சிறீ சபாரத்தினம், பிரபாகரனே தம் தலைவர்களை பொலிசுக்கு காட்டிக் கொடுத்தாய் தன் நண்பர்களோடு உரையாடும் போது தெரிவித்து இருந்தார்.
குட்டிமணி ஆட்கள் பிடிபட்ட போது மானிப்பாய் எம்பியாக இருந்த தர்மலிங்கம் அவர்கள், பொலிஸ் தலைமையகத்தில் உள்ள தமது நண்பர்கள் மூலம் ஒரு செய்தியை அறிந்து சொன்னார். அதாவது குட்டிமணி தங்கத்துரை இந்தியா புறப்படவுள்ளது பற்றிய தகவல் கிடைத்தே பொலிசார் சென்று அவர்களை பிடித்ததாய் உறுதியான தகவலைச் சொன்னார். குட்டிமணி தங்கத்துரை கைது செய்யப்பட்டு நான்கு முதல் ஐந்து பொலிசார் மட்டுமேயிருந்த வல்வெட்டித்துறைப் பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டு இருந்தனர். அப்போது குட்டிமணி, தங்கத்துரை அணியோடிருந்த பிரபாகரனிடம் போதிய ஆயுதங்கள் இருந்தன, ஆட்களும் இருந்தனர். அப்படியிருந்தும் தம்மோடிருந்த பிரபாகரன், வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்திலிருந்து தம்மை மீட்க ஏன் முயலவில்லை என்று சிறையில் இருந்த போது குட்டிமணி பிரபாகரனை கேட்டுச் செய்தியனுப்பினார். இதற்கு பிரபாகரனிடமிருந்து எந்தவொரு பதிலும் வரவில்லை என்று குட்டிமணி சிறையில் பலரிடம் சொல்லியுள்ளார். குட்டிமணி குறைந்தபட்சம் நண்பர்களுக்கு நேர்மையாக இருந்த மனிதர், பிரபாகரனை பல சமயங்களில் தன்னுடைய ஆள் என்று அடையாளம் காட்டிக் காப்பாற்றியவர். பிரபாகரனைக் கொல்வதற்கு மூன்று பேர் கொண்ட குழு ஒன்று திட்டமிட்டுள்ளதாய், தெல்லிப்பளை குணாளன் மூலமாக குட்டிமணி கேள்விப்பட்டு, பிரபாகரனைக் கொல்ல திட்மிட்டவர்களை சென்ற தானே சந்தித்து சொன்னார் "பொடியின்ர தலையில் ஒரு முடி போனாலும் உங்களைக் குடும்பத்துடன் அழித்து விடுவேன்". இந்த நிகழச்சியின் பின்பு, குட்டிமணி தங்கத்துரையைச் சந்தித்த பிரபாகரன் "தங்கண்ணா" "குட்டிமணியண்ணா" நீங்கள் இருந்தபடியால்தான் நான் இன்று உயிரோடு இருக்கிறேனென நன்றி சொன்ன செய்திகளும் உள்ளன என்பதுடன், அத்தகைய குட்டிமணியை இன்றைய 'தேசியத்தலைவர்' பொலிசுக்கு உளவு தந்து காட்டிக் கொடுத்த கதை இன்னமும் ஆழமாய் ஆராயப்பட வேண்டியதாகும். இதனை புஸ்பராசா செய்வாரா?
குட்டிமணியைப் பொலிசாருக்கு காட்டித்தந்தவர் பற்றி ஆராய புஸ்பராசா தன்னைச் செலவிடவில்லை ஏனனெனில் அவர் பல சமங்களில் தேசியதலைவருக்கு ஆத்திரம் மூட்ட விரும்பாத நல்ல பிள்ளையாக இருக்கவே விரும்புகின்றார். உமா மகேஸ்வரனை விட்டு பிரிந்து வெறும் கையுடன் பிரபாகரன் குட்டிமணியிடம் சரணடைந்தார். பின்பு அவர்கட்கு துரோகம் இழைத்தவர். தஙகத்துரை, குட்டிமணி பிடிபடுவதில் இவை முடிவடைந்தன. குட்டிமணியோடு பிரபாகரனுக்கு முரண்பாடுகள் இருந்தன. "பிரபாகரனை நம்பக் கூடாது" என்று குட்டிமணி தங்கத்துரையை ஒரு முறை எச்சரித்த போது " உவர் என்ன மயிரை புடுங்கிறதோ" என்று தங்கத்துரை பதிலளித்ததாய் அக்காலத்தில் ஆயதப் போராட்டத்துடன் தொடர்புடைய ஒருவர் குறிப்பிடுகிறார். குட்டிமணியால் காப்பாற்றப்பட்டவரே பின்பு " குட்டிமணியை சுடுவோம்" என்று சொல்லித்திரிந்தபோது "வளர்த்தகடா மார்பில் பாய்கிறது" " பரம்பரை எதிரியை விட பழகித் திரிந்த நண்பன் நச்சுடையவனாக இருக்கிறான்" என்று குட்டிமணி வருத்தப்பட்டார்.
குட்டிமணி தீவிர தமிழரசு ஆதரவாளர், தி.மு.க அனுதாபி. அண்ணாத்துரை மேல் பித்துக் கொண்டவர். அண்ணாத்துரை இறந்த போது தமிழ்நாட்டின் அரைவாசித் தமிழர்களும் இறந்ததிற்கு சமம் என்று கண்ணீர் விட்டவர். அவரது அரசியல், 'கங்கை கொண்ட தமிழன், கடாரம் வென்ற' தமிழர்களின் கதையாடல்களோடும், பொன்னியின்செல்வன், வேங்கையின்மைந்தன், கடல்புறா கதை இலக்கியங்களோடு வளர்ந்த தமிழ் தேசியத்தின் கீழ்மட்ட அரசியலைஉடையது. அவர் தனது சொந்த உடல் வலிமையையும், சுடும் கெட்டித்தனத்தையும் நம்பியவர். புஸ்பராசாவின் வல்வெட்டித்துறை மேலான உயர்வுகற்பிப்பு, ஏனைய தமிழ் பகுதிகளை விட தலைசிறந்தது என்ற எழுத்துப்போதனை "தேசியதலைவ" ருக்கு அர்ப்பணிக்கப்பட்டதாகும், பிரபாகரனைக் கெளரவிப்பதற்கு ஒதுக்கப்பட்டதாகும்.
வல்வெட்டித்துறை விடுதலைக்கு அளப்பரிய தியாகம் புரிந்ததாய் புஸ்பராசா அடுக்கிச் செல்வதும் மிகையே.
குட்டிமணி, தங்கத்துரை ஜெகன், பிரபாகரன், மாத்தையா, பேபி சுப்பிரமணியம், பண்டிதர் ரகு, குமாரப்பா, சின்னஜோதி போன்ற ஆரம்ப கால இயக்கவாதிகளின் பின்பு வல்வெட்டித்துறையில் இருந்து ஏனைய தமிழ் பகுதிகளை விட அதிகம் பேர் போராடச் சென்றார்கள் என்பது ஆதரமற்ற ஒன்று. 1985 ஆம் ஆண்டுக்கு பின்னர் இங்கிருந்து போராட்டத்திற்கு சென்றவர்கள் கிட்டத்தட்ட இல்லை என்று கூறலாம். பொருளாதார வசதி படைத்தவர்கள் இந்தியா, கொழும்பு, வெளிநாடுகள் என்று குடிபெயர்ந்து விட்டனர். ஏழைகள் பெரும் பகுதியினர் ஏனைய கிராமங்கட்கு அகதிகளாக குடிபெயர்ந்தனர். வல்வெட்டித்துறையை விட வன்னி கிழக்கு மாகாண மக்கள் ஈழப்போராட்டத்திற்கு செய்த அர்ப்பணிப்புக்களும் தியாகங்களும் பெரியதாகும்.
ஆனால் , யாழ்குடாநாட்டுப் பெருமையிலும், வல்வெட்டித்துறையின் மகிமைகளிலும் கட்டுண்டு புஸ்பராசா மற்றைய பிரதேசங்களை கண்ணெடுத்துப் பார்க்கத் தயாராய் இல்லை. வெறுமனே புலி இலக்கியங்ளை மீட்கின்றார். வல்வெட்டித்துறையிலேயே உள்ள ஏற்றத்தாழ்வுகளை புஸ்பராசா பேசவதில்லை. மீன்பிடித்தொழில் புரிந்து உழைப்பவர்களை கடத்தல் சக்திகள் அநாகரீகமாய் கருதியதையும், 'மக்குவா' என்று கேலியாய் அழைக்கப்படதையும் காணவில்லை.
அண்மையில் வல்வெட்டித்துறையின் புதல்வனான T.S. துரை என்பவர் எழுதிய 'ஒரு பூ' என்ற நாவல் வல்வெட்டித்துறை மண்ணின் பெருமையை தீட்டுவதுடன் ' இலங்கை அரசுக்கு வரி கொடாமல் கிளாச்சி செய்த ஊராக' வல்வெட்டித்துறையை காட்டுகின்றது. கடல் பற்றிய அவதானிப்பை இந்த நாவல் வெளியிட்ட போதும் வல்வெட்டித்துறை மண் பெருமையுள் புதையுண்டு போனது. இதேபோலவே தேசியத்தலைவரின் குடிமகனான புஸ்பராசாவும் கள்ளக்கடத்தல் ஏதோ வரிகொடா இயக்கம், சமுதாய கிளர்ச்சியின் வடிவம் என்று கட்டமைக்கின்றார். "வல்வெட்டித்துறை என்ற பெயரைக் கேட்டாலே மாத்தறையில் உள்ள சிங்களவனுக்கும் ஈரல்குலை நடுங்கும்" என்ற வெளிப்படையான சிங்கள வெறுப்பினையும் விரோதத்தினையும் உமிழ்கின்றனர். வல்வெட்டித்துறை கள்ளக்கடத்தல். அது சார்ந்த வன்முறைச் சமூகமாக உருவெடுத்தமைக்கான மூல காரணத்தை பேசாமல் கலாச்சார இழிவுகளை பண்பாடாக வீர எழுச்சியாக புனையக்கூடாது.
வல்வெட்டித்துறை மக்களுக்கு கடல் தெரியும் கடலை அறிந்தவர்களாக, கடல்பாதை தெரிந்தமையால் இலங்கையில் சுட்டுவிட்டு இந்தியாவிற்கு ஓடத் தெரிந்தது. இலங்கையில் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக போராடிய என்.எம்.பெரோரே, கொல்வின், ஆர்.டி சில்வா என்போர் வல்வெட்டித்துறையினூடாகத்தான் இந்தியாவிற்குத் தப்பிப் போனார்கள். தமிழ்நாட்டுக் கொம்யூனிஸ்டான ஜீவா வல்வெட்டித்துறையினூடாகத்தான் திரும்பவும் இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு சென்றார். இந்தக்கடல் சார்ந்தநிலை இயற்கையாக புவியில் ரீதியில் எற்பட்ட வாய்ப்பாக வல்வெட்டித்துறைக்கு இருந்தது. மாத்தளை விவசாயத்திற்கு ஏற்ற நிலவளமும், மீன்பிடிப்புக்கு கடல் வளமும் ஒன்று சேர இணையப் பெற்ற வளமான பூமியாகும். வல்வெட்டித்துறைக்கு ஏற்பட்ட பெருமை அதன் உயர் பண்பாட்டுப் பெருமையினால் அறிவியல் பண்பால் ஏற்பட்டதல்ல மாறாக கள்ளக்கடத்தல் அது சார்ந்த வன்முறையையும் பணம் பெருமைகளிலும் ஏற்பட்டதாகும். இத்தாலியில் நாப்போலி பிரதேசத்தில் மாபியா குழுக்கள் அதிகம். எனவே, நாப்போலியில் வாழ்பவர்கட்கு ஏனைய இத்தாலிய பிரதேசத்தில் வாழ்பவர்கள் அஞ்சுவர் என்பது பெருமைக்குரிய விடயமல்ல. அவ்வண்ணமே வல்வெட்டித்துறை மேல் ஏற்பட்ட பயமும் அதன் உயர் மனித நடத்தைக்கு வழங்கப்பட்ட மரியாதையல்ல.
வல்வெட்டித்துறை சிறந்த ஓட்டிகளை பெற்றிருந்தமை அதன் கடல் சார்ந்த வாழ்வின் நிகழ்வாகும். தரையில் வாழ்ந்த மக்கள் எப்படித் தரையை அதன் பண்புகளை சிறப்பாக அறிவார்களோ, வல்வெட்டித்துறை மக்களும் கடல்சார்ந்த அறிவைக் கொண்டுடிருந்தனர். கடலோடு அதிக பிணைப்புடையவர்களாக இருந்தனர். பிரிட்டனில் சிறந்த கடலோடிகள் இருந்தமை, சிறந்த கப்பல்கள் கட்டப்பட்டமை அந்த நாட்டின் தனிமைப்பட்ட புவியல் நிலைமைகளின் தேவையாக இருந்தது. நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்ட கடல் வழியே ஏனைய நாடுகளின் தொடர்புக்கு விதிக்கப்பட்ட அந்த நாடு சிறந்த கடற்படையை பெற்றது. கடலாய்வுகளை நிகழ்த்தியது. நாடுகளை கைப்பற்ற நீண்ட தூரம் கடலில் பயணிக்க அனுபவ அறிவைத் தந்தது. பிரபாகரன் புலிகட்கு கடற்படையைத் தேடிக் கொண்டது, பழைய கள்ளக்கடத்தல் மற்றும் கடல் சார்ந்த வாழ்வின் குணாதிசயத்தினாலாகும்.
வல்வெட்டித்துறை ஏதோ நீக்கமற தமிழீழ விடுதலைத் தீயில் குளித்து நிற்பதாக புஸ்பராசாவின் எழுதுக்கள் எம்மை நம்ப வைக்க முயல்கின்றன. ஆனால் பிரபாகரன் ஒரு போதும் முன்பு வல்வெட்டித்துறையில் ஒழிப்பது தலைமறைவாக வாழ்வது கிடையாது. அந்தளவுக்கு எதிர்ப்பு இருந்தது. பொலிசுக்கோ, இராணுவத்திற்கோ தகவல் கொடுக்கும் நிலை நிலவியது. பிரபாகரன் வல்வெட்டித்துறைக்கு அயல் கிராமங்களான கெருடாவில், கம்பர்மலை போன்ற இடங்களிலேயே தலைமறைவாய் வாழ்வது வழக்கம் புலிகள் TELO இயக்கத்தை அழித்த போது குட்டிமணி, தங்கத்துரையினால் இயக்கத்தில் சேர்க்கப்பட்ட பல இளைஞர்களை வல்வெட்டித்துறையில் புலிகள் கொலை செய்தனர். இதன் பின்பு அங்கு தேசியதலைவருக்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. ஒரு காலத்தில் குட்டிமணியை எதிர்த்து விட்டு பிரபாகரன் வாழ முடியாது என்று இருந்த வல்வெட்டித்துறையில் பிரபாகரன் அதிகாரம் பெற்றதும் வல்வெட்டித்துறையிலும் மனித வேட்டை நடத்தத் தவறவில்லை. 1987இல் புலிகள் வல்வெட்டித்துறையில் நடத்திய கூட்டமொன்றில் புலிகளால் கொலை செய்யப்பட்ட குருநாதபிள்ளை உலகராசாவின் மனைவி எழுந்து, தன் கணவனைக் கொன்றதற்காக பகிரங்கமாக நீதி கேட்டார். "என் கணவனுக்கு அவர் கருத்தை சொல்ல இடம் விட்டீர்களா? நீதவான், விசாரணைசெய்பவர், குற்றஞ்சாட்டுபவர், தீர்ப்புத் தருபவர் எல்லாம் நீங்கள்தான! ; என் பிள்ளைகட்கு கடைசியாக அவர் முகத்தை பார்க்க எனக்கு அவர் உடல் மீது விழுந்து அழ அவரின் உடலைத் தந்தீர்களா?" என்று கேட்டார். கூட்டத்தில் இருந்த கிட்டு பதில் சொல்லாது நையாண்டியாய் சிரித்தார். உடனே அப் பெண் " என்னையும் சுடடா.... அவர் போன இடத்திற்கே நானும் போகிறேன்" என்று பெருங்குரலெடுத்து அழுதாள். உடனே கிட்டு தனது உயர் பண்புக்கேற்ப " இந்த பற வேசையை கூட்டத்துக்குள்ளாலே இழுத்து எறியுங்கடா" என்று தன் வளர்ப்புகட்கு கட்டளையிட்டார். இதுதான் தேசியதலைவர் தனது பிறந்த மண்ணுக்கு தந்த உயர் கெளரவமாகும்.
"அவள் தாலியறுத்தவள் அவளை விடுங்கோ" என்று பழைய கூட்டணிப்பிரமுகர் ஒருவர் குறுக்கிட்டு அப்பெண்ணின் உயிரைக் காப்பாற்றினார். புலிகள் தமிழீழம் வந்தால் கள்ளக்கடத்தலை சட்டத்துக்கு உட்படாத தொழிலாக அனுமதிப்பார்களா? தமிழீழத்தின் தேசியத்தொழிலாக தேசியத்தலைவரால் விசேடமாக அனுமதிக்கப்படுமா? போர்காலத்தில் தமக்காகவும் வாழ்வதற்காகவும் பொருட்களை வவுனியாவில் இருந்து வன்னிக்குக் கடத்தியவர்களைக்கூட புலிகள் ஆமியின் கையாள், தேசத்துரோகி என்று மரணதண்டனை வழங்கிய சம்பவங்கள் உண்டு, அதை இலங்கை அரசு கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருந்து புலிகட்கு வரிகொடாமல் செய்யும்; துணிகரமான செயலாக, பரட்சிகரமான கடத்தலாக புஸ்பராசா கூட ஒப்புக்கொள்ளமாட்டார். ஆனா புலிகள் இராணுவத்திற்கு இலஞ்சம் கொடுத்ததும் வேறுவழிகளிலும் லொறி லொறியாய் பொருட்களை கடத்தி மக்களுக்கு கொள்ளை விலையில் விற்றுச் சுரண்டினார்கள். புலிகளின் கள்ளக்கடத்தல் கலாச்சாரம் இன்னமும் வாழ்கிறது. சர்வதேசரீதியாக கப்பலின் மூலம் புலிகள் கடத்ததில் ஈடுபடுகின்றனர். சர்வதேச மாபியா வலைப்பின்னலில் கூடி வாழ்கின்றனர். தாய்லாந்து முதல் இத்தாலி வரை சர்வதேச மாபியாக்களின் குடும்ப அங்கத்தவர்களாக உள்ளனர். இந்திய மீனவர்களின் படகுகள் தமிழீழக்கடலில் ஊடுருவி மீன்பிடிப்பதாய் புலிகள் இந்திய மீனவர்களை சுடுகின்றார்கள், பிடிக்கின்றார்கள். இங்கெல்லாம் புலிகளின் கடல்சார்ந்த பொருளாதார நலன்களே செயற்படுகின்றன. இதை தமிழ் மக்களின் நலன்களாக ஒப்பனை செய்வது சொந்த மக்களையே மோசடி செய்வதை ஏற்று அங்கீகரிப்பதாகும். புலிகள் TELO அழிப்பின் பின்பு வல்வெட்டித்துறையில் 1986 இல் கள்ளக்கடத்தலை தடை செய்தனர் ஆனால் தாம் மட்டும் தொடர்ந்து கடத்தி வந்தனர். புலிகள் கஞ்சா கடத்தி விற்பதை முறையற்ற செயல் என்று தமிழர் இளைஞர் பேரவையைச் சேர்ந்த முன்னால் வல்வெட்டித்துறை நபர் ஒருவர் சொன்னபோது, புலியின் முக்கிய நபரான குமரப்பா எமக்கு காசு தேவையாக உள்ளது அதனால்தான் இதில் ஈடுபடுகிறோம் ஆனால் தமிழர்கட்கு விற்கமாட்டோம் சிங்கள பகுதிகட்கே விற்போம் என்று புரட்சிகரமான கள்ளக்கடத்தல் விளக்கம் தந்தார்.
சிவகுமாரன்:
புஸ்பராசாவை விட தமிழீழப்போராட்டத்திற்கு மூத்தவரான சிவகுமாரனைக் கூட புஸ்பராசா தனது படையணியின் வீரராக, தனது ஆழுமையின் கீழ் அவரது எல்லைப்பரப்புள் செயற்பட்டவராக ஆக்கிவிடுகின்றார். சிவகுமாரனுடன் தன்னை சம்பந்தப்படுத்துவதன் மூலம் தன் முக்கியத்துவத்தை உயர்த்துவதும் தனது போராட்ட வரலாற்றை ஆரம்பகால ஆயுத எழுச்சியோடு சம்பந்தப்படுத்துவதும்தான் புஸ்பராசாவின் நோக்கம். சிவகுமாரன், சத்தியசீலன், பிரான்சிஸ், முத்துக்குமாரசுவாமி போன்றவர்களின் காலத்தில் புஸ்பராசா இன்னமும் அரங்கிற்கு வராத காலமாகும். மாவை சேனாதிராசா தான் முதன் முதலில் சத்தியசீலனை புஸ்பராசாவிற்கு அறிமுகம் செய்து வைத்ததுள்ளார். இருவரிடையேயும் அறிமுகத்துக்கப்பால் எதுவித அரசியல் உறவும் இருந்ததற்கான எந்தவித ஆதாரமும் இல்லை. அதேபோல சிவகுமாரனுடனும் புஸ்பராசாவுக்கு அறிமுகம் ஏற்பட்டு இருக்கக் கூடும் ஆனால் கூடிச் செயற்பட்டார்கள் நெருக்கமான அரசியல் ரீதியிலான உறவு இருந்தது என்பதற்கு அடையாளமாக எந்தச் செய்தியும் இல்லை. மலையகத்திற்கு சிவகுமாரனை தானே அனுப்பி வைத்தாயும், சிவகுமாரன் யாழ் ஆஸ்பத்திரியில் இருந்தபோது அவன் தப்பிச்செல்ல உதவியாக துப்பாக்கி எடுத்துச் சென்று கொடுக்க முனைந்ததாகவும், புஸ்பராசா இன்று எழுத்திலே தருவது அன்று சாத்தியமாயிருந்த ஒன்று என்று நம்பமுடியாதது. மலையகத்திற்கு சிவகுமாரன் சென்ற சம்பவம் அமிர்தலிங்கத்தின் தொடர்பினூடாகவே நடைபெற்றது என்று ஆனந்தகுமார் கூறுகின்றார். சிவகுமாரன் தொண்டமானையும் ஏனைய இலங்கைத் தொழிலாளர் சங்க ஆட்களையும் சந்தித்தமை அமிர்தலிங்கத்தின் தொடர்பினூடாக சாத்தியப்பட்டு இருக்கு என்று நாம் நிச்சயமாக நம்பலாம். மலையகத்திற்கு சிவகுமாரனை அனுப்பி வைக்குமளவிற்கு புஸ்பராவிற்கு அரசியல் பலமும் சிவகுமாரன் மேல் செல்வாக்கு இருந்தது என்பது தமிழ் ஈழப்போராட்டத்தின் ஆதி முதல் நபராக புஸ்பராசா தன்னை நிறுத்தச் சொல்லும் பொய்தான்.
சிவகுமாரனை தமிழ்தேசியவாதிகளின் பழைய மரபுப்படி புஸ்பராசவும் அவரது அரசியல் தகைமையை மீறி உயர்த்துகின்றார். சிவகுமாரனின் மரணம் நிகழ்ந்து 30 வருடத்தின் பின்பும், தமிழ் தேசியப் போராட்டத்தின் அனுபவ அறிவோடு அரசியல் சேமிப்போடு புஸ்பராசா தென்படவில்லை. அவர் இன்னமும் கூட்டணிக்கால ஆதி மனிதராகவே வாழ்கின்றார். சிவகுமாரன் யார்? தமிழ் தேசியவாதிகள் இதுவரை அறிமுகம் செய்த வழியில் நாம் சிவகுமாரனை விளங்கக் கொள்ள சம்மதிக்க முடியாது. சத்தியசீலன் போன்றவர்களால் அரசியல் ரீதியாகத் தூண்டபபட்டு,; ஆயுதம் தாங்கிய முயற்சிகட்கு சிவகுமாரன் ஊக்குவிக்கப்பட்டபோதும் அவர் தன்னிச்சையாய்தான் பெரும்பாலும் செய்றபட்டவர். அவர் அங்கம் வகித்த மாணவர் பேரவை என்பது தரப்படுத்தலுக்கு எதிராக எழுந்து அடுத்த கட்டத்திற்கு நகர முடியாமல் கூட்டணி அரசியலில் போய் கரை ஒதுங்கியது. அமைப்பு வடிவமற்ற சில தனிநபர்களின் ஒன்றிணைக்கப்பட்டாத செயற்பாடுகளின் வடிவமாக மாணவர் பேரவை இருந்தது. அவர்கட்கு எந்த அரசியல் முதிர்ச்சியோ செயற்பாட்டுத்திட்டமோ எதுவும் இருக்கவில்லை. இவர்கள் கூட்டணி உருவாக்கிய தமிழன்-சிங்களவன், தியாகி-துரோகி அரசியலைச் சுற்றியே மொய்த்துக் கொண்டிருந்தனர். இவர்கள் சில சமயம் கூட்டணியுடன் முரண்பட்டதாய் தோற்றம் எற்பட்டபோதும், அது கூட்டணியின் மிதவாத பாராளுமன்ற அரசியலுடன் இவர்களது தீவிரவாத ஆயதப்புத்தி மோதிக் கொண்டபோது எழுந்ததாகும். மேடை பேச்சுக்கப்பால் எதையும் செய்ய கூட்டணி தகுதியற்றது என்ற கருத்தை கொண்டிருந்தவர்களின் தொடக்கமாய் சிவகுமாரன் இருந்தார். ஏதாவது செய்ய வேண்டும், செயலாற்றவேண்டும் என்று சிவகுமாரன் துடித்தானே தவிர எப்படி தொடங்குவது? எங்கிருந்து தொடங்குவது? என்ற அரசியல் சிந்தனையெதுவும் அவர் கொண்டிருக்கவில்லை. போராட்டத்தில் மக்கள் கலந்து கொள்ளல் அரசியல் போராட்டம் என்ற எண்ணக்கருக்கூட அவனிடம் உதயமாகவில்லை. சிவகுமாரனுடன் கூட இருந்த சத்தியசீலன் பல்கலைகக்கழக கல்வி பெற்றவராக இருந்த போதும்கூட சாதாரண அரசியல் புரிதல் கூட அற்ற தமிழ் பரப்பின் சிறில்மத்யூவாக இருந்தார்.
சத்தியசீலன் அன்றே போதுமான சோசலிச விரோதியாக இருந்தார். தமிழ் மக்களின் போராட்டத்தில் இடதுசாரிக்கட்கு சம்பந்தம் எதுவும் இருக்க முடியாது என்று சிவகுமாரனின் ஆயுத வழிகாட்டியான சத்தியசீலன் அன்றே பிடிவாதமாக இருந்தவர். இன்று 30 வருடம் கழிந்த நிலையிலும் தமிழ் தேசிய எழுச்சி புலிப்பாசிசமாக ஏகாதிபத்திய சார்பு அரசியலாக மாறிய பின்பும் லண்டனிலுள்ள சத்தியசீலன் சோசலிசத்திற்கும் தமிழர் பிரச்சனைக்கும் எதுவித சம்பந்தமுமில்லை நாம் ஒருபோதும் சோசலிசத்தை ஏற்றுக்கொண்டதுமில்லை என்று வாதிடுமளவிற்கு வரலாற்றின் கழிவுக்குரிய நபராக மாறிவிட்டார். வெளிநாடுகளில் பல பத்து இன மக்களோடு வாழ்ந்து கொண்டு பல்லினக்கலாச்சார வாழ்வுள் கூடியிருந்து கொண்டு தமிழ் சாதிக்காக மட்டும் வீரிட்டுக் கதறும் நபராக சத்தியசீலன் உள்ளார். 'சிங்களவரும் தமிழர்களும் கலச்சாரத்தில் ஒன்றுபட்ட மக்கள்' என்று சோமவீரசந்திரசிறி கூறியதுதான் அவருடைய காருக்கு தாம் குண்டு வைத்தமையின் காரணம் என்று இன்னமும் சொல்லிக் கொண்டிருக்கும் சத்தியசீலன் அரசியல் ரீதியில் புஸ்பராசாவிடம் இருந்து அதிக தூரத்திலில்லை.
கூட்டணி சுட்டிக் காட்டியவர்களைத்தான் சிவகுமாரன் துரோகிப் பட்டியலில் உள்ளடக்கினார். சாதாரண முதலாளிய ஜனநாயகம், கருத்துச் சுதந்திரம் கூட இல்லாத தமிழ் பரப்பில் மாற்று கூட்டணி மற்றும் சிவகுமாரனின் துரோகி ஒழிப்பு என்பன மாற்றுக் கருத்துக்கான உரிமையை, எதிர்க்கருத்து நிலவும் சுதந்திரத்தைக்கூட இல்லாதொழித்தது. தமிழ் தேசியத்தை மறுத்தவர்கட்கு எதிராகத் தொடங்கி பிற்காலத்தில் இடதுசாரிகளையும் அழிப்பதற்கு சென்றது. சிவகுமாரன் ஒரு யாழ் நடுத்தர வர்க்கத்தின் பிறவி. பெருங்கோபம், பொறுமையின்மையும் மாற்றுக் கருத்துக்களை துச்சகமாக மதிப்பதையும்; குணமாய்க் கொண்டவன். அரசியல் கருத்துக்களின் வலிமையால் எதிர்கருத்துக்கள் எதிரிட வேண்டும் என்ற சாதாரண ஜனநாயக அரசியலின் தொடக்கத்தைக் கூடத் தரிசனம் செய்யாதவன். ஆயுத நடவடிக்கைகள், குண்டெறிவது, சுடுவது போன்றன மக்களின் கவனத்தை ஈர்ப்பதை அவன் கண்டான். அது சார்ந்த பரபரப்புக்களை அவன் விரும்பினான். அவன் மக்களைக் கடந்த ஆயுதமேந்திய கதாநாயகர்களைப் படைக்க விரும்பி தோல்வியடைந்தான். சிவகுமாரனின் நடவடிக்கைகள் மத்தியதர வர்க்கத்தின் ஒரு பகுதிக்கு விறுவிறுப்பு தந்தபோதம் சாதாரண மக்களுக்கு இது நல்ல சகுனமாக படவில்லை. சிவகுமாரன் மக்களை சார்ந்து சிந்தித்தவனல்ல. பெரும் பகுதி மக்களை அரசியலுக்கு ஆட்படுத்தாமல் ஆயுத நடவடிக்கைகளால் எதையும் சாதிக்க முடியாது என்பதே சிவகுமாரனின் தோல்வி போதித்த பாடமாகும். மக்களின் பங்களிப்பற்ற நிலையில் பரந்த மக்களின் சக்தியை சிவகுமாரன் போன்ற ஒரு சில ஆயுதமேந்திய துணிச்சல் வாதிகள் தமது தீவிரவாத நிலைமையினால் சமப்படுத்தி விட முயன்றனர். தீவிரவாதம் என்பது நடப்பை அதீததமாய் மதிப்பிடுவதாகும.; தம் அகவிருப்புகட்குகேற்ப புரிந்து கொள்வதாகும். எனவே இவர்கள் தனிமைப்படுகின்றனர். யதார்த்தநிலை வேகமாய் செயற்படவில்லை என்று இத்தகையோர் எரிச்சலடைகின்றனர். மக்கள் அநியாயத்திற்கு எதிராக எழுச்சி கொள்ளவில்லை என்றும் அவர்கட்கு எருமை மாட்டுத் தோல் வாய்த்திருப்பதாயும் நம்பத் தொடங்குகின்றனர்.
சிவகுமாரனின் உச்ச அரசியலறிவு என்பது 'தமிழர்கட்கு நாடு வேண்டும்' என்பதற்கு அப்பால் செல்லவில்லை. மலையகத் தோட்டத்தொழிலாளர்களைப் பற்றி குறிப்பிடும்போது "அவர்கள் பாவம்" என்று பரிதாபத்தை வெளியிட்டான். இந்த அரசியல் பக்குவம் தமிழ் தேசியவாதம் கோரிய அடிப்படை அரசியலுக்குக் கூட போதாததாக இருந்தது. சிவகுமாரனின் அதீதமான ஆயுத மோகம் தனிநபர் சார்ந்த மனவெழுச்சி விரைவில் சோர்விற்கும், மனஉழைச்சலுக்கும், விரக்திக்கும் இட்டுச் சென்றது. சிவகுமாரனிடம் அவசரப்படும் குணமும் பொங்கி வெடிக்கும் போக்கும் இருந்ததாய் சத்தியசீலன் இப்போது ஒப்புக்கொள்கிறார். சிவகுமாரனது தனிநபர் வீரதீர முயற்சிகள் துரையப்பா, சந்திரசேகர் போன்ற அரச இயந்திரத்தின் தனிநபர்களை சரீர ரீதியில் அழிக்க முயன்றன. ஆனால் அரசு இயந்திரம் விட்டு வைக்கப்பட்டது. அது அசைக்கப்படவில்லை. இத்தகைய உதிரியான தனிமனித பயங்கரவாத நடவடிக்கைகள் அரசாங்கம் தமிழ்மக்களை உரிய நேரத்திற்கு முன்பே போர்த்தயாரிப்பிற்கு முன்பாகவே அழிக்கவல்ல அரச ஆயுத நடவடிக்கைகட்கு தூண்டிவிட்டது. ஓருமுறை சிவகுமாரன் தேசியக்கொடியை அறுத்து எறிந்துவிட்டு "யாரும் கேட்டால் சிவகுமாரன் தான் செய்தான் என்று சொல்லுங்கள் நான் வீட்டிலேதான் இருப்பேன்" என்கிறான். மற்றொருமுறை நல்லூர் கந்தசாமி கோவிலில் பெண்களிடம் சேட்டைவிட்டதாகப் பொலிசாருடன் அடிதடிக்கு போகிறான் "உங்கள் நாட்டில் இந்த விளையாட்டை வைத்துக் கொள்ளுங்கள்" என்று சொல்லும் போது சாகச தன்மையும்; சாதாரண சிங்கள தமிழ் உணர்வுகளுள் அவன் செயற்படுகிறான். ஒரு முறை குடியரசுதினத்தில் பஸ் எரித்தவர்களைப்பற்றி பொலிசுக்குச் சாட்சி சொன்னவர்களைப் பிடித்த சிவகுமாரன், "காதை வெட்டலாமா? கையை வெட்டலாமா?" என்று சுற்றி நின்றவர்களை கேட்ட சம்பவம், பிற்கால அரசியலற்ற ஆயுத இயக்கங்களின் குணத்திற்கு முன்னறிவித்தலாகி விட்டது. சிவகுமாரன் உயிருடன் இருந்திருந்தால் அவன் பிரபாகரனாகவோ உமாமகேஸ்வரானாகவோ, சிறி சபாரத்தினமாகவோ மாறியிருப்பார் என்பதற்கான நிரூபணங்கள் அவனின் நடத்தையில் தென்படுகின்றன. பலர் தமிழ் தேசியவாதத்தின் நிழலில் சிவகுமாரனைப் பரிசோதித்ததால் அவனை பெரும் சமூகக்கலக்காராய் காணும் தவறை செய்தனர். சிவகுமாரன் தகுதி மீறி புகழப்பட்ட பாராட்டப்பட்ட ஒருவன். ஆவன் ஆயுதமேந்திய கூட்டணி நபர் என்பதற்கப்பால் அவனிடம் வேறேதுவும் இல்லை. தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சனைக்கு சாதாரண சிங்கள மக்களின் ஆதரவை வென்றெடுக்க முடியாமல் தடுத்த சக்திகளில் சத்தியசீலன், சிவகுமாரன் போன்றவர்கள் அடக்கம்.
துரையப்பாவின் காருக்கு தானும் சிவகுமாரனும் குண்டு வைத்தமையின் காரணம் துரையப்பா ஒரு சிங்களக்கட்சியின் கிளையை யாழ்பாணத்தில் திறந்து வைத்தமைதான் என்று சத்தியசீலன் இன்று கூடக் கூறுகின்றார். அந்த மட்டத்திற்கு இவர்கள் இருவரும் கூட்டணி அரசியலில் ஆழப்பதிந்து இருந்தனர், அவர்களின் கருத்தில் ஊறியிருந்தனர். ஆனால் கூட்டணி இவர்களைப் பயன்படுத்திக் கொண்டது. "ASP சந்திரசேகராவை சுட்டால் கொழும்பு தமிழர்களுக்கு ஏதேனும் பிரச்சனைகள் ஏற்படுமா?" என்று சிவகுமாரன் அவரைச் சுட முன்பு கூட்டணியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான பொட்டர் நடராசா எனப்படும் செனட்டர் நடராசாவிடம் கேட்டபோது, "அப்படி எதுவும் நடவாது" என்று பொட்டர் நடராசா சிவகுமாரனுக்கு ஊக்கமளித்தார். துரையப்பா, ASP சந்திரசேகராவைச் சுட சிவகுமாரன் போன்றவர்கள் முயற்சி செய்கிறார்கள் என்று அமிர்தலிங்கத்திற்கு நன்கு தெரியும் அதன் அரசியல் விளைவுகள் எத்தகையதாக இருக்கும் அதற்கு எதிராக குறைபட்சம் தமிழ் மக்களை எப்படி தயாரிக்க வேண்டும் என்று கூட கூட்டணிக்கு எந்த அரசியல் ஞானமும் இருக்கவில்லை. அவர்கள் அரசியல் நிகழ்வுகளை ஆயுதப்போக்கின் வளர்ச்சியை தன்னிச்சைப் போக்கில் செல்லவிட்டு வாளாவிருந்தனர். இளைஞர்களின் அரசியலற்ற ஆயுத நிகழ்வுகட்கு ஆதரவு தந்த பொட்டர் நடராசா பிற்காலத்தில் தமிழ் ஆயுத இளைஞர்களாலேயே கொல்லப்பட்டார். இவர்கள் தமது சொந்த தமிழ் வலதுசாரி அரசியலுக்கு தாமே கொடுத்த விலை கொடுத்தனர். உதவியமைச்சர் சோமவீர சந்திரசிறிக்கு குண்டு வைத்த வழக்கில் சிவகுமாரனுக்காக வாதாட எந்தக் கூட்டணி சட்டத்தரணியும் கிடைக்கவில்லை. சட்டத்தரணிகளின் கட்சியான கூட்டணியால் கைவிடப்பட்ட நிலையில் சி.சுந்தரலிங்கமே சிவகுமாருக்காக வாதாடினார். சிவகுமாருக்காக நீதிமன்றத்தில் வாதிட்டவர்களிலொருவரும் சட்டக் கல்லூரி விரவுரையாளருமான, சட்டத்தரணி இராஜராஜேஸ்வரன் கூட்டணி சிவகுமாரனைக் கைவிட்ட கதையை மேடைகளில் சொல்வது வழக்கம். இவைகளைக் கூட்டணி ஒரு போதும் மறுத்தது கிடையாது. பொட்டர் நடராசாவை சிவகுமாரனுக்காக வாதாடும்படி கேட்டபோது அவர் ஏதோ சாட்டுச் சொல்லி மறுத்து விட்டார். அப்போது இளைஞர்கள் "உங்களுக்கும் குண்டு வரும்" என்று அவரையும் வெருட்டினார்கள்.
கூட்டணியுடன் முரண்படாதவனாகத்தான் புஸ்பராசா சிவகுமாரனைக் காட்டுகிறார். கூட்டணியின் சமரசவாத அரசியலுடன் இளைஞர்களின் தீவிரவாதம் தொடர்ந்து மோதியே வந்தது. கூட்டணியின் மிதவாத அரசியலை இவர்கள் தகர்க்கத் தொடங்கியிருந்தனர். சிவகுமாரனின் மரணசடங்கில் அமிர்தலிங்கம் போன்ற கூட்டணித் தலைவர்களுடன் இளைஞர்கள் கடும் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டனர். சிவகுமாரனின் சிலை திறப்பு விழாவில் கூட்டணி தலைவர்கட்கு பதிலாக இளைஞர்களே தலைமை தாங்கினர். அமிர்தலிங்கம், கதிரவேற்பிள்ளை, திருநாவுக்கரசு, V.N நவரத்தினம் போன்றோர் தலைமறைவாக இருந்த இளைஞர்கட்கு பண உதவி செய்தனர் என்பது உண்மையாக இருந்த போதிலும் அது தலைமறைவாக இருந்த இளைஞர்கட்கு போதுமான தொகையாக இருக்கவில்லை. கூட்டணி சட்டத்தரணிகள் யாழ் நீதிமன்றத்திற்கு வழக்காட வரும் போது ஐம்பது, இருபத்தைந்து என்று இளைஞர்கட்கு பணம் கொடுப்பது வழக்கம. அதை பெற பொலிஸ் கண்காணிப்புக்கு மத்தியிலும் கூட்டணி அலுவலகத்திற்கு சில இளைஞர்கள் வருவது வழக்கமாக இருந்தது. கூட்டணி அலுவலகத்திற்கு தலைமறைவாக இருந்த இளைஞர்கள் வந்து செல்வது பொலிசாருக்கு தெரிந்திருந்தபடியால் பல கூட்டணித்தலைவர்கள் தமக்கு ஆபத்து வரும் என்று அஞ்சினார்கள். தம் உதவிகள் வெளியே தெரியாதிருக்க விரும்பினர். சத்தியசீலன் கைதான போது, எம்.பி தர்மலிங்கம் தனது அரசியல் செல்வாக்கு மூலம் கொழும்பு நாலாம் மாடியில் சத்தியசீலன் எவ்வாறான வாக்குமூலம் கொடுத்து வருகின்றார் என்பதனைத் தொடர்ச்சியாக அறிந்து வந்தார்.
தமிழரசன்