இன்னமும் தீவிரவாதிகளை அவர்கள் எங்களுடையவர்கள் அல்ல, நாங்கள் அவர்களைப் போல அல்ல என்று "நல்ல முஸ்லிம்" வேசம் போடுவதில் தான் எல்லோரும் ஆர்வமாக இருக்கிறார்கள். இங்கே யார் நல்ல முஸ்லிம் கெட்ட முஸ்லிம் என்பது பிரச்சினையே அல்ல. இனி இதுபோன்ற செயல்பாடுகள் நடக்காதிருக்க என்ன செய்யப்போகிறோம், நமது பங்களிப்பு என்ன என்பவையே முக்கியம்.
எனக்கு முர்த்தத் (மதத்தை விட்டு நீங்கியவள்) என்று பத்வா தந்தவர்கள்கூட திடீர்ஞானோதய நோயினால் பாதிக்கப்பட்டு பந்தி பந்தியாக உளறிக் கொட்டிக் கொண்டிருப்பதையும் காண்கிறேன். அவர்கள் முர்தத் என்று சொல்லிவிட்டதால் நான் இஸ்லாத்தைவிட்டும் விலகிவிடவில்லை. இங்கே ஒப்பாரி வைப்பவர்கள் யாரும் தங்களது கடந்த காலத் தவறுகளை உணர்ந்து கொண்டவர்கள் இல்லை. இது தற்காலிக தற்காப்பு மனோபாவம் மட்டுமே. இன்னும் சில வாரங்களில் இதே முகநூலில் இவர்களின் பத்வா பேக்டரிகள் இயங்குவதை நாம் காணத்தான் போகிறோம். கண்டும் காணாமலும் எல்லோரும் இருக்கத்தான் போகிறார்கள். கேள்வி எழுப்பும் பெண்களைக் குறிவைத்து வேட்டைகள் நடக்கத்தான் போகின்றன.
இந்த நாடகங்களை எல்லாம் ஓரங்கட்டிவிட்டு சற்றே நிதானமாக சிந்தித்து செயலாற்றுவதே புத்திசாலித்தனம். இலங்கையில் உள்ள இஸ்லாமியப் புத்திஜீவிகள், கல்வியலாளர்களுக்கு பகிரங்கமாகவொரு அழைப்பைச் செய்ய விரும்புகிறேன். தயவு செய்து உங்கள் அமைதியைக் கலையுங்கள். இஸ்லாமிய சமூகத்தையும் இளைஞர்களையும் வழிநடத்தும் பொறுப்பைக் கையிலெடுங்கள்.
தாக்குதல் பற்றி முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டும் பொறுப்புடன் செயற்படாத அரசைக் கண்டித்து "வெட்கப்பட்டு இப்படிப்பட்ட அரசிலிருந்து பதவி விலகுகிறேன்" என்று சொல்லத்தகுந்த நேர்மையான அமைச்சர்களோ பாராளுமன்ற உறுப்பினர்களோ இந்த நாட்டில் இல்லை என்பதற்காக மீண்டுமொரு முறை தலைகுனிவோம். இவர்களால் செய்ய முடியாத பல சமூக மாற்றங்களை அரசுக்கு அழுத்தம் கொடுத்துக் கற்ற சமூகத்தால் நிகழ்த்தமுடியும்.
அப்படி முன்னெடுக்கப்பட வேண்டிய சில பணிகள்:
*இலங்கையிலுள்ள இஸ்லாமிய இயக்கங்கள், சிந்தனைப் பள்ளிகள் அனைத்தும் ஒழுங்குபடுத்தப்பட்ட முறைமைக்குள் கொண்டுவரப்படவேண்டும். இதற்கென கல்வியலாளர்கள், மார்க்க அறிஞர்களைக் கொண்ட குழு நியமிக்கப்பட்டுச் சிந்தனைப் பள்ளிகளின் பாடவிதானங்கள், செயற்பாடுகள் அனைத்தும் சான்றுறிதிப்படுத்தும் நடைமுறை கொண்டுவரப்படுதல் வேண்டும்.
*இந்த முறைமைக்குள் வர விரும்பாத சிந்தனைப் பள்ளிகள் சமரசமின்றி மூடப்பட வேண்டும்.
*சிந்தனைப் பள்ளிகள் , அனைத்து மதரசா ஆசிரியர்களினதும் கல்வித் தகைமை தெளிவான ஒழுங்கிற்குள் கொண்டுவரப்பட்டு நியமனங்கள் செய்யப்படுதல் வேண்டும்.
*சிந்தனைப் பள்ளிகளின் கட்டணங்கள் நெறிப்படுத்தப்பட்டு அவற்றின் கணக்கறிக்கைகள் மக்கள் பார்வைக்குரியதாக்கப்படுதல் வேண்டும்.
*சிந்தனைப் பள்ளி மாணவர் அனுமதிக்கான வயதெல்லை முறைப்படுத்தப்பட்டு 10 வயதுக்கு குறைந்த பிள்ளைகளை மதரசாக்களில் சேர்ப்பது தடைசெய்யப்பட வேண்டும். பிள்ளைகளின் கற்றல் நேரம் மட்டுப்படுத்தப்பட வேண்டும். அதிகாலை ஐந்து மணிக்கே சிந்தனைப் பள்ளிகளுக்கு குழந்தைகளை ஓடச்செய்யும் பெற்றோர் தண்டிக்கப்படவேண்டும்.
*அரபு நாடுகளிலிருந்து/ வெளிநாடுகளிலிருந்து வரும் நிதி முற்றாக நிறுத்தப்பட வேண்டும்.
*பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ்களின் செயற்பாடுகள் பல்கலைக்கழக மானியத்தினால் நெறிப்படுத்தப்பட வேண்டும்.
*முஸ்லிம் பெண்களின் உடை தொடர்பாக அரசு தீர்மானம் இயற்ற அனுமதிக்க முடியாது. அதேபோல முஸ்லிம் மஜ்லிஸ்களும் பல்கலைக்கழக முஸ்லிம் மாணவிகளின் ஆடைத் தெரிவில் நேரடியாகவோ மறைமுகமாகவோ தலையிடக்கூடாதென்ற கட்டாய நிபந்தனை வேண்டும்.
நன்றி முகநூல்
நன்றி முகநூல்
0 commentaires :
Post a Comment