கல்முனை வடக்கு தமிழ் பிரதேச உப செயலகம் தொடர்பான ஊடக அறிக்கை -தமிழ் மக்கள் விடுதலை புலிகள்
கல்முனை வடக்கு தமிழ் பிரதேச உபசெயலகமானது 1989 ஆம் ஆண்டு காலத்தில் உருவாக்கப்பட்டதொன்றாகும்.
இதையொட்டியகாலத்தில் நாடு முழுவதும் இதே போன்ற 25 உப செயலகங்கள் உருவாக்கப்பட்டிருந்தன. இன்றைய நிலையில் அவையனைத்தும் அதாவது குறித்த கல்முனை வடக்கு தமிழ் பிரதேச உப செயலகம் தவிர்ந்த நாடு தழுவிய ஏனைய 24 உப செயலகங்களும் தரமுயர்த்தப்பட்டு விட்டன என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்நிலையில் இன்றுவரை கல்முனை வடக்கு தமிழ் பிரதேச உபசெயலகம் ஆனது தரமுயர்த்தப்படாமல் இருப்பது துரதிஷ்ட்டவசமானதொன்றாகும்.
இந்த பிரதேசம் வாழ் மக்களிடமிருந்து சுமார் முப்பது வருடகாலமாக இந்த உப செயலகத்தை தரமுயர்த்தும் கோரிக்கைகள் அவ்வப்போது முன்வைக்கப்பட்டே வருகின்றன. ஆனால் தமிழ்-முஸ்லீம் என்கின்ற இனவாத அரசியல் போட்டா போட்டிகளில் சிக்குண்டு இச்செயலகமானது தரமுயர்த்தப்படுவது சாத்தியமாககாமலேயே சென்றுகொண்டிருக்கின்றது.
மிக இலகுவாக செயற்படுத்தக்கூடிய இந்த தரமுயர்த்தல் நடவடிக்கைகள் இன்று பெரும் சவால் நிறைந்த விடயமாக மாறுவதற்கு தமிழ் மக்களின் பெரும்பான்மையோரை பிரதிநிதித்துவம் செய்கின்ற தலைமைகளின் பொறுப்பற்ற தன்மையே காரணமாகும்.
இத்தகைய பொறுப்பற்ற அரசியல் தலைமைகளின் நம்பிக்கை இழந்த அப்பிரதேச மக்களும், பொதுநல அமைப்புகளும் தற்போது இப்பிரச்சனையை கையிலெடுக்க முன்வந்து கொண்டிருக்கின்றனர்.
இந்த உப செயலகமானது தமிழர்களுக்கானது என்றும் அதனை தரமுயர்த்துகையில் முஸ்லிம்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் சில முஸ்லீம் அரசியல்வாதிகள் பொய்யான பரப்புரைகளில் ஈடுபட்டு வருகின்றார்கள். ஆனால் அத்தகைய பரப்புரைகளில் கிஞ்சித்தேனும் உண்மை கிடையாது.அதேவேளை அத்தகைய பரப்புரைகளை முன்வைத்து தமிழ் அரசியல்வாதிகளில் சிலரும் முஸ்லிம் மக்களுக்கெதிரான இனவாத அரசியலாக்க முற்படுவதும் இன முறுகல் நிலைமைகள் தொடருவதும் ஆரோக்கியமானதல்ல. கல்முனை வடக்கு மக்களின் அடிப்படை உரிமைகள் சார்ந்த இந்த கோரிக்கையை ஆதரித்தும் எதிர்த்தும் சிலர் சுய இலாபம் தேடுகின்ற முனைப்பில் ஈடுபடுவதையும் அவதானிக்க முடிகின்றது.
தமிழ் மக்களின் உரிமைகளுக்காக ஆயுதமேந்தி போராடியவர்கள் என்பதோடு இன்று ஒரு பொறுப்புமிக்க அரசியல் சக்தியாக ஜனநாயக பாதையில் பயணிப்பவர்கள் என்கின்ற வகையில் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச உப செயலகம் சார்ந்து தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் ஆகிய நாங்கள் கீழ்வரும் அவதானங்களை முன்வைக்க விரும்புகின்றோம்.
*கல்முனை வடக்கு தமிழ் பிரதேச உப செயலகம் தரமுயர்த்தப்படுவது அப்பிரதேசத்தில் உள்ள 29 கிராம சேவையாளர் பிரிவுகளில் வாழும் 36346 மக்களினதும் நிராகரிக்கப்படமுடியாத கோரிக்கையாகும் என்பதை அழுத்தம் திருத்தமாக வலியுறுத்துகின்றோம்.
*இந்த செயலகம் தரமுயர்த்தப்படுவதால் கல்முனை தெற்கில் வாழும் முஸ்லிம்களின் உரிமைகள் பறிக்கப்படும் என்கின்ற பிரச்சாரங்கள் பொய்யானவையென்றும் அவற்றினை நம்பி ஏமாற வேண்டாமென்றும் முஸ்லீம் மக்களை கோருகின்றோம்.
*கல்முனை வடக்கு தமிழ் பிரதேச உப செயலகம் என்பதை முன்வைத்து இனவாத பிரச்சாரங்களையோ இன முறுகல் நிலைமைகளை ஏற்படுத்தும் பரப்புரைகளையோ செய்ய வேண்டாம் என்று தமிழ்- முஸ்லீம் மக்களுக்கு பகிரங்க வேண்டுகோள் விடுக்கின்றோம்.
*கல்முனை வடக்கு தமிழ் பிரதேச உப செயலக தரமுயர்த்தல் கோரிக்கையை வலியுறுத்தி பொது மக்களாலும் கல்முனை இளைஞர் மன்றத்தினாலும் முன்னெடுக்கப்படுகின்ற அனைத்துவித வழிமுறைகளிலான போராட்டங்களுக்கும் நாம் முழு ஆதரவு வழங்குகின்றோம்.
*அத்தகைய போராட்டங்களில் பங்கெடுக்கும் அனைவரையும் சாத்வீக வழியில் போராடுமாறும் சட்டத்தையும் சகோதரத்துவத்தையும் மதித்து செயற்படுமாறும் வினயமாக கேட்டுக்கொள்ளுகின்றோம்.
செயலாளர் பூ.பிரசாந்தன்
தமிழ் மக்கள் விடுதலை புலிகள்
தமிழ் மக்கள் விடுதலை புலிகள்
0 commentaires :
Post a Comment